ஆரம்பக் காலக் கவிதைகள் - அம்பை
https://ia600806.us.archive.org/8/items/orr-11853_Aramabak-Kaalak-Kavithaikal/orr-11853_Aramabak-Kaalak-Kavithaikal.pdf
ஞானம் பெற எல்லா முயற்சிகளையும் அவள் மேற் கொண்டாயிற்று. மூன்று நாட்கள் தொடர்ந்து அழுதால் கடவுளைக் காணலாம் என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியிருக்கிறார் என்பதால் மூன்று நாட்கள் தொடர்ந்து அழ. வசதிப்படாவிட்டாலும் (ஒவ்வொருவருக்கும் தனி அறை இல்லாத வீட்டில், காலையில் எழுந்ததிலிருந்து இரவு துரங்கும்வரை அம்மாவின் கட்டளைகளோ அப்பாவின் குரலோ துரத்தும் வீட்டில், தொடர்ந்து எதைத்தான் செய்ய முடியும் :) விட்டு விட்டு ஆறு நாட்கள் அழுதும் எந்தக் கடவுளும் தரிசனம் தரவில்லை. அதில் ஏமாற்றம்தான். ஞானத்தைத் தேடி அலையும் ஒரு பதினாறு வயதுப் பெண் வேறு என்னதான் செய்ய முடியும் என்று தெரியவில்லை. எதுவும் தெளிவாகப் புரியவில்லை. அவள் ஒரு பாவமும் செய்யவில்லை என்றுதான் அவள் நம்பினாள். ஆனால் சில விஷயங்கள் பாவத்தில் சேர்த்தியா என்று தெரியவில்லை. சின்ன வயதில் ஒரு முறை அக்காள் பத்மாவுக்கும் இவளுக்கும் ஆளுக்கொரு தர்பூசணிப் பழத்துண்டு தந்தபோது இவள் தன்னுடையதை உடனே தின்னவில்லை. பத்மா முடிக்கும் வரை காத்திருந்துவிட்டுப் பிறகு தன் பழத்துண்டை நக்க ஆரம்பித்தாள். "ஏய், எனக்குக் கொஞ்சம் தாடி" என்று பத்மா கெஞ்சியபோது, பழரசம் முகவாயில் ஒழுக, மாட்டேன்” என்று மறுத்தாள். ஒருமுறை அம்மாவை மனத்திற்குள் "சனியனே" என்று திட்டியிருக்கிறாள். எப்போது பார்த்தாலும், முடி சீவிக்கொள்ள, பாட, பால் குடிக்க, சாப்பிட, துங்க, எண்ணெய் தேய்த்துக்கொள்ள என்று கண்டித்தவாறிருக்கும் அம்மா பட்டென்று இறந்து, அம்மா இல்லாத அனாதையாகத் தன்னைக் கற்பனை செய்திருக்கிறாள். ஒரு 'கெட்ட புத்தகத்தைக் கூட அவள் மூன்று முறை வாசித்துப் பிறகு குளியலறை வெந்நீர் அடுப்பில் போட்டு எரித்துவிட்டாள். இதை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. சேர்ப்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. ராஜா காலத்து உடையணிந்த சித்ரகுப்தர் இந்தக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்கிறார் என்றால் மாறி வரும் காலம் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்ல அதுவும் பெண்கள் வெகுவாக மாறி விட்டதை விளக்க- யாராவது நம்பகமான நபர் உண்டா போன்ற கேள்விகள் அடிக்கடி மனத்தில் எழுந்தன.
இவ்வாறு ஞானத்தைத் தேடி அலைந்து, தானும் தன் மூலம் உலகமும் உய்வதற்கான முயற்சிகளை அவள் மேற்கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரிய அளவு நீல டயரி வீட்டுக்கு வந்தது. இவர்கள் குடும்ப டாக்டருக்கு யாரோ தந்து, அவர் இவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தது. குழந்தைகளுக்கான பால் பவுடர் தயாரிக்கும் நெஸ்லே கம்பெனியாரின் டயரி அன்னை மற்றும் மகவுப் புகைப்படங்களுடன் தாய்மை மருத்துவ வல்லுநருக்கான குறிப்புகளுடன் கூடிய டயரி அது. யாக்கை நிலையாமை பற்றிய சிந்தனைகளில் அவள் மூழ்கியிருந்த வேளையில், யாக்கை உரு வாவதுடன் சம்பந்தப்பட்ட டயரி தன் வீடு தேடி வந்தது இறைவன் தன் மனோபலத்தைச் சோதிக்கச் செய்யும் முயற்சி என்று அவள் திடமாக நம்பினாள். "ஒரு பக்தருக்குச் சூலை நோய், எனக்கு தாய்மை மருத்துவ வல்லுநரின் டயரியா? ஹாம்!” என்றவாறு இறைவனின் சோதனைகளை எண்ணி வியந்தாள். பூசை அறைக்குச் சென்று ரவி வர்மாவின் கடவுள் ஒவியங்களை நேர் கொண்ட பார்வையுடன் நோக்கி ஒரு ஞானப் புன்முறுவல் பூத்தாள். நடிகை மதுபாலாவின் கோணல் புன்சிரிப்பிலிருந்து இவள் தன் ஞானப் புன்முறுவலைக் கடன் வாங்கியிருந்தாள். இந்தப் புன்முறுவல் அவள் முகத்தில் தோன்றும்போது முகத்தில் ஒளி கூடுகிறது என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் சில காரணங்களினால் அதை மற்றவர்முன் செய்வதைத் தவிர்த்தாள். "என்ன, பல்வலியா?” என்று அம்மா ஒரு முறை கேட்டுவிட்டது ஒரு காரணமாக இருக்க லாம். ஞான வேட்கை இல்லாதவர்களுக்கு இந்தப் புன்முறுவலை இனம் காணும் பக்குவம் ஏது ?
அந்த டயரியின் நீல நிறம் அவளை மிகவும் ஈர்த்தது. நீலம் அவளுக்குப் பிடிக்கும். காரணம் வான் நீலம், கடல் நீலம், பண்ருட்டி யிலிருந்து வந்த இரண்டடி உயர, குழலுதும் கண்ணன் பொம்மையும் நீலம். அவளிடம் ஒரு நீலப் பட்டுப் பாவாடையும் இருந்தது. ஆனால் உலக வாழ்க்கையுடன் இணைந்த ஒன்றாக அது இருந்ததால் நீலம் பிடிப்பதற்கான காரணங்களின் கணக்கில் அவள் அதைச் சேர்ப்பதில்லை. நீல டயரி யாராலும் உபயோகப் படுத்தப்படாமல் கிடந்ததால் அதை அவள் தன் உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டாள்.
அதை எதிரில் வைத்துக்கொண்டு, அதன் வழுவழுப்பான வெற்றுப் பக்கங்களைப் புரட்டியபோது, அவளுக்கு முன் பல பக்தர்கள் செய்ததைத் தானும் செய்யவேண்டும் என்ற அவா எழுந்தது. பக்திக் கவிதைகளை எழுதும் அவா. இரண்டொரு நாட்களுக்குப் பின் சிறிது முயற்சிசெய்து கடவுள் எங்கே?' என்று தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதினாள். "எங்கே இறை எனக் கேட்காதே பேதையே, ஆங்கே உன் உள்ளத்தே உறைவான் இறைவன்!” என்று ஆச்சரியக் குறியுடன் முடிந்தது கவிதை, தன்னைக் கைவிடக் கூடாது என்றும் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்றும் இறைஞ்சல் தொனியில் சில கவிதைகளை எழுதினாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போல் கவிதைகள் அமையவில்லை என்று தோன்றியது. அது குறித்துச் சிறிது வருத்தமாகவும் இருந்தது. சற்றுக் கோபமாகவும் இருந்தது. ஞானத் தேடலில் இவர்கள் எங்கெல்லாம் அலைந்திருக்கிறார்கள் காடு, மேடு, கழனி என்று இரவு பகல் பாராமல் திருட்டு, விபத்துகள் என்றிருக்கும் நகரத்தில் வாழும் பதினாறு வயதுப் பெண் எப்படி அதுபோல் அலைய முடியும்? வீட்டுத் தோட்டத்தை வேண்டுமானால் அவள் சுற்றிவரலாம். மற்றபடி அதிக தூரம் செல்ல அனுமதியும் கிடையாது. தோழிகளுடன் “பாசமலர்' படம் பார்க்கப் போனதற்கே காலம் கெட்டுக் கிடக்கிறதென்றும், இப்படி இவள் போவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அம்மா கடிந்துகொண்டாள். மேலும், அந்தப் பக்தர்களுக்கு எல்லாக் கட்டங்களிலும் இறைவன் துணை நின்றிருக்கிறார். நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி, பிட்டுக்கு மண்சுமந்து என்று அநேக வழிகளில் ஒத்துழைத்திருக்கிறார். இவளைப் பொறுத்த வரையில் அநியாயமாக நடந்து கொள்கிறார் இறைவன் என்று தோன்றியது. ஒரே ஒரு அற்புதத்தைக்கூட இவளுக்காகச் செய்யவில்லை. ஒன்றுமி ல்லை. ஒரு ரயில் இத்தனை வேகத்தில் இந்தப் பக்கத்திலிருந்து வருகிறது, இன்னொரு ரயில் வேறு வேகத்தில் எதிர்ப்புறத்திலிருந்து வருகிறது, கடக்க வேண்டிய தூரம் இவ்வளவு, இரண்டு ரயில் வண்டிகளும் எந்தக் கட்டத்தில் சந்தித்துக்கொள்ளும்; அல்லது ஒரு தொட்டியில் ஒட்டை உள்ளது. அதில் விழும் நீரின் வேகம் இத்தனை, ஒட்டை வழியாக நீர் வெளியேறும் வேகம் இத்தனை, தொட்டி நிரம்ப எவ்வளவு நேரமாகும் போன்ற கணக்கு களுக்கு விடைகள் கிடைக்கும் சிறு அற்புதம் கூடவா செய்யக் கூடாது? அது மட்டுமல்ல. கீழே விடப்பட்ட குழந்தை பாலுக்கு அழுகிறது என்று ஞானப் பாலூட்டி, அந்தக் குழந்தையை அற்புத மான கவிதைகள் எழுதவைத்தபோது, சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில் கோயமுத்துர் என்ற ஊரின் கொசுக்கடி பிடுங்கும் ஆஸ்பத்திரி ஒன்றில் பிறந்ததற்காக இவளுக்கு ஞானப்பால் மறுக் கப்பட வேண்டுமா என்ன ?
ஒரே ஒரு முறை மட்டும் அவள் வாழ்வில் ஒர் அற்புதம் நிகழ்ந்தது என்பதை இவ்வாறு நினைக்கும்போது அவள் நினைவு படுத்திக்கொள்வாள். அவள் தந்தை பெண்களுக்கு கணக்கு, விஞ் ஞானம் இரண்டும் வராது என்று திடமாக நம்பினார். இதை எப்படி அவள் மனத்தினுள் ஊன்றினார் என்று தெரியவில்லை. அவளுக்குக் கணக்கு வரவில்லை. ஒருமுறை இடைப் பரீட்சையில் சிக்கலான பின்னக் கணக்கு ஒன்று தரப்பட்டது. வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கும் ஸ்டெல்லாவுக்குக்கூட அது போட வரவில்லை. எல்லோருக்கும் பூஜ்யம் போட்டுவிட்டு, கணக்கு டீச்சர் கணக்கைப் பலகையில் போட முற்பட்டபோது, தற்செயலாக இவள் தன் விடைத்தாளைத் திறந்து பார்த்தாள். அந்தப் பின்னக் கணக்கை இவள் சரியாகப் போட்டிருந்தாள்! ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்த கணக்கு டீச்சரே வியந்து போனாள். அதைச் சிவனின் சிறு அற்புதமாகவே இவள் கண்டாள். "பின்னக் கணக்கைப் போட்டுவிட்டாய். நாளைக்கு விஞ்ஞான விடைத்தாள் வருகிறது. எப்படிச் செய்கிறாய் என்று பார்க்கலாம்" என்று சிவனைக் கடிந்துகொண்டாள் செல்லமாக அந்த முறை சிவன் விஞ்ஞானத்தில் தேறவில்லை.
++
"வாரணமாயிரம் சூழ வலம் வந்து " பாடலை அந்தச் சமயத் தில் பாட்டு டீச்சர் அவளுக்கும் பத்மா அக்காவுக்கும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருத்தி கடவுளையே மணம்புரிய நினைப்பது இவளுக்கு சுவாரசியமான ஒன்றாக இருந்தது. அக்கமகா தேவியின் கதையையும் அப்போது கன்னட வகுப்பில் சொல்லித்தந்தி ருந்தார்கள். மகாதேவி அக்காவும் சிவனுக்காக எல்லாவற்றையும் துறந்தவள். இப்படிக் கடவுளையே கணவனாக வரிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக இவளுக்குப் பட்டது. முதலாவது, சிலைகளாக இருக்கும்போதும், ரவி வர்மா படங்களிலும் அழகாகக் காணப்படுபவர்கள் நிஜமாகவே தரிசனம் தர வரும்போது எப்படி இருப்பார்களோ என்ற பயம் இருந்தது. இரண்டாவது, அப்போது ராமனாகவும், கிருஷ்ணனாகவும் கடவுள் வேடத்தில் நடித்துவந்தது என். டி. ராமராவ் தான். சிவனை மனத்தால் வரித்துவிட்டு நாளைக்கு அவர் என். டி. ராமராவ் உருவில் கதவைத் தட்டினால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. சரி. அவ்வையாராக மாறி "பாலும் தெளிதேனும் ' என்று கே. பி. சுந்தராம்பாள் குரலில் பாடலாம் என்றால் ஒரேயடியாக முதுமை வேண்டுவது பற்றிச் சற்றுத் தயக்கம் ஏற்பட்டது. மனத்தின் மூலையில் நீலப் பட்டுப் பாவாடை விரிந்து தொல்லை தந்தது. வரும் தீபாவளிக்குக் கிளிப் பச்சை நிறத்தில் ஒரு பட்டுப் பாவாடை வாங்கித்தரவேண்டும் என்று ஒர் ஒப்பந்தம் வேறு அம்மாவுடன் இருந்தது.
ஆனால் இதற்காகவெல்லாம் அவள் ஞான வழியை முற்றிலும் துறக்கத் தயாராகவில்லை. கல்கியின் சிவகாமியின் சபதம் வீட்டில் பைண்டு செய்யப்பட்டு இருந்தது. அதன் முடிவு அவளை வெகுவாகப் பாதித்தது. சிதம்பரம் சென்று, சிவன் முன் நடனமாடி, சிவனை மணப்பதுபோல் ஒரு கவிதை எழுதினாள். சத்தியம் என்று அதற்குத் தலைப்பிட்டாள்.
சலங்கை ஒலியின் மந்திரங்கள்
சலியாமல் அவையில் முழங்கிட
அசுரனைக் கொன்று ஆடுமுந்தன்
அடைக்கலமாய் நான் வருவேன்
என்று எழுதி முடித்தபோது, கண்களில் நீர் சுரந்தது.
கவிதைகளையும், தன் இறை உணர்வையும் அவள் இருவருடன் தான் பகிர்ந்துகொண்டாள். ஒன்று, மிக்கி அவர்கள் வீட்டுக் கறுப்பு நாய். இரண்டாவது கெம்பம்மா. கெம்பம்மா பக்கத்து வீட்டில் நடந்துகொண்டிருந்த கைவேலைக் குடிசைத் தொழிலில் வேலைசெய்பவள். போக்கிடம் இல்லை என்று இவர்கள் வீட்டின் பின்புறம், தோட்டத்தில் காலியாகக் கிடந்த மோட்டார் ஷெட்டில் அவளுடைய ஒரு தகரப் பெட்டியுடன் வாழ வந்தவள். அம்மாவுக்குக் கூடமாட வேலை செய்து உதவுவாள். மிக்கி இவள் தோழன். இவள் கவிதைகளைப் படித்துக் காட்டும்போது முன்னங்கால்களில் முகம் பதித்து, காதுகள் இரண்டும் தொங்க, படுத்தவாறு கேட்கும். சில சமயம் இவள் தொடைமேல் முகத்தை வைத்துப் படுத்தபடி கண்மூடியவாறு கேட்கும். இவள் குரல் தழுதழுத்தால் தலையை உயர்த்திப் பார்க்கும். இவள் கட்டிலின் கீழ்தான் அதன் குடியிருப்பு.
கெம்பம்மாவுக்கு இவள் தன் கவிதைகளைக் கன்னடத்தில் விளக்குவாள். பொறுமையுடன் கேட்டு, "சன்னாகிதே' என்று நற்சான்றிதழ் வழங்குவாள். புரந்தரதாசரின் தேவர் நாமா பாடல்களை எளிதான வழிமுறையில் பாடுவாள்.
பிறகுதான் அது நடந்தது. அந்த இரவு நிகழ்வு. ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு, “ஏ ஸ்களே முண்டே " என்றொரு அலறல் கேட்டது பின்பக்கம். அடுத்த ஐந்தாவது நிமிடம், இன்னும் அடைக்கப்படாமல் இருந்த பின்கதவைப் படிரென்று தள்ளித் திறந்து, புயல் போல் பாய்ந்து உள்ளே புகுந்து, இவள் கட்டிலின் கீழே தஞ்சம் புகுந்தாள் கெம்பம்மா.
அப்பாவும் அம்மாவும் பின்புறக் கதவருகே சென்றபோது, குடி போதையில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். 'லே கெம்பம்மா, ஹொரகே பாரே (ஏ கெம்பம்மா, வெளியே வா) என்று கூச்சலிட் டான். "நான் உன் புருஷன். வா வெளில” என்று கன்னடத்தில் சத்தம் போட்டான்.
அவனை வெளியேற்ற முயன்ற அப்பாவைக் கோபமாகப் பார்த்து, "ஒரு பெண்டாட்டி போறாதா உனக்கு? என் பெண்டாட்டியும் கேக்குதா?” என்று கூவினான்.
கட்டிலடியே கெம்பம்மா கோழிக்குஞ்சு போல் ஒண்டிக்கொண்டு இருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது. அவள் புருஷன் அப்பாவை விரசமாகப் பேசியதும், கட்டிலடியேயிருந்து வெளியே வந்து, அவனை நோக்கிக் கால்கள் தொய்ய நடந்து, சற்றே நடுங்கும் குரலில், "குடிச்சிட்டு வந்து கண்டதையும் பேசாதே" என்றாள் கன்னடத்தில்.
அதற்குப் பதிலாக அவள் அடிவயிற்றில் ஒர் உதை விழுந்தது. "அம்மா” என்று அலறியபடி அவள் உட்கார்ந்ததும், முதுகில் ஒரு குத்து.
"தேவா, காப்பாடு . . " என்று கடவுளை விளித்தாள் கெம்பம்மா. பிறகு ஒருமையில் கடவுளை அழைத்தது தவறு என்று எண்ணியோ என்னவோ, "தேவரே, காப்பாடி ' என்று குரல் கொடுத்தாள்.
பின்பக்கத்துப் படிக்கட்டில் அவளைத் தள்ளி, அவள் கூந்தலைப் பிடித்து இழுத்தபடி படிகளில் உருட்டினான். படிகளின் கீழே போனதும் புல்வெளியில் தள்ளி, பளிச்சென்று அவள் இரு கால்களையும் பிரித்து, நடுப்பகுதியில் ஓங்கி ஒரு உதை விட்டான்.
"ஹா ” என்றலறினாள் கெம்பம்மா. கவிழ்ந்து கொண்டாள். அன்று பெளர்ணமி. பின்பக்கத் தோட்டம் முழுவதும் அரளி, துளசி, வாழை, அவரை, புடலை, பலா என்று விரிந்து கிடந்தது. எல்லாவற்றின் மேலும் நிலா ஒளி சிதறிக் கிடந்தது. புல்வெளியில் குறுகிப் குப்புறக் கிடந்த கெம்பம்மா அந்த ஒளியில் வேட்டை யாடப்பட்ட மிருகம் போல் கிடந்தாள். நொடிக்கொருமுறை, "தேவரே. தேவரே " என்று கதறினாள். அவள் விலாவில் ஒரு மிதி மிதித்து அவன் அழுத்தியதும், முதல் முறையாக, "மிக்கி " என்று கூவினாள்.
உள்ளேயிருந்து மிக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. உயரே, உயரே எம்பி, துள்ளித்துள்ளிப் பாய்ந்து வந்து, பின்பக்கத்துப் படிகளை ஒரே தாவில் கடந்து, உறுமியபடியே கெம்பம்மாவின் புருஷனின் குரல்வளையைக் கவ்வ முற்பட்டது. பீதியில் அங்கும் இங்கும் ஒடிய அவன், பின்பக்கத்து வேலியைத் தாண்டி ஒடிப்போனான்.
கெம்பம்மா புல்வெளியில் குப்புறப் படுத்து விம்மியபடி கிடந்தாள். மிக்கி அவளருகில் வந்து அவள் தலையை நக்கித் தந்தபடி நின்றது. அப்பாவும் அம்மாவும் பேச்சே எழாமல், உறைந்துபோய் நின்றனர். எல்லாம் பத்து நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.
பத்மா அக்காவும் இவளும் சற்றுப் பின்னால் தள்ளி நின்று கொண்டிருந்தனர்.
அம்மா இவள் பக்கம் திரும்பிப் பார்த்தபோது, இவள் தன்னை வேறு யாரோ போல் உணர்ந்தாள்.
இவளை நோக்கி, "நீ ஏன் இங்க வந்தே? இதெல்லாம் பார்த்து பயந்துடுவ” என்றாள் அம்மா மெல்லிய குரலில்.
அவள் பதில் கூறாமல் பின்பக்கத்துத் தோட்டத்தைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள்.
O
சில காலம் தனிமை, ஏக்கம், கனவு, ஊமை என்று தலைப்பு களிட்டு, சாகும்வரை தனிமை, உடல் வேகும்வரை தனிமை' என்ற ரீதியில் சில கவிதைகளை எழுதினாள். அதன் பிறகு, நீல டயரியில் எந்தக் கவிதையும் பதிவுசெய்யப்படவில்லை.
'கிழக்கும் மேற்கும்', 1997
அம்பை