ஓர் எலி, ஒரு குருவி - அம்பை
துரக்கத்தில் முகத்தைத் திருப்பிக் கண்ணை விழித்தபோது எலியின் முகம் கன்னத்தருகே இருந்தது. ஆ என்று அலறித் துள்ளி வெடவெட வென்று நடுங்கியபடி நின்றபோது எலியும் அலறலால் தாக்கப்பட்டுத் துள்ளி ஜன்னலில் ஒண்டிக்கொண்டது. மூக்கை நிமிர்த்திப் பார்த்தது, இப்படி அலறி என்னைப் பயமுறுத்தினாயே? என்பதுபோல். அது ஒவ்வொரு முறை நகரப் பார்த்த போதும் ஒர் அலறல். கடைசியில் இருந்த இடத்திலேயே நகராமல் உட்கார்ந்தது. எதிரே விறைத்தபடி நின்றுகொண்டு ஜன்னலில் இருந்த எலியை விடாமல் கண்காணிப்பு.
எலிகளுடன் உறவாடுவது கஷ்டம். அதுவும் இந்த எலியுடன். இந்த எலியாகத்தான் இருக்க வேண்டும். புத்தக அலமாரியின் மேல் தட்டில் இருக்கும் சுயசரிதைகளை மட்டும் தின்னும் எலி. சில சுயசரிதைகளின் அட்டைகளை ஒரு முறை இல்லாமல் தின்ற பலன் 'என் சரித்' என்றும் என் சுயசரி என்றும் என் க என்றும் மொட்டை யாக நின்றன தலைப்புகள். ஒரு கழுதையின் ஆத்மகதை' என்று பெரிய எழுத்துகளில் தலைப்பிட்ட சுயசரிதையில் கழுதை மட்டுமே எஞ்சியிருந்தது. கீழேயிருந்து பார்க்கும்போது கதாசிரியரின் புன்னகை பூத்த புகைப்படத்தின் கீழே கழுதை என்று தடித்த எழுத்தில் இருந்த சொல் மட்டும் தெரிந்தது. அந்தக் கதாசிரியரைக் குறிக்கும் சரியான சொல் அது என்று பலர் நினைத்தாலும், எலியின் தீர்ப்புக்கு அதை விடுவதை எவ்வளவு தூரம் அவர் விரும்புவார் என்று தெரியவில்லை. கழுதை என்று ஒரு பாவ்லா அடக்கமாக அவர் தன்னைக் கூறிக் கொண்டாலும் இப்படி அது வலியுறுத்தப்படுவதை அவர் ஆட்சேபிக் கலாம் என்று பட்டது.
அதனால்தான் மறுநாள் கர்க்கர்க் என்ற சத்தம் இரவில் கேட்டதும் மேல்தட்டில் டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தாள். எலி ஆத்ம கதையில் அமர்ந்து கழுதையைச் சுற்றி கடிக்கத் துவங்கியிருந்தது. கீழே அவளைப் பார்த்தது. சிரிப்பதுபோல் பட்டது. நாக்கு அலறலில் புரண்டது. வழக்கமான சனிக்கிழமை இரவைக் கொண்டாடிவிட்டு அசந்திருந்த நண்பர்கள் விழித்துக்கொண்டனர். இரண்டங்குலஎலியைத் துரத்தினர். குளியலறையில் புகுந்துகொண்டது அது. பரம்வீர் தென்னந் துடப்பத்துடன் உள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டான்.
"பரம், அதைக் கொல்லாதே. மயக்கம்போடவை.'
"அது இருப்பதே இரண்டங்குலம். அதை எப்படி அடித்தால் மயக்கம் போடும் என்று நான் கண்டேனா?” என்றான் அவன் உள்ளேயிருந்து.
"நீவிர் இத்துணை துரத்தியும் அது மடியவில்லை என்றால் என் செய்வீர்கள் ' என்றாள் ஸ-ஸன் சுத்தத் தமிழில். பாரீஸிலிருந்து வந்திருந்தாள். பரம்வீரின் தோழி. மூன்று மாதத் தீவிரத் தமிழ்ப் பயிற்சி பெற்றிருந்தாள். பெண் தெய்வங்களைப் பற்றி ஆராய வந்திருந்தாள். மகாவிஷ்ணுவின் காலருகே லகஷ்மி அமர்ந்து பாதத்தை வருடுவது அவள் அவர் ஆளுமையிலிருப்பதற்கான குறியீடு அல்ல; பாதத்தை வருடுவது உலகை சம்ரட்சிக்கவும், அதற்கான படைப்பை உருவாக்குவதற்காகவும் தேவையான உற்சாக உத்வேகத்தை அவருக்கு உண்டாக்கத்தான் என்கிறாள். இவ்வளவு உத்வேகத்தை உண்டாக்கும் சக்தி உள்ளவள் அவள் சொந்தப் பாதத்தையே வருடிக்கொண்டு, விஷ்ணுவின் வேலையைத் தானே செய்வதற்கென்ன என்று கேட்ட தும், "நீவிர் என்னை நகைப்புக்கு உள்ளாக்குகிறீர்கள்” என்றாள். பரம்வீர் குளியலறையில் எலியுடன் செய்த போராட்டக் கூச்சல் களுக்கு "ஐயகோ சொல்லிக்கொண்டு நின்றாள்.
பரம்வீர் தென்னந்துடைப்பத்தின் மேல் மல்லாந்த எலியுடன் வந்தான்.
"மயக்கம்தான்" என்றான் அவளிடம். கீழே தெருவில் விட்டுவிட்டு வந்தான். இரவு ஒரு மணிக்கு, தலையை முடிந்து கொண்ட ஸர்தார்ஜி, துடைப்பத்தில் எலியுடன் கீழே போனதும் கட்டடத்தின் காவல் காரர்கள் சற்றுக் கலங்கிப்போயினர். மறுநாள் அவளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தனர். மயக்கம் போட்ட எலி கண்ணை விழித்ததும், மெல்ல நகர்ந்து சுய சரிதைகள் இல்லா உலகை நோக்கிப் போயிருக்கும் என்று நினைத்து மறுநாள் நிம்மதியாக உறங்கும்போது இப்படி கன்னத்தருகே எலி.
இது அதே எலியா? மயக்கத்திலிருந்து விழித்ததும் நேரே இங்கு வந்து விட்டதா? இல்லை அதன் ஜோடியா?
இந்தப் பெரிய நகரத்தில் எலிகளும் பெருச்சாளிகளும் அதிகம் என்று பலர் எச்சரித்திருந்தனர். சொன்னவர்கள் கலைஞர்களும் அறிவுஜீவிகளுமாக இருந்ததால் இங்குள்ள மனிதர்களைக் குறித்த உருவகபூர்வமான விவரணை அது என்று நினைக்க வாய்ப்பு இருந்தது. மேலும் ஒரே அறையும் சமையலறையும் கொண்ட வீட்டில் இருந்த கீதா மற்றும் ஸுக்தேவின் வீட்டின் சமையலறையில் கடுகெண்ணெய் ஊறுகாய் மணம், கொடியில் தொங்கிய சட்டைகளின் வேர்வை மணம் இவற்றினிடையே அந்த நகரத்தின் முதல் இரவை அமூல் யோவுடன் கழிக்க நேர்ந்தபோது இந்த எலி உவமை மிகப் பொருத்தம் என்று தோன்றியது. அந்தச் சமையலறை ஓர் எலி வளை மாதிரிதான் இருந்தது. அன்றிரவுதான் அந்தக் கனவு வந்தது.
வானளாவிய கட்டடங்கள். நாலாபுறமும் மலைகள் போல். குறுகிய தெருக்கள். இருக்க இடம் தேடி ஒரு கட்டடத்தில் துன்ழந்ததும் நிமிர்ந்தால் முதுகு இடிக்கும் எலி வளைகளாகின்றன. அவ்வீடுகள். மனிதர்கள் மல்லாந்து படுத்தும், ஒருக்களித்துப் படுத்தும், தலையை முட்டின் மேல் பதித்து அமர்ந்தும், பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஒருத்தி அலுவலகத்திலிருந்து வருகிறாள். வெகு லாவகமாக வளைக்குள் போகிறாள். தங்கள் இருப்பிடங்களின் செளகரியம் பற்றி அசரீரி தொனியில் அவர்கள் கூறுகின்றனர் ... வளைக்குள் செளகரியமாக நிற்க ஒரு கயிற்றைப் பிடித்துக் கொள்ளப் போகும்போது பார்த்தால் அது ஒரு எலியின் நீண்ட சொரசொர வென்ற வால் . . .
தூக்கத்தில் சத்தம் போட்டிருப்பாள் போலும். விழிப்பு வந்தது. அமூல்யோ நிம்மதியாக உறங்கியவாறு இருந்தான். நித்திரை வரம் பெற்று வந்தவன் அவன். அவனை உலுக்கினாள்.
அமூல் . . . அமூல் ...”
ஹா ...” என்று திடுக்கிட்டு விழித்தான்.
"அமூல், ஒரு கனவு வந்தது.”
“ம்”
"ஒரு பயங்கரக் கனவு அமூல். என் உடம்பெல்லாம் ஜில்லிட்டு விட்டது.”
அமூல்யோ எழுந்து உட்கார்ந்து பாட்டிலிலிருந்து தண்ணிரைக் குடித்தான். ஒரு கிளாஸில் ஊற்றி அவளுக்குத் தந்தான். அவள் குடித்த பின், "சொல்லு' என்றான். அவள் விவரித்தபின் சிரித்தான். "அதெப்படி இவ்வளவு அழகான உருவகக் கனவாக வருகிறது. உனக்கு? குறியீடு எல்லாம் கூட இருக்கிறது. இத்தனைக்கும் உனக்கு ஃப்ராயிடுடன் உடன்பாடுகூட இல்லை” என்றான்.
அவன் வயிற்றில் குத்தினாள். "நீ ஒரு குண்டன். நீ ஒரு பொறுக்கி நீ ஒரு கும்பகர்ணன். நீ ஒரு மூர்க்கன்." ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒரு குத்து.
சிரித்துக்கொண்டே அவன் படுத்துக் கொண்டான். அவன் வயிற்றில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். இரு புறமும் கால்களைப் போட்டு, சம்ஹாரம் செய்பவளைப் போல்.
அமூல்யோ ஓங்கிய அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். மென்மையாக அவள் கண்கள் நிரம்பிப்போயின. அமூல்யோவின் கண்களிலும் கண்ணிர் மெல்லப் படர்ந்தது.
தலைக்கு மேலே உள்ள, அடுப்புப் புகையால் கரிந்துபோன அலமாரிகள்; எந்த நேரமும் காலி செய்யச் செளகரியமான அலுமி னியப் பாத்திரங்கள், மண்ணெண்ணெய் ஸ்டவ்; சுவரோரங்களில் துரவிய கரப்பு மருந்து; பத்தடி தள்ளி சமையலறைச் சாக்கடை. இவற்றைப் பார்த்து அவளையும் பார்த்து மெளனித்தான்.
அவள் அவன் தொப்புளை மெல்ல நெருடினாள்.
"அது வெறும் கனவுதான் அமூல்' என்றாள்.
அவளுக்குக் கோயமுத்துரர் வீட்டின் விஸ்தாரமான கொல்லைப் புறம் நினைவுக்கு வந்தது. சில இடங்களுடன் சில பிம்பங்களும் இணைந்து வருகின்றன. அந்த வீட்டுடன் ஒன்றி வரும் பிம்பம் பாட்டியுடையது. பதின்மூன்று வயதிலிருந்து குழந்தை பெற்ற பாட்டி. பெரிய, பெரிய வாணலிகளில் காய்கறிகளையும், அல்வாக்களையும் கிளறி இறக்கின பாட்டி சோனிப் பேரக் குழந்தைகளுக்கு - இவளும் அதில் சேர்த்தி - உடம்பில் அழுந்த அழுந்த விளக்கெண்ணெய் தடவியவாறே ராமாயணம் சொன்ன பாட்டி. சாட்டை நாக்குப் பாட்டி. ஒரு சொல் சொன்னால் சுரீரென்றிருக்கும்.
கிருஷ்ணன் குழலுக்கு மயங்கி ஆவினம் நின்றதுபோல் பாட்டியைச் சுற்றி மிருகங்கள்.
நல்ல வெய்யில் நாள் மத்தியானம் உறங்கிக்கொண்டிருந்த பாட்டி சடக்கென்று விழித்தாள். கொல்லைப்புறம் போனாள். கிணற்றின் பின்னால் இருந்த சுவரில் ஒரு குரங்கு கர்ண கடுரமாக அரற்றிக் கொண்டிருந்தது.
“என்னடா?” என்றாள் பாட்டி.
"உர்” என்றது.
"பாட்டி, பக்கத்துல போகாதே பாட்டி” என்று இவளும் சித்தி பிள்ளைகளும் கூச்சல் போட்டனர்.
பாட்டி அதையே பார்த்தாள். குளியலறை பக்கத்திலிருந்த விறகு அடுக்கி வைக்கும் அறைக்குப் போய் ஒரு கொட்டாங்கச்சியை எடுத்து வந்தாள். தொட்டித் தண்ணியில் அதை முக்கி நிரப்பினாள். குரங்கின் அருகே போனாள். தண்ணிர் நிரம்பிய கொட்டாங்கச்சியை நீட்டினாள். வெடுக்கென்று வாங்கிக் கொண்டு ஒரே மூச்சில் குடித்தது. இன்னும் நிரப்பினாள். மூன்று முறைகள் வாங்கிக் குடித்துவிட்டு வாலைச் சுழற்றிக்கொண்டு தாவியது.
"அதுக்குத் தாகம்” என்றாள் பாட்டி.
வீட்டில் கறுப்பும், வெளுப்பும், பழுப்புமாய் பூனைகள் ஒரு டஜனாவது இருக்கும். பேத்தி-பேரன்மார் பந்தி, ஆண்கள் பந்தி முடிந்து பெண்கள் பந்தியுடன் பாட்டி ஒரு காலை நீட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்ததும் ஓடி வரும் பூனைகள்.
"மியாவ்" என்கும் ஒன்று.
"அப்பளம் வேணுமாம்” என்று மொழிபெயர்ப்பாள் பாட்டி. அப்பளம், ரசம், சாதம், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று ருசி கண்ட பூனைகள். அப்போதுதான் பெத்துப் பிழைத்த பூனைக்கு நெய் சாதம் போடுவாள். காலைப் பால் வந்ததும் பூனைகளுக்குப் பால் கிடைத்து விடும்.
"உனக்கு ஒரு பூனை வேணுமா?" என்றான் அமூல்யோ.
"ம்ஹாம். உனக்கு? உங்கள் வீட்டில் நாய் உண்டே?”
"இந்தக் கூண்டு வீடுகளிலே பிராணிகளை அடைப்பது ரொம்பத் தப்பு” என்றான்.
"குழந்தைகளைக் கூட" என்றாள் அவள்.
எலிக் கனவிற்குப் பிறகு பல முறைகள் எலி தரிசனம். எலிப் புராணங்கள். கீதாவும் ஸுக்தேவும் கூறிய எலி அனுபவங்கள். பாப்கார்ன் கொறித்தவாறு படம் பார்த்துக்கொண்டிருந்தபோது காலில் சுருக்கென்றதாம் கீதாவுக்கு. உதறிவிட்டு அவள் நிமிரும்முன் ஸாக்தேவ் காலை உதறினானாம். இருவரும் கீழே பார்த்தால் ஒரு பெருச்சாளி ஓடியதாம். இருவர் பாதங்களும் ரத்தக்களரி. பல ஊசிகளுக்குப் பின், நியாயமான கோபத்துடன் பத்திரிகையில் வேலை செய்யும் நண்பனை அணுகி இது பற்றி எழுதச் சொன்னபோது, அவன் ஒரு பொறுமையான புன்னகையை உதிர்த்து அவன் பத்திரிகையின் சினிமா விமர்சகரின் அனுபவத்தைக் கூறினானாம். நிருபர்களுக்கான பிரத்யேகக் காட்சியைத் தவறவிட்டவள் படம் வெளியான தியேட்டரில் பார்க்கப் போனாள். குறிப்புகளை அவள் எழுதும்போது அவள் துப்பட்டா இழுபட்டது போல் தோன்றியதாம். அதை லட்சியம் செய்யாமல் நாற்காலியின் கைப்பிடியில் தாளை வைத்து அவள் மும்முரமாக எழுதினாளாம். இடைவேளை வெளிச்சம் வந்ததும் குனிந்து பார்த்தால் மடியில் ஒரு எலி! அவள் எழுந்து நின்று அலறியபோது ஒடிய எலியைப் பார்த்து மற்றவர்கள், "எலிக்கா இப்படி?” என்றார்களாம். அருகிலிருந்தவர் ஒரு விஸ்தாரமான எலி ஜோக் சொன்னாராம். ஒரு பெண் ஜூடோ கற்றுக்கொண்டாளாம். கராத்தே கற்றுக்கொண்டாளாம். களறிப்பயிற்று கற்றுக்கொண்டா ளாம். ஒருநாள் அவள் வீட்டுச் சமையலறையில் ஒரு சுண்டெலி ஒடியதாம். அவள் வீலென்று அலறி நாற்காலியில் ஏறி நின்று கொண்டாளாம். கெக்கேகெக்கே என்று சிரித்தாராம் சொல்லிவிட்டு.
அவர் காலை எந்தப் பெருச்சாளியாவது கடித்ததா என்று தெரியவில்லை.
அவளுக்கு ஒர் எலி ராஜகுமாரன் கதை தெரியும். மூன்று ராஜ குமாரர்கள். அதில் ஒருவன் எலி ராஜகுமாரன். மற்ற இரு ராஜ குமாரர்களும் இவனைத் துரத்திவிடுகிறார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு இவனொரு ராஜகுமாரியைச் சந்திக்கிறான். அவள் இவனை முத்தமிட்டதும், அவன் ஒர் அழகான ராஜகுமாரனாக மாறிவிடு கிறான். கொஞ்சம் பெரியவளானதும் கதைக்கு இவளொரு பின் குறிப்பு சேர்த்துக்கொண்டாள். எலி ராஜகுமாரன் அழகான ராஜ குமாரனானான் முத்தத்தின் பின், ராஜகுமாரி எலியானாள். என்ன அற்புதம்! எந்த ராஜகுமாரனும் அவளை முத்தமிட முன்வரவில்லை. எலி ராஜகுமாரன் கூட.
கீதாவும், ஸுக்தேவும் ஒரு வருடம் வெளியூர் போன பிறகு இவர்கள் அதே வீட்டில் தங்கியபின் போராட வந்த எலி இது. பெரிய நகரங்களைக் குறிக்க ஏதாவது ஒரு சொல் இருக்கும். நியூயார்க்கை பிக் ஆப்பிள் என்பதுபோல். இந்த நகரத்தைக் குறிக்கும் ஒரே சொல் எலி என்று பட்டது. எலி நகரம். எலி மனிதர்கள். முத்தமிட்டாலும் எலியாகவே இருக்கும் மனிதர்கள். இந்த ஜன்னலில் ஒண்டியிருக்கும் எலிக்குப்பின்னால் ஒரு சரித்திரம் இருக்கலாம். பல யுகங்களாக எலியாக இருந்து அலுத்து, பல சுயசரிதைகளைத் தின்று களைத்து, அவளை முத்தமிட்டு உருமாற நினைத்த எலியாக இருக்கலாம் இது.
எழுந்து ஒரு நீண்ட கழியால் ஜன்னல் கதவைத் தள்ளினாள் வெளிப்பக்கமாய். எலி துள்ளி வெளியே ஒடியது.
மறுநாள் அமூல்யோ தன் வெளியூர்ப் பயணம் முடிந்து வந்ததும் எலிபற்றிச் சொன்னாள். எலி பாஷாணம் வாங்கலாமா என்றான் அமூல்யோ. இது கொஞ்சம் இலக்கிய எலியாக இருக்கிறது. ரொம்பத் துடித்துச் சாக வேண்டாம் என்று தோன்றியது அவளுக்கு. பாஷாணம் இல்லாமல் சாக ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. பார்க்கப்போனால் ஒர் அபத்தமான உலா அவளிடம் இருந்தது. ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் மேல் பாடிய உலா. அவர் இறக்கும் சில மணி நேரங் களுக்குமுன் இந்த உலா அவர் முன் படிக்கப்பட்டதாகவும், அவரை உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனதற்கும் அந்த உலாவுக்கும் சம்பந்தம் உண்டு என்றும் பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதியினர் ஒரு வதந்தியைப் பரப்பியிருந்தனர். அந்த உலாவைத் தின்றால் இந்த எலி கட்டாயம் சாகும் என்று நினைத்தாள். ஆனால் துடிக்காமல் சாகுமா? சிரிப்பு வந்தது.
"ஏன், உன்னிடம் அதைச் சாகடிக்கிற மாதிரி புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்ன?”
"இதோ பார், நீ தமிழைக் கிண்டல் பண்ணாதே. உன் புத்தகம் எல்லாம் எலிசுடத் தின்காத சொத்தைப் புத்தகம்.”
இது என்ன மாகாணப் பிரச்னையா:
"பின்னே என்ன, ழ சொல்லத் தெரியாத மடையன் எல்லாம் தமிழைக் கிண்டல் பண்ணுகிறதா? டாமில் என்ன டாமில்? தமி ழ், தமிழ் - ழ சொல்லு."
'ழ' என்றான் அமூல்யோ சுத்தமாக.
"ஒரு தடவை சொன்னால் ஆயிற்றா? வாழைப்பழம் வழுக்கி கிழவி நழுவி குழியில் விழுந்தாள். சொல்லு.”
"இதோ பார், ஸ்லீப்பர் கிடைக்காமல், தூங்காமல் வந்திருக்கேன். ஒரு கப் டீ தந்து விட்டு எனக்குத் தமிழ் -பார், தமிழ் என்று சொல்லி விட்டேன் - கற்றுத் தரக் கூடாதா?”
பல தரப்பட்டவர்கள் வாழும் நகரம் இது என்றார்கள். ஆனால் இதில் மதறாஸிகள் என்று பெரிய அடைப்புக்குறியில் அடக்கப் பட்டவர்கள் இருந்தார்கள் என்று தெரிந்தது. அமூல்யோவின் நண்பனொருவன். இவளைக் கண்டதும் அவன் வாய் கொஞ்சம் கோணும். "நமஸ்காரம்ஜி” என்பான் அரைத்துஅரைத்து. 'அம்' போட்டு விட்டால் தமிழ் என்ற நோக்கில், "சாம்பாரம், ரசம், டீயம், காப்பியம், பூரியம், சப்பாத்தியம்..” என்று சரமாரியாகக் கூறிவிட்டு "க்யாஜி” என்பான் இழுத்தவாறு.
இரண்டொரு தடவைகள் சென்றபின், "விஜய், பாவம் குழந்தை யிலிருந்தே இந்தக் கோளாறு உண்டா? இதுக்கு ஏதாவது குணமாகும் வழி உண்டா? இவ்வளவு பேசக் கஷ்டப்படுகிறீர்களே?" என்றாள் கனிவுடன்.
விஜய் திடுக்கிட்டு, "இல்லையே, இது வந்து... மதறாஸி ..." என்று தடுமாறினான்.
"சரிதான். நான் உங்கள் நாக்கு சரியில்லை என்று வருத்தப் பட்டேன், இத்தனை நாள். நாங்கள் இப்படிப் பேசுவதில்லை பாருங்கள்.”
விஜய் அமூல்யோவைப் பார்த்தான் உதவிக்கழைப்பதுபோல்.
"என்ன விஜய்? என்ன குடிக்கிறீர்கள்? டீயம் ?”
"டீ" என்றான் மெல்லிய குரலில்.
இன்னொரு நண்பன் மூன்று பெக் ரம் உள்ளே போனதும் ஜோக் சொல்லுவேன் என்று அடம்பிடித்தான். "நான் மதறாஸி மாதிரி நடிக்கப்போகிறேன்" என்றான் உரக்க மற்றவர்கள் அவனை அடக்கும் முன் அவன் மதறாஸியாகிவிட்டான். "நான் மதறாஸி மாதிரி சாப்பிடப் போகிறேன்” என்று அறிவித்தான். சட்டைக்கையை மடித்து விட்டுக் கொண்டான். எதிரே இலை இருப்பது போல் பாவித்து ஒரு கை அள்ளி உஸ்ஸென்று உறிஞ்சினான். இன்னொரு கை அள்ளி இன்னொரு உஸ். பிறகு பரபரவென்று அள்ளி வாயில் திணிப்பது போல் பாவனை. கடைசியில் நாக்கை வெளியே விட்டு உள்ளங் கையையும், புறங்கையையும் நக்குவதுபோல் காட்டினான். அவனே சிரித்தான். யாரும் சிரிக்கவில்லை.
விஜய் அவனருகே மெள்ளப் போய் என்னவோ கிசுகிசுத்தான். அவன் அவளைப் பார்த்து இளித்துக் கொண்டே "சும்மா தமாஷ்" என்றான். "எனக்குத் தமிழ் நாட்டுக் கோயில் பிடிக்கும். அப்புறம் டோஸா, வடா, இட்லி (டவில் அழுத்தி) . .” என்று இழுத்தான்.
"சனியனே' என்றாள்.
அமூல்யோவுக்கு மட்டும் புரிந்தது. நண்பனின் பையைக் கையில் தந்து வெளியேற்றினான். விஜய் அன்று போகும்போது நமஸ்காரம்ஜீ கூடச் சொல்லாமல் பலகீனமாக அவளை அனைத்து குட் நைட்' என்றான்.
ஒரு வெறி வந்தது. அதிகமாகத் தமிழர் வாழும் பகுதியில் வாழையிலை விற்பவனை அணைத்துக்கொள்ளலாம் போல இருந்தது. 'அவுக' இவக என்ற சொற்கள் காதில் விழுந்தவுடன் தாமிர பரணியே கரை புரண்டு வந்துவிட்டதுபோல் தோன்றியது. தோசை யும், இட்லியும், வடையும், ரசமும், இடியாப்பமும், செட்டி நாட்டுக் கோழிக்கறியும் வாழ்க்கையின் ஆதாரங்களாகத் தோன்றின. மறந்தே போன தமிழ்ப் பாடல்கள் திடீரென்று இரவு வேளைகளிலோ, மத்தியான வெயிலிலோ, பேருந்துகளில் அல்லது ரயிலில் ஜனத் திரளில் வியர்வையை அழுந்தத் துடைக்கும்போதோ ஒரு மின்னல் வலியாய் நினைவுக்கு வந்தன. மொட்டை மாடியில் இரவு கால்களை அகற்றி வைத்து நடை நடந்தவாறே நட்சத்திரங்களைப் பார்த்து தாத்தா பாடும் காவடிச் சிந்து கேட்டது :
ஊத்த சரீரமிது ஒன்றுக்கும் உதவாது
பீத்த சல்லடை போலே - கிளியே
சதா நமக்குத் துன்பமிது.
தமிழ்ப் புத்தகசாலையை எட்டும்வரை இந்த வெறி பிடித்து ஆட்டியது. புத்தகசாலையில் வண்ணவண்ண அட்டைகளில் மல்லாந் தும், குப்புறவும் படுத்த பெண்களைக் கண்டதும் கால்கள் சற்றுப் பின்னிக்கொண்டன.
புத்தகசாலைக்காரர் வேட்டிக்குள் போட்ட ஒரு கையை எடுக்கவே மாட்டார் என்று தோன்றியது. உள்ளே அப்படி என்ன புதையல் இருந்தது என்று தெரியவில்லை. பெண்களைக் கண்டதும் அவர் கை அப்படிப் போய் மறைந்து கொண்டது. தமிழ்ப் பண்பாடு பற்றி எஞ்சியிருந்த ஒரு கையை ஆட்டியபடி அழுத்தத்துடன் பேசினார். "ஒரு பண்பாட்டை நாங்க பாதுகாத்துக்கிட்டுருக்கோம்மா."
"தமிழுக்காகக் கல்லடி பட்டவன் நான்.” மண்டையில் ஒரு வழுக்கை மூலையைக் காட்டினார். "வெளியில பாரதியார் சிலை ஒண்ணும், திருவள்ளுவர் சிலை ஒண்ணும் வைக்கணும்னுட்டு இப்ப ரொம்ப முயற்சி பண்ணிக்கிட்டிருக்கிறோம். சுவத்துல எல்லாம் குறள் எழுதணும்னுட்டு நான் ஒரு யோசனை முன்வச்சிருக்கேன். நுழைஞ்ச உடனே குறள் கண்ணுல படனும்மா பளார்னுட்டு குத்தணும் கண்ணை. இப்ப நீங்களே நுழையlங்க தெய்வம் தொழாள்
கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை - எதிர்ல குறள். எப்படியிருக்கும்மா உங்களுக்கு? சிலிர்த்துப்போயிடும் இல்லையா? அப்படியே புல்லரிக்கும். நம்ம பெண்கள நாம்ப போற்றணும்மா. குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னா னுட்டு பரிசு தர மாட்டோம். குத்துவிளக்கு தருவோம். தமிழ்ப் பண்பாட்டுல பெண்கள் பங்கு பற்றிப் புத்தகம் தருவோம்” முன்னால் சாய்ந்தார். "ஒன்னுமில்லம்மா. நம்ம பண்பாடு முழுக்க முழுக்கப் பெண்கள் கையில் இருக்கும்மா." பெண்கள் கையில் பண்பாட்டை ஒப்படைத்த நிம்மதி அவர் குரலில் தெரிந்தது. இவருடைய கை தன் பண்பாட்டுத் தேடல்களை விட்டுவிட்டு வெளியே வந்தால் அதிலும் கொஞ்சம் பண்பாட்டுச் சுமையை வைக்கலாமே பாதுகாக்க என்று தோன்றியது.
சங்கத்தின் வாசலருகே, தென்னிந்தியர்கள் எல்லோரும் கலை களைப் பயிலும் சபையின் பாடகர் ஒருவர் மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
"என்னை வெளில அனுப்பிச்சுட்டாங்க தெரியுமில்ல?"
"அப்படியா? ஏன் ?”
வெளேரென்று கஞ்சி போட்டு விறைத்திருந்த சட்டையின் பொத்தான்களை மடமடவென்று கழற்றி வெற்று மார்பைக் காட்டினார்.
"பூணுால் இல்ல."
மிகவும் வீர்யம் வாய்ந்த பாஷாணம் வாங்கி வந்தார்கள் இருவரும். ரொட்டியில் தடவி மூலைகளில் போட்டனர். ஒரு ரொட்டித் துண்டை கழுதையின் ஆத்மகதையின் பின்னால் போட்டாள். எந்த ரொட்டித் துண்டை அது தின்றதோ தெரியவில்லை. மெத்தென்ற நீலத் துணியில் தைக்கப் பட்ட பையின் உள்ளே அடக்கமாய்ப் படுத்து இறந்து கிடந்தது. அவளுக்குத் திக்கென்றது. அது கஷ்டப்பட்டிருக் குமா? துடித்து இருக்குமா? அது தொல்லைப்படுத்தியது. தூக்கத்தைக் கெடுத்தது. புத்தகங்களைப் பாழாக்கியது. நீலப் பைக்குள் தனியாகத் துடித்து இறந்துபோனது. அமூல்யோ கடற்கரையின் ஒர் ஒரத்தில் பையை உதறிவிட்டு வந்தான். கடற்கரையில் இவர்கள் ஒரு முறை பார்த்த எலிபோல் இதால் முரண்டு பண்ண முடியாது. ஓர் எலிக்கூண்டில் எலியுடன் இவர்கள்முன் ஒருவன் நடந்தான் கடற் கரையில் ஒரு மாலை. கூண்டு வழியாகப் பார்த்து கீச்கீச்சென்றது ஒரு குட்டி எலி, கடற்புறமாய் வாயை வைத்துக் கூண்டைத் திறந்தான். எதிரே கடலைப் பார்த்து அசந்தது. கூண்டை விட்டு வர மறுத்தது. கத்தியவாறே கூண்டின் கம்பியைக் கவ்விக்கொண்டது. கூண்டுடன் வந்தவன் அதை உதறினான். உலுக்கினான். தட்டினான். ஒவ்வொரு முறையும் வெளியே வராமல் எலி அடம் பிடித்தது. சங்கடப்பட்ட வாறே கூண்டருகே தவம் கிடந்தான் எலி வெளியே வரும் என்று.கடற்கரையை விட்டு வெளியே போகும்போது கடைசியாகத் திரும்பிப் பார்த்த போது எலி இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. அவன் கூண்டருகே அமர்ந்திருந்தான் கூண்டைத் திருப்பி எடுத்துப் போக. எலி அவன் பிடிவாதத்தை ரசித்ததாய்த் தெரியவில்லை. சூரியன் அஸ்தமித்த அந்தி ஒளியில் அவனுடைய மற்றும் எலிக் கூண்டின் நிழலுருவங்கள் தெரிந்தன. எதிரே தொடுவானம். அருகே கட்டடமலைகள்.
குருவியின் வருகை இது நடந்து சில தினங்களுக்குப் பிறகு நடந்தது. ஒருவர் மட்டுமே செளகரியமாக நிற்கக் கூடிய வராந்தாவில் நின்றபடி கீழே குவிந்திருந்த குப்பை மேட்டையும், அதனருகேயே மலம் கழிக்க அமர்ந்திருந்த குழந்தைகளையும் பார்த்துவிட்டு, பார்வையை எதிரே இருந்த பழைய சினிமா தியேட்டரின் பக்கம் திருப்பியபோது பழைய இந்திப் படம் ஒடிக் கொண்டிருந்தது அங்கே மின் விசிறிகள் ஓடாத குறையை நிவர்த்தி செய்ய பால்கனி கதவுகள் திறக்கப்பட்டி ருந்தன. கனத்த, கறுப்புப் படுதாக்களினூடே முகேஷ் ராஜ்கபூருக்காகப் பாடிய பாடல் ஒன்று மிதந்து வந்தது. இவள் தோளை உரசியவாறே அது விழுந்தது. பதறிப் போய் நகர்ந்து குனிந்து பார்த்தால் குருவி. சின்னக் குருவி. ஒரு சிறகு கோணலாய் முறிந்திருந்தது. அலகினுள் கோவைப் பழச் சிவப்பு. தொடப் பயமாக இருந்தது. பேனா மை போட வைத்திருந்த மை நிரப்பியில் தண்ணிர் நிரப்பி அதன் வாயில் சொட்ட விட்டாள். கண்களைத் திறந்தது. ஒர் அட்டையால் அதை ஏந்தி ஒரமாக வைத்தாள். இரவு அதன் மேல் ஒரு வலைக் கூடையை வைத்து மூடினாள்.
காலையில் கூடையைத் திறந்ததும் ஒரு கூச்சல் போட்டது குருவி. கிக்கீகிக்கீ என்று கத்தியவாறே சுற்றியது. மை நிரப்பியை அலகால் தட்டியது. இவள் மலைத்துப்போய் திரும்புவதற்குள் இரு குருவிகள் வராந்தா சுவரின் கைப்பிடியில் அமர்ந்தன. வேகவேக மாய்ப் பறந்து வந்து புழுக்களைக் குட்டிக் குருவியின் வாயில் திணித்தன. குட்டிக் குருவி சமர்த்தாய், ரசிக்கும் கிக்கி ஒலிகளை எழுப்பியபடி முழுங்கியது. பிறகு மீண்டும் முடங்கிக்கொண்டது.
மத்தியானத்தில் துவங்கின பறக்கும் பாடங்கள். மேலிருந்து கீழே, கீழிருந்து மேலே மெதுவாகவும், வேகமாகவும் பறந்தது ஒரு குருவி. அது அமர்ந்ததும், மற்றொன்று பறந்தது. குட்டிக் குருவி கோணல் சிறகுடன் எழுந்து, காற்றில் எழும்பி விழுந்தது. ஐந்துமணி வரை விடாமல் முயன்றன இரு குருவிகளும். குட்டிக் குருவி பறக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு நடக்கத் துவங்கியது. இரண்டு குருவி களும் அவள் பொறுப்பில் குட்டிக் குருவியை ஒப்படைத்து விட்டுப் பறந்தன. தொடர்ந்து சில நாட்கள் வருகை தந்துவிட்டுக் குருவிகள் இரண்டும் மறைந்தன. குட்டிக் குருவியால் ஐந்தாறடிக்கு மேல் பறக்க முடியவில்லை. புத்தக அலமாரியின் முதல் தட்டின் இரும்புப் பிடியைத் தன் வாசஸ்தலமாக்கிக்கொண்டது. இரவில் திருட்டுத்தனமாக வந்து புத்தகங்களை முற்றுகையிட்ட எலி போல் இல்லாமல் பகல் வேளையிலேயே ஒரு பக்கத்துப் புத்தகங்கள் முழுவதும் எச்சமிட்டது. ஒரு நாள் அதன்முன் மண்டியிட்டு அமர்ந்து, "சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ...” என்று பாடியதும் கர்ரக்" என்று சத்தமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. சிவப்பு நிறம் அதை வெகுவாக ஈர்த்தது. சிவப்பட்டைப் புத்தகங்களின்மேல் தாராளமாக எச்சத்தைப் பரப்பியது. இரவு வெகு நேரம் கழித்து வந்து கதவைத் திறக்கும்போது புத்தக அலமாரியின் மூலையிலிருந்து க்விக்' என்று கூவித் தன் மறுப்பைக் காட்டியது.
புத்தக அலமாரி அருகே உள்ள சன்னலைத் திறந்ததும் அதன் கம்பியில் அமர்ந்தது. மில் புகையின் கருமை படிந்த கட்டடங்களை, வாகனங்களின் நெடியும் கூச்சலும் கலந்த பின்னணியில் சன்னல் வழியாகப் பார்க்கும்போது முன்னணியில் ஒரு கோணல் சிறகுக் குருவி கண்ணில் பட்டது. மணிக் கண்களை விழித்து வெளியே பார்க்கும் குருவி.
மழைத் திரையின் பின்னே எல்லாம் மங்கல் கோடுகளாகத் தெரியும்போது, சன்னல் கம்பியில் பதித்த முகத்தின் அருகே குட்டிக் குருவி இருந்தது. கண்ணை இடுக்கி, விழிகளை ஒர் ஒரத்தில் வைத்துப் பார்த்தபோது குருவி கண்களை நிரப்பியது. அதன் தலையின் பின்னே, சாம்பல் பூசிய நகரம் நீண்டது. குருவியின் தலையில் வைத்த நகரம் போல். கிரீடமாய்.
சன்னலில் தலையைப் பதித்து நின்றவாறே கண்கள் அசந்த ஒரு நேரத்தில் கண்ணை விழித்தபோது குட்டிக் குருவியைக் காணோம். "குட்டி, குட்டி' என்று கூவியவாறே வீடு முழுவதும் தேடினாள். 'குட்டி என்று உரக்கக் கூவி வராந்தாவின் வெளியே எட்டிப்பார்த்த போது கட்டடச் சுவரின் ஓர் ஒட்டையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. கோணல் சிறகு தெரிந்தது. பருந்தோ, கழுகோ, வல்லூறோ அதைத் தாக்கும்முன் அதை மீட்பது எப்படி என்று கலங்கியபோது, நளினமாக எழும்பிப் பறந்து மீண்டும் ஒட்டைக்குள் நுழைந்தது. இன்னொரு முறை எழும்பி பறந்து காட்டியது. அமூல்யோவும் அவளும் வராந்தாவில் நின்றுகொண்டே இருக்க, மூன்றாம் முறை மேலே எழும்பி மேலேயும் கீழேயும் லயத்துடன் பறந்து ஐம்பதடி துரத்தில் இருந்த மரம் ஒன்றில் புகுந்துகொண்டது. மரத்தில் பல சிட்டுக்குருவிகள்.
கண்ணுக்கெட்டிய துரம் வரை நெடிய, இடைவெளி இல்லா கட்டடங்கள். சீர்செய்யப்படாத சுவரின் வெடிப்புகள், வெடிப்புகள் மேல் சில சுவர்களில் பூசிய சிமெண்டின் வளைவு வளைவான கோடுகள், மழைத் தண்ணிர் சுவரில் ஊறாமல் இருக்கத் தார் பூசிய சில சுவர்கள். வராந்தாவில் இருந்து வெளியே நீண்ட கொக்கிகளில்
தொங்கிய வண்ண உடைகள், சில சன்னல்களில் இருந்த தொட்டி களிலிருந்து வெளியே நீண்ட பச்சை இலைகள் இவற்றுடன் நகரம் ராட்சஸன் மாதிரிக் கிடந்தது. அதன் நடுவே முட்டி மோதிக் கிளைத்திருந்த மரத்தின் கிளையில் ஒரு சிட்டுக் குருவி.
அதன்பின் ஒருநாள் மாலை அந்த அனுபவம் ஏற்பட்டது.
தெரு விளக்குகளும், கடை விளக்குகளும், விளம்பர நியான் விளக்குகளும் பளிச்சிட ஆரம்பித்தாகிவிட்டது. வீதி ஒரு வாகன சமுத்திரமாக இருந்தது. விர்விர்ரென்று இரண்டடுக்குப் பேருந்துகளும், புகுந்து, நுழைந்து விடாமல் ஒலி எழுப்பியவாறே விரையும் ஆட்டோக் களும், பொறுமையற்ற ஸ்கூட்டர்களும், மோட்டார்களுமாக ஒசைப் பிரளயம். வாகனங்களுடே நுழைந்து, ஒடி, முண்டியடித்து வீதியின் அப்புறத்தை எட்டிவிட்டான் அமூல்யோ. பாதி வீதியைக் கடந்து, வீதியை இரு பகுதிகளாகப் பகுக்கப் போடப்பட்டிருந்த கற்களாலான ஒரடித் தளத்தில் இவள் சிக்கிக்கொண்டாள். எதிரே இருந்து அமூல்யோ வா வா வென்று கையை அசைத்தான். சுற்றிலும் ஒரு சிறு சதுர அடி இடைவெளியைக்கூட வீணாக்காமல் பளிச்சிட்டப் பெரியபெரிய விளம்பர விளக்குகள் கண்ணை முட்டின. முதுகை உரசுவது போல் வந்தது இரண்டடுக்கு சிவப்புப் பேருந்து நீலமும், மஞ்சளும், கருப்புமாய் விளம்பரங்களுக்கான ராட்சஸ வண்ணத் தீட்டல்களுடன். நின்று கிரீச்சிட்டு, கடந்து முன்னேறும் மூர்க்கமான வாகனங்கள். இரண்டடி பாய்ந்து நடந்து, பிறகு கறுப்பு நிறத்தில் சீறிக் கொண்டு வந்த மோட்டாருக்குப் பயந்து மீண்டும் பின்னால் வந்தாள். காதருகே ஹாரன் ஒலிகள் தமுக்கடித்தன. முகம், கழுத்து, அக்குள், தொடை எல்லாம் வியர்வை வெள்ளம். மீன்கள் விற்கும் கூடைகள் இரண்டைச் சாய்த்துப் பிடித்தபடி ஒருத்தி அருகில் வந்தாள். வாடை அடித்தது கூடைகளிலிருந்து. கூடைகளைப் பிடிக்காத மறு கையால் இவள் இடையை வளைத்துக்கொண்டாள். கூடைகளை உயர்த்தி வாகனங்களை மறித்தபடி இவளை இழுத்துக் கொண்டு போனாள். வீதியின் அப்புறத்தை எட்டியதும் அமூல்யோவின் அருகே இவளை விட்டுவிட்டுப்போனாள்.
எச்சிலும், துப்பலும், சாக்கடையும், சிகரெட் துண்டுகளும், சிறு வியாபாரிகளும் நிறைந்த நடைபாதையில், நகரத்தின் சகல ஓசைகளும் பிரவாகித்துப் பெருகிய இடத்தில், மூச்சு வாங்க நின்றபோது எதிரே அவன் வந்தான். நகரத்தின் மொழியில் பேவ்டா என்று அழைக்கப் படுபவன். மில்லி அடிப்பவன். பேவ்டாக்களிடம் நகரம் கனிவுடன் நடந்து கொண்டது. பேருந்துகளிலோ, ரயிலிலோ, அவர்கள் நீட்டிப் படுத்துக் கிடந்தால் யாரும் அவர்களை உலுக்கி எழுப்புவதில்லை. "பேவ்டா ஹை, பேவ்டா ஹை" என்று மன்னித்துக் கடந்தனர். இரவு பன்னிரெண்டு மணிக்கு, ஒரு முறை ஒரு பேவ்டா பேருந்தில் ஏறி நடத்துனரிடம் சீட்டு வாங்கமாட்டேன் என்று அடம் பிடித்தான். "குடி, குடி, குடி, மாலையில் குடி, காலையில் குடி, பகலில் குடி, இரவில் குடி குடி, குடி, குடி” என்று ஹிந்தியில் முழக்கமிட்டபடி நின்றான். நடத்துநரே அவன் சீட்டை எடுத்தார். "கோயில் வந்தால் எழுப்பு” என்று விட்டுத் தடால் என்று படுத்தான். வழியெல்லாம் கோயில். பத்தடிக்கு ஒரு சாயிபாபா நடைபாதைக் கோயில். எந்தக் கோயிலில் எழுப்ப? "பாவம், பேவ்டா” என்றார் நடத்துநர்.
எதிரில் வந்த பேவ்டா அருகில் வந்ததும், நடுத்தர வயது மனிதர் என்று தெரிந்தது. பத்தடி தள்ளி இருந்தபோது மெல்ல ஸ்லோ மோஷனில் சரிந்து விழுந்தார் நடைபாதையில். யாரும் கண்டு கொள்ளவில்லை. வழியில் கிடக்கும் அவர்மேல் இடறாமல் சுற்றி நடக்கத்தொடங்கினர்.
அவளும் அமூல்யோவும் அருகில் போனதும் அவர் எழுந்திருக்க முயன்று தோற்றார். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் இரண்டங்குல இடைவெளி வரப் பிரித்து, "கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது” என்று கூறி மலர்ச்சியுடன் புன்னகைத்தார். அவரை வழியிலிருந்து எழுப்பி ஒரு கடையின் சுவரோரமாய் அமர்த்தினர். "என் செருப்பு காலில் இருக்கிறதா? அதைக் கையில் தா, காலிப் பயல்கள் துரக்கிக்கொண்டு போய்விடுவார்கள்” என்றார். கையில் ஜோடி செருப்பைத் தந்ததும் அதை அணைத்தபடி கண்களை மூடிக்கொண்டார். முகத்தில் நிம்மதியான புன்னகை.
பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் நீண்ட வரிசையில் நின்று கொண்டனர். பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தில் சாய்ந்து அவள் சிரிக்கத் தொடங்கினாள். ஒரு வினாடிக்குப்பின் அமூல்யோவும் சேர்ந்துகொள்ள இருவருக்கும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
'காலச்சுவடு ஆண்டுமலர்', 1991