www.archive.org
google ocr______________
இந்நேரம், இந்நேரம் - மெளனி
'இந்நேரம், இந்நேரம்”
சித்திரை மாதம், நல்ல கடுங்கோடை மாவடி கிராமத்தில் உதயத்திலிருந்தே கடுமையாக வெய்யில் கண்ட ஒருநாள் காலை எட்டு மணி சுமாருக்கு, சிவராமய்யர் தன் வீட்டுத் திண்ணைச் சாய்மணையில் சாய்ந்து கொண்டிருந்தார். அவருக்குச் சுமார் நாற்பது வயது இருக்கலாம். விவேகத்திற்கும் தற்கால உலக நடப்பிற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவர். ஆயினும் உலக வாழ்வில் சலிப்புக் கொள்ளாது, கடத்த வேண்டிய தன் வாழ்நாளைத் தன் கெளரவத்திற்கேற்பக் கழித்துக் கொண்டிருந்தார்.
"எங்கேடா வந்தாய்?” என்றார் சிவராமய்யர். செல்லக்கண்ணு எதிரே திண்ணைப்புறம் வீதியில் நின்றிருந்தான். இவருடைய நிலம் பயிர்ச்செலவு செய்யும் குப்புப் படையாச்சியின் தம்பி செல்லக்கண்ணு. அவனுக்குச் சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம்.
சிவராமய்யர் கேட்டதற்கு, "இல்லேங்க, சும்மா பார்க்கத்தானுங்க” என்றான்செல்லக்கண்ணு.
"தடிப்பயலே, இங்கே என்னடா வேலை? கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்கிறதில்லை. கூழைக்கும்பிடுபோட வந்து விட்டாயா?” என்றார். அந்தத் தொனியில் கோபமில்லை. சிறிது தாமதித்து, "தெரிந்ததுடா. இந்த வருஷம் பயிர்ச் செலவு கிடையாது. உங்ககிட்டே கொடுக்கப் போகிற தில்லை. காத்துப் படையாச்சி வந்து தொந்தரவு செய்கிறான்” என்றார். "என்னங்க அப்படிச் சொல்லிட் டேங்க? அதுக்குத்தானே பாக்க வந்திருக்கேங்க. பாத்துப் பாத்து நல்ல ஆளாப் பிடிச்சேங்க!” என்று அரைகுறைச் சிரிப்போடு, முழங்கையைத் தடவிக்கொண்டே, கீழ் நோக்கிச் செல்லக்கண்ணு சொல்லிக் கொண்டிருந்தான்.
உள்ளேயிருந்து சிவராமய்யருடைய மனைவி லகூழிமி அம்மாளின் "இங்கே வந்துட்டுப் போங்க” என்ற வார்த்தை களைக் கேட்டு அவர் உள்ளே சென்றார். சிறிது நேரம் சென்று வெளியே வந்து அந்த ஆளோடு பேச ஆரம்பித் தார். "என்னடா செல்லக்கண்ணு, நீ பெரிய ஆளா யிட்டேடா. திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேங்கிறேயடா. என்ன வந்துட்டதோ உனக்கு?”
"இல்லேங்க, வீட்டிலே தவுசலுங்க. இல்லேன்னா என்னங்க எனக்கு, நம்ப வீட்டோட கிடக்கிறவனுக்கு - கப்பலுக்குக்கூடப் போனும்னு தோணித்துங்க."
“சீ, சி கழுதை! குட்டிச்சுவராபோகத்தானே உங்களுக்குப் புத்தி தோணுகிறது. உருப்படுவதற்கு வழியா உங்களுக்கு அகப்படும்?”
கொஞ்சம் கவலை பிடித்தவர்போன்று சிறிது பேச்சை நிறுத்தி, மீண்டும் “ஏண்டா அக்கிரகாரம்தான் கெட்டுப் போய்விட்டதென்றால் குடியானத் தெருவிற்கு என்னடா வந்துவிட்டது?... ஏண்டா பாசிப் பணம் இன்னும் வரல்லை?” என்றார். அவர் பேச்சுத் தொனியில் கோப மிருப்பதாய்க் காணப்படவில்லை. கொஞ்சம் துக்கந்தான் தெரிந்தது. தன் கிராமத்தின் சுற்று வட்டாரத்தின் எல்லை யோடு நிற்காமல் அவர் மன நோக்கு உலகத்தையும் சுற்றி வந்தது.
"ஆமாங்க, ரொம்ப கெட்டுப்போச்சுங்க. கட்டு மானமே குறைஞ்சுபோகுது. தன் தலை நாட்டாமை தலைவிரிச்சு ஆடுதுங்க... நேத்திக்குப் பாருங்க, தொப்பளான் குடிச்சிப் பிட்டுப் புரண்டான். வெசது புளுத்தநாய் குறுக்கே போகாது. நாட்டாமை இருக்காங்களே! பொழுது விடிஞ்சா டவுனு போயிடுறாங்க. ஏதோ தில்லுமுல்லு பண்ணிக்கையிலே ரெண்டுகாசாக் கொண்டு வந்துடறாங்க காசுக்குத் தானே பவிகங்க. இப்போது என்ன வேண்டியிருக்குது? ஒண்ணு, சொன்னா கேக்கணுங்க, இல்லாட்டி தனக்காத் தெரியணும்.
"ஏய்... மேல வீட்டு ஐயாவைத் தெரியுமா?’ என்று சிவராமய்யர் கொஞ்சம் மெதுவாகச் சொன்னதும், "அவங்களா, பெரிய ஆசாமிங்க மூணாம் வருசம் பயிர்ச் செலவு பண்ணி, பட்டதுபோதுங்க. புள்ளி விட்டாஏதோ குறைந்தது ஒத்துண்டாத்தான் சாமி ஏழை பாழை பொழைக்கலாம்? கரடியாக் கத்தினாலும், வயித்திலே அடிச்சதுதான் மிச்சம். ஏங்க என்ன விசேஷம்?” என்றான் செல்லக்கண்ணு.
"அதாண்டா சொல்லறேன். ஏதோ சடையன் கிட்டே பேசிக்கொண்டிருந்தாங்க பாசிப் பணத்தைப் பற்றி. தனியாக ஏதாவது குறுக்கே செய்கிறான்.”
"அவங்களே அப்படித்தானுங்க... சடையனா? பொல்லாப் பயலாச்சே! என்னுகூடியும் என்னுகிட்டே மாட்டிக்காமே போவப் போவதில்லை."
"அதெல்லாம் கிடக்கட்டும். ஏண்டா எப்போ கலியாணம்?” என்று கேட்டார் அய்யர்.
வெகு நேரமாக இக்கேள்வியை அவர் கேட்க எதிர்பார்த்து நின்ற செல்லக்கண்ணுக்கு அப்போது வந்த சந்தோஷம் மிக அதிகமாக இருந்தது. ஆயினும் வேறு அநேக காரணங்களின் நிமித்தம் அதை அப்படியே வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.
"அதுதானுங்க... முந்தானா வீட்டிலே போயிருக் காங்க பரிசம் போட" என்று சங்கோசம் கொண்டு, எட்டிய வெளியைப் பார்த்துக்கொண்டே, அலட்சிய பாவத்தில் சொல்லுவதுபோல, செல்லக்கண்ணு சொன்னான்.
"போடா போடா, எங்கையாவது கலியாணம் ஆகாத பெண்ணைப் பார்த்து உனக்குப் பரிசம் போடச் சொல்லு. உனக்கு ஆகணும் என்பது முக்கியமில்லை. அவளுக்கு ஆகிவிடும். என்ன ஆச்சு நாகப்பன் மகள் தகராறு?
"அதை ஏன் கேக்கிறீங்க... ஆனா இப்பொ என்ன எல்லாம் ஆச்சுங்க. அந்தப் பயலையே கூப்பிட்டுக் கட்டிக் கொடுத்துட்டாங்க. என்னைத்தானுங்க நினைத்துக்கிட்டு இருந்தாருங்க அவரு. நல்ல பெண்ணுங்க, மனுசனாம் மனுசன். திருட்டுத் தாலி கட்டாட்டா கலியாணம் ஏதுங்க அந்தப் பயலுக்கு? போறாங்க. அவன் கொடுத்து வைத்தவன். நல்ல பொண்ணுங்க. வெகு அடக்கம். என்ன சொல்ல இருக்குங்க. அந்தப் பய இப்போ மொறைச்சுக் கிறான். பரிசப் பணங்கூடக் கொடுக்க முடியாதுங்கிறான். பெரிய ஆளுங்க அவன். சும்மாவா இந்த வேலை செய்தான்?” என்று நாகப்பன் மகளிடம் உள்ள பிரியமும், அந்தப் பயலிடம் உள்ள வெறுப்பும் கலக்க, மடமடவென்று பேசினான்.
“எந்தூர்ப் பெண்? அது கிடக்கட்டும், ஏண்டா என்கிட்டே சொல்லக்கூடாதா?’ என்று வினவினார் சிவராமய்யர்.
"நான் எப்படிச் சொல்லறதுங்க? அண்ணன் சொல்லுமின்னு இருந்தேங்க. சொல்லல்லை போல இருக்கு. சுத்த மோசங்க. உங்ககிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லாமே போயிருக்காங்களே!... இன்னிக்கு வரணுங்க.."
“உள்ளேபோய் அம்மா ஏதோ சொல்லறாங்க, போய்ப்பாரு. கொட்டில் மாட்டை - மாட்டுக்காரப் பயல் வந்திருக்கான் - அவுத்து விடு” என்று சொல்லி, சிவராமய்யர் அவனை உள்ளே அனுப்பினார்.
அம்மா சொன்ன காரியங்களைச் செய்து முடித்து விட்டு, மோர் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் பேசிக் கொண்டிருந்து, என்னதான் அப்படி இப்படி நின்று கொண்டிருந்தும் பொழுதுபோகவில்லை அவனுக்கு. தன் வீட்டில், பரிசம்போடப் போனவர்கள் திரும்பி வரும் நேரமோ எப்போதென்ற நிச்சயமில்லை. மாலைக்குள் அவர்கள் வருவார்கள் எனினும் அதுவரையில் அவனுக்கு நேரம் நகரவில்லை. நிச்சயமாக இந்தத் தடவை கலியாணம் முடிந்துவிடும் என்றாலும், தன்னுடைய அண்ணன், அத்தை முதலியவர்களின் வருகையில்தான் அக்காரியம் நிறைவேற இருக்கிறதென்று அவர்கள் வருகைக்காகத் துடித்துக் கொண்டிருந்தான். நேற்றைப் பொழுதை எப்படியோ கழித்துவிட்டான். நிச்சயமில்லாது 'இதோ இதோ என்று எதிர்பார்க்கும் நேரம் நழுவி எட்டிப்போகிறது போலும். இடைநேரத்தைக் கழிக்கச் செல்லக்கண்ணு மிகவும் சிரமங்கொண்டான்.
காலையிலிருந்து கீழ்க்கோடியிலிருந்து மேலக் கோடி வரையில் நடந்து, அகப்பட்டவர்களையெல்லாம் இழுத்து வைத்துப் பேசியும் மத்தியானம்தான் ஆகிறது. பரிசம் போடப்போனவர்களோ, கலியானம் பேசிக் கொண்டே, இவன் சாகும் வரையில் அங்கேயே இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் கொள்ளலானான். நேற்றைத் தினமே பேசிவிட்டு இன்று காலையில் கிளம்பினாலும் உருமத்திற்கு முன் வந்து விடலாம். என்ன கஷ்டமோ, இவனுக்கு என்ன தெரியப்போகிறது?
மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு, செல்லக் கண்ணுக்கு வீட்டில் தரிப்புக்கொள்ளவில்லை. மண் வெட்டியை எடுத்துக்கொண்டு நல்ல கொளுத்துகிற வெய்யிலில் மணல் மேட்டிற்குப் போனான். அது ஒரு திடல். சுமார் முப்பது நாற்பது தென்னை மரங்களும், இரண்டு மூன்று மூங்கில் கெர்த்துக்களும் அதில் இருந்தன. மற்றும் பெரும்பாலான இடம் அதில் காலியாக இருந்தது. கோடை மழை பெய்ததுடன் அதை ஒரு தரம் பறையர்களை வைத்துக்கொண்டு கொத்த வேண்டும் என்று மிராசுதார் முன்பு சொல்லியிருந்தும் அந்தக் காரியம் இன்னும் செய்யப்படாது நின்றிருந்தது.
ஒரு வேலையும் இல்லாது சும்மா உட்கார்ந்து குருட்டு யோசனைகளின் தொந்தரவு பொறுக்காது அவன் மணல் மேட்டைக் கொத்துவதற்குப் புறப்பட்டான்.
மொங்கு மொங்கென வேர்க்க விருவிருக்கக் கிட்டத்தட்டப் பாதிக் கொல்லை கொத்திவிட்டான். சிறிது இளைப்பாற ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு வெற்றிலைபோட ஆரம்பித்தான். போட்டதும் பழைய படியே யோஜனைகள் மனத்தில் குறுக்கிட ஆரம்பித்தன. கலியான ஞாபகம் வந்துவிட்டது.
'போனவங்க வராத காரணம் தெரியவில்லையே!” என ஆரம்பித்தவுடன் மனதும் ஓட ஆரம்பித்தது. '.
இந்நேரம், இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாங்க.. என்ன வேலை அங்கே? உண்டு இல்லை என்பதில்லை. அவங்க அப்போதே நிச்சயம் சொல்லிவிட்டாங்களே. கருப்பண்ணன் கூடப்போயிருக்காங்களில்லையா? அவங்களே மசமசப்பு. போனாங்க வந்தாங்க என்கிற தில்லை. போன வருசம் என்ன செய்தான்? மாடுவாங்கித் தரேன்னு கொல்லுப்பட்டி ஐயாவை ஒரு மாதம் இழுக்கடித்தான். மாட்டுத் தரகு வேறே அவங்களுக்கு. எப்போதும் வீட்டு வாசலிலே ஐந்து பேர். "இங்கே வாண்ணேன் என்று ரெண்டுபேரை இங்கே கூட்டிக் கிண்டு குசுகுசுன்னு பேசுவான். ரெண்டுபேரை அங்கே கூட்டிட்டுப் பேசுவான் ஒண்ணுமில்லாமே. துரும்பு யுடிங்கோ!' என்பான். காசிலே மட்டும் குறி. அவங்கதான் அப்படின்னா, எனக்கு அண்ணன் வாச்சிட்டாங்களே, அண்ணன்! மூணு வருஷமாக் கலியாணம் பண்ணறாங்க. நானும் சும்மா இருந்தா போக வேண்டியதுதான். நேரேயா சொல்ல முடிகிறது. கப்பலுக்கு ஓடரேன்னதும்தான் அங்கே இங்கே போக ஆரம்பிச்சாங்க என்ன சொல்லி என்ன? கொடுத்து வெச்சது தான் நமக்குக் கிடைக்கும். நாகப்பன் மகள் இப்படி ஆகும்னு யார் நினைச்சா? காத்துண்டு இருந்தது தான்மிச்சம். காலிப் பயல் திருட்டுத் தாலி கட்டிட்டான். அவனும் மனுசனா? என்ன முடியும் அவனாலே? பழத்தட்டு தூக்கறான் ரயிலடிலே! பயிர்ச் செலவு செய்கிறது அப்பாலே கிடக்கட்டும். ஒரு பண்ணையிலே வணங்கி வேலை செய்யத் துப்புண்டா? பாவம் அந்தப் பெண்ணுக்குக் கஷ்டம். ஏதோ நல்லபடியா இருக்கட்டும்.
'இந்நேரம், இந்நேரம் அந்தக் கோணவாய்க் காலடிக்கு வந்திருக்கணும். அவங்களெல்லாம் மத்தி யானம் சாவடியிலே தங்கி சுப்புக்காத்தான் வீட்டிலே சாப்பிட்டு வந்தாலும் வந்துவிடலாம். நல்ல ஊரு, சாவடி முட்டி புடிச்ச ஊரு. போட்டா முளைக்கனுமே. புதைய லெடுக்க வெட்டிப் போட்டாலும் ஏதாவது பொழைக் கணுமே நல்ல மண்ணு. சப்பாணிக்குக்கூட அங்கேதானே கலியாணம்.”
"யாரு இப்போ நல்லா இருக்காங்க? எல்லோருக்கும் கஷ்டம் என்று நினைவு கொண்டதும் அவன் மனது அவனை அறியாது ஒரு ஆறுதல் கொண்டது.
"மிராசுதாருக்குக் கஷ்டம். காலையிலே எழுந்து பல்லுக்கூடத் தீத்தாதே உழவு காலத்திலே வாய்க்கால் வரப்பிலே உட்கார்ந்து கிடக்கணும். ஏராங் கடைசி வரையிலும் பழியாக் கிடக்கணும். நெல்லு விலை போகலே. வாயிதா கட்டணும் என்று எப்போதும் அழுகை தான். காசோ குதிரைக் கொம்பு. ஏதோ மேலுக்கு எல்லாம் சந்தோஷப் பூச்சுத்தான். கிட்டை போனால்லே தெரியுது.
'இந்நேரம். கோண வாய்க்கால்... என்ன மெதுவா வாராங்க... எதுவும் தாமசம்தான். உருப்படாதே போறது வெகு சீக்கிரம். ஆமாம், ரோசியந் தோப்பு வந்திருப்பாங்க, இருட்டு முன்னே வந்துடுவாங்க. அப்பப்பா, ரோசியந் தோப்பு, ஏதோ அதைப்பத்திக் கதை சொல்லறாங்க. ரொம்ப நாள் முந்தி கட்டையன் தாத்தா அங்கே தூக்குப் போட்டுக்கொண்டாங்களாம். கட்டையன் வம்சமே பித்துக்குளி. அவருக்கு ஒண்ணுமே குறைச்சல் இல்லை யாம். உருமத்திற்கு மாடு ஒட்டிவரக் கையும் கயிறுமா வீட்டை விட்டுப் புறப்பட்டவங்க மரக் கொம்புலெ துக்கு மாட்டிக்கிட்டுத் தொங்கிண்டு இருந்தாங்களாம். அந்த மரத்தை வெட்டியாச்சு. இப்போதும் அந்தத் தோப்பு மரங்கள் கப்பும் கிளையுமா வா வான்னு கூப்பிடுறது மாதிரியாத்தான் இருக்கிறது. மத்தியானமே ஒரே வெறிச்சென்று இருக்கும். ஆனால் ஆயிரம் காக்கை மட்டும் எப்போதும் கத்திண்டே இருக்கும். நம்மூரு வாய்க்கால் அங்கே வளைந்து வரும்போது பயந்துண்டு தாழங்காட்டிலே மறைந்து கொண்டு தான் வருகிறது. அந்தப் பெரிய ஆலமரத்திற்கும் செக்கடித் தோப்பு புளியமரத்திற்கும் முனி ஓட்டம். அன்னிக்கு ராத்திரிக்கூட அந்த வழியிலே வந்த கலிமுத்து அண்ணன், பார்த்துப் பயந்துக்கிட்டுக் காச்சலில் விழுந்துவிட்டாங்க... இவங்க குறுக்காக மேலவட்டம் வயல் வழியே வந்துடுவாங்க.
'போன வருஷமே அதைத் தரிசாப் போட்டு விட்டாங்க கிஸ்திக்குக்கூடக் கட்டாதாம். நட்டாப்போதும் முட்டச்சாவி எங்கேன்னு காத்து இருக்கும். சாவின்னா என்னா, மாவுக்கு மூணுன்னா என்ன? சர்க்காரு கேக்கிறாங்களா? முப்பது வருஷம் முன்னாலே தாம் பார்த்து வாயிதாப் போட்டாங்களா..
'அந்தக் கண்றாவி பார்க்க முடியாது. அந்த வயலுக்கு ஏத்தாப்போல நாலு பனமரமும் ஒரு அய்யனார் கோவிலும். புல்லூரான் அங்கே மூணு மா வாங்கியிருக் கிறான். பின்னே எப்படித் தில்லுமுல்லு காசு போற வழி? மவளைக் கட்டிக்கொடுத்தான்; வீடு திரும்பி வந்துடுத்து. மகனோ நல்ல வயசிலே போயிட்டான். அவனும் ஒடுங்கிட்டான். என்னவேணும் மனுஷனுக்கு இதைவிட பாவம்'
'இந்நேரம், இந்நேரம். தலையைச் சிறிது தூக்கி எட்டிய வெளியைப் பார்த்தான். யாரோ இரண்டு மூன்று பேர் வருவது தெரிந்தது.
'அவங்க அதோ வராங்க... எனக்கு அப்பவே தெரியுமே, பொழுதோட வந்திடுவாங்கன்னு. பின்னென்ன, இருட்டிலா வருவாங்க? அண்ணன் விஷயம் தெரிந்த வங்க.
திரும்பி அங்கே பார்த்தபோது அவர்கள் இல்லை யென்பதை அறிந்துகொண்டான். ஒரு ஏமாற்றத்தின் ஆத்திரத்தில், எழுந்து வெகு விசையாகக் கொத்த ஆரம்பித்தான். அநேகமாகக் கொல்லை பூராவாகக் கொத்தியாகிவிட்டது. குறுக்கும் நெடுக்குமாக நடந்து, குனிந்து, ஆங்காங்கே கிடந்த கல்லை எடுத்து எட்டி யெறிந்து கொண்டிருந்தான். குதுாகலம் ஒரு பக்கம் இருப்பினும் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்த்து அடைபட்டுக் கிடந்ததன் காரணமாக அவன் மனது அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தான்.
"பொறந்தாலும் சின்னத்தம்பி மாதிரியா பொறக்க ணும். என்ன கவலை அவனுக்கு? வீடாச்சு, வாசலாச்சு. பெரிய பண்ணையிலே வேலை. போன வருசம் கலியாணம் பண்ணிக்கொண்டான். அவன் வேலையுண்டு, அவ னுண்டு, ஐயர் வீடு உண்டு. ஐயாவுக்கும் அவன்கிட்டே உசிரு. என்ன நினைச்சு என்ன? அவங்க அவங்க பிறந்த வழி...'
வீட்டிற்கு வந்து மண்வெட்டியை வைத்துவிட்டுக் குளத்தில் குளித்தான். பின் சிவராமய்யர் வீட்டுக்கு வந்தான்.
சிவராமய்யர் அப்போது அவனைப் பார்த்ததில் சிறிது ஆச்சரியம் கொண்டவர் போல, “ஏண்டா, என்ன விசேஷம்?” என்றார். "இல்லேங்க, கொல்லை கொத்திட்டேனுங்க..... சொல்லிப்போக வந்தேன்” என்றான். “ஏண்டா, என்னடா பைத்தியம்? ரெண்டு ஆளை அழைத்துக் கொண்டு செய்யக்கூடாது?....சரி, பசுமாட்டைக் காணோமாம், போய்ப் பார்த்திட்டு வா!”என்று சொல்லி அவனை அனுப்பினார்.
இரவு வெகுநேரம் தேடி, பிறகு பவுண்டிலிருந்து ஒட்டி வந்து ஐயர் வீட்டில் கட்டிவிட்டு, அவன் வீடு சேரப் பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது. பரிசம் போட்டு வந்தவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண் டிருந்தார்கள்.
செல்லக்கண்ணு, வெட்கமும் சங்கோஜமும் கொண்டு எட்டி நின்று, அவர்கள் பேச்சை மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அடைந்த சந்தோ ஷத்தை அவனே அறியாதுதான் அப்போது நின்று கொண்டிருந்தான்.
- மணிக்கொடி 1937