Tuesday 8 March 2016

மிஸ்டேக் - மெளனி

_www.archive.org
google ocr_______________

மிஸ்டேக் - மெளனி
'ஏ ட் ஆநந்த ராவ் சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு, வெகு சமீபத்தில் இருந்தான். "ஏட்டாகக் காயமாகி, ஏழு வருடம் ஆகிவிட்டது. அவன் மந்திப்பேட்டைக்கு வந்தும் ஐந்து வருடத்திற்கு மேலாகிறது. அவ்வூருக்கு அடிக்கடி மாறிவரும் சப் இன்ஸ்பெக்டரிடமும் சர்க்கிளிடமும் மற்றும் மாறாது ஒரே விதத்தில், ஒரே இடத்தில் இருக்கும் கான்ஸ்டேபிள்களிடமும், நடந்து கொள்ளும் வகை ஏட்டிற்கு நிதானப்பட்டு உடம்பிலும் நன்றாக ஊறிவிட்டது.

கடந்த இரண்டு வருஷ காலமாக, அவ்வூரில் இருந்து வரும் சப் இன்ஸ்பெக்டர் சோணாசலம் பிள்ளை, இவனுடைய ஆப்த நண்பரே போன்றுதான். அவனும் அப்படித்தான் சொல்லிக் கொண்டு வருகிறான். போலீஸ் இலாகாவில் இரண்டு மேல், கீழ்த்தர உத்தியோகஸ்தரிடை நட்பு ஏற்பட்டதென்றால், அத்தகைய நட்பின் தன்மை எப்படி என்பது ஊகித்துக் கொள்ள முடியுமேயன்றி, சொல்வது முடியாது. அவ்வூர் மளிகை வீரண்ணன் செட்டியார் எப்படி எல்லோரிடமும் ஏட்டிடமுள்ள தன் நட்பைத் தெரிவித்துக் கொள்ளுகிறாரோ, அவ்வகையில் இது இருக்கலாம். ஆயினும் இருவரிடை இருக்கும் சம்பந்தம்தான் மிகுந்த நுட்பமாக ஆராய்ச்சிக்கும் எட்டாது மர்மமாகவே அப்பால் செல்வது.

சோணாசலம் பிள்ளை வந்த புதுசில், ஆநந்த ராவ் அவருக்கு 272 ஆகத்தான் இருந்தான். பிறகு என்ன மேன் என்று கூப்பிடும் மனிதத் தன்மை பெற்றதும், அதன் பிறகு 'ஆநந்தம் என்னப்பா என வீட்டிலேயும் ஏனைய கான்ஸ்டேபிளிடையும் விளிக்கக்கூடிய அந்தஸ்தை அடைந்ததும் சாதாரணமாக எதேச்சையாக நடந்ததல்ல.

சோணாசலம் வீட்டுக் கன்றுக்குட்டிக்கு ஒருதரம் வியாதி எனத் தெரிந்துகொண்ட ஆநந்த ராவ், சைக்கிளில் ஆபீஸ் உடுப்பில் அலைந்தது ஊரிடையே, ஒரு கிளர்ச்சி கொடுக்கும் சம்பவமாகப் பாவிக்கப்படும் தோரணையில் இருந்தது. அது சோணாசலம் வந்த புதுசில், அப்போது ஏட் அவருக்கு 272 ஆகத்தான் இருந்தான். ஏட்டுக்கும் நம்பர் உண்டு.

சோணாசலத்தின் மைத்துனரை, ஒரு தரம் அவர் ஊரிலிருந்து வந்தபோது, ரயிலடியிலிருந்து வீட்டிற்கு ஜாக்கிரதையாக ஏட் கொண்டுவந்து சேர்த்தான். வந்ததும் வெளியே காத்திருந்தான். சிறிது சென்று இன்ஸ்பெக்டர் வெளிவந்து தரிசனம் கொடுத்தபோது எஜமான், அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன் என்றான் ராவ்.

‘சரி, நீ போ "மேன்” என்றார் சோணாசலம். அது முதல் அவன் அவருக்கு மனிதனாகிவிட்டான். இது சுமார் ஆறு மாதம் முன்பு. இதன் பிறகு ஏட், இன்ஸ்பெக்டரிடம் அதிகமாகவே நெருங்கி வந்தான்.

ஒருநாள் காலையில் சோணாசலம் முன்பு, அவர் மனைவியால் காப்பி கொண்டுவந்து வைக்கப்பட்டது. அவளோடு பேச யத்தனிக்கும் சமயம், காப்பி பாத்திரம் மேஜைமீது வைக்கப்பட்ட தடால் என்ற சப்தமும் சிறிது காப்பி தளும்பி மேஜைமீது சிந்திய காட்சியும் அவரைப் பேசாது அருந்திவிடச் செய்து, வாயிற்பக்கம் கொண்டு தள்ளியது. மனத்தில் மட்டிலும் தன் மனையாளோடு பேச வேண்டும் என்ற அவா குறைவுபடாது இருந்தது போலும். அப்போது தன் எதிரில் ‘கூர்ச்சம் மாதிரியாக ஏட்ராவ் நிற்பதைக் கண்டார்.

‘என்ன மேன், நீ ரொம்ப சோம்பேறி. சொல்லச் சொல்ல நிற்கிறாய்? என்ன அப்பா? என்றார்சோணாசலம். ஒருவகைக் கொஞ்சுதலைப் போன்றும், ஆத்திர மூட்டப் பட்டது போன்றும் தோன்றியது அவரது பேச்சுத்தொனி. ஏட்டிற்கு சந்தோஷமேயாயினும், பயந்ததாகத்தான் வெளிக்குக் காட்ட வேண்டும் என்பது தெரியும். உச்சி குளிர்ந்ததை, யார் முன்னிலையில் எவ்வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டவன் போன்றே பயந்துதான் அவர் எதிரில் நின்று கொண்டிருந்தான்.

நீபோடா சுத்த சோம்பேறி-சுத்தப் போக்கிரிப்பயல்... உன்னை நம்பவே கூடாது என்று சோணாசலம் அர்த்தமற்ற மூளைப்பேச்சின் வெளி விளக்கத்தையும், தன் மனைவியின் ஞாபகத்தையும் கலந்து கொட்டாவி விட்டுக் கொண்டே சொன்னார். திறந்த வாயில் எத்தனை காவி ஏறிய பற்கள் இருக்கின்றன என்பதை "ஏட் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அவனுக்கு ஆனந்தம் தாங்க வில்லை. தலை தரிக்கவில்லை. 'ஸார், நீங்க சொல்லுங்க ஸார். அந்த விஷயம்- இவ்வகையாக சோணாசலத்தை'ஸாராகப் பாவிக்க நேர்ந்ததும் சுமார் மூன்று மாதத்திற்கு முந்தித்தான் அதற்குப் பிறகு அடிக்கடி அவரை நெருங்கி ராவ் ஒவ்வொரு நாளும் தவறுகள் - உலக நடப்பு - டிபார்ட்மெண்ட் விஷயம், யோசனைகள் எல்லாம் பேசுவது தான் வழக்கம். என்றைக்காவது ஒருநாள், அவருடன் ஒரு வார்த்தை பேசி, பதில் கேட்காவிட்டால் "ஏட் உள்ளத்தில் ஒரு துயரம் உறையும். பழையபடி சோணாசலம் 'எஜமானாகி விடுவாரோ, தானும் தனித்தன்மையற்ற 272 ஆகப் போய்விடுவோமோ என்ற எண்ணத்தின் பயம். மற்றும் சிறிது நேரமாயினும் அவர் எதிரிலே தோன்றுவதி னின்றும் அநுபவிக்கிற இன்பம் இழந்த ஒருவகை வருத்தமும் அவன் மனது அடையும். அத்தகைய நாட்களில் மிகுந்த கோபப் புலியாகவே, வாடகை வண்டிக் காரர்களுக்கு "ஏட் தோன்றுவான்.

அன்றைய தினம் "ஏட் ராவுக்கு பத்து மணி டுடி’ பதினொரு மணி சுமாருக்கு அவன் சில அறிக்கைகளில் 'சர்க்கிள் கையெழுத்து வாங்கப் போகவேண்டி இருந்தது. ஒரு வாரமாக புதிதாக வந்த சர்க்கிளைப் பற்றி விவரமற்ற வதந்திகளேதான் வெளியில் உலாவியது. அவர் ஒரு கூடமான, மர்ம மனிதனாகவே இருந்து வந்தார்.

"ஏட் பேப்பர்களை எடுத்துக் கொண்டு அவர் வீட்டிற்குப் போக எண்ணியதும், அவன் மனது துள்ளி விளையாட ஆரம்பித்தது. நடுவில் சர்க்கிளை வைத்து யோசனைகள் சுற்றிச் சுற்றி வந்தன. முதலில் அவரைப் பார்ப்பது, கொஞ்சம் கொஞ்சமாக அவர் பழக்கம் ஏற்படுவது. பிறகு சிநேகம் என்பவைகளைப் பற்றி நினைத்தான். சப்-இன்ஸ்பெக்டர் சோணாசலத்துடன், தான் பழகும்விதம் - அவரைப் பிடித்தவிதம் - இப்போது சர்க்கிள், டிப்டி, அப்படியே ஜ.ஜி. என்று என்னவெல்லாமோ தாறுமாறாக அவன் மனத்தில் தோன்றித் தோன்றி மறையலாயின. ஒரு குதுகலம், முதல் தரம் பார்க்கப் போவதினால் ஒரு கூச்சம், ஒருவகை பயம் - மனத்தில் தோன்றின. வாயில் போட்டிருந்த வெற்றிலை பாக்கை வெளியே உமிழ்ந்து பல்லைச் சுத்தம் செய்து கொண்டான். ஒரு கையால் தலைக் குல்லாவைப் பிடித்துக் கொண்டு அண்ணாந்து, அரை பாட்டில் சோடாவைக் குடித்தான். பிறகு தலைக் குல்லாவை இரண்டுதரம் இரண்டு கைகளாலும் தூக்கித் துக்கி வைத்துப் பொருத்திக் கொண்டான். இரண்டுதரம் தூக்காமலே அதைச் சாந்தப் படுத்துவது போன்று தடவிக்கொடுத்து அதைச் சரியாக இருக்கச் செய்தான். தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் வாயிற்படியண்டை வந்தடைந்தான்.

அப்போது ஜட்கா வண்டிச் சுப்பன், எதிரே வெற்று வண்டியை, மெதுவாக ஒட்டிக் கொண்டு வந்தான். "ஏட்' அதைக் கண்டான். காலை முதல் வாடகை கிடைக்காத சலிப்பில், முழு வண்டியையும் தனி வண்டியாக பிறர்
பார்க்கும்வண்ணம் ஆக்கிரமித்து, குறுக்காக உள்ளே சாய்ந்திருக்கும் மைனரைப் போல, சுப்பன் உள்ளே உட்கார்ந்தவண்ணம் கடிவாளத்தை, கையினின்று நழுவி விழும் தோரணையில் பிடித்து ஒட்டிவந்தான். "ஏட் ராவ் சைக்கிளைத் திருப்பி உள்ளே வைத்துவிட்டு வாயிலில் வந்தபோது வண்டியும் எதிரே போய்க் கொண்டிருந்தது.

 'ஏய்! என்றான் ராவ்.

திடுக்கிட்டுப் பின்பக்கமாகக் குதித்து, எதிரே கைகட்டி 'எஜமான் என்றான் சுப்பன். அவன் மனத்தில் ஆத்திரம் ஒரு பக்கம்; பயமும் ஒரு பக்கம்.

 'என்னடா எலெ லாக்கப் கேக்குது என்ன குஷால்டா என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டு 'சர்க்கிள் வீட்டிற்கு ஒட்டச் சொன்னான் ஏட்.

 'சைக்கிளில் வேர்க்க விருவிருக்க முதல்தரம் அவரைப் பார்க்கபோனால்- என்பதெல்லாம் "ஏட்’ மூளையில் வண்டியைக் கண்டவுடன் தோன்றாமல் இல்லை. வேகமாக துரத்தப்பட்டு ஓடின வண்டி ஓட்டத்தை விட துரிதமாகவே ராவின் மனத்தில் யோசனைகள் போய்க் கொண்டிருந்தன. சர்க்கிள் வீட்டை வெகு சீக்கிரமாகவே அடைந்ததாக நினைத்த சுப்பனைவிட, சீக்கிரமாகவே வந்துவிட்டோம் என்ற எண்ணம்தான் ஏட்டுக்கு.

மாலை நாலரை மணி ஆகப்போகிறது. ஆநந்த ராவின் 'டுடி முடியப்போகிறது. சப்இன்ஸ்பெக்டர் சோணாசலம் இன்னும் ஆபீஸ் வரவில்லை. அவரைப் பார்க்காது பேசாது போவதில் ஏட்டுக்கு இஷ்டமில்லை. காத்திருப்போம் என்றாலோ, வீட்டிற்குச் சென்று உடைகளைக் கழற்றி, 'மப்டியில் கடைத் தெருவில் உலாவி சல்லாபம் செய்யவேண்டும் என்ற அவா, சீக்கிரம் வீடுபோகத் துண்டுகிறது. ஸ்டேஷனை விட்டு சுமார் ஐந்து மணிக்கு வீட்டிற்குக் கிளம்பினான். விதியை அடைந்தபோது பழக்கடை சாமித்தேவன் இவனைக் கண்டு அருகில் வந்தான்.

 "என்ன சார். காலையிலே சோக்கா - வண்டியிலே” என்றான் சாமித்தேவன்.

“என்ன? நீ பாத்தையா - சர்க்கிள் வீட்டிற்குப் போனேன்.”

"ஆமாங்க - கேள்விப்பட்டேனுங்க. எப்படி சார்-" என்றான் சாமித்தேவன்.

 "ஹா-ஹா அந்த சமாசாரமா- நெருப்பு ஐயா நெருப்பு - போலிஸே அப்படித்தான் தேவரே - பழைய சர்க்கிளா பாழா போச்சு - அல்லது நம்ப ஸாரா- சுட்டுடுவான் மேன்சுட்டுடுவான்’ என்றான் ஏட்ராயன்.

 இதற்குள் பேசிக்கொண்டே, வழியில் சோணாசலம் பிள்ளை வீட்டைக் கடந்துவிட்டார்கள். "ஏட் தன் சைக்கிளில், ஏறி, வீடுசேரப் புறப்பட்டுவிட்டான்.

முதல் முக்குட்டுச் சந்தியில் 472 பீட் இருந்தான். ஏட் அவனுடைய சாங்கோபாங்கமான சலாத்தைப் பெற்றுக் கொண்டு கொஞ்சதுரம் சென்றவன், போய்க்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் சோணாசலம் ஆபீஸ் போவதற்காக வாசலுக்கு வந்தார். ஏட்டின் லாகவமான, ஒரு சைக்கிள் திருப்பல். சோணாசலம் புறப்பட்டுவிட்டார். அவரை அடைவதற்குள்ளேயே, அவரோடு பேசுவதற்கு அநேக விஷயங்கள் ஏட் மனத்தில் உதயமாயின. மற்றும் அன்று காலையில்தானே, அவன் முதலில் சர்க்கிளைப் பார்த்தது.

சோணாசலம் சைக்கிளில் ஆபீஸ் போய்க் கொண் டிருந்தார். அவரை அணுகினான். சோணாசலம் பக்கத்தில் திரும்பி என்ன, ஆநந்தம் என்னடா என்றார்.

 “ஸார், ஒரு "மிஸ்டேக் ஸார் - செஞ்சுட்டேன் என்று "ஏட் மிகுந்த சாவதானமாகச் சொன்னான்.

அவரும் இவன் பண்ணின மிஸ்டேக்கினால் தலையை இழந்துவிடவுமில்லை, இழந்துவிடப் போவது மில்லை என்ற நிதானத்தில்,

"என்னப்பா மிஸ்டேக்-?” என்று வாயில் போட்டிருந்த வெற்றிலையை அசைபோட்டுக் கொண்டே கேட்டார்.நல்ல பிள்ளையின் மனத்தில் தோன்றும், முதல் நாள் தான் வெளியில் செய்ததான கல்பிதக் குற்றத்தைத் தானாகவே உபாத்தியாயரிடம் சொல்லி, அவருடைய வசையை விரும்பும் ஆவலைப் போன்று, ஏட் ராயன் மனத்திலும் இருந்தது. முகமோவெனில், அவன் திவ்விய முகம் போன்றுதான் பிரகாசித்தது.

 "இன்னிக்கி சர்க்கிள் வீட்டிற்குப் போனேன். சார்வண்டியில்-”

"உனக்குத் தெரியவே இல்லைடா-அவன் ஒரு மாதிரி ஸ்டிரிக்ட் மேன்-என்ன செய்தாய்?" என்றார் சோணாசலம்.

"இல்லை சார்-வண்டியிலே போனேன். யோஜனை சார்- வண்டிக்காரப் பயல் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டான் சார் - இறங்கினேன் சார் - சர்க்கிளும் வாசலில் நின்றிருந்தார் சார்."

"என்னடா - நீ செய்றது? ரெண்டு வாசல் முன்னேயே நிறுத்தியிருக்கக் கூடாதா? யோஜனை என்ன யோஜனை வேண்டியிருக்கிறது."

"அவரைப் பார்த்தேன் சார் - வண்டிக்காரப்பய மட்டுமிருந்து - அவர் இல்லாவிட்டால், தோலை உரிச் சிருப்பேன் சார்-" என்றான் ஏட்.

"வண்டிக்காரப் பயல்களே அப்படித்தாண்டா. போக்கிரிப் பயல்கள் - ஏமாந்தா, சரி அப்புறம்-”

"அவர் சிரித்தார் சார்- எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. ஆனாக்கே குனிந்துவிட்டேன் சார்- அவர் ஒரு மாதிரிதான்.”

"அப்பவேதான் சொல்லி இருக்கேனடா-சீ, சீ போடா, என்ன பிசகடா - என்னடா நினைத்துக் கொள்ளுவான் - என்னைப் பற்றி.”

'டிப்டி இரண்டு நாட்கள் கழித்து சனிக்கிழமையன்று மந்திப்பேட்டையில் 'காம்ப் செய்வதாக சமாசாரம் வந்தது. மேற்சொன்னவைகள் நடந்த மறுநாள், சர்க்கிள், டிப்டி வரும் விஷயமாகப் பேச, சோணாசலத்தை வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தார். பக்கத்தில் ஒத்து ஊதவும், தான் எப்படி அடித்துப் பேசுவது என்பதைப் புது சர்க்கிளுக்கு விளக்கிக் காட்டவேண்டியும், ஏட் ராயனையும் தன்னோடு அழைத்துச் சென்றார்.

சர்க்கிள் தன் வீட்டுத் திண்ணையில் நின்றிருந்தார். கீழே வாயிற்படியில் சோணாசலமும், மற்றும் கீழே படியோரத்தில், வீதியில், ஏட்டும் நின்றிருந்தனர்.

 ‘என்னய்யா இன்ஸ்பெக்டர் - டிப்டி நாளைக்குக் காம்பு- என்றார் சர்க்கிள்.

ஆமாம் ஸார் என்றார் சோணாசலம். எங்கே தங்க ஏற்பாடு செய்கிறது?

ஏட்டு ராவுக்கு, தான் இன்ஸ்பெக்டர் பக்கம் எவ்வளவு சமீபம் இருக்கிறோம் என்பதில் ஒரு திருப்தி, கொஞ்சம் எட்டியானாலும், சோணாசலத்தால் மறைக்கப் பட்டா ரெனினும், எதிரில் சர்க்கிளும் இருக்கிறார் என்பதில் ஒருவகை ஆனந்தம். எவ்வளவு கிட்ட, கொஞ்சம் கொஞ்சமாக எதிர்காலத்தில் தனது உத்தியோக உயர்வு எண்ணத்தில் படியேற முடியும் என்ற நம்பிக்கையின், நிரூபணம் போன்றுதான், எதிரே நடப்பது தோன்றியது.

‘ஏண்டா 272 -என்ன- என்று திடுக்கிட இவன் பக்கம் திரும்பிக் கேட்டார் சோணாசலம்.

"ஆமாங்க - எஜமான்-" என்றான் ஏட்.

"சரி ஸார்.” என்றார் சோணாசலம், ஸ்ர்க்கிளைப் பார்த்து.

ஸர்க்கிள் திண்ணை ஓரமாகக் கொஞ்சம் நகர்ந்து வந்து நின்றார். சப் இன்ஸ்பக்டர் நடுவாக இல்லாது, முக்கோணத்தின் மூன்று மூலைகளாக மூவரும் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்க்க முடிந்தது.

 "நேற்று நீதானே இங்கு-” என்று நிறுத்தினார் ஏட்டைப் பார்த்து சர்க்கிள்.\

 "ஆமாங்க-எஜமான் ஒருவகை நடுக்கம்; உள்ளுர புளகாங்கிதம் ராயனுக்கு.

"கையெழுத்து வாங்க-”

 "நேற்றைய தினமே என்னிடம் சொன்னான் ஸார் மிஸ்டேக்கை, முட்டாள்தனம் ஸார் - ஏக்ஸ்யூஸ்” சோனா சலம் நடுவில் குறுக்கிட்டார். பரிகாசமான ஒரு நகை சர்க்கிள் முகத்தில் தோன்றியது. சிறிதுபோழ்து நின்றார்.

ஏட்டைப் பார்த்துச் சோணாசலம், “புத்தியில்லை. ஆபீஸர்! முட்டாள், என்ன மிஸ்டேக்-” என்று, என்னவெல்லாமோ கடுமையாகச் சொன்னார்.

சர்க்கிள் "மிஸ்டேக் - முட்டாள்தனம்- என்று மெதுவாகச் சொன்னவர், தான் உலகில் பிறந்ததும் "மிஸ்டேக், போலீஸ் இலாகாவைச் சேர்ந்ததும் மிஸ்டேக்' இவ்வூரைப் பார்த்துவந்து, இவ்வகையில் இவர்கள் முன்னிலையில் நிற்பதும் மிஸ்டேக் - முட்டாள்தனம், என்று உணர்ந்தவர் போன்று தோன்றினார்.

சோணாசலம் "தவறுதல் ஸார்."

சர்க்கிள் "தவறுதல்?” என்றார்.

சோணாசலம் "மடத்தனம் சார் - எக்ஸ்யூஸ் செய்து விடலாம், முதல்தரம் ஸார் என்றார்.

மற்றும் ஏட்டைப் பார்த்து, "ஏய் போக்கிரித்தனமா என்னடா அது - குறும்புத்தனமா? மேல் உத்தியோகஸ்தர். வண்டி வீட்டடியில் அவர் முகத்திற்குக் கீழாக - உனக்கு ஒன்றும் புரியவில்லை. உடுப்பைப் பிடுங்கினால் தெரியும்" என்று அதட்டினார்.

 சாவதானமாக சர்க்கிள், "இல்லை இல்லை ஒருதனமும் இல்லை. என்ன விஷயம்? புரியும்படியாகச் சொல்லுங்களேன்-” என்றார். அப்போதுதான், அவருடைய அவ்வளவு நிதானப் பேச்சுகள் 272க்கு, அரட்டியை கொடுக்கலாயிற்று. சர்க்கிள் ஒருதரம் வாய்விட்டுச் சிரித்தார். இவர்கள் இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

"நேற்று ஸ்டேஷனிலிருந்துதானே வண்டி..? நடுவழியிலோ-”

 "இல்லை எஜமான் ஸ்டேஷனிலிருந்து எஜமான்”

சிறிது மெளனமாக இருந்து “வண்டிக்காரனிடம் மூன்று.அணா சில்லரை கொடு இருநூற்று-?”

 "எழுபத்திரண்டு எஜமான்."

"272 மூன்றனா. சில்லரை கொடு...”

"சரீங்க எஜமான்......

சிறிது நேரம் மெளனம்.

 "சரி. மிஸ்டர், முசாபரி பங்களாவில் எறக்கலாமா-” என்றார் சோணாசலத்தைப் பார்த்து, சர்க்கிள். -

“ஏண்டா மடையா...... 272 காதில் விழுகிறதா?...” என்றார் ராவைப் பார்த்து, சோணாசாலம்.

 "சரீங்க எஜமான்-”
 - "சரி ஸார்-"
 மறுபடியும் சர்க்கிள் ஏட்டைப் பார்த்து “ஏன் 272 உனக்கு வண்டிக்காரனைத் தெரியுமா, சில்லரை கொடுப்பதற்கு?’ என்றார்.

 கீழே பார்த்துக்கொண்டு ஏட் விழித்தான்.

 "148 நம்பர் வண்டி. தேடிப்பார்த்து, உடனே கொடு” என்றார் சர்க்கிள். அது ஒரு உன்னதமான கட்டளையைப் போன்று இருந்தது. அவர் சிரிப்பும் மாறிவிட்டது. ஒன்று சேர்ந்த பல் வரிசைகளின் இடைவெளி வழியாக, நல்ல பாம்பின் சீற்றம்போன்று உஸ் என்று வார்த்தைகள் வெளிவந்தன.

 சோணாசலத்திற்கும், சிறிது அரட்டி கண்டுவிட்டது. சிறிது சென்று சர்க்கிள் அவரைப் பார்த்து “சரி நான் - ஏற்பாடு செய்துவிடுகிறேன்- என்று சொல்லி, உள்ளே போகத் திரும்பினார்.

இரண்டடி வைத்தவர் ஏதோ நினைத்தவர் போன்று மறுபடியும் விதிப்பக்கம் திரும்பினார். அவர்கள் இருவரை யும் காணவில்லை. மிஸ்டேக் என்று தன்னை அறியாமலே தன்னுள் ஒருதரம் முணுமுணுத்துக் கொண்டார்.

272 எவ்வளவு பதட்டத்தில் 148-ம் நெ. வண்டிக் காரனை சில்லரை கொடுக்கத் தேடுவான் என்பதை அவர் நினைத்தபோது, அவரை அறியாமலே சிரிப்புவந்து விட்டது. வாய்விட்டு ஒருதரம் சிரித்தார். உரக்கச் சிரித்தும் ஆழமான மனதின் வெகு அடியில் ஏதோ ஒன்று கொஞ்சம் கடுமையாகவே மிஸ்டேக் என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பதான உணர்ச்சியைத்தான் அவர் கண்டார்.

 எதிரே உற்று நோக்கினார். குளத்திற்கு அப்பால் நிர்மலமான வானவெளி நன்றாகத் தெரிந்தது.
 - மணிக்கொடி 1937