Tuesday, 28 July 2015

எம்.வி. வெங்கட்ராம் (1920 – 2000) - சாரு நிவேதிதா, பைத்தியக்காரப் பிள்ளை , அடுத்த வீடு, தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை

எம்.வி. வெங்கட்ராம் (1920 – 2000)

By சாரு நிவேதிதா

First Published : 19 July 2015 10:00 AM IST


என் கர்வம் அழிந்து விட்டது. ஆம், உலகிலேயே transgressive fiction எழுதிய இரண்டு மூன்று ஆட்களில் நானும் ஒருவன் என்ற என் கர்வம் என்னை விட்டு அகன்று விட்டது. இந்தப் பாணி (genre) எழுத்தின் விசேஷம் என்னவென்றால், இது மற்ற வகை எழுத்தைப் போல் ஒரு இலக்கியப் பாணி அல்ல என்பதுதான். எப்படி ஒரு ஆன்மீகவாதி காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை மட்டும் ஆன்மீகவாதியாக வாழ முடியாதோ அதேபோன்றதுதான் இதுவும். எழுத்தில் ரியலிஸம், நேச்சுரலிஸம், ரொமாண்டிசிஸம், மேஜிகல் ரியலிஸம், சர்ரியலிஸம் என்று பலவகை பாணிகள் உள்ளன. ஆனால், ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தை இலக்கியத்தின் ஒரு பாணியாக மட்டுமே கருதி ஒருவர் எழுதி விட முடியாது. ஏனென்றால், அது அவரது புகழையும் அந்தஸ்தையும் நற்பெயரையும் – ஏன், சொல்லப்போனால் மொத்த வாழ்க்கையையுமே பலியாகக் கேட்கும் தன்மை கொண்டது. உலக அளவிலேயே இவ்வகை எழுத்தில் ஈடுபட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்க்கி தெ சாத் (Marquis de Sade), அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் பர்ரோஸ் (William Burroughs), கேத்தி ஆக்கர் (Kathy Acker), சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, ஃப்ரான்ஸின் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) போன்ற ஒருசிலர் மட்டுமே இந்தப் பாணியில் எழுதியிருக்கின்றனர். என்னுடைய புனைவு எழுத்துக்களும் இவ்வகையிலேயே அடங்கும்.

எம்.வி. வெங்கட்ராமின் காதுகள் என்ற சிறிய நாவலை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்று நிச்சயமாகச் சொல்லலாம். ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்றால் என்ன என்று வேறொரு சந்தர்ப்பத்தில் விளக்கியிருக்கிறேன்.

http://andhimazhai.com/news/view/charu-27.html

சுருக்கமாகச் சொன்னால், சமூகம் எதையெல்லாம் பாவம் என்றும் குற்றம் என்றும் ஒதுக்கி வைக்கிறதோ, விவாதிப்பதற்குக் கூட அஞ்சுகிறதோ அதை எழுதுவதே ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து. காதுகள் அப்படிப்பட்ட நாவல்தான். இதில் வரும் கதை அவருடைய சுய சரித்திரத்தில் ஒரு பகுதி என்கிறார் எம்.வி.வி.





மகாலிங்கம் ஒரு எழுத்தாளன். கும்பகோணத்தில் செல்வச் செழிப்பான சௌராஷ்ட்ரா குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பெற்றோர் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர்கள். மின்சாரம் வந்திராத காலம். வீட்டில் எப்போதும் பூஜையும் பஜனையும் உபந்யாசமுமாகவே இருக்கும். பொய் பித்தலாட்டம் எதுவும் இல்லாமல் நேர்மையாக வியாபாரம் செய்ததால் நொடித்துப் போன மகாலிங்கத்தின் தந்தை அந்தக் கவலையிலேயே இறந்து போகிறார். இந்தப் பின்னணியில் வந்த மகாலிங்கமும் தந்தை வழியிலேயே நேர்மையாக வியாபாரத்தைத் தொடங்குகிறான். கத்திப் பேசினால் மற்றவர் செவிகள் துன்புறும் என்பதால் மெல்லப் பேசும் அளவுக்கு மென்மையான உள்ளம் படைத்தவன். எம்.வி. வெங்கட்ராமும் இப்படித்தான் இருந்திருக்கிறார் என்பதை கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையிலிருந்து அறிகிறோம்.

எண்பதுகளில் வத்ராயிருப்பிலிருந்து யாத்ரா என்ற சிறுபத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதன் தி.ஜானகிராமன் நினைவு மலரில் (1983) எம்.வி.வி. பற்றி கரிச்சான் குஞ்சு இவ்வாறு எழுதுகிறார்:

‘மணிக்கொடியின் கடைசி வாரிஸான ஸ்ரீ எம்.வி.வி. கும்பகோணம் காலேஜில் இறுதியாண்டு படித்தார். அப்போது ஓரிரு தடவை நானும் அவனும் (தி. ஜானகிராமன்) எம்.வி.வி.யைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததுண்டு. அவரை அப்போது பார்த்ததை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் இன்பமாய் இருக்கிறது. தூய வெள்ளை வேட்டி, முழுக்கைச் சட்டை, முகத்தில் அமைதி நிறைந்த, அறிவும் சிந்தனையாழமும் சேர்ந்த கம்பீரமான இளைஞன் – நல்ல சிவப்பு நிறம். சௌராஷ்டிரர்கள் குடும்பத்தில் பிறந்தவர். அவர்களில் – மிகப் பெரிய பணக்காரர்களான புடவை உற்பத்தியாளர் – கோரா பட்டு வியாபாரிகள் ஒரு புறம் – நெசவு நெய்யும் தொழிலாளிகளான ஏழைகள் ஒரு புறம். எம்.வி.வி. அந்த நாளில் அந்த வகையிலும் அபூர்வமானவர். பிரக்ஞைமயமான வாழ்வில் இருந்தார்.’

மணிக்கொடி பத்திரிகையில் 1936-ம் ஆண்டு எம்.வி. வெங்கட்ராமின் முதல் சிறுகதை வெளிவந்தது. அப்போது அவர் வயது 16. அந்தக் காலத்தில் - அதாவது 1930-40களில் - எம்.வி. வெங்கட்ராமின் சிறுகதைகளே தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக தி. ஜானகிராமன் எழுதியிருக்கிறார். மட்டுமல்லாமல் அவரது மோகமுள் நாவலில் பாபுவின் கல்லூரித் தோழனாக வருவது எம்.வி. வெங்கட்ராம் தான். தி.ஜா. மோகமுள்ளில்:

‘பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான். எந்த மனிதனிடமும் வெறுப்போ, கசப்போ தோன்றாத, தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ? யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக, எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை.’

(எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் ஆகிய மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றி காதுகள் முன்னுரையில் பிரபஞ்சன் இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி. மூன்று பேரும் பல ஒற்றுமைகளை உடைய, ஒரு மையத்திலிருந்து உருவாகிப் பரந்த வெளிக்கு வந்து, மேகமாகவே பரந்த படைப்பாளிகள். இளமைக்கால நண்பர்கள். காவிரியின் மைந்தர்கள் என்றாலும் பொருந்தும். ஆற்றங்கரைக்காரர்களாகிய இவர்கள் மூவருமே ஒரு திக்காளர்கள்.’)

இப்போது காதுகளுக்கு வருவோம். தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் தொழிலை தந்தையின் பாணியிலேயே தொடர்கிறான் மகாலிங்கம். ஆரம்பத்தில் வியாபாரம் செழிக்கிறது. ஆனால் மத்திம வயதில் (36 அல்லது 37) அவன் காதுகளில் ஏதேதோ துர்சப்தங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் குரல்கள். பின்னர் காட்சிகள். ஆனால் புத்தி பிசகவில்லை. அருவருப்பான உருவங்கள் – கபந்தங்களும் அடக்கம் – ஆபாசச் சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் தன் இஷ்ட தெய்வமான முருகனின் உருவப்படத்தின் முன் நின்று முறையிடுவதைத் தவிர வேறு எதுவும் அவனால் செய்ய முடியவில்லை. இது பற்றி எம்.வி.வி.யே சுருக்கமாகக் கூறுகிறார்:

‘தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக் கொண்டது. மகாலிங்கம் முருகனை வழிபடக் கூடாது; தன்னைத் தான் வழிபட வேண்டும் என்பது தாமசத்தின் கருத்து. இதை மகாலிங்கம் ஏற்க வேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பான பிரமைக் காட்சிகளை அலையலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

அதிசுந்தரமான, அதிபயங்கரமான இந்த அனுபவம் 20 ஆண்டுகள் நீடித்ததால் அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்து ஏழ்மையும் வறுமையும் அவன் குடும்பத்தைப் பீடித்தது. அமானுஷ்யமான தமஸ்ஸும், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்திய போராட்டத்தை உதாசீனம் செய்து கொண்டே அவன் சில நாவல்களும் குறுநாவல்களும் பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொது அறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த காதுகள் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடர்கிறது.

ஆம். தேடல் தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன? இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம்தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.’





மீண்டும் காதுகளுக்கு வருவோம். மகாலிங்கம் தன் காதுகளில் கேட்கும் துர்சப்தங்களுக்காக மனோதத்துவ நிபுணரையோ மந்திரவாதியையோ பார்ப்பதில் விருப்பம் இல்லாதிருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஒரே உபாயம், தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் முறையிடுவது. ஆனால் முருகனும் அவனுக்கு உதவி செய்வதாகத் தெரியவில்லை. முழுசாகப் பைத்தியம் பிடிக்காமல் புத்தி மட்டும் சரியாக வேலை செய்து கொண்டிருந்தது. ஒரு துறவி ‘அது மட்டும்தான் முருகன் உனக்குச் செய்து கொண்டிருக்கும் உதவி’ என்று கூறுகிறார்.

கொஞ்ச நாளில் பல பூத கணங்கள் காதுகளில் பேச ஆரம்பிக்கின்றன. அவைகளின் பேச்சு வானொலி ஒலிச் சித்திரம் போல் அவனுக்குக் கேட்கின்றன. நாளடைவில் கேட்பது மட்டும் இல்லாமல் கண்களும் அந்தக் காட்சிகளைக் காண ஆரம்பிக்கின்றன. புத்தியைத் தவிர மற்ற ஐந்து புலன்களும் அவனுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை. அச்சிலேயே ஏற்ற முடியாத அளவுக்கு அசிங்கமாகப் பேசிக் கொள்கின்றன அந்த உருவங்கள். அதையே காட்சிகளாகவும் காணுகின்றான் மகாலிங்கம். ஒரு குரல் தன்னை யார் என்று இன்னொரு குரலிடம் கேட்கிறது. அதற்கு அந்தக் குரல், ‘நீ ஒரு காட்டுமிராண்டித்தனமான, புத்திவாடையே தெரியாத, கோரமான, குரூபியான பேய்ப்பிறவி’ என்கிறது. தொடர்ந்து ஒரு நாடகத்தைப் போல் அந்த இருவரின் உரையாடல்கள் அவனுக்குக் கேட்ட வண்ணம் இருக்கின்றன.

‘அளகா வருணிக்கிறியே, என்னை வருணிக்க எத்தனை வார்த்தை வேண்டியிருக்கு பாரு! நீ மாலியோட (மகாலிங்கத்தின்) ரசிகை. வார்த்தைகளெ அள்ளி எறிவே. நான் கு.ப.ரா.வோட ரசிகன். நாலே நாலு வார்த்தியிலே ஒன்னெ சுருக்கமா வருணிக்கிறேன், கேட்கறியா?’

‘நீ வருணிக்க வேண்டாம். நான் ஞானத்தின் மொத்த உருவம்.’

‘அதான் ஒங்கிட்டே வந்தாலே இப்பிடி நாத்தமா நாறுது! ஞானம் வந்துட்டா தூரமானாக் கூட குளிக்க வேணாம், இல்லே?’

பெண் குரல்: ‘வடிகட்டின முட்டாள்டா நீ. மாலி ரொம்ப sophisticated… இல்லே, ரொம்ப cultured. அசிங்கமாப் பேசினா இவனுக்குப் பிடிக்காதுன்னு சொன்னேனே, மறந்துட்டியா?... சரி. நீ யாருன்னு மாலிக்குத் தெரிஞ்சுட்டுது. நான் யாருன்னு இவனுக்குத் தெரிய வேணாமா?’

ஆண் குரல்: ‘கட்டாயம் தெரியணும். அதுக்காகவே இவனோட படுக்கப் போறியா?’

‘மறுபடி அசிங்கமா…’

‘Sorry… யாரும் யாரோடவும் படுக்க வேணாம். ஆனா காரியம் நடந்துடும், ஞானம் பொறந்துடும்… டும்… டும்… திரை மேலே போகுது, நாடகம் ஆரம்பம் ஆகுது, ஆகுது! ஆத்தா நீ யாரு?’

‘நான் அகிலாண்ட கோடிக்கும் சக்கரவர்த்தினிகள். பேய், பூதம், பிசாசு, தேவதை, பிர்மா, விஷ்ணு, ருத்திரன் எல்லாம் நானே. நான் நாதம். நான் விந்து. நான் கலை. நான் அபரப்பிரும்மம். நான் சப்தப்பிரும்மம். நானே பரப்பிரும்மம். எல்லாம் நானே. அஹம் ப்ரஹ்மாஸ்மி.’

‘நீ நாதம் என்கிறே. ரொம்ப ரைட். நானும் நாதம்தானேடி? நீயும் நானும் சத்தத்திலே பொறந்து சத்தத்திலே வளர்ரவங்க. விந்து எங்கேடீ? மாலி கிட்டே நிறைய கிடைக்கும்னு ஆசை காட்டி, என்னெ இளுத்துக்கிட்டு வந்தே. சொட்டு சொட்டாக்கூட கிடைக்கல்லியே, எல்லாத்தியும் நீயே…’

‘இப்படி அநாகரிகமா பேசாதேன்னு…’

‘ஒனக்கென்ன பேசுவே, ஒன் காரியம் நடந்துடுதில்லே. எம்பசியும் தாகமும் எனக்கில்லே தெரியும்?’

‘வாயை மூடுடா கம்மனாட்டி. மாலி என்னெப் பத்தி தப்பா நினைச்சிடப் போறான்.’

‘கிரீன் ரூமிலே வந்து பேசறோம். அந்த செவிட்டுப் பொணத்தோட காதிலே ஒண்ணும் விளுகாது.’

‘மாலி என் லவ்வர். அவனை செவிட்டுப் பொணம்னா எனக்குக் கெட்ட கோபம் வந்துடும்.’

‘செவிடனை செவிடன்னு சொல்லாமே, குருடன்னா சொல்வாங்க? பொட்டைச்சி, பேச்சை மாத்தி என்னெ ஏமாத்தப் பார்க்கிறியா? எங்கேடி விந்து?’

‘ஐயோ, ஐயோ, விந்து விந்துன்னு சொன்னா மாலி அசிங்கப்படுவான்னு எத்தனெ தடவை சொல்றது? பாரு, அவன் முகத்தைப் பாரு, உமட்டுது…’

‘நாத விந்து கலாதீன்னு பாட்றானே, அசிங்கப்பட்டா பாட்றான்? அவனுக்கு விந்து பிடிக்காதுன்னா எங்கிட்டே குடுத்துட்டு போவட்டுமே. நான் தான் எப்போ, எப்போன்னு காத்துக்கிட்டு இருக்கேனே… அடடே, நீ யாரு? கிரீன்ரூமிலே யாரைக் கேட்டுக் கிட்டு உள்ளே வந்தே?’

‘நான் ஒரு விமர்சகன்.’

அடுத்து விமர்சகனின் பேச்சும் கலந்து கொள்கிறது. இது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கிறான் மகாலிங்கம். இந்த சப்தப் பிரளயத்தில் உறக்கம் கூட வருவதில்லை. காளியின் உரையாடலில் குறுக்கே புகுந்த விமர்சகன் ‘இது ஒரு ஆபாச நாடகம்’ என்று கத்த ஆடவனும் காளியும் அவனோடு மல்லுக்கு நிற்க, ரசிகர் கூட்டமும் ரகளையில் சேர்கிறது. ஒரு ரசிகர் ‘ப்ளூ ஃபிலிம் கணக்கா நாடகம் எவ்வளவு ஜோரா இருக்கு… ஆபாசமாம் ஆபாசம்’ என்று விமர்சகரைத் தாக்குகிறார். பிறகு விமர்சகனுக்கு லஞ்சம் கொடுத்து அனுப்பி வைக்கிறான் காளியோடு வந்தவன்.

இந்த சப்த நரகம் தாங்காமல் முருகா முருகா என்று கதறுகிறான் மாலி.

‘ஐயோ அவன் முருகனை அழைக்கிறான்.’

‘எந்த முருகனெப் பத்திச் சொல்றே? தூக்கு மாட்டிக் கிட்ட முருகனா? ஆத்திலே விளுந்து உசிர விட்ட முருகனா? ரயில் ஆக்சிடெண்டிலே போனானே…’

‘நீ ரொம்ப thick-headed… என் பிள்ளை முருகனைப் பற்றிச் சொல்கிறேன்.’

‘புரிஞ்சிட்டுது, புரிஞ்சிட்டுது. சிவன் பயலோட கொஞ்சக் காலம் சுத்தினியே, அப்போ பொறந்த கொளந்தைதானே? எஸ். முருகன்னு நீ தெளிவா சொல்லியிருந்தா…’

இப்படியே 140 பக்கங்கள். ஒரு கட்டத்தில் காளி தன் புடவை, பாவாடை, பிரா, ஜட்டி எல்லாவற்றையும் கழற்றிப் போட்டு விட்டு ‘I want to make love with you Maali’ என்கிறாள்.

ஐயோ முருகா என்று மகாலிங்கம் கதற, ‘டேய் லூசு, முருகனின் தந்தையான பரமசிவனையே அழித்து மண்டை ஓடாக அணிந்திருக்கிறேன் பார்… இப்படி ஓராயிரம் பரமசிவன்களை அழித்திருக்கிறேன். உனக்கு ஒரு பயலும் உதவ மாட்டான். என்னிடம் வா’ என்கிறாள் காளி.

உலக அளவில் Transgressive fiction இத்தனை உக்கிரமாக எங்கேயும் எந்த தேசத்திலும் வெளிப்பட்டதில்லை. அடுத்த வாரமும் காதுகள் பற்றிச் சிறிது பேசுவோம்.

***

எம்.வி.வி. நூற்றுக் கணக்கான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் மூன்று சிறுகதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. வாஸந்தி இந்தியா டுடே பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது அதில் தமிழின் முக்கியமான படைப்பாளிகளின் சிறுகதைகள் வாரம் தோறும் வந்து கொண்டிருந்தன. அப்போது வெளிவந்த எம்.வி.வெங்கட்ராமின் சிறுகதை பைத்தியக்காரப் பிள்ளை. தாய்மை, அன்பு, பாசம், குடும்பம் என்றெல்லாம் வாழ்வில் எத்தனையோ உன்னதங்கள் உள்ளன. அதையெல்லாம் சின்னாபின்னமாக சிதைத்துச் செல்லும் சிறுகதை அது. எம்.வி. வெங்கட்ராமின் எழுத்துலகையே குரூரத்தின் அழகியல் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் கு. அழகிரிசாமி, ந. பிச்சமூர்த்தி ஆகியோரின் படைப்புலகுக்கு நேர் எதிரானது எம்.வி. வெங்கட்ராமின் எழுத்து.

பைத்தியக்காரப் பிள்ளை - http://bit.ly/1I7AzU3

அடுத்த வீடு - http://bit.ly/1TGm1yT

தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - http://bit.ly/1J3SYlB

(தொடரும்)

எம்.வி. வெங்கட்ராம் - பகுதி 2
By சாரு நிவேதிதா
First Published : 26 July 2015 10:00 AM IST

வெறும் 140 பக்கம். ஆனால் காதுகளைப் பற்றி ஆயிரம் பக்கம் எழுதலாம் போல் இருக்கிறது. ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால், சிருஷ்டித்துவத்தின் உச்சத்தில் நின்று பேய்க் கூச்சலிடும் ரகளையே காதுகள். மகாலிங்கத்தின் காதுகளில் வெறும் சப்தஜீவிகளாகப் புகுந்த பராசக்தி காளியும் இன்ன பிற பூத கணங்களும் போட்ட ஒரு ட்ராமாவையும் அதன் இடையில் வந்து புகுந்த விமரிசகன், ரசிகன் ஆகியோரையும் சென்ற வாரம் பார்த்தோம். எல்லாம் ஒரு நாடகமாக – ஒலிச் சித்திரமாக – மாலியின் காதுகளில் நடந்து கொண்டிருக்கும் கூத்து என்பதை நாம் மறந்து விடக் கூடாது. மேலும், இது எல்லாமே மகாலிங்கத்துக்கு மட்டுமே கேட்கும். மற்றவர்களுக்கு இது எதுவுமே தெரியாது. காதுகளில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூச்சலின் காரணமாக மற்றவர்கள் பேசுவதை அவனால் சரியாகக் கேட்க முடிவதில்லை. மேலும், அவன் காதுகளில் இரண்டு குரல்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும். ஒன்றை ஒன்று பைத்தியம் என்று திட்டிக் கொண்டிருக்கும். அப்போது அவைகளை இடைவெட்டி மகாலிங்கம் பேசுவான் அல்லவா? அது (மட்டும்) அவனைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கேட்கும். மகாலிங்கத்தின் இந்தத் தலையாய பிரச்னையினால் வியாபாரம் நொடித்துப் போய் எந்த வேலையும் இல்லாமல் அவன் குடும்பமே பட்டினி கிடந்து கொண்டிருந்த நிலையில் சுந்தரம் என்ற பழைய நண்பன் ஒருவன் அவனோடு சேர்ந்து வியாபாரம் செய்யலாம் என அவன் வீடு தேடி வருகிறான்.

மகாலிங்கம் பணமெல்லாம் போட வேண்டாம். மூலதனம் சுந்தரத்துடையது. வேலையில் மட்டும் பங்குதாரராக இருந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டால் போதும். இது கூட மகாலிங்கத்தின் மீது பரிவு கொண்ட ராமன் என்ற கடவுள் ஏற்பாடு செய்ததுதான். ஆம்; ராமாயணத்தின் நாயகனான சக்ரவர்த்தித் திருமகன் ராமன்தான். (மகாலிங்கத்தின் காதுகளில் கேட்கும் எல்லாக் குரல்களுக்கும் பெயர் மற்றும் அடையாளம் உண்டு. அவன் காதுகளில் நூற்றுக் கணக்கான கடவுள்களும், பூத கணங்களும், சாமான்யர்களும், பொறுக்கிகளும் சப்தஜீவிகளாக வசித்து வந்தனர்.) சுந்தரம் வந்து மகாலிங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கும்போது கறுப்பன் என்பவன் குறுக்கே என்னென்னவோ பேசி இடையூறு செய்கிறான். அதைத் தடுக்கிறான் ராமன். சுந்தரத்தோடு பேச மகாலிங்கத்தின் மனைவி காமாட்சியும் வந்து சேர்ந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் சுந்தரம், கறுப்பன், அவனைத் தடுக்கும் நல்ல கடவுள் ராமன், காமாட்சி என்ற நான்கு பேரின் பேச்சுக்களும் ஒன்றன் பின் ஒன்றாக, குறுக்கு வெட்டாக நாவலில் வந்து போய்க் கொண்டிருக்கிறது. இரண்டு குரல்கள் மாலியின் காதுகளில் கேட்கும் சூக்ஷும உருக்கள்; இரண்டு குரல்கள் அவன் கண்ணெதிரே அமர்ந்திருக்கும் சுந்தரம், காமாட்சி என்ற ஸ்தூல உருக்கள். இந்த நான்கு குரல்களையும் கேட்டுக் கொண்டிருக்கும் மகாலிங்கத்தின் நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். பிரதியைப் படித்துக் கொண்டிருப்பது நாம் என்பதால் ஒரு கட்டத்தில் நாமே மகாலிங்கமாக ஆகிறோம். இந்தக் குரல்களால் கடும் எரிச்சலடையும் மகாலிங்கம் சுந்தரத்திடம் மூர்க்கமாகப் பேச ஆரம்பிக்கிறான். ராமன் கதறுகிறான், ஐயோ மாலி, அப்படிப் பேசாதே, உன் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் நான் தான் அவனை அழைத்து வந்தேன். அப்போது குறுக்கே புகும் கறுப்பன், ‘மாலி வேண்டாம்; நான் முதலாளியோடு (சுந்தரம்) பேசுகிறேன்’ என்று முரண்டு பிடிக்கிறான். ‘டேய், நீ வாயை மூடிக் கொண்டு சும்மா இரு’ என்று ராமன் தடுக்கிறான். உடனே கறுப்பன், ‘என்ன ராமா, கறுப்பன்னா எளக்காரமாப் போச்சா, உன் முகரக்கட்டைய பேர்த்துக் கையிலக் குடுத்துடுவேன்’ என்று அவனுடன் சண்டைக்குப் போகிறான். சுந்தரம் ஏதோ சொல்லி விட்டு மகாலிங்கத்தின் பதிலை எதிர்பார்க்கிறான். அதற்கு ‘நான் தான் பதில் சொல்வேன்’ என்று கூச்சல் போடுகிறான் கறுப்பன். ‘இல்லை, நான்தான் சொல்வேன்’ என்று ராமன் அதிரடி.



இதற்கிடையில் மகாலிங்கம் யோசிக்கிறான். ‘பைத்தியக்காரனுக்குத்தான் பைத்தியம் என்ற பிரக்ஞை இருக்காது. எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதையும், நான் பைத்தியமாகப் பேசுவதையும், பிறர் என்னைப் பைத்தியமாக நடத்துவதையும் நான் தன்னுணர்வோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே?’

லாபத்தில் யாருக்கு எத்தனை சதவிகிதம் என்பதில் முரண்டு பிடிக்கிறான் மாலி. ‘ஐயோ, மாலி பேசுவதைப் பார்த்தால் எனக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே. அது போதாது என்று இந்தக் கறுப்பன் வேறு என் உயிரை எடுக்கிறானே’ என்கிறான் ராமன்.

‘ஆஹா, ஆஹா, நீயே உன்னைப் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டு விட்டாய். ராமா, நீ பைத்தியம். ராமா, நீ பைத்தியம்.’

‘இல்லை, நீதான் பைத்தியம்.’ இது ராமன்.

பைத்தியம் என்றான் மகாலிங்கம்.

எதிரே அமர்ந்திருக்கும் சுந்தரத்துக்கு எப்படி இருந்திருக்கும்? படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விட்டு தேகமெல்லாம் நடுங்க என் வீட்டுக்கு எதிரே இருக்கும் மெரினா பீச்சுக்கு ஓடி விட்டேன். அவ்வளவு பீதியாகி விட்டது எனக்கு. என் வாசிப்பு அனுபவத்தில் முதல்முதலாக பௌதிகரீதியாகப் பாதிக்கப்பட்டது இந்த நூலினால்தான். சிலே தேசத்திலும் இன்னும் பிற தென்னமெரிக்க நாடுகளிலும் கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி நாள் அன்று பல நூறு ஹார்ட் அட்டாக் மரணங்கள் நிகழ்வதுண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது போன்றதொரு கொந்தளிப்பையும் பீதியையும் ஆவேசத்தையும் தந்தது காதுகள்.

இதுதான் ecstasy. தமிழில் பரவச உணர்வு. அல்லது அதைவிட சரியாகச் சொன்னால் Transcendence. எதன் மூலம் சாத்தியமாகிறது இது? Transcendence through transgression. மீறுதலின் மூலமாக அடையும் பரவச உணர்வு. இதையே ஆன்மீகத்தின் மூலமாகவும், செயற்கையான முறையில் psychedelic drugs மூலமாகவும் அடைவார்கள். ஒரு மகத்தான பின்நவீனத்துவப் பிரதி இத்தகைய பரவசத்தை அதன் transgressive discourse மூலமாக அளிக்கிறது. அதன் காரணமாகவே காதுகள் நாவலை இதுவரை – அதாவது, கடந்த மூன்று நூற்றாண்டுகளில் - உலக அளவில் எழுதப்பட்ட மூன்று நான்கு ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்களில் ஒன்றாக வைக்கலாம். ஆம், மார்க்கி தெ சாத் 1785-ல் எழுதிய The 120 Days of Sodom என்ற நாவலையே உலகின் முதல் ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல் என்று கொள்ள வேண்டும். வில்லியம் பர்ரோஸின் நேகட் லஞ்ச், கேத்தி ஆக்கரின் Blood and Guts in High School, ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஆகியவை முக்கியமான மற்ற ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்கள். இப்படி வெகு சொற்பமாக எழுதப்படும் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்துக்குத் தமிழ் மொழியானது இரண்டு நாவல்களை அளித்திருக்கிறது என்பது பற்றி நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். காதுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் இதை உலகமே கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு சொற்பமாக – ஒரு நூற்றாண்டுக்கு ஒன்று என்ற அளவில் – எழுதப்படுகிறது ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல். இந்தியாவில் வேறு எந்த மொழியிலும் ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்கள் எழுதப்பட்டதில்லை. மலையாளத்தின் வைக்கம் முகமது பஷீரை ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர் என்று சொல்ல முடியாது. விளிம்பு நிலை மக்களைப் பற்றி எழுதுவது ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தின் அடையாளம் அல்ல.

***

‘காமாட்சிக்கு எட்டாவது மாதம். ஐந்து குழந்தைகளை வளர்த்து உருவாக்குவதற்கு எவ்வளவோ பாடுபடவேண்டியிருக்கிறது, ஆறாவதாக இது ஒன்று எதற்கு என்று அவளுக்கு வெறுப்பு. உள்ளே என்ன சனியன் இருந்ததோ, வயிறு கனமாய்க் கனத்தது. இந்த வயிற்றைத் தூக்கிக்கொண்டு அவள் கடை கண்ணிகளுக்குப் போக வேண்டும். சில்லறைக் கடனுக்காகக் கடைக்காரனிடம் கெஞ்ச வேண்டும். பழைய நல்ல காலத்து நினைவில் வீடு தேடி வருகிற விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன் வாங்க வேண்டும். கடன் கிடைக்காவிட்டால் எந்தச் சாமானை அடகு வைக்கலாம் அல்லது விற்றுத் தொலைக்கலாம் என்று யோசிக்க வேண்டும். இவ்வளவும் போதாது என்று இரவில் ‘கொட்டு கொட்டு’ என்று விழித்துக்கொண்டு இருக்கும் கணவனைத் தூங்க வைக்க வேண்டும் . . . இருக்கிற பீடைகள் போதாது என்று ‘இது ஒன்று’ என்று வயிற்றில் அடித்துக்கொள்வாள், சில சமயம். இது வேண்டாம் என்று இரண்டாவது மூன்றாவது மாதத்திலேயே அலோபதி, சித்தவைத்தியம் பச்சிலை மருந்துகளால் கர்ப்பத்தைச் சிதைக்க அவள் முயற்சி செய்தாள். வாயும் வயிறும் வெந்து புண் ஆனதுதான் மிச்சம், கர்ப்பம் என்னவோ கல்லுப் பிள்ளையாராட்டம் கெட்டியாக இருந்தது; அமோகமாய் வளர்ந்து கொண்டும் இருந்தது.’

இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த அவளோடு உறவு கொள்ள விழைகிறான் மாலி. காலையில் எழுந்ததும் அத்தனை பெரிய வயிறையும் வைத்துக் கொண்டு சமைக்க வேண்டும்; ஐந்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்; பாத்திரம் தேய்க்க வேண்டும்; உங்களுக்கு இரக்கமே இல்லையா என்று கத்துகிறாள் அவள். இருந்தாலும் அந்த இன்பத்தை அவன் இழக்க விரும்பவில்லை. அதன் விளைவாக அவளுக்குக் கர்ப்பச் சிதைவு ஏற்பட்டு சிசு இறந்தே பிறக்கிறது. நாவலின் அந்த இடம் யாராலும் மறக்க முடியாத ஒன்று.

வழக்கம் போல் பல குரல்களைக் கேட்டுக் கொண்டு ஒரு நள்ளிரவில் உறக்கமும் விழிப்புமற்ற நிலையில் கிடக்கும் அவனை எழுப்பி உடனே தனக்கு வண்டி அழைத்து வரச் சொல்கிறாள் காமாட்சி. அவனிடம் ஒரு பைசா இல்லை. தன்னிடம் இருக்கும் ஒரு ரூபாயையும் மருத்துவச் செலவுக்குத் தான் அணிந்திருந்த மூக்குத்தியையும் தருகிறாள். முனிசிபல் மருத்துவமனையில் இது சீரியஸ் கேஸ்; எங்களால் செய்ய முடியாது என்று மறுத்து விட பெரிய அரசாங்க மருத்துவமனைக்குப் போகிறார்கள். அது ரொம்ப தூரம். வண்டிக்காரன் இரண்டு ரூபாய் கேட்கிறான். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடுகிறான் மாலி. ஆனால் நள்ளிரவில் எழுப்பப்பட்டு உறக்கம் கலைந்து வந்தவன் கடனுக்கா வருவான்? பிறகு காமாட்சியும் கெஞ்சவே வண்டிக்காரன் கிளம்புகிறான்.

மகளிர் மருத்துவமனை என்பதால் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. நீங்கள் ரத்தம் கொடுக்க வேண்டி வரும்; எங்கேயும் போய் விடாதீர்கள் என்கிறாள் நர்ஸ். (‘சக்களத்தி, இதிலேயும் பங்குக்கு வந்து விட்டாளா?’ என்று அவன் காதுகளில் கேட்கிறது ஒரு குரல்!) இரண்டு நாட்கள் வெளியிலேயே காத்திருக்கிறான். முடிவில் குழந்தை இறந்தே பிறக்கிறது.  அவன் வீட்டுக்குப் போய் தூங்க அனுமதியும் கிடைக்கிறது. வீட்டுக்கு வந்து தூங்கி விட்டுப் பதினோரு மணி வாக்கில் மருத்துவமனைக்குப் போனால் சிசுவின் பிணத்தைத் தூக்கிக் கொடுக்கிறாள் ஆயா. ‘அதை இங்கேயே புதைக்க வேண்டியதுதானே?’ அந்தக் காரியத்துக்குத் தோட்டி ஐந்து ரூபாய் கேட்கிறான். மூக்குத்தி விற்றதில் அவனிடம் இருக்கும் பாக்கியே பத்து ரூபாய்தான். இரண்டு ரூபாயில் புதைக்க முடியுமா? பேரம் படியவில்லை. ‘அப்படியானால் சடலத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’ ‘அது முடியாது. பிணத்தை நீங்களே உங்கள் வீட்டுக் கொல்லையில் புதைத்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள்’ என்று சொல்லிக் கட்டுச்சோறு மூட்டையைப் போல் இருந்த சடலத்தை அவனிடம் கொடுக்கிறாள் ஆயா. அதை அவன் சைக்கிளில் வைக்கத் திரும்பும்போது காசு கேட்கிறாள். அவன் கையில் சில்லறை இல்லை. ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கொல்லையில் குழி தோண்டிப் புதைக்கிறான். பக்கத்து வீட்டுக் கிழவி பார்த்து விட்டு விசாரிக்கிறாள். அவன் உண்மையைச் சொல்கிறான். கொல்லையில் அவன் புதைத்த இடம் அவர்கள் வீட்டுப் பகுதி. கிழவி கத்துகிறாள். புதைத்ததை எடுத்து மீண்டும் கொல்லையின் தன் வீட்டுப் பகுதியில் குழி தோண்டிப் புதைக்கிறான். இவ்வளவையும் (ஐந்து) குழந்தைகளுக்குத் தெரியாமல் செய்ய வேண்டியிருக்கிறது. தெரிந்தால் எதுவும் கொல்லைப் பக்கமே வராது.  அந்தத் தருணத்தில் காதுகளில் குரல்களின் பேச்சு துவங்குகிறது. குழந்தைக் கறி பற்றிய பேச்சு அது. அதில் ஒரு குரல் வெஜிடேரியன். அந்த காந்தியவாதியை மற்ற குரல்கள் கிண்டலடிக்கின்றன. ‘பரமசிவமே பிள்ளைக்கறி சாப்பிடுகிறாரே? நீ சாப்பிடு’ என்று ஒரு குரலை இன்னொரு குரல் உற்சாகப்படுத்துகிறது.

***

எத்தனையோ பரமசிவன்களை உருவாக்கி உலவவிடும் அகிலாண்ட பரமேஸ்வரி மகாலிங்கத்திடம் காமம் யாசிக்கிறாள்.

‘நான் வளமை வேண்டுகிறவள்; இன்பத்தை விரும்புகிறவள். என்னைப் பார்த்தாலே தெரியவில்லையா? நீங்கள் முருகனைக் கும்பிட்டதுதான் தப்பு. அவன் ஆண்டி. அவனை வழிபடுகிறவர்களுக்குத் திருவோடுதான் தருவான். இந்த ரகசியம் பலருக்குத் தெரியாது. ஒரு கூட்டம் கும்பிடுகிறது என்றால் மற்றவர்களும் பின்னால் போகிறார்கள். முருகன் ஒருவனே போதும், குடும்பத்தை ஒழிப்பதற்கு. நீங்கள் ராமனையும் கும்பிடுகிறீர்கள். ராமனை வழிபடுகிறவர்கள் வனவாசத்தையும், மனைவியை மாற்றான் abduct செய்து rape செய்ய முயலுவதையும் ஏற்க வேண்டியவர்கள்தானே? ராமனாவது சக்கரவர்த்தித் திருமகன். அவனைக் கும்பிடுகிறவர்கள் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தபிறகு பட்டாபிஷேகத்தை எதிர்பார்க்கலாம். ஆனால், முருகன் கோவணாண்டி. ஆத்மானுபவம் பெறுவதற்கு ஆடை அணியக் கூடாது என்பது ஞானமா? காமாட்சியின் கழுத்து நிறைய இருந்த நகைகள் எங்கே? பெண்ணுக்கு ஆபரணம்தானே அணி? கட்டிய பெண்டாட்டி மூளியாக நிற்கிறாளே, உங்கள் மனசை உறுத்தவில்லையா? தாலிமட்டும் மிச்சம் இருக்கிறது . . .’

நறுக்காகவும் நாகரிகமாகவும் அவள் அழுது முடித்தாள். இரண்டு கொங்கை வட்டங்களுக்கு இடையில் செருகியிருந்த கைக்குட்டையை நாசுக்காக எடுத்துக் கண்ணீர்த்துளிகளை மெல்ல ஒத்தி எடுத்தாள். கைக்குட்டையிலிருந்து இண்டிமேட் செண்ட் மணம் அவனுடைய நாசிக்கு எட்டியது.

‘மாலி, என் மேல் உனக்கு இரக்கம் வரவில்லையா?’

‘நீ தான் என் மீது இரக்கம் காட்ட வேண்டியவள்.’

‘உன் மீதுள்ள இரக்கத்தால்தான் நீ என்னை மறந்தாலும் நான் உன்னைத் தேடி ஓடி வந்திருக்கிறேன். ஆனால் நீ இது புராணக் கதை என்று நினைக்கிறாய். தவறு. இது நவீனத்திலும் நவீனம். நித்ய நவீனம். ஒப்பற்ற ஓர் ஆண்மகனின் தாகத்தைத் தீர்க்க தெய்வம் அமுத கலசத்துடன் இறங்கி வருகிறது என்பது ஒரு grand theme இல்லையா?’

‘ஒரு தெய்வம் காம உணர்ச்சியோடு வரும் என்று நான் புராணங்களில் கூடப் படித்ததில்லை…’

இதை அடுத்து பாரதியின் காதல் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சினிமா டூயட்டைப் போல் பாடுகிறாள் காளி பராசக்தி. பிறகு பிச்சமூர்த்தி, கு.ப.ரா. எழுதிய வசன கவிதைகளைப் பற்றி இலக்கியரீதியாகப் பேசுகிறாள். பிறகு அவனுடைய எழுத்து பற்றியும் பேச ஆரம்பிக்கிறாள். முகஸ்துதி செய்கிறாள். கடைசியாக, நேரடியாக, ‘பெண் இன்பத்துக்கு மிஞ்சின இன்பம் ஏது? Sex is the prime-mover of life இல்லையா? உங்களுக்கு வசிய சக்தி கொடுக்கிறேன். And the cream of feminine beauty will be yours. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறாள். அப்படியும் அவன் மறுக்கவே அவள் போய் விடுகிறாள். உடனே இன்னொரு பெண்ணுரு அவனைக் கேட்கிறது. ‘என் அருமை மாலி, உனக்குக் காமம் மிக அதிகம். அதனால்தானே முற்றிய கர்ப்பிணி என்கிற அறிவை இழந்து மனைவியைத் துன்புறுத்தி, வயிற்றிலிருந்த சிசுவின் உயிரைப் பலியிட்டாய்? ஆனால் நீ சுவைத்த இன்பம் இருக்கட்டும், உடம்பு முழுவதும் வலியால் துடித்துக் கொண்டு இருந்த நிலையில் காமாட்சி பெற்ற இன்பத்துக்கு ஈடு உண்டா?’

அதன் பின்னர் காமம் பற்றி வரும் சொல்லாடல்கள் அனைத்தும் பேரிலக்கியங்களில் கூடக் காண்பதற்கு அரிதானவை. பொறுங்கள். இதை நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்லவில்லை. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் க்ளாஸிக்கான ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸின் காமச் சொல்லாடல்களுக்கு நிகரானவை அவை.

‘பொண்ணு வேணும் பொண்ணு வேணும் பொண்ணு வேணும் டா உன்னை நீ அறிந்திடப் பொண்ணு வேணும் பொண்ணு வேணும் பொண்ணு வேணும் டா’ - என்று ஆரம்பமான பாட்டு கலவியின் பலவகைக் கோணங்களையும் கோணல்களையும் யதார்த்தமும் ஆபாசமுமான சொற்களால் வருணித்தபடி வளர்ந்துகொண்டே இருந்தது. மாட்டுச்செக்கு சுற்றும்போது ஞொய் ஞொய் என்றோர் ஓசைவருமே, அது போன்ற குரல் ஒலி தவிர, அவனுக்கு உலகத்தைப் பற்றின மற்ற உணர்வுகள் அனைத்தும் உறங்கிப் போயின. தான் என்னும் உணர்வு வெகு வெகு ஆழத்தில் இருந்தது; இசை ஒலி வெகு வெகு மேலே தொலைவிலிருந்து வருவதாய், வந்து கொண்டு இருப்பதாய், வந்து கொண்டே இருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. ஐந்து, பத்து, இருபது, முப்பது நிமிடங்கள் . . . இல்லை, நேரம் என்பதே வெறும் ஓசைதான் என்றும், அந்த ஓசை காம அறிவும் உணர்வும் கொண்டது என்றும் தோன்றியது. ஒரே மாதிரிக் குரலில் பாட்டாக வடிவெடுத்து வந்த, காம ஒலியுண்ட சொற்கள் அவனைச் சுற்றிலும் கொசுக்கள் போலவும், ஈக்கள் போலவும், வண்டுகள் போலவும், பூச்சிகள் போலவும் மொய்த்துக்கொண்டு ரீங் . . . க்ரிங் என்று ரீங்காரம் செய்தன. காம ஒலியுண்ட சொற்கள் எறும்புகள் போலவும், புழுக்கள் போலவும் அவனுடைய உடல் எங்கும் ஏறி அடர்ந்து ரோமத் துவாரங்கள் வழியாக அவனைக் கடித்துத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுந்துவிட முயன்றன. நேரம் செல்லச் செல்லச் செல்ல…

பருத்துக் கொழுத்து வளர்ந்து ஆடு மாடுகள் போலவும் சிங்கம், புலிகள் போலவும், யானை, காண்டாமிருகங்கள் போலவும் அவன் மேலேறி மிதித்துத் துவைத்தபடி ஓடின. காம ஒலி - அவனை மண்ணில் அறைந்து மண்ணைத் தோண்டி மண்ணுக்குள் புதைப்பதாகத் தோன்றியது; நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து அவனைச் சுற்றிச் சுழற்றி இழுத்துக்கொண்டு செல்வதாய்த் தோன்றியது; காட்டுத் தீயாக மூண்டு பல்லாயிரம் நாக்குகளால் அவனை நக்கி நக்கிப் பொசுக்குவதாய்த் தோன்றியது; பெரும் காற்றாய் சூறாவளியாய் அவனை மூலைக்கு மூலை எறிவதாய்த் தோன்றியது. அவனை நீராக்கி ஆகாசத்தில் தூவுவதாய்த் தோன்றியது. அவள் பாடப்பாட, அவள் வாயிலிருந்து வெளியே வந்த ஒவ்வொரு சிறு சொல்லும், சிற்றொலியும் ஓரிடத்தில் விழுந்து குவிந்து கொண்டே போவது போலவும், அவை குவிந்து கூடி ஒரு பெரும் சொல்பாறையாகவும் பேரொலியாகவும் உருக்கொண்டு விட்டது போலவும், அப்பெரும் சொல்பாறையையும் பேரொலியையும் யாரோ படீர் என்று அடித்து உடைத்து நொறுக்கி நுணுக்கி அணுவளவு அணுவளவு சிறு சிறு சொல்லாகவும் ஒவ்வொரு ரோமக்காலிலும் மிகச்சுளுவாய் ஊடுருவி உள்ளே நுழைவதுபோலவும் அவன் உணர்ந்தான் . . . தான் என்னும் உணர்வு தனக்குள் எங்கோ புதைந்திருந்த அப்பெரும் ப்ரமத்திலும், ‘கால்ஷியம் இஞ்செக்‍ஷன் போல் - எனக்குக் காமவெறி இஞ்செக்‍ஷன் செய்யப்படுகிறது’ என்ற எண்ணம் அவனுக்குள் இழையோடியது . . . ஒலியுண்ட காமமோ, காமம்கொண்ட ஒலியோ, அது இப்போது சொற்கள் என்ற தோற்றத்திலிருந்து ஒரு புதிய உலகமாகப் பரிணமிக்கத் தொடங்கியது.’

‘அனாதி காலமாக ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் வேண்டித் துடிதுடிக்கும் வேட்கையின் வீறு அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது. அக்கணமே, அவனுக்கு அருகிலும் சுற்றிலும் தொலைவிலும் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாய்க் கலவியின்பம் நுகர்ந்து, நுகர்ந்ததால் வெறியாசை கொண்டு மீண்டும் மீண்டும் என்று… லோ…ல்…லோ என்று சொல்லிழந்த கூக்குரலிட்டுக் களித்தாடிடும் காட்சி அவனுக்கு முன்னால் எழுந்தது…’

Transgressive fiction என்பதன் உச்சக்கட்ட உதாரணம் காதுகள். எம்.வி. வெங்கட்ராம் குறைந்த பட்சம் எழுத்தாளர்களால் கொண்டாடப்பட்டவர். ஆனால் அவரது உண்மையான சாதனையை தி. ஜானகிராமன் போன்ற அவரது நெருங்கிய நண்பர்களைத் தவிர அடுத்த தலைமுறை எழுத்தாளர் பலரும் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் உச்சபட்ச சாதனையைப் புரிந்த எழுத்தாளர்கள் கூட – உதாரணமாக, அசோகமித்திரன் – நவீனத்துவத்தின் சாத்திய எல்லைகளை வந்தடைந்ததோடு அவர்களின் பயணம் முடிந்து விட்டது. அந்த எல்லையைத் தாண்டியவர்கள் என ப. சிங்காரத்தையும் எம்.வி.வெங்கட்ராமையும் மட்டுமே சொல்லலாம்.



பின்குறிப்பு: அவசியம் கருதியே இந்தக் கட்டுரையில் காதுகளிலிருந்து நீண்ட மேற்கோள்களைத் தந்திருக்கிறேன். அதற்காகக் காலச்சுவடு பதிப்பகத்துக்கு என் பிரத்தியேக நன்றி. காதுகளை மின்நூலாக வாங்கிப் படிக்க:

https://play.google.com/store/books/details?id=huAwBwAAQBAJ

(எம்.வி.வி. பற்றிய இந்தக் கட்டுரை அடுத்த இதழில் முடியும்)

எம்.வி. வெங்கட்ராம் – பகுதி 3
By சாரு நிவேதிதா
First Published : 02 August 2015 10:00 AM IST


இப்போது நாம் நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்குமான சில வித்தியாசங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு மேலே செல்லலாம்.  நவீனத்துவம் மனித வாழ்வின் துயரத்தை எவ்வளவு தீவிரமாகப் பேசினாலும் இறுதியில் நம்பிக்கையின் சிறியதொரு ஒளிக்கீற்றை அளிக்கிறது.  அதற்குச் சிறந்த உதாரணம், கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார்.

பின்நவீனத்துவத்தில் அந்த ஒளிக் கீற்று தெரிவதில்லை. மாறாக அது தனக்கு முன்னுள்ள எல்லாவற்றையும் பகடி செய்கிறது. (என்னது, ஒளிக் கீற்றா?  உங்க ஊர்ல கரண்ட் கட் கிடையாதா?) காதுகள் நாவல் ஒரு மனிதனின் மிக அவலமான வாழ்க்கையைக் கூறுகிறது.  வியாபாரம் நொடித்து விட்டது.  அதைத் தூக்கி நிறுத்துவதற்குக் கூட தெம்பு இல்லை.  காதுகளில் எப்போதும் ஆபாசக் கூச்சல்.  கண்களில் எப்போதும் ஆபாசக் காட்சிகள்.  வெளியிலேயே போக முடியவில்லை.  ஐந்து குழந்தைகள்.  வீட்டில் ஒரு வேளை உணவு இல்லை.  நிறைமாத கர்ப்பிணி மனைவி.  அந்த நிலையிலும் அவளோடு தாம்பத்ய உறவு.  இப்படிப்பட்ட பின்னணியிலும் நாவல் எல்லாவற்றையும் கிண்டல் செய்து கொண்டேதான் போகிறது.  இந்த Irreverence-உம் பகடியும்தான் பின்நவீனத்துவத்தின் மிக முக்கியமான கூறுகள்.

பின்நவீனத்துவத்தின் வேறு சில அம்சங்களை இப்போது பார்ப்போம்:

Self-reflexivity: இது பின்நவீனத்துவப் பிரதிகளின் பிரதானமான அம்சங்களில் ஒன்று.  பிரதி (கதை) தன்னைப் பற்றிய பிரக்ஞையுடனேயே தன்னை உருவாக்கிக் கொண்டு செல்வது.   காதுகளில் கடவுள்கள் போடும் ட்ராமாவையும் மற்றும் பல பகுதிகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இன்னொரு இடம்: கிட்டத்தட்ட மகாலிங்கம் ஒரே நேரத்தில் பத்து குரல்களைக் கேட்டபடி வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம்.  அவன் மனைவி காமாட்சி அவனிடம் ‘நீங்கள் பூஜை செய்வதில்தான் ஏதோ கோளாறு’ என்கிறாள்.  அதற்கு அவன் பதில் சொல்வதற்கு முன்பே காதுக்குரல் ‘ரொம்ப ரைட்டு, யாரெ கும்பிட்றது, எப்பிடி கும்பிட்றதுன்னு தெரியாதவன்ல்லாம்…’ என்கிறது.  தொடர்ந்து அவள் பேசப் பேச, காதுக்குரல் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு அவன் காதுகளில் பதில் சொல்லிக் கொண்டே போகிறது.  ‘போன ஜென்மத்துல நீங்க மந்திரவாதியா இருந்து அப்போது நீங்கள் கட்டிப் போட்ட தேவதை உங்களைப் பழி வாங்க வந்திருக்கிறதோ என்னவோ?’ என்கிறாள்.  ‘போன ஜன்மத்தில் நான் பிசாசாக இருந்திருப்பேன், அந்த ஜன்மத்து நண்பர்களும் உறவினர்களும் என்னைப் பார்க்க வந்து இருக்கிறார்களோ என்னவோ!’ (உடனே அவன் காதுகளில் ‘அடப் பாவி, எங்களெ எல்லாம் பிசாசா அடிச்சிட்டியே! இதெ நான் joke of the centuryன்னு சொல்வேன்.  ஹிஹ்ஹி… ஹீ மாலி!  இந்தத் தலைமுறையின் பெரிய ஹாஸ்ய எழுத்தாளன் நீ தான்’ என்ற குரல் கேட்கிறது.)

Self-reflexivityக்கு உம்பர்த்தோ எக்கோ சொல்லும் ஒரு உதாரணம் பிரசித்தமானது.  ‘பின்நவீனத்துவ காலகட்டத்தில் ஒரு நாயகன் நாயகியைப் பார்த்து நவீனத்துவ கால நாயகனைப் போல் ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல மாட்டான்.  ஏனென்றால் அவனுக்கு நன்றாகவே தெரியும், அது பார்பரா கார்ட்லேண்டின் நாயகர்கள் சொல்லிச் சொல்லி க்ளீஷே (cliché) ஆகி விட்டது என்று.  அதனால் அவன், ‘பார்பரா கார்ட்லேண்டின் ஹீரோ சொல்வதைப் போல I love you madly’ என்று சொல்லுவான்’ என்கிறார் உம்பர்த்தோ எக்கோ.  பாரதியின் காதல் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சினிமா டூயட் பாணியில் பராசக்தி காளி பாடுவதை இங்கே நினைவு கூரலாம்.

Fabulation: ‘கயிறு திரிக்காதே’ என்று கிண்டலாகச் சொல்வோம் அல்லவா?  அப்படிக் கயிறு திரிக்கும் கட்டுக் கதைகளைப் பிரதியில் உருவாக்கி உருவாக்கி உலவ விடுவது.  காதுகளில் வரும் கடவுள்கள் பற்றிய எல்லாமே இதில் அடங்கும்.

Distortion: எதார்த்தத்தைத் திரித்தல்.

Fragmentation: கதையை ஒரே நேர்க்கோட்டில் சொல்லாமல் துண்டு துண்டாக வெட்டிச் சொல்வது.



Magical Realism: தமிழ்ச் சூழலில் மேஜிகல் ரியலிசம் ஏற்கனவே தவறான முறையில் அறிமுகமாகியிருக்கிறது.  மேஜிகல் ரியலிசம் என்றாலே அதை காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் பெயரோடு சம்பந்தப்படுத்திப் புரிந்து கொண்டு விட்டது தமிழ் இலக்கிய உலகம்.  தென்னமெரிக்கச் சூழலிலேயே மேஜிகல் ரியலிஸத்தைப் பிரபலப்படுத்தியவர்கள் Juan Rulfo மற்றும் Alejo Carpentier.  இவர்கள் மார்க்கேஸுக்கும் மூத்தவர்கள்.  மார்க்கேஸ் இவர்களைத் தனது ஆசான்களாகக் கருதினார்.  ஆனால் மார்க்கேஸுக்கு நோபல் பரிசு கிடைத்து விட்டதால் தமிழில் கார்ஸியா மார்க்கேஸை மேஜிகல் ரியலிசத்தோடு இணைத்து விட்டார்கள் மொழிபெயர்ப்பாளர்கள்.  மற்றபடி உலகின் முதல் மேஜிகல் ரியலிஸப் படைப்பு மகாபாரதம்தான்.  இது மற்றொரு தென்னமெரிக்க எழுத்தாளரான போர்ஹேஸுக்குத் தெரிந்திருக்கிறது. நம்முடைய ‘மதச் சார்பற்ற’ புத்திஜீவிகளுக்குத் தெரியவில்லை.  உதாரணமாக போர்ஹேஸின் பிரபலமான Aleph என்ற கதையை எடுத்துக் கொள்வோம். (எம்.வி. வெங்கட்ராமை நாம் இதுவரை புரிந்து கொண்டிருந்ததை விடச் செறிவாகப் புரிந்து கொள்வதற்கு ஓரளவு நாம் போர்ஹேஸைப் படிக்கலாம். படிக்க வேண்டும்.)  


அலெஃப் என்றால் ஆல்ஃபா.  அகரம்.  அலெஃப்-ன் நாயகன் போர்ஹேஸிடம் - போர்ஹேஸின் பெரும்பாலான கதைகளில் போர்ஹேஸ்தான் கதைசொல்லி -  தன்னுடைய நிலவறையில் இருக்கும் அலெஃப் என்ற மாயாஜால வஸ்து பற்றிச் சொல்கிறான் தனேரி.  அலெஃப் என்றால் என்ன?  The microcosm of the alchemists and Kabbalists.  பிரபஞ்சத்தில் உள்ள எல்லா விஷயங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ள ஒரே இடம்.

‘நிலவறை என்றால் இருட்டாக இருக்காதா?’

‘மூடிய மனங்களுக்குள்ளே உண்மை நுழைய முடியாது.   பிரபஞ்சமே அலெஃப்-ல் இருக்கிறது என்றால் அதில்தானே நிலவும் நட்சத்திரங்களும் இன்னும் ஒளி வீசக் கூடிய எல்லா விஷயங்களும் அடங்கியிருக்க வேண்டும்?’

அதன் பிறகு நிலவறைக்குள் சென்று அலெஃப்-ஐக் காண்கிறார் போர்ஹேஸ்.  கண்களைக் கூச வைக்கும் பிரகாசமுடைய அலெஃப் சுமாராக இரண்டு மூன்று செண்டிமீட்டர் அகலமுள்ள ஒரு வட்டப் புள்ளி.  அதன் வழியே பார்க்கிறார்.  என்ன பார்த்தார்?  ‘ஒரு எழுத்தாளனாக நான் தோற்றுப் போகும் இடம் இது’ என்று எழுதுகிறார் போர்ஹேஸ்.  நான் பார்த்ததை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.  மொழி தோற்றுப் போகிறது.  ஏனென்றால், நான் பார்த்தவை அனைத்தும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் (simustaneous) தெரிகின்றன.  ஒன்றன் பின் ஒன்றாக அல்ல.  ஆனால் அவற்றையெல்லாம் நான் மொழியில் ஒன்றன் பின் ஒன்றாக (successive) அல்லவா சொல்ல வேண்டியிருக்கிறது?  எஸகீல் என்ற தேவதை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு திசைகளிலும் ஒரே சமயத்தில் செல்லக் கூடிய தன்மை கொண்டது.  அது போன்ற ஒரு உருவகத்தைக் கடவுள் எனக்கு அளித்தால் நான் அலெஃப்-ல் பார்த்ததை வர்ணித்து விடுவேன்.  ஆனால் அப்படிச் செய்தால் இதெல்லாம் இலக்கியமாகி விடுமே?  இலக்கியம் என்றால் புனைவு ஆயிற்றே?  ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் புனைவு இல்லையே?

இருந்தாலும் ஏதோ முயற்சி செய்கிறேன் என்று சொல்லி விட்டு, தான் பார்த்தது அனைத்தையும் வரிசைப்படுத்துகிறார் போர்ஹேஸ். நான் பார்த்தவற்றைச் சொல்வது அசாத்தியம்.  ஆச்சரியமும் அதிசயமுமான கோடிக் கணக்கான விஷயங்களை நான் பார்த்தேன். சமுத்திரத்தைப் பார்த்தேன்.  விடியலையும் அந்தியையும் பார்த்தேன். பிரமிட்டுகளைப் பார்த்தேன்.  இந்த உலகத்தில் உள்ள அத்தனை கண்ணாடிகளையும் பார்த்தேன்.  அவற்றில் ஒன்று கூட என்னைப் பிரதிபலிக்கவில்லை. திராட்சையையும் பனியையும் புகையிலையையும் பார்த்தேன். பாலைவனத்தைப் பார்த்தேன்.  ஒரு பெண்ணைப் பார்த்தேன்.  என் படுக்கையறையைப் பார்த்தேன்.  புலிகளையும், எருமைகளையும், உலகில் உள்ள எல்லா எறும்புகளையும் பார்த்தேன்.  என் தேகத்தில் ரத்தம் ஓடுவதைப் பார்த்தேன்.  எல்லா கோணங்களிலிருந்தும் அலெஃப்-ஐப் பார்த்தேன்.  அலெஃப்-ல் உலகத்தையும் அந்த உலகத்தில் அலெஃப்-ஐயும் அந்த அலெஃப்-க்குள் உலகத்தையும் பார்த்தேன். அதில் என் முகத்தையும் உங்கள் முகத்தையும் கூடப் பார்த்தேன்.  எல்லா மனிதர்களாலும் பார்க்கக் கூடிய, ஆனால் யாருமே பார்த்திராத அந்த ரகசியத்தை – கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தைப் பார்த்து விட்டதால் மயக்கம் வந்தது.  அழுகையும் வந்தது.

போர்ஹேஸ் அலெஃப் என்ற துளையின் வழியே பார்த்ததையெல்லாம் நான் இங்கே அப்படியே மொழிபெயர்க்கவில்லை. சுருக்கத்தை மட்டுமே தந்திருக்கிறேன்.  உலகம் முழுவதும் இலக்கிய ரசிகர்களாலும், தத்துவவாதிகளாலும் கொண்டாடப்பட்ட அலெஃப் என்ற இந்தக் கதையை எழுதியதற்குத் தூண்டுதலாக இருந்தது மகாபாரதம் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார் போர்ஹேஸ்.  பாரதத்தில் எந்த இடம் என்று நான் குறிப்பிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  அது மட்டும் அல்ல; போர்ஹேஸ் தன்னுடைய கதைகளில் மகாபாரதத்திலிருந்து பல சம்பவங்களையும் குறியீடுகளையும் மேஜிகல் ரியலிச உத்திகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தமிழ்ச் சூழலில் மேஜிகல் ரியலிஸம் அறிமுகமான எண்பதுகளில் அந்த அறிமுகத்தைச் செய்த புத்திஜீவிகள் மகாபாரதத்தையே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நேராக கார்ஸியா மார்க்கேஸ், போர்ஹேஸ் என்று சொல்லி இறக்குமதி செய்தார்கள்.   இந்த நிலையில் காதுகள் பற்றி யாரும் குறிப்பிடாததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

Hyperreality: இன்றைய காலகட்டத்தில் நமக்குத் தெரிந்ததெல்லாம் உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஹைப்பர் டென்ஷன் மட்டுமே.  ஹைப்பர்ரியாலிட்டி என்பது வேறொன்றுமில்லை.  எது நிஜம், எது நிழல் என்றே தெரியாதபடியான ஒரு மேகமூட்டம்.  இதை முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் ஃப்ரெஞ்ச் பின்நவீனத்துவத் தத்துவவாதியான ஜான் பொத்ரியார் (Jean Baudrillard).  உம்பர்த்தோ எக்கோவும் பொத்ரியாரும் டிஸ்னிலேண்டை ஹைப்பர்ரியாலிட்டியின் சிறந்த உதாரணமாகக் கருதுகிறார்கள்.  ஆனால் நம் சூழலில் சினிமாவையும் அரசியலையும் ஹைப்பர்ரியாலிட்டியாகக் கொள்ளலாம்.  சினிமா என்பது நமக்குக் கற்பனை அல்ல.  நிஜம்.  அரசியல் என்பது நிஜம் அல்ல.  சினிமாவின் நிழல்.  இதையே மாற்றி மாற்றியும் போட்டுக் கொள்ளலாம். நேற்றைய மந்திரி குமாரி சினிமா.  இன்றைய மந்திரி குமாரி நிஜம்.  நேற்றைய ரமணா சினிமா.  இன்றைய ரமணா? இப்படி ஒரு புதிர் விளையாட்டையே இந்த ஹைப்பர்ரியாலிட்டி மூலம் ஆடலாம்.  காதுகள் நாவலில் மாலியின் காதுகளில் நடக்கும் அத்தனை நாடகங்களும் ஹைப்பர்ரியாலிட்டி தான்.

புனிதங்களைச் சிதைத்தல் (Decanonization/Sacrilege):  இது ஒரு மிக முக்கியமான பின்நவீனத்துவக் கூறு.  பின்வரும் பகுதியைப் பாருங்கள்:

அவள் (ஆதி பராசக்தி) நகைகளை எடுத்து எறிந்துவிட்டு ஆடை களையலானாள். அவசரஅவசரமாகச் சேலையையும், உள்பாவாடையையும், ஜெட்டியையும், சோளியையும், பிராவையும் மட்டும் அல்ல, சதையையும் கழற்றி எறிந்துவிட்டுக் காமத்தின் பிறந்த மேனியாக அவனிடம் ஓடிவந்தாள். அந்தக் காம கோரம் தன்மேல் பாய்வதையும், தான் தரையில் சாய்வதையும் உணர்ந்தான். செய்வதறியாது, அவன் அகமுகமாய் முருகா முருகா என்று கூவினான்.

‘ஆத்மஞானம் - SELF REALISATION என்பது இதுதான். You realise yourself by transcending flesh by means of flesh. Was that not a marvelous experience? Oh, you want a repeat perfomance? . . . No, no, not now. I’am damn tired. Thank you very much, Mali! Ta ta . . .,’ என்றவாறு அந்தப் பெண்ணுருவம் மறைந்தது.

ஒலிச் சித்திரம் போல் தொடங்கி, பிறகு நாளடைவில் காதுகளில் குரல்கள் உருவாக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சி போல் தன் கண்களால் பார்க்கவும் ஆரம்பிக்கிறான் மாலி.  கடவுள்களின் நாடகம் முடிந்து பார்வையாளர்கள் ‘அரங்கத்தை’ விட்டு வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள்.  ‘ஹீரோயின் ரொம்ப ஷோக்கா இருக்கா, அவளை ஒரு ராத்திரி எங்கேஜ் பண்ணிக்கப் போறேன்’ என்கிறான் ஒருவன்.  ஹீரோயின் என்பது இங்கே அகிலாண்ட பரமேஸ்வரி, ஆதி பராசக்தி.

புனிதங்களை உடைத்தல் என்கிற போது எம்.வி.வி. எந்தத் தயவு தாட்சண்யமும் இல்லாமல் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் புனிதத்தைக் கூட உடைக்கிறார்.  தங்கள் மொழியைத் தெய்வமாகக் கொண்டாடும் ஒரு சமூகத்தில் இந்த உடைப்பை நிகழ்த்தியிருக்கிறார் எம்.வி.வி.

திடீர் திடீரென்று, தேவையே இல்லாத இடங்களிலும் அவர் பயன்படுத்தும் கொச்சையான தமிழ்ச் சொற்களையும், திடீரென்று ஆதி பராசக்தி பேசும் ஆங்கில வசனங்களையும் பாருங்கள்.  கொச்சையான வசனங்களைப் பேசுவது கீழ்த்தட்டு விளிம்புநிலை மனிதர்கள் அல்ல; தெய்வங்கள்!  அதேபோல் சம்ஸ்கிருதத்தையும் விடவில்லை.  குரல்வளையைப் பிடித்து விழி பிதுங்கச் செய்கிறார் எம்.வி.வி.  உதாரணமாக,  அகம் பிரம்மாச்மி என்றே குறிப்பிடுகிறான் கறுப்பன்.  வேதங்களும் அதே பகடிக்கு உள்ளாகின்றன.  பாரதியின் பாடல் உச்சக்கட்ட கிண்டலுக்கு உள்ளாகிறது.  பொதுவாக, இசையிலோ மொழியிலோ கலகம் செய்பவர்களுக்கு அதன் சாஸ்த்ரீய வடிவத்தில் மேதமை இராது.  இலக்கணத்தை உடைத்துப் புதுக் கவிதை எழுபவர்களுக்கு இலக்கணம் தெரியாது.  ஆனால் எம்.வி.வி. காதுகள் நாவலில் மிக அற்புதமான, காவிய நயம் ததும்பும் பல்வேறு இடங்களை சிருஷ்டித்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பகடி: காதுகள் முழுவதுமே பகடிதான் என்றாலும் ஒரு உதாரணம் தருகிறேன்.  ஒருமுறை தன் கஷ்டம் தீர ஒரு துறவியிடம் செல்கிறான் மகாலிங்கம்.  அதற்கு எதிராகக் கூச்சலிடுகின்றன காதில் வசிக்கும் பூத கணங்கள்.  அப்போது ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த இளம் பெண்களிடம் வம்பு செய்கின்றன சில குரல்கள்.  குளம், தண்ணீர், இளம் பெண்கள் எல்லாமே virtual reality.  எல்லாமே பிரமை.  (Inception படத்தை இங்கே நினைவு கூரவும்.)  அந்தப் பெண்கள் தங்களைக் கிண்டல் செய்பவர்களைத் திட்டுகிறார்கள். அதற்கு அவைகள், நீங்க இருக்கீங்களா, இல்லீங்களா, போறீங்களா, வர்ரீங்களா – எது நெசம்னே தெரியல்லே என்கின்றன. (அந்தத் துறவி மாலியிடம் சொன்ன ஒரு தத்துவார்த்த விளக்கத்தையே இப்படிப் பகடி செய்கின்றன குரல்கள்.)  ‘நீங்களெல்லாம் என்ன குடித்து விட்டு வந்து எங்களுடன் ரகளை செய்கிறீர்களா?’ என்று கேட்கிறார்கள் அந்தப் பெண்கள்.  ‘டீ, அதாண்டி அந்தப் பண்டாரம் சொன்னான்’ என்கிறது ஒரு குரல்.  பண்டாரம் என்று குறிப்பிடுவது துறவியை.

‘அப்படீன்னா அவன் குடிச்சிருப்பான்’ என்று முடிக்கிறது இன்னொரு குரல்.  படித்துறைப் பெண்களும், அவர்களை ஈவ் டீசிங் செய்யும் ரவுடி பூதகணங்களும் வரும் இந்த இடத்தை நான் படித்த பின்நவீனத்துவப் பிரதிகளிலேயே உச்சக்கட்ட பகடி என்று கூறுவேன்.  இந்தப் பகடியை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள நீங்களே இந்த நாவலை முழுமையாக வாசித்து விடுவது நல்லது.  

Metafiction: பிரதியே பிரதியை எழுதிக் கொள்வது. புனைவைப் பற்றிய புனைவு – கதைக்குள்ளேயே கதை.  காதுகளில் பல பிரதிகள் ஒன்றை ஒன்று எழுதிக் கொண்டு செல்கின்றன.

Indeterminacy: நிச்சயமின்மை. பேசுவது யார் என்றே தெரியாத குழப்பம் அல்லது பிரமைத் தோற்றம்.  மாலியின் காதுகளில் கேட்கும் விவகாரம் எல்லாமே இதுதான்.

Collage/Pastiche : Images over reality.

Simulacra: பின்நவீனத்துவத்தின் மிக அடிப்படையான கூறு இது.  ஓரளவுக்கு இமிடேஷன் என்று சொல்லலாம்.  ஆனால் இமிடேஷனும் இல்லை.  இன்னொன்றின் நிழல் ரூபம்; ஆனால் நிழல் ரூபமும் இல்லை.  பிறகு சிமுலாக்ரா என்றால் என்ன?  அசலும் நகலும் என்று சொல்கிறோம்.  ஆனால் நகலாக இருந்து கொண்டே, தன்னளவில் அசலாகவும் இருந்தால் அது சிமுலாக்ரா ஆகும்.  கேலிச் சித்திரங்கள் சிமுலாக்ராவுக்கு ஒரு சிறந்த உதாரணம்.  ஒரு பகுத்தறிவாளனுக்கு மாலியின் காதுகளில் கேட்கும் கடவுள், பூதக் குரல்கள் எல்லாமே வெறும் பிரமையாகவும், ஒரு மனோதத்துவ நிபுணருக்கு அது மனச்சிதைவின் அடையாளமாகவும் தோன்றும்.  ஆனால் பின்நவீனத்துவத்தில் இது சிமுலாக்ரா.   மாலியின் காதுகளில் ஜீவிக்கும் கடவுளர்கள் அனைவரும் நிஜக் கடவுள்களின் கேலிச் சித்திரங்கள்.  இதையும் ஜான் பொத்ரியாரே அறிமுகப்படுத்தினார்.  

Apocalypse/Carnival: பேரழிவும் கொண்டாட்டமும்.

Double/The Other: பின்நவீனத்துவ உளவியலாளரான Jacques Lacan இது பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.  காதுகள் பற்றி ஆயிரம் பக்கம் எழுதலாம் என்று நான் போகிற போக்கில் சொல்லவில்லை.  லக்கான், போர்ஹேஸ், மகாபாரதம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டே இந்தக் கருத்தாக்கத்தை விளக்க வேண்டும்.  அப்படி விளக்கினால் அதுவே தனியாக ஒரு புத்தகம் ஆகி விடும்.  எனினும் ஓரிரு வாக்கியங்களில் விளக்க முயல்கிறேன்.  போர்ஹேஸின் எழுத்துக்களிலிருந்தே பின்நவீனத்துவத்துக்கு உதாரணங்களை எடுக்கிறார்கள் பின்நவீனத்துவத் தத்துவவாதிகள்.  ஜாக் தெரிதா (Jacques Derrida) தனது கோட்பாடுகள் பலவற்றை போர்ஹேஸிடமிருந்தே கடன் வாங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.  இது பற்றிய கேள்விக்கு தெரிதா கூறிய பதில் காதுகள் நாவலையும், இந்திய ஞான மரபின் வாரிசு என்று கருதப்படும் எம்.வி. வெங்கட்ராம் என்ற குங்குமம் இட்ட நெற்றியுடன் கூடிய சாத்வீகமான மனிதரையும், அவருடைய ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தையும் இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ளப் பயன்படலாம்.

தெரிதா கூறுகிறார்: போர்ஹேஸ் குறித்த என் பார்வை மிகவும் தத்துவரீதியானது.  போர்ஹேஸ் தனது தந்தை கூறியதாகச் சொன்ன விஷயம் இது.  அவர் தந்தை சொன்னார்: ‘நான் எதைப் பற்றியாவது நினைவு கூர்ந்தேன் என்றால் – உதாரணமாக, இன்றைய தினத்தின் காலை நேரத்தைத் திரும்பிப் பார்க்கிறேன் என்றால் உடனே இன்று காலை நான் என்ன பார்த்தேனோ அந்தக் காட்சி எனக்குக் கிடைக்கிறது.   ஆனால் இன்று இரவு, இன்றைய காலை நேரத்தைத் திரும்பிப் பார்க்கிறேன் என்றால், உண்மையில் நான் நினைவு கூர்வது காலையில் பார்த்த முதல் காட்சியை அல்ல;  என் ஞாபகத்தில் படிந்துள்ள முதல் காட்சியையே நினைவு கூர்கிறேன்.  ஆக, ஒவ்வொரு முறை நான் நினைவுகூரும் போதும் உண்மையில் நான் அந்தக் காலைக் காட்சியை நினைவு கூரவில்லை.  நான் கடைசி தடவையாக நினைவு கூர்ந்ததையே மீண்டும் நினைவு கூர்கிறேன். அது பற்றிய என் கடைசி ஞாபகத்தையே நினைவு கூர்கிறேன்.  ஆக, என் குழந்தைப் பிராயத்தைப் பற்றியோ என் இளைமைப் பருவத்தைப் பற்றியோ எனக்கு எந்த ஞாபகமும் இல்லை.’ போர்ஹேஸுக்கும் எனக்குமான உறவும் இதே ரீதியில்தான் செயல்படுகிறது.  எனக்கும் போர்ஹேஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  அவருக்கும் எனக்குமான ஒரே உறவு – அவருடைய புத்தகங்கள். அதாவது அவருடைய ஆவி.  அதாவது, போர்ஹேஸின் சுவடுகள்.’

இவ்வளவுக்கும் போர்ஹேஸ் பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைக் கூடக் கேள்விப்பட்டதில்லை.  நான் மேலே குறிப்பிட்ட எந்தப் பின்நவீனத்துவக் கோட்பாடு பற்றியும் போர்ஹேஸுக்குத் தெரியாது.  காரணம், கலைஞன் தத்துவங்களை உருவாக்குவதில்லை;  தத்துவவாதிகளே கலையிலிருந்து தத்துவங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.  குறிப்பாக போர்ஹேஸின் The Other என்ற சிறிய சிறுகதை பின்நவீனத்துவத் தத்துவவாதிகள் பலராலும் விவாதிக்கப்பட்டது.


இதே உதாரணம், எம்.வி. வெங்கட்ராமுக்கும் பொருந்தும்.  அவருக்குப் பின்நவீனத்துவம் குறித்தோ, ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து பற்றியோ தெரியாமல் இருக்கலாம்.  ஆனால் அத்தகைய எழுத்தை அவர் உருவாக்கினார்.  பாரதத்தில் கிருஷ்ணனின் மனதில் எப்போதும் இருந்தவன் அர்ஜுனன் அல்ல; சகுனி.  இதைத்தான் Double என்று சொல்கிறார்கள் பின்நவீனத்துவவாதிகள்.  எம்.வி. வெங்கட்ராம் எப்படிப்பட்டவர் என்பதை தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு போன்றவர்களின் வார்த்தைகளிலிருந்து அறிந்தோம்.  எம்.வி.வி. சிருஷ்டித்த மகாலிங்கமும் அப்படியே இருக்கிறார்.  அதிர்ந்து பேசினால் கூட எதிராளிக்குத் தொந்தரவாக இருக்கும் என்று மென்மையாகப் பேசுபவர்.  ஆனால் அவர் வாழ்ந்தது எல்லாமே அதி பயங்கரமான காமச் சொல்லாடல்களிலும், அவற்றின் காட்சி ரூபங்களிலும்தான்.  ஜாக் லக்கான் குறிப்பிடும் double / other என்பது இதுதான்.

மேலே நாம் குறிப்பிட்ட அத்தனை பின்நவீனத்துவக் கூறுகளையும் காதுகளில் நாம் மிக விரிவாகவும் தெளிவாகவும் காண முடிகிறது.   அதனால்தான் காதுகளை தமிழின் முதல் பின்நவீனத்துவ நாவல் என்று கூறுகிறேன். ஆனால் அதை விடவும் முக்கியமானது, எம்.வி. வெங்கட்ராம் உலகில் மிக அரிதாக எழுதப்படும் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தைத் தமிழில் முதல் முதலாக எழுதியிருக்கிறார் என்பது.  இதில் எனக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம், எம்.வி.வி.யின் மற்ற ட்ரான்ஸ்கிரஸிவ் சகாக்களான வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, ஜார்ஜ் பத்தாய் ஆகியோருக்கு எம்.வி.வி.க்குக் கிடைத்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.  பொதுவாகவே ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்களை சமூகம் ஒரு இலக்கியப் பயங்கரவாதியாகவே பார்க்கும்.

பர்ரோஸ் அமெரிக்காவில் வாழவே முடியாமல் மொராக்கோவுக்கு ஓடி வந்து விட்டார்.  கேத்தி ஆக்கர் கல்லூரியில் பணிபுரியச் செல்வதற்கு முன்னால் Stripper ஆக (இரவு விடுதிகளில் ஸ்ட்ரிப்டீஸ் நடனம் ஆடுபவர்) வேலை பார்த்தார். ப்யூகோவ்ஸ்கி வசிக்க வீடு இல்லாமல் நடைபாதை ஓரங்களில் வாழ்ந்தார்.  ‘ஞாயிற்றுக் கிழமை அன்று வரும் பல பக்கங்கள் கொண்ட நியூயார்க் டைம்ஸை மறுநாள் திங்கள் அன்று குப்பைத் தொட்டியில் பொறுக்கிப் படிப்பேன்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் ப்யூகோவ்ஸ்கி.

கதைகளையும் கவிதைகளையும் தட்டச்சு செய்வதற்கும் குப்பைத் தொட்டியிலேயே தனக்கு ஒரு டைப்ரைட்டர் கிடைத்ததாகச் சொல்கிறார் ப்யூக்.  இப்படியில்லாமல் ஃப்ரெஞ்ச் சமூகம் கலைஞர்களைக் கொண்டாடும் சமூகம் ஆயிற்றே?  ஆனால் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்களுக்கு ஃப்ரெஞ்ச் சமூகம் கூட இடம் தரவில்லை.  மார்க்கி தெ ஸாத் 1740-ம் ஆண்டு பிறந்தவர்.  இறந்தது 1814.  இந்த 74 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் அவர் ஃப்ரான்ஸின் பல்வேறு சிறைகளிலும், கடைசி ஐந்து ஆண்டுகள் மனநோய் விடுதியிலும் அடைக்கப்பட்டார். அதாவது, அவருடைய குடும்பத்தினர் அவருக்கு மனநோய் பீடித்துள்ளது என்று வற்புறுத்தியதன் பேரில் அவரது 70-வது வயதிலிருந்து 74-ம் வயது வரை மனநோய் விடுதியில் இருந்தார்.  அப்போதும் அந்த மனநோய் விடுதியின் பணியாளர் ஒருவரின் 14 வயது மகளோடு செக்ஸ் உறவு வைத்திருந்தார்.  அதையும் தன் நோட்டுப் புத்தகங்களில் விரிவாகப் பதிவு செய்திருந்தார்.  பல தொகுதிகள் வரக் கூடிய அந்தப் படைப்பு ஸாத்-இன் மரணத்துக்குப் பிறகு அவருடைய புதல்வரால் எரியூட்டப்பட்டது.  ஆனால் மார்க்கி தெ சாத் காலத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறியது.  தத்துவவாதியாக அறியப்பட்டவரும் ஜான் பால் சார்த்தரின் சமகாலத்தவருமான ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) சாத் அளவுக்குத் துன்பப்படவில்லை.  காரணம், போர்னோ மொழியில் எழுதப்பட்ட அவருடைய ‘கண்ணின் கதை’ என்ற நாவலை அவர் யாரும் அறியாத ஒரு புனைப்பெயரிலேயே வெளியிட்டார்.

சூஸன் சொண்டாக், ரொலான் பார்த் (Roland Barthes) போன்ற அமைப்பியல்வாத அறிஞர்கள் மூலமே பின்னர் அந்த நாவலுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்தது.  ஆக, ஒரு ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளன் என்றால் ஒன்று, அவன் சிறையிலோ அல்லது மனநோய் விடுதியிலோதான் அடைக்கப்படுவான்; அல்லது, தேசத்தை விட்டு ஓட வேண்டும்.  அதுவும் இல்லாவிட்டால் யார் என்றே தெரியாமல் அனாமதேயமாக எழுத வேண்டும்.  இதுதான் உலகம் பூராவும் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்களின் நிலையாக இருந்து வருகிறது.  அந்த வகையில் எம்.வி.வெங்கட்ராமை அதிர்ஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும்.   ‘அகிலாண்ட பரமேஸ்வரியான ஆதி பராசக்தி தன்னுடைய பிராவையும், ஜெட்டியையும் கழற்றி விட்டு ‘Come, I want to make love with you’ என்று மாலியை அழைக்கிறாள்’ என்று எழுதிய அவருக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்து கௌரவித்தது நம் நாடு. அதுவும் அந்த விருது காதுகள் நாவலுக்குக் கிடைத்தது நம்ப முடியாத ஆச்சரியம்.  ஆனால் சக எழுத்தாளர்களோ எம்.வி.வி.யை இந்திய ஞான மரபின் வாரிசு என்கிறார்கள்.  எம்.வி.வி. கொடுத்து வைத்தவர்.  ஆனால் இன்றைய சூழலில் எழுதப்பட்டிருந்தால் காதுகள் தடை செய்யப்பட்டிருக்கும்.  எம்.வி.வி.யும் நாடு கடத்தப்பட்டிருப்பார்.  காதுகளும் உலகப் புகழ் அடைந்திருக்கும்.

ஆனால், மற்ற ட்ரான்ஸ்கிரஸிவ் நாவல்களுக்கும் காதுகளுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் ‘என் காதுகளில் ஆபாசமான வார்த்தைகள் கேட்டன’ என்று எழுதுகிறாரே தவிர அது என்ன வார்த்தைகள் என்று எம்.வி.வி. எழுதுவதில்லை.  மற்ற ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்கள் (அடியேன் உட்பட) அதை அப்பட்டமாக எழுதி விடுகின்றனர்.  அதனால்தான் எம்.வி.வி. தப்பினார் என்று நினைக்கிறேன்.  ஆனால் வேறோர் விஷயத்தில் அவர் மற்ற எல்லா ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்களையும் விஞ்சி விட்டார்.  மற்றவர்கள் மனிதர்களைப் பற்றி எழுதினர்.  எம்.வி.வி.யோ மனிதர்கள் தொட அஞ்சும் கடவுள்களைப் பற்றி எழுதினார்.  இப்படியெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த போது, நாமும் எம்.வி.வி.யைப் போல் நெற்றியில் ஒரு பெரிய குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டிருந்தால் நம் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்துக்காக இத்தனை கெட்ட பெயர் வாங்காமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.          

கட்டுரை மிகவும் நீண்டு விட்டதால் எம்.வி.வி. எழுதிய நித்யகன்னி, வேள்வித் தீ போன்ற முக்கியமான மற்ற நாவல்களைப் பற்றியும், பனிமுடி மீது ஒரு கண்ணகி என்ற அற்புதமான சிறுகதைத் தொகுப்பு பற்றியும் பேச முடியவில்லை.  எப்போதாவது முடிந்தால் எம்.வி.வி. பற்றித் தனியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற அவா மேலிடுகிறது.  இந்த நூல்கள் அனைத்தும் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

http://www.sirukathaigal.com/குடும்பம்/பைத்தியக்காரப்-பிள்ளை/
பைத்தியக்காரப் பிள்ளை
கதையாசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2012
பார்வையிட்டோர்: 5,127




விழிப்பு வந்ததும் ராஜம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தூக்கக் கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர் பார்த்தவன் போல் கொஞ்ச நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல் ‘கொக்…. கொக் கொக்கோகோ’ என்று கூவியதும் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

‘நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும் போல இருக்கு! இப்போ மணி MVV என்ன தெரியுமா? சரியாக நாலரை!’ என்று தனக்குள் சொல்லிச் சிரித்தவாறு, இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு எழுந்தான்.

காலையில் அம்மா முகத்தில் விழித்து விடக் கூடாது என்று அவனுக்குக் கவலை. இருட்டில் கால்களால் துழாவியபடி இரண்டு தங்கைகளையும் தாண்டினான். அப்பால்தான் அம்மா படுத்திருந்தாள். கீழே குனியாமல் சுவிட்சைப் போட்டான். வெளிச்சம் வந்ததும் உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டான். ஆணியில் தொங்கிய கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்துக் கொண்டான். பிறகுதான் மனசு சமாதானப்பட்டது. அது என்னவோ, அம்மா முகத்தைப் பார்த்தபடி எழுந்தால் அன்றைய பொழுது முழுவதும் சண்டையும் சச்சரவுமாகப் போகிறது!

கடிகாரத்தில் மணி பார்த்தான். நாலு முப்பத்திரண்டு…!

பக்கத்து வீட்டில் கொல்லைப் பக்கம் ஒரு சின்ன கோழிப் பண்ணை வைத்திருக்கிறார்கள். சேவல் இல்லாமல் கோழிகள் ஏழெட்டு மாதம் முட்டை இடும் அதிசயம் அங்கே நடக்கிறது. சும்மா அழகுக்காக அடுத்த வீட்டுக்காரர் ஒரு சேவல் வளர்க்கிறார். ஜாதி சேவல்; ஒன்றரை அடி உயரம். வெள்ளை வெளேரென்று டினோபால் சலவை செய்த உருப்படி போல் இருக்கும். அதுதான் நாலரை மணிக்குச் சொல்லி வைத்தாற்போல் கூவுகிறது.

‘என்னைக்காவது ஒரு நாள் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? சுவரேறி குதிச்சு சேவல் கழுத்தைத் திருகி, குழம்பு வச்சி தின்னுடப் போறேன். அதெப்படி கரெக்டா நாலரை மணிக்குக் கூப்பாடு போடுது! காலை நேரத்திலே ஐயோய்யோ என்று கத்தறாப் போலே சகிக்க முடியல்லே!’

அவன் கவனம் தறி மேடை மீது சென்றது. இரண்டை முழம் நெய்தால் சேலை அறுக்கலாம். கடைசிச் சேலை. இன்றைக்குச் சாயங்காலம் அறுத்துவிட வேண்டும். முடியுமா? முதலாளி கூப்பிட்டு ஏதாவாது வேலை சொல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சண்டை வளர்க்காமல் இருக்க வேண்டும். முதலாளி கூப்பிட்டால் சால்ஜாப்பு சொல்லலாம்? ஆனால் இந்த அம்மாவை எப்படி ஒதுக்குவது?

குனிந்து தைரியமாக அம்மாவைப் பார்த்தான். தூக்கத்திலே கூட உர்றென்று… பார்க்கச் சகிக்கவில்லை. பெற்றவளை அப்படிச் சொல்வது பாவல் இல்லையா? ஒன்றா? இரண்டா? ஆண் பிள்ளையிலே ஐந்து, பெண் பிள்ளையிலே ஐந்து, பத்தும் பிழைத்துக் கிடக்கின்றன, சேதாரம் இல்லாமல். அப்பா நெசவு வேலையில் கெட்டிக்காரர். குடித்துவிட்டு வந்து அம்மாவைத் தலைகால் பாராமல் உதைப்பார்; உதைத்து விட்டுத் தொலைவாரா? அம்மா காலில் விழாத குறையாக இரவு முழுவதும் அழுது கொண்டிருப்பார்.

ராஜம், வீட்டுக்கு மூத்த பிள்ளை. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுப் போட்டுப் பத்துக் குழந்தைகள் பிறந்த கதை அவனுக்குத் தெரியும்.

‘இவ்வளவு சண்டை போட்டிருக்காவிட்டால், இத்தனை குழந்தைகள் வந்திருக்காது. பெண்டாட்டியை ஏன் அடிக்கணும், பிறகு அது மோவாயைப் பிடித்து ஏன் கெஞ்சணும்? அதான் எனக்குப் புரியல்லே’.

அப்பாவால்தான் அம்மா கெட்டுப் போயிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. அடிதாங்க முடியாமல் எதிர்த்து வாயாடத் தொடங்கினாள். உடம்பிலே தெம்பு குறைந்ததும் பதிலுக்கு அடிக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தாள்.

அம்மாவுக்கு சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும். அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி விடுவாள்.

அவளிடம் கடிபடாமல் தப்புவதற்காக அப்பா தறிமேடையைச் சுற்றிச் சுற்றி ஓடிய காட்சியை நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“நீ நாயாப் பிறக்க வேண்டியவ…”

“அதுக்காவத்தான் உன்னைக் கட்டிக்கிட்டுச் சீரளியறேன்…”

அம்மா சாதாரணமாய் அப்பாவுக்கு ‘நீங்க’ என்று மரியாதை தருவது வழக்கம்; ஆனால் சண்டையின் உச்ச கட்டத்தில் இந்த மரியாதை பறந்து போகும்.

”உனக்கு வாய் நீளமாப் போச்சு. பல்லைத் தட்டி கையிலே கொடுத்தாத்தான்…”

“எங்கே பல்லைத் தட்டு, பார்க்கலாம்! ஆம்பிளையானா என்கிட்டே வா, பார்க்கலாம்!” என்று அம்மா சவால் விட்டு, தட்டுவதற்காகப் பற்களைப் பிரமாதமாய்க் காட்டுவாள்.

ஆனால், அப்பா அவளுடைய பற்களை நெருங்கத் துணிந்ததில்லை. தெளிந்த போதையை மீட்டுக் கொள்வதற்காக மறுபடியும் கள்ளுக்கடைக்கு ஓடி விடுவார்.

அம்மாவின் கடிக்கு பயந்துதானோ என்னவோ, அவள் பத்தாவதாக ஒரு பெண் குழந்தை பெற்றதும் அப்பா செத்துப் போனார். அவர் செத்ததே வேடிக்கைதான்.

அம்மாவின் பிரசவங்கள் எல்லாம் வீட்டில்தான் நடப்பது வழக்கம். துணைக்கு அத்தை ஒருத்தி வருவாள். குழந்தை பிறந்ததைத் தாம்பாளத்தில் தட்டி அத்தைதான் அறிவிப்பாள்.

“என்ன குளந்தே?” என்று கேட்டார் அப்பா.

“கணக்கு சரியாப் போய்ச்சு. ஆண் பிள்ளையிலே அஞ்சு இருக்கா? பெண் பிள்ளையும் அஞ்சு ஆயிடுச்சு”.

“பொண்ணு பிறந்திருக்குன்னா சொல்றே?”

“அதான் சொல்றேன்.”

“அஞ்சு பெண்களைக் கட்டிக் கொடுக்கிறதுக்குள்ளே நான் காவேரிக் கரைக்குப் போயிடுவேன். போயும் போயும் பெண்ணா பெத்தா?”

“நீங்க ஒண்ணும் கலியாணம் பண்ணிக் கிழிக்க வேணாம். அவங்க அவங்க தலை எழுத்துப்படி நடக்கும். நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்” என்றாள் அம்மா, அறையில் இருந்தபடி.

”நான் எப்படி கவலைப்படாமே இருக்க முடியும்? நீ பொம்பிளே; வீட்டிலே உட்கார்ந்து பேசுவே. தெருவில் நாலு பேருக்கு முன்னாடி போறவன் நான் இல்லே? குதிராட்டம் பெண்ணுங்க கல்யாணத்துக்கு நிக்குதுன்னு என்னையில்லே கேப்பாங்க?”

“குளந்தே இப்பத்தான் பிறந்திருக்கு. அதுக்குள்ளே கலியாணத்தெப் பத்தி என்ன கவலை?”

“முன்னாடியே நாலு பெத்து வச்சிறிக்கியே. எல்லாத்துக்கும் கலியாணம் கார்த்தி செய்யறதுன்னா சின்ன வேலெயா? போயும் போயும் பெண்ணா பெத்தே?”

மனைவி, பெண் பெற்ற கவலையை மறப்பதற்காக அவர் காலையிலிருந்தே குடிக்கத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அறை வாசலில் தலை காட்டுவார்; ‘போயும் போயும் பெண்ணா பெத்தே?” என்று பெருமூச்சு விடுவார்; வெளியே சென்று குடித்து விட்டு வருவார். நாள் பூராவும் இந்தக் கேள்வியும் குடியுமாகக் கழிந்தது.


இரவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வீடு நாறும்படி வாயில் எடுத்தார். பிறகு ரத்தமாய்க் கக்கி விட்டு மயங்கிப் படுத்தவர், பெண்களுக்கு மணம் செய்து வைக்கிற சிரமத்தைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.

அப்புறம், எல்லாம் அம்மா பொறுப்பு.

அம்மா பொறுப்பு என்றால் அவள் பிரமாதமாய் என்ன சாதித்து விட்டாள்? குழந்தைகளை வாட்டி வதக்கி வேலை வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள்கிறாள். வயிற்றில் கொட்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.

சந்தடி கேட்டு அம்மா விழித்துக் கொள்ளப் போகிறாளே என்று ராஜம் ஜாக்கிரதையாகவே பல் விளக்கினான். பல் விளக்கும்போது அவனுக்கு ஒரு பழைய ஞாபகம் சிரிப்பு மூட்டியது.

சிறுவனாக இருந்தபோது அம்மா பல் துலக்குவதைப் பார்ப்பது அவனுக்கு வேடிக்கை. ஒரு பிடி சாம்பலை அள்ளித் தண்ணீரில் நனைத்துப் பற்களைத் தேய்ப்பாள்; ஒவ்வொரு பல்லாக தேய்ப்பதற்கு நீண்ட நேரமாகும். சிறுவனான அவன் அவளருகில் போய் “ஒவ் அம்மா ஃபோக் சவஸ்தக் தாத் கூர் கெல்லர்த்தெகா?” (ஏன் அம்மா, அப்பாவைக் கடிக்கப் பல்லைக் கூராக்கிக்கிறியா?) என்று கேட்பான்.

“அரே தொகோ ஒண்டே பாடே ஃபந்தா! காய் திமிர்ஸா!” (அடே ஒனக்கு ஒரு பாடை கட்ட! என்ன திமிர் பாரு!) என்று எச்சில் கையால் அம்மா அவனை அடிக்க வருவாள்.

அவளிடம் சிக்காமல் அவன் தெருப்பக்கம் ஓடி விடுவான்.

மனத்தில் சிரித்தபடி பல் துலக்கி முடித்தான். பஞ்சாமி ஹோட்டலுக்குப் போய் ஒரு காபி சாப்பிட்டு வந்து பிறகு தங்கையை எழுப்பிக் கொண்டு தறிக்குப் போகலாம் என்று அவன் எண்ணம்.

முகத்தைத் துடைத்துக்கொண்டு கிழக்குத் திசையைப் பார்த்து, உதயமாகாத சூரியனைக் கும்பிட்டான். தறி மேடைக்குப் பக்கத்திலிருந்த மாடத்தில் கண்ணாடி இருந்தது. முகம் பார்த்து, தலை மயிரை வாரினான். சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் புறப்படத் தயாரானான்.

அம்மா சன்னமாய்க் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள், பெண் பிள்ளைகள் குறட்டை விடலாமா? சொன்னால் கேட்பாளா? அவன் சொல்லி அவள் கேட்கிற பழக்கம் கிடையாது. அவன் சொன்னதற்காக அவள் பலமாய்க் குறட்டை விடுவாள். ‘நான் ஹோட்டல்லேயிருந்து வர்ற வரை குரட்டை விட்டார்.

”ரேய் ராஜம் கோட் ஜாரிஸ்தே?” (டே ராஜம், எங்கே போறே?) என்று அம்மாவின் குரல் கடப்பாரையாய் அவன் தலையில் இடித்தது.

ஹூம். நடக்கக்கூடாது என்று எதிர்ப்பார்த்தது நடந்து விட்டது. அவன் பேசவில்லை.

”கிளப்புக்குத்தானேடா? கிளாஸ்லே சாம்பார் வாங்கிட்டு வா.”

“கிளப்லே சாம்பார் தர மாட்டான்.”

“ஏன் தர மாட்டான்? ஒரு தோசை வாங்கிக்கோ.”

“பார்சல் வாங்கினாலும், பஞ்சாமி கிளப்லே தனியா சாம்பார் தர மாட்டான்.”

“எல்லாம் தருவான், கேளு.”

“தர மாட்டான். போர்டு போட்டிருக்கான்.”

“தோசை வாங்கினா சாம்பார் ஏன் தர மாட்டான்? எனக்கு ஒரு தோசை வாங்கிட்டு வர உனக்கு இடமில்லை. இருபது பைசா செலவாயிடும்னு பயப்படுறே. உன் வாய்க்கு மாத்திரம் ருசியா, சாம்பார் கொட்டிக்கிட்டு ஸ்பெசல் தோசை தின்னுட்டு வருவே.”

”காலை நேரத்துலே நா ஒரு காபி சாப்பிட்டு தறிக்குப் போகலாம்னு பார்த்தேன். நீ இப்படி வம்பு வளர்த்தா…”

“பெத்தவ தோசையும் சாம்பாரும் கேட்டா வம்பாவா தெரியுது?”

”வீடு பூரா தூங்குது. ஏன் இப்படி உயிர் போகிறாப் போல கத்தறே? பஞ்சாமி கிளப்பிலே, தனியா டம்ளர்லே சாம்பார் தர மாட்டான்னு சொன்னா….”

“அங்கே போக வேணாம். வேறெ கிளப்புக்குப் போ. சாம்பாரோடதான் நீ வீட்டிலே நுழையணும்.”

ராஜத்தின் நாவில் பஞ்சாமி ஹோட்டல் காபி மணத்தது. கும்பகோணத்தில் பசும் பால் காபிக்காப் பிரபலமான ஹோட்டல் அது.

அம்மா சாம்பாரைத் துறக்கத் தயாராக இல்லை.

“சரி, நான் கிளப்புக்குப் போகல்லே; காபியும் சாப்பிடல்லே. குள்ளி, ஓவ் (அடீ) குள்ளி, எகுந்திரு, தறிக்குப் போகலாம்.”

“நீ காபி சாப்பிடாவிட்டா சும்மா இரு. எனக்குத் தோசையும் சாம்பாரும் கொண்டா.”

“என்கிட்டே காசு இல்லே; காசு கொடு, வாங்கிட்டு வர்றேன்.”

இவ்வளவு நேரம் பாயில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தவள் துணுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

”என்ன சொன்னே? சொல்லுடா, என்ன சொன்னே?”

“அதிசயமா என்ன சொல்லி விட்டேன்? காசு குடுத்தா தோசையும் சாம்பாரும் வாங்கிட்டு வர்றேன்னேன்.”

“பெத்தவளுக்கு ஒரு தோசை வாங்கிக் கொடுக்க வக்கில்லாமப் போச்சா? இன்னம் தாலி கட்டின பாடில்லே. பெண்டாட்டியா வரப்போறவளுக்கு வாங்கித் தர நோட்டு நோட்டா கிடைக்குது; இல்லியாடா?”

“இந்தாம்மா, சும்மா வாயை அவிழ்த்து விடாதே. நாலு குடித்தனத்துக்காரங்க தூங்கறாங்க. உன் குரலைக் கேட்டு முழிச்சுக்கப் போறாங்க. நான் யாருக்கும் ஒண்ணும் வாங்கித் தரல்லே.”

“பூனை கண்ணை மூடிக்கிட்டா ஊரே அஸ்தமிச்சதா நினைச்சுக்குமாம். நீ எதிர் வீட்டுப் பொண்ணுக்காக என்னென்ன செலவு செய்றேன்னு எனக்குத் தெரியாதா?”

“வாயை மூடு. ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்பிடி பேசினா…”

“இல்லாதது என்னடா பேசிட்டேன்? தெருவிலே போறப்போ நீ அதைப் பார்த்துச் சிரிக்கிறதும், அது உன்னைப் பார்த்து இளிக்கிறதும், ஊரே சிரிப்பா சிரிக்குது. நான் ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ; நீ அதைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. நான் உயிரோட இருக்கிறவரை அவ இந்த வீட்டு மருமகளா வந்துட முடியாது.”

ராஜம், அம்மா முகத்தை வெறித்துப் பார்த்தான். அவளிடமிருந்து தப்புவதற்காக அப்பா தறி மேடையைச் சுற்றி ஓடியது ஞாபகம் வந்தது.

“என்ன செஞ்சிடுவே? கடிச்சிடுவியோ?” என்று கேட்டான் ஆத்திரமாக.

“அடே பேதியிலே போறவனே, என்னை நாய் என்றா சொல்றே?” என்று எகிறிக் குதித்தாள் அம்மா. “உன்னைச் சொல்லிக் குத்தமில்லே, அந்த எதிர்வீட்டுக் கழுதை உனக்கு சொக்குப்பொடி போட்டிருக்கா. அது உன்னை இப்பிடி ஆட்டி வைக்குது. டேய் பெத்தவளை நாய்ன்னு சொல்ற நாக்கிலே புழு விழும்டா, புழு விழும்.”

அடுத்த வீட்டுச் சேவல் ஐயய்யோ என்று கத்தியது. ராஜத்துக்கு ஒரே எரிச்சலாக வந்தது. சாம்பார் சண்டையைச் சாக்காக வைத்துக் கொண்டு அம்மா பங்கஜத்தையும் அல்லவா திட்டுகிறாள்? திட்டி ஊரையே கூட்டி விடுவாள் போல் இருக்கிறது. பங்கஜத்தின் பெற்றோர் அதைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? பங்கஜம் கேட்டால் என்ன பாடுபடுவாள்?

“காளி, வாயை மூடு. பொழுது விடியறத்துக்குள்ளே இப்படி கூச்சல் போட்டா நல்லா இருக்கா? உனக்கு என்ன வேணும்? தோசை சாம்பார்தானே? டம்ளர் எடு.”

அம்மா அசையவில்லை.

”சாம்பாரும் தோசையும் அந்தக் கழுதை தலையிலே கொட்டு. என்னை நாய்ன்னு சொல்றியா? உனக்குப் பாடை கட்ட! வாயெ மூடிக்கிட்டுப் ’போனாப் போவுது, போனாப் போவுது’ன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். என் தலைய்லே மிளகா அரைக்கிறியா? பரம்பரை புத்தி போகுமாடா? அப்பன் குடிகாரன், குடிகாரன் பிள்ளை எப்படி இருப்பான்?”

“சரி, போதும், நிறுத்து. நாய்ன்னு நான் சொல்லல்லே. டம்ளரை எடு. சாம்பார் வாங்கிட்டு வர்றேன்.”

அவன் சொன்னதை அவள் கேட்டதாகத் தெரியவில்லை. வாயிலிருந்த ஆபாசங்களை எல்லாம் துப்பிவிட்டுத்தான் நிறுத்துவாள் போலிருந்தது.

ராஜத்துக்கும் அளவு கடந்த கோபம். இவள் லண்டி; நிறுத்தமாட்டாள்; வாயில் ‘பளார், பளார்’ என்று நாலு அறை விட்டால்தான் இவள் வாயை மூடலாம். அறை விட்டிருப்பான்; அவளுடைய கூப்பாட்டுக்கு அஞ்சித்தான் அடக்கிக்கொண்டான்.

“என்னடா முறைக்கிறே? இதெல்லாம் என்கிட்டே வச்சிகாதே. பொம்பிளைதானே, அடிச்சா உதைச்சா யார் கேக்கப் போறாங்கன்னு நினைக்கிறாயா? பெத்தவலைத் தொட்டு அடி பார்க்கலாம், உன்னை என்ன செய்யறேன் பாரு. உடம்பிலே தெம்பு இல்லைன்னா நினைக்கிறே? நான் காளி குப்பம்மாவுக்குச் சொந்தக்காரிடா. என்னைத் தொட்டுடு. உன் வயித்தெ கிழிச்சு குடலை மாலையா போட்டுக்கிட்டு எதிர் வீட்டுக்காரி முன்னாலே போய் நிப்பேன்!”

காளி குப்பம்மாள். கணவணின் வயிற்றை அரிவாள் மணையினால் கிழித்துக் குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு, தெருத் தெருவாய் கையில் அரிவாள்மணையுடன் சுற்றி விட்டுப் போலீசில் சரணடைந்ததாய்க் கும்பகோணம் சௌராஷ்டிரர்கள் கதையாகச் சொல்வதை ராஜமும் கேள்விப்பட்டிருந்தான். அம்மா, காளி குப்பம்மாவுக்கு சொந்தம் என்று இன்றுதான் உறவு கொண்டாடுகிறாள். அவ்வளவு தைரியம் இவளுக்கு வராது. ஏமாளிகளான பிள்ளைகளை மிரட்டுவாள்.

அவளுக்கு முன்னால் நின்று பேச்சுக் கொடுக்க முடியாது என்று ராஜத்துக்குப் புரிந்தது. அவனே ஓர் எவர்சில்வர் டம்ளரை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டான்.

அவன் பேசாமல் கிளம்பிய பிறகு அம்மா விடவில்லை; “எனக்காக நீ ஒண்ணும் வாங்கிட்டு வராதே. வாங்கிட்டு வந்தா சாக்கடையிலே கொட்டுவேன்.”

அவன் பதில் பேசாமல் புறப்பட்டான். ஒரு விநாடி தயங்கி நின்றான். அம்மாவை பிடித்து இழுத்து, தலை முடியை உலுக்கு கன்னங்களில் மாறி மாறி அறைந்து, முகத்திலும் முதுகிலும் குத்தி, ‘விட்டுட்றா, விட்டுட்றா, இனிமே நான் உன் வழிக்கு வரல்லே; நீ பங்கஜத்தைக் கட்டிண்டு சுகமாயிரு. என்னை விட்டுடு’ என்று கதறக் கதற உதைத்துச் சக்கையாக மூலையில் எறிந்து விடலாமா என்ற ஒரு கேள்வி காட்சியாகக் கண்களுக்கு முன்னால் வந்தபோது அவன் மனசுக்கு சௌகரியமாயிருந்தது. ‘அப்பா அடிப்பாரே, அந்த மாதிரி, அப்பாவைக் கடிக்கப் பாய்வாளே, அப்படிக் கடிக்க வருவாளோ? வரட்டுமே; என்னிடம் பலிக்காது; பல்லைத் தட்டிக் கையில் தருவேன்’ என்று மனத்துக்குள் கறுவிக் கொண்டான்.

ஒரு விநாடிக்கு மேல் இந்த மனசுகம் நீடிக்கவில்லை, அம்மா தாடகை; பல்லைவிட அவள் சொல்லுக்குக் கூர் அதிகம். அவன் கை ஓங்கும்போதே, அவள், ‘கொலை கொலை’ என்று சத்தம்போட ஆரம்பிப்பாள். ஐந்து குடிகள் இருக்கிற வீடு, இருபது பேராவது இருப்பார்கள்; எல்லாரும் எழுந்து ஓடிவந்து விடுவார்கள். அவனைத்தான் கண்டிப்பார்கள்.

அம்மாவை ஜெயிக்க முடியாது.

அவன் பேசாமல் நடந்தான். பௌர்ணமி போய் ஆறேழு நாள் இருக்கும். அரைச் சந்திரனின் வெளிச்சம் தாழ்வாரத்தில் வெள்ளையடித்தாற்போல் கிடந்தது. மாசி மாதம்; பின்பனிக்காலம் என்று பெயர்; இரவு முழுவதும் நன்றாய்க் குளிருகிறது. புறாக் கூடு போல் அறை அறையாகப் பிரிந்துள்ள அந்த வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்; விழித்துக் கொண்டிருந்தால் பேச்சு சத்தம் கேட்குமே? தறி சத்தம் கேட்குமே? மூன்றாவது குடியான சீதம்மா மட்டும் வெளியே படுத்திருப்பாள். அவள் மீது நிலா வெளிச்சம் விழுந்தது. போர்வை காலடியில் துவண்டு கிடக்க, அவள் உடலை அஷ்டகோணலாக ஒடுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தாலே அவளும் தூங்குகிறாள் என்று தெரிகிறது.

வீட்டில் யாரும் விழித்துக் கொள்ளவில்லை, அம்மாவின் காட்டுக் கத்தலைக் கேட்கவில்லை என்ற திருப்தியுடன் ராஜம் முன்கட்டை அடைந்தபோது, “என்ன ராஜம், ஹோட்டலுக்குப் புறப்பட்டியா?” என்று ஒரு குரல் தமிழில் கேட்டது.

சாரங்கன்; விழித்திருப்பான் போல் இருக்கிறது. அம்மாவும் ராஜமும் சண்டைப் போட்டதைக் கேட்டிருப்பானோ? கேட்டால் கேட்கட்டுமே! அவன் மட்டும் ஒசத்தியா? தினம் பெண்டாட்டியோடு சண்டை; மைத்துனன் மத்தியஸ்தம். சௌராஷ்டிரனாய்ப் பிறந்தவன் சௌராஷ்டிர மொழியில் பேசினால் என்ன? தமிழில்தான் பேசுவான்.

“ஹாய், ஹாய், ஏஃகெடிக் வெளோ கோட் ஜான்?” (ஆமா, ஆமா, இந்த நேரத்திலே வேறெ எங்கே போவாங்க?) என்று சௌராஷ்டிர பாஷையிலேயே பதில் சொன்னான் ராஜம்.

“கள்ளுக்கடைக்குப் போறியோன்னு பார்த்தேன்” என்று தமிழில் சிரித்தான் சாரங்கன்.

“அங்கு ஃபோதா தெளிஞ் செனிகா?” (இன்னும் போதை தெளியல்லியா?)

“அதெப்படி தெளியும்? பக்கத்திலேயே பானையில் வச்சிருக்கேனே? அது போகட்டும் எனக்கு ஒரு டம்ள்ர் சாம்பார் வாங்கிட்டு வா, ரெண்டு இட்லியும் பார்சல் கட்டிக்கோ” என்ற சாரங்கன் ஓர் அலுமினிய டம்ளரை நீட்டினான்.

மறுக்க வேண்டாம் என்று ராஜத்தின் எண்ணம். ஆனால் சாரங்கன் விஷமக்காரன். ஹோட்டலிலிருந்து திரும்பும் போது தாழிட்டு விடுவான். தொண்டைக் கிழியக் கத்தினாலும் கதவைத் திறக்க மாட்டான். ராஜத்தின் குரல் கேட்டு அம்மா கதவைத் திறப்பதற்குள் – அம்மா திறப்பாளா? கண் விழித்ததுமே காளி வேஷம் கட்டிக் கொண்டு விடுவாளே!

“ஹோட்டலுக்கு வாயேன்” என்றவாறே ராஜம் டம்ளரை வாங்கிக்கொண்டான்.

”வெறும் கதவைப் போட்டுவிட்டு நாம் போயிட்டா, திருட்டுப் பய எவனாவது உள்ளே நுழைஞ்சி, பாவு அறுத்துகிட்டுப் போனா என்ன செய்றது? நான் காவலுக்கு இருக்கேன்; நீ இட்லி கொண்டு வந்து கொடு” என்று சாரங்கன் சமத்காரமாய்ச் சிரித்தான்.

மனசுக்குள் திட்டுவதைத் தவிர ராஜத்தினால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. இரண்டு டம்ளர்களையும் ஏந்தியவனாய்த் தெருவில் இறங்கினான்.

ஆகாயத்தில் நட்சத்திரங்களும் அரைச் சந்திரனும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தன. ராஜத்தைக் கண்டதும் தெரு நாய் ஒன்று எழுந்தது. அவனுக்குப் பின்னால் ஓடி வந்தது. அவன் அதற்கு ஒரு வாய் சோறு போட்டதில்லை. என்ன காரணமோ அதிகாலையில் அவன் ஹோட்டலுக்குப் போகும் போதும் திரும்பும் போதும் காவலாய்க் கூடவே ஓடி வரும். தெருவில் எலிகளும் பெருச்சாளிகளும் காலடிச் சத்தம் கேட்டுச் சிதறி ஓடின. பன்றிகளும் கழுதைகளும் தீனி தேடிக் கொண்டிருந்தன. சில பெண்கள் தெருவில் வீட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். நாய் அவனுக்குப் பின்னால் ஓடியது.

ராத்திரி அவனுக்கு ஒரு சொப்பனம். பழைய சொப்பனம். அவனுக்கு வினாத் தெரிந்த நாள் முதல் ஆயிரம் தடவைக்கு மேல் இந்தச் சொப்பனம் வந்திருக்கும். அவன் ஏதோ ஒரு தெருவோடு போகிறான்; ‘வவ் வவ்’ என்று குரைத்தவாறு ஒரு வெறி நாய் அவனைத் துரத்துகிறது; அவன் மூச்சுத் திணற ஓடுகிறான். அது அவன் மேல் பாய்ந்து வலக்கால் கெண்டைச் சதையைக் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. ‘ஐயோ’ என்று முனகிக் கொண்டோ, கத்திக்கொண்டோ அவன் விழித்துக் கொள்வான். கனவுதானென்று உறுதி செய்துக்கொள்ளச் சற்று நேரமாகும்.

ராத்திரியும் அதே கனவு; அதே வெறி நாய் அவனுடைய கால் சதையைக் கடித்தது. வெறி நாய் கடித்தால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்கிறார்கள். கனவில் நாய் கடித்தாலும் பைத்தியம் பிடிக்குமா?

அவன் தெருமுனை திரும்பி விட்டான். நாலு திசைகளிலும் கண்ணோட்டம் விட்டான். மனித நடமாட்டமே இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான். தெரு நாய்தான் கூட இருந்தது. அவன் நின்றதும் அதுவும் நின்ரது. கனவில் வந்த வெறிநாய் இந்த நாய் போல் சாது அல்ல; எவ்வளவு பயங்கரமாய் அது குரைத்தது! அவன் அப்படிக் குரைத்தால் அம்மா பயப்படுவாளா, மாட்டாளா? அவன் தெருநாயைப் பார்த்து கீச்சுக் குரலில் ‘வவ் வவ்’ என்று குரைத்தான். மனிதன் நாய் மாதிரி குரைப்பதைக் கேட்டிராத தெரு நாய் பயந்துவிட்டது போலும்; அது திரும்பிப் பத்து பன்னிரண்டு அடி தூரம் ஓடி, மறுபடியும் நின்று அவனை ஏறிட்டுப் பார்த்தது. நான் குரைத்தால் அம்மாவை ஓட ஓட விரட்டலாம் என்று சிரித்துக்கொண்ட ராஜம் ஹோட்டலை நோக்கி நடந்தான்.

நாய் அவனைப் பின்பற்றியது.

விநாயகர் கோயிலுக்கு அருகில்தான் ஹோட்டல். அந்த அதிகாலை நேரத்திலும் அங்கே ஒரே கூட்டம். பழையது சாப்பிட்டுவிட்டு நெசவாளர்கள் தறிக்குப் போகிற காலம் மலை ஏறி விட்டது. இப்போது காபியோ டீயோ இருக்கிற வட்டாரம் அல்லவா? ஹோட்டலில் எந்த சாமானும் ‘நிறையக்’ கிடைக்கும். கூஜா நிறையக் காபி கேட்டால் எப்படி தரமாகக் இருக்கும்? இரண்டு இட்லி பார்சல் கட்டிக் கொண்டு ஒரு டம்ளர் சாம்பார் கேட்டால் இட்லி எப்படி சுகப்படும்? ஹோட்டல்காரரை எப்படிக் குறை சொல்ல முடியும்?

“ஏது ராஜம், இந்தப் பக்கம் புதுசா? நீ பஞ்சாமி ஹோட்டல் குத்தகை இல்லை?” என்று அக்கறையாக விசாரித்தான் சப்ளையர் சீமா.

”அட சீமாவா? நீ எப்போ இங்கே வந்தே? பஞ்சாமி ஹோட்டலை விட்டு எத்தனை நாளாச்சு?”

“ஒரு வாரம் ஆச்சு…”

சீமா, புரோகிதம் ராமசாமி அய்யங்காரின் மகன். அவனுக்குப் புரோகிதம் பிடிக்கவில்லை; படிப்பும் வரவில்லை. சினிமா ஸ்டாராக வேண்டும் என்ற கனவுடன் ஹோட்டல் சப்ளையராக வாழ்க்கை தொடங்கினான். இரண்டு மாதம் சேர்ந்தாற்போல் அவனை ஒரு ஹோட்டலில் காண முடியாது; ஹோட்டலை மட்டும் அல்ல, ஊரும் மாற்றிக் கொண்டிருப்பான், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, மதராஸ் என்று. அவனிடம் ஒரு நல்ல குணம்; ஹோட்டல் வாடிக்கையாளர்கலை மிகவும் நயமாய் விசாரித்து சப்ளை செய்வான். அவர்கள் ஒன்று கேட்டால் இரண்டாய்த் தருவான். பில்லையும் குறைத்துப் போடுவான். அப்புறம் அவர்களை ஒரு வாரம் பத்து நாளைக்கொரு முறை தனியாகச் சந்தித்து சினிமாவுக்குச் சில்லறை வாங்கிக் கொள்வான். இதனால் இரு தரப்புக்கும் ஆதாயம்; இதனால் எந்த ஹோட்டல் முதலாளியும் கெட்டுப் போனதாய்த் தெரியவில்லை.

“சீமா, அங்கே என்ன அரட்டை அடிக்கிறே?” என்று பெட்டியடியில் இருந்தவாறு குரல் கொடுத்தார் ஹோட்டல்காரர்.

“சூடா ஒரு காபி…”

“இட்டிலி சூடா இருக்கு. கொத்சு ஏ ஒன். கொண்டு வர்றேன்” என்று சீமா விரைந்தான்.

இரண்டு இட்லி, ஒரு நெய் ரவா, டிக்ரி காபியோடு எழுந்தான் ராஜம். அம்மாவுக்கும் சாரங்கனுக்கும் பார்சல் கட்டிக் கொண்டான். சீமாவின் தயவால் இரண்டு டம்ளர்கள் வழிய கொத்சும், பில்லில் இருபத்தைந்து பைசாவும் ஆதாயம்.

“இதுக்குத்தாண்டா ராஜா உன் கையிலே டம்ளர் கொடுத்தேன்!” என்று சாரங்கன் பாராட்டினான்.

அம்மாவைச் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று ராஜத்துக்கு ஆசை.

“அம்மா கொத்சு கொண்டு வந்திருக்கேன். ரொம்ப ஜோராயிருக்கு. நம்ம சீமாதான் டம்ளர் வழியத் தந்தான்….” என்றவாறு அவளிடம் நீட்டினான். அவள் வாங்கிக் கொள்ளவில்லை.

“கொண்டு வந்துட்டியா? எதிர் வீட்டுக்காரிக்குக் கொடு, போ!”

ராஜம் அவள் முகத்தைப் பார்த்தான். அந்த முகம் போயிருந்த போக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை; இந்தப் பீடையை யாரால் திருப்தி செய்ய முடியும்? அவனைத் திட்டட்டும்; இரண்டு அடி வேண்டுமானாலும் அடிக்கட்டும். எதிர் வீட்டுக்காரி பங்கஜத்தை ஏசுகிறாளே, என்ன நியாயம்? இவளிடம் யார் நியாயம் பேச முடியும்?

இவள் தொலைய வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி. இவளாகத் தொலைய மாட்டாள். நான் இவளைத் தொலைத்து தலை முழுக வேண்டும்.

“சாம்பார் கேட்டியேன்னு கொண்டு வந்தேன். வேண்டாம்ன்னா உன் இஷ்டம்… குள்ளி, பல் தேய்ச்சியா? தறிக்குப் போகலாமா?”

குள்ளிக்கு ஒன்பது வயசு இருக்கும்; கடைக்குட்டி. அண்ணன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். ராஜம் மாடத்திலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஐந்தரை.

அம்மா சளைக்கவில்லை. “நீ வாங்கிட்டு வந்ததை நான் ஏண்டா தொடறேன்? உன் பெண்டாட்டிகிட்டே கொண்டு போய்க் கொடு…”

“ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்படிப் பேசினா.. நல்லா இருக்காது!”

“நல்லா இல்லாவிட்டால் என்ன ஆயிடும்? ரெண்டு இட்டிலி வாங்கிட்டு வாடான்னா எத்தனை பேச்சு பேசுறே? நாய் என்கிறே; குரங்கு என்கிறே. பெத்தவளுக்கு வாங்கித் தரணும்னா காசு கிடைக்கலே. வரப் போறவளுக்கு ஜரிகைச் சேலை, தாம்புக் கயிறு சங்கிலி, பவுன் தாலி எல்லாம் செஞ்சு பெட்டியிலே பூட்டி வச்சியிருக்கியே. எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே? அதுக்கெல்லாம் எங்கேருந்து பணம் வருது?”

ராஜத்துக்கு வயிற்றில் மாட்டுக் கொம்பால் குத்துவது போலிருந்தது. “ஏண்டீ, திருட்டுத்தனமா என் பெட்டியைத் திறந்தா பார்த்தே? என்னைக் கேட்காமே என் பெட்டியை எப்படித் திறந்தே?” என்று கத்தினான்.

“என் வீட்லே இருக்கிற பெட்டியை நான் திறக்கிறதுக்கு உன்னை எதுக்கடா கேட்கணும்? நாக்கை அடக்கிப் பேசு. யாரைத் திருடி என்கிறே? இன்னொரு தடவை சொல்லு. அந்த நாக்கை இழுத்து வெட்டிடுவேன்.”

தன்னுடைய பெரிய ரகசியம் வெளிப்பட்டுவிட்டதால் ராஜத்துக்கு மருள் வந்தாற் போலிருந்தது. அவன் பங்கஜத்துக்காக – வரப்போகும் மனைவிக்காக – ஜரிகை புட்டா சேலை – அவன் கைப்பட நெய்தது; முதலாளியிடம் அடக்க விலைக்கு வாங்கி வைத்திருந்தான். பெரிய தாலியும் சிறிய தாலியும் தட்டி வைத்தான். ஒரு சங்கிலியும் தயார் செய்தான். யாருக்கும் தெரியாமல் பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்திருந்தான். கலியாணம் என்று ஆரம்பித்த பிறகு எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தேட முடியுமா? சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்தான். அவன் இல்லாத நேரத்தில் அம்மா கள்ளச் சாவியில் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறாள். என்ன துணிச்சல்!

“ஏண்டி, என் பெட்டியைத் திறந்தே?” என்று அவன் அம்மாவின் இரண்டு கைகளையும் பிடித்தான். ஆத்திரத்தோடு ஓர் இருட்டு வயிற்றிலிருந்து பாய்ந்தாற்போல ஒரு சோர்வு.

“சீ, கையை விடுடா நாயே!” என்று கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள் அவள். ”தாலி கட்டின பாடில்லே; அதுக்குள்ளே இந்த ஆட்டம் போட்றியா? நான் சொல்றதை முடி போட்டு வச்சுக்கோ. அந்த மேனாமினுக்கியைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. அவ இந்த வீட்டிலே கால் வச்சா கொலை விழும்; ஆமா, கொலைதான் விழும்!”

ராஜத்தின் வாயை அம்மாவின் சொற்கள் மூடி விட்டன போலும். அவன் திணறியவன் போல் பேசினான்; “நான் யாரையும் கட்டிக்கலே. குள்ளி, என்ன வேடிக்கை பார்க்கிறே? தறி மேடை ஏறு.”

அவன் அவளுக்குப் பின்னாலேயே மேடை ஏறினான். நாடாவைக் கண்களில் ஒத்தி, சாமி கும்பிட்டபின் வேலையைத் தொடங்கினான். தங்கை கரை கோத்துக் கொடுத்து துணை செய்ய அவன் நெய்யத் தொடங்கினான். நாடா இப்படியும் அப்படியுமாக ஓடி வெறும் இழைகளாக இருந்த பட்டைச் சேலையாக்க ஆரம்பித்தது. ராஜம் கால் மாற்றிக் கட்டையை மிதிக்கும்போது ஓயிங் என்றொரு சத்தம்; அதைத் தொடர்ந்து அவன் பலகை அடிக்கும் சத்தம். குள்ளி பேசவில்லை. அம்மா ஓய்ந்துவிட்டாளா? அவள் ஓய்வாளா? ஒன்று அவன் சாக வேண்டும். அல்லதுஅவள் சாக வேண்டும். அதுவரை ஓய மாட்டாள்.

பெற்றவள் ஒருத்தி இப்படியும் இருப்பாளா? அம்மாவைத் திட்டுவதும் அடிப்பதும் பாவமாம். அவள் மட்டும் ஊர் உலகத்தில் இல்லாத விதத்தில் நடக்கலாமா? பன்றிக் குட்டி போல் போட்டதைத் தவிர இவள் வேறு என்ன செய்து விட்டாள்?


அப்பாவுக்குப் பேராசை. என்றைக்காவது ஒரு நாள் பணக்காரனாகலாம் என்று கனவு கண்டார். உழைத்துச் சிறுகச் சிறுக முன்னேற முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டப் பரீட்சை செய்கிறார்கள், அல்லவா? அப்பா குழந்தைகளை அதிர்ஷ்டப்பரீட்சையாகப் பெற்றார். ‘இந்தக் குழந்தையின் ஜாதகம் சுகப்படவில்லை. அடுத்த குழந்தை நல்ல நேரத்தில் பிறக்கும் பார்!’ என்று அடுத்த குழந்தைக்குத் தயார் ஆவார். எதாவது ஒரு குழந்தைக்கு யோக ஜாதகமாய் அமைந்து, அதன் மூலம்தான் பணக்காரன் ஆகிவிடலாம் என்று அவர் எண்ணம்.

அம்மா அப்படி நினைக்கவில்லை. தான் பெற்றுப் போட்ட புண்ணியத்துக்குப் பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போட வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெண் குழந்தைகளுக்கும் அந்த கதிதான்.

ஐந்தாவது வயதில் அவன் கையில் நாடா தந்தார்கள். இன்றுவரை – அவனுக்கு இப்போது இருபத்தைந்து வயது – நாடா அவனை விடவில்லை. ஒவ்வொரு தம்பி தங்கையின் கதி இதுதான். மூன்று தங்கைகள் கல்யாணம் செய்து கொண்டு அம்மாவிடமிருந்து தப்பி விட்டார்கள். கடைசி இரு தங்கைகளும் – குள்ளிக்கு ஒன்பது வயது, ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு. – நெசவு வேலை செய்கிறார்கள். நாலு தம்பிகளும் தனியாக இருக்கிறார்கள். அம்மாவிடம் பணம் கொடுத்துவிட்டு இரண்டு வேளை சாப்பிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு அம்மாவால் அதிகத் தொல்லை இல்லை.

சகதியில் சிக்கிக் கொண்டவன் அவன் தான். அவனும் தனியே போயிருப்பான். தோதாகத் தறி மேடை உள்ள இடம் வாடகைக்குக் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் தறி மேடைக்கு மட்டும் இரண்டு ரூபாய் வாடகை; இப்போது ஏழு ரூபாய் கேட்கிறார்கள்; அதற்கும் மேடை கிடைப்பதில்லை. மூன்று தங்கைகளில் கல்யாணத்துக்குப் பட்ட கடனை அடைக்க வேண்டும்; இரண்டு தங்கைகள் திருமணத்துக்கும் ஜாக்கிரதை செய்து கொள்ள வேண்டும். தம்பிகளுக்கு அந்தப் பொறுப்புகளோ கவலையோ இல்லை. அவன் அப்படி இருக்க முடியுமா? அம்மாவோடு இருந்தால் சிக்கனமாக இருக்கலாம் என்றுதான் அவளோடு தங்கினான்.

இப்படிப் பொறுப்புக் கட்டிக் கொண்டு ஆசைப்பட்டதனால்தான் அம்மாவிடம் வசமாய்ச் சிக்கிக் கொண்டான். அவன் என்ன செய்தாலும், அம்மா எதிர்க்கட்சி. பங்கஜத்துக்கு என்ன குறைச்சல்? பெற்றவர்கள் இருக்கிறார்கள்! நாலு அண்ணன் தம்பிகளுக்கு நடுவில் ஒரே பெண்; தறி வேலை தெரியும்; வீட்டு வேலைகளும் தெரியும். சினிமா ஸ்டார் போல இல்லாவிட்டாலும் கச்சிதமாக இருப்பாள். அவளைப் பெற்றவர்கள் அவனுக்குப் பெண் தர முன்வந்தார்கள். அவனுடைய முதலாளியிடம் பேச்சு கொடுத்தார்கள். முதலாளி ஜாதகப் பொருத்தம் பார்த்தார். ‘கொடுக்கல் வாங்கல்’ எல்லாம் அவர்தான் பேசி முடித்தார்.

இவ்வளவு ஆன பிறகு ‘எனக்கு இந்தப் பொண்ணு பிடிக்கல்லே, அவளைக் கட்டிக்கக் கூடாது’ என்கிறாளே, இது அக்கிரமம் இல்லையா? ஆரம்பத்தில் அவளிடம் கேட்கவில்லை என்ற குறை; அவளிடம் பேசியிருந்தால் தனியாக ஐம்பது, நூறு கேட்டு வாங்க்யிருப்பாள். அது கிடைக்கவில்லை என்று ஆத்திரம். அதற்காகப் பங்கஜத்தைப் பற்றி கேவலமாய்ப் பேசுகிறாளே, இவள் உருப்படுவாளா? பங்கஜம் எதிர் வீடுதான்; ஆனால் அவன் அவளைத் தலை தூக்கியாவது பார்த்ததுண்டா? அல்லது அவள் இவன் இருக்கும் திசைப்பக்கமாவது திரும்பி இருப்பாளா? அந்த உத்தமியைக் கரிக்கிறாளே இந்தச் சண்டாளி, இவள் வாயில் புழு நெளியுமா, நெளியாதா? அப்பாவைக் கை தூக்கி அடித்த இந்த ராட்சசிக்குப் பங்கஜம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

எண்ணங்களோடு போட்டியிட்டுக்கொண்டு நாடா பறந்தது. இந்தக் குழப்பத்திலும் ஓர் இழைகூட அறவில்லை; அண்ணனுடைய மன வேகத்தைப் புரிந்து கொண்டு குள்ளியும் நாடா கோத்துக் கொடுத்தாள்.

முதலாளி அவன் பக்கம்; அவருக்கு அவன் மேல் ஓர் அபிமானம். ஒரு நம்பிக்கை. எதற்கெடுத்தாலும் அவனைக் கூப்பிடுவார். அவருடைய உதவி இருந்ததால்தான் அவன் மூன்று தங்கைகளின் திருமணக் கடனைத் தீர்க்க முடிந்தது. தன் கல்யாணத்துக்காகவும் சேலை, செயின், தாலி எல்லாம் தயார் செய்ய முடிந்தது.

அம்மாவுக்கு தெரியக்கூடாது என்றுதான் அவன் அவற்றைப் பெட்டியில் பூட்டி வைத்தான். அந்தப் பெட்டியைக் கள்ளத்தனமாய்த் திறந்து பார்த்திருக்கிறாளே, என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்?

அவனுக்குப் படபடவென்று கோபம் மூண்டது. அதே நேரத்தில் அம்மாவின் குரல், “குள்ளி, ஓவ் குள்ளி, ஏட் ஆவ்!” (குள்ளி, அடி குள்ளி. இங்கே வா!) என்று கூப்பிட்டது.

சிறுமியான குள்ளிக்கு இருதலைக் கொள்ளியாக இருந்தது. அவளுக்கு அம்மாவும் வேண்டும். அண்ணாவும் வேண்டும்.

“அண்ணா, அம்மா கூப்பிட்றா” என்று நாடாவை நிறுத்தினாள்.

“வேலை நேரத்தில் ஏன் கூப்படறா?”

“காய்கீ” (என்னவோ)

“இரு புட்டா முடிச்சுட்டுப் போகலாம்”

அதற்குள் அம்மாவின் குரல் மறுபடியும் வீறிட்டது. :ஓவ் ஃபொ வர்தே காணும் பொஃடர்னி? அவிஸ் கீந் ஹீ?” (அடி கூப்பிடறது காதிலே விழல்லே? வர்றியா இல்லையா?)

அதற்கு மேல் சோதனை செய்யக் குள்ளி தயாராக இல்லை. நாடாவை அப்படியே போட்டுவிட்டு, எழுந்து தறி மேடையிலிருந்து கீழே குதித்து அம்மாவிடம் ஓடினாள்.

சினம் பீறிட்டுக் கொண்டு வந்தது ராஜத்துக்கு. ஆனால் சினத்தில் தலையில் ஓர் ஓய்ச்சல் இருந்தது. சுருட்டிக் கொண்டு படுத்துத் தூங்கிவிட வேண்டும், எழுந்திருக்கவே கூடாது என்று தோன்றியது. சண்டை போடுவதற்கான தெம்பே இல்லை. உடல் நரம்புகள் மக்கிவிட்டார் போல் இருந்தது. சாம்பார்ச் சண்டை கல்யாணச் சண்டையாக முடிந்தது. எங்கே முடிந்தது? இன்னும் கிளை விட்டுக் கொண்டிருக்கிறதே!

அவன் மௌனமாய்த் தலை குனிந்து இழைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

சமையலறை பத்தடி தூரத்தில்தான் இருந்தது. அம்மா குள்ளீயை அதட்டுவது தெளிவாய்க் கேட்டது.

“ஏண்டை, நான் கூப்பிட்டது காதிலே விழல்லே? ஏண்டி இத்தனை நேரம்?”

”சத்தத்திலே கேக்கல்லே.”

“நீ இனிமே இந்தத் தறிக்குப் போக வேண்டாம். புதுத் தெரு சென்னப்பன் நூறு ரூபா பணம் தர்றேன்னான். பழையது கொட்டிக்கிட்டு அங்கே போ.”

குள்ளியாலே அந்த அநியாயத்தைப் பொறுக்க முடியவில்லை. “அண்ணன் தறியிலே இன்னும் ஒண்ணே முக்கால் முழம் இருக்கு. முதலாளி அவசரமா சேலை வேணும்னு…”

”அதெல்லாம் உன்னை யார் கேட்டா? பேசாம பழையது கொட்டிக்கிட்டுத் தொலை!” என்னும் போது குள்ளியின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜம் தறி மேடையை விட்டுக் கீழே இறங்கினான்.

“ஏண்டி, என்ன சொல்றே?”

“புதுத் தெரு சென்னப்பன் குள்ளிக்கு நூறு ரூபா முன் பணம் தர்றேன்னான். அவளை அங்கே போகச் சொன்னேன்.”

கரை கோத்துக் கொடுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இப்போது நல்ல கிராக்கி. ஐம்பதும் நூறும் முன்பணம் தந்து நெசவாளர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும்.

“அவளை அங்கே அனுப்பிவிட்டா நான் என்ன செய்யறது?”

”நீ வேறே ஆளைப் பார்த்துக்கோ. குள்ளிதான் வேணும்னா நூறு ரூபா முன் பணம் கொடு.”

ராஜத்துக்கு அவளுடைய தந்திரம் புரிந்தது. களவாணித்தனமாய்ப் பெட்டியைத் திறந்து பார்த்தாளா? பெட்டியில் தாலி, சேலை செயினோடு நூறு ரூபா பணம் இருப்பதைக் கண்டு விட்டாள். அந்தப் பணத்தைப் பறிக்கத்தான் இந்தக் குறுக்குவழியில் போகிறாள்.

“மூணு பேருக்கும் நான் உழைச்சுப் போடறேன். குள்ளி வெளியிலே வேலை செய்வாளா?”

“நீ உழைச்சி எங்களுக்குப் போட வேணாம். முன்பணம் நூறு ரூபா கொடுத்தாத்தான் குள்ளி உன்னோடு வேலை செய்வாள். ராஜாமணிக்கு வயசாச்சு. அவ கல்யாணத்துக்கு நான் தயார் செய்யணும். அவளுக்கு ஒரு தோடு வாங்கப் போறேன்.”

அவன் கல்யாணத்துக்குத் தயார் செய்து கொள்கிறான் அல்லவா? ஏட்டிக்குப் போட்டியாக ராஜாமணியின் கல்யாணத்துக்குத் தயார் செய்கிறாளாம்! ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு; கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? அப்படியே நல்ல இடத்தில் கேட்டாலும் அவனுக்கல்லவா அந்தப் பொறுப்பு!

மூன்று தங்கைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டுக் கடன் காரனாய்க் கஷ்டப்படுகிறவன் அவன் அல்லவா? இவள் என்ன செய்தாள்? ராஜாமணிக்குத் தோடு வாங்கவா பணம் கேட்கிறாள்? அவனிடமுள்ள பணத்தைக் கறக்க வேண்டும்; அவனுக்கு மணமாகாமல் இடைஞ்சல் செய்ய வேண்டும்; அவன் வேலை செய்ய முடியாதபடி தொல்லை தர வேண்டும். இதுதான் அவள் எண்ணம்.

பெற்றவளுக்கு இவ்வளவு கெட்ட மனசு இருக்குமா? ராட்சசி, ராட்சசி!

அப்பா இருந்தவரை எலிக்குஞ்சு போல இருந்தவள், அப்பா போனவுடனே பெருச்சாளி போல் ஆகிவிட்டாள். பிள்ளைகளும் பெண்களும் சம்பாதித்துப் போடப் போட இவளுக்குச் சதை கூடிக் கொண்டே போகிறது. ஏன் கூடாது? தறிவேலை செய்து கொடுக்கக் கூட இவளுக்கு உடம்பு வளைவதில்லை; கூலி வாங்கிக்கொண்டு அவனிடமே பாதி வேலை வாங்கிவிடுகிறாள். நாள் முழுவதும் கொறிக்கிற கொழுப்புதான் இவளை இப்படியெல்லாம் பேச வைக்கிறது, செய்ய வைக்கிறது. இந்தத் திமிரை ஒடுக்க வேண்டும். அப்பா செத்தபோது ஊருக்காக ஒப்பாரி வைத்தாள். இவள் உடம்பு கரைய ஒப்பாரி வைத்துக் கதறிக் கதறி அழ வேண்டும்.

அவனுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களில் சினமே இல்லை. “ராஜாமணி கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? நான் செய்ய மாட்டேனா?”

“செய்யறவங்க ரொம்ப பேரைப் பார்த்தாச்சு. கல்யாணத்துக்கு முந்தியே தலை கீழா நடக்கிறே. கல்யாணம் ஆனப்புறம் யார் புத்தி எப்படி இருக்குமோ, யார் கண்டா?”

“பெட்டியிலே இருக்கிற பணத்தைப் பார்த்துட்டே. அதைப் பறிமுதல் செய்யறவரை உன் மனசு ஆறாது, இல்லியா?”

“நான் உன்னை யாசகம் கேட்கல்லே! என் மவ வேலை செஞ்சி கழிக்கப் போறா!”

“நான் தர மாட்டேன்.”

“நான் கட்டாயப்படுத்தல்லியே! குள்ளி புதுத்தெருவுக்குப் போவா..”

“நீயே எடுத்துக்கோ, இந்தா!” என அவன் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த பெட்டிச் சாவியை அவளிடம் எறிந்தான். சட்டையை மாட்டிக் கொண்டான். கண்ணாடியில் முகம் பார்த்துப் பவுடர் போட்டுக் கொண்டான். கிராப்பை ஒழுங்கு செய்து கொண்டான். அவனுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் செத்து அழுகி வெளிவருவதாகவும், நாறுவதாகவும் அவனுக்குத் தோன்றியது.

“பெட்டியிலே நூறு ரூபா இருக்கு. எடுத்துக்கோ, சேலை கட்டிக்கோ, செயின் போட்டுக்கோ, போ… போ…”

அவளிடம் பேசுவதற்குத் தன்னிடம் சொற்களே இல்லை, எல்லாம் தீர்ந்து விட்டன என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பதில் பேசாமல் கீழே குனிந்தவாறு நடந்தவன் தயங்கி நின்றான்.

“காய்ஃதா?” (என்ன அண்ணா) – என்றவாறு அவள் ஓடி வந்தாள்.

”ராஜாமணிக்கிட்டே நான் அஞ்சுரூபா கடன் வாங்கினேன். அவ சாப்பிட வார்றப்போ ஒரு ரூபா சேர்த்து அவகிட்ட கொடுத்துடு.”

”ஏழு ரூபா எதுக்கு அண்ணா?”

உனக்கு ஒரு ரூபா, பிரியப்பட்டதை வாங்கித் தின்னு. அம்மாகிட்ட காட்டாதே.”

‘ஒரு ரூபா எதுக்கு அண்ணா?”

“வச்சுக்கோ, வச்சுக்கோ”

சொல்லிக் கொண்டே அவன் நடந்தான். தலையில் கொதியாய்க் கொதித்தது. நெஞ்சில் எரியாய் எரிந்தது. பரபரவென்று வீட்டை விட்டு வெளியே வந்தான். கிழக்கே நடந்தான்.

மாதப்பா சந்தைத் தாண்டி கீழ்க் கடலங்குடித் தெருவை அடைந்தான். உடம்பில் சொல்லி முடியாத ஓய்ச்சல், யாரோ கழுத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு போவது போல் இருந்தது. எல்லா இரைச்சல்களும் அடங்கி ஒரே ஓர் இரைச்சல் கேட்டது. நாய் குரைக்கும் சத்தம். நாய் குரைத்தபடி அவனைக் கடிக்க வருகிறது. அவன் பயந்து கொண்டு ஓடுகிறான். சீ, கனவில் வந்த நாய் உண்மையில் துரத்துமா? கடிக்க வருமா? இதென்ன பைத்தியக்காரத்தனம்?

அவன் நடந்து கொண்டிருந்தான்.

மகாமகக் குளத்தை நெருங்கியதும் அவன் நின்றான். இந்தக் குளத்தில் விழுந்து செத்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்கிறார்கள். போன மாதம் கூட அவன் தெருவில் இருந்த கிழவி இதில் விழுந்தாள்; பல பேர் விழுகிறார்கள். அவனும் விழுந்தால் என்ன? தண்ணீரிலே விழுந்த பிணம் என்பார்கள். அவன் அதைப் பார்த்திருக்கிறான். அவன் குளத்தில் விழுந்து செத்து, புசுபுசுவென்று பலூன் போல மிதந்தால், அம்மா அடையாளம் கண்டு கொள்வாளா? பயப்படுவாளா? அழுவாளா?

ஆனால், அவனுக்கு நீந்தத் தெரியும். குளத்தில் விழுந்தால் லேசில் உயிரை விட முடியாது. அவனுக்குத்தான் கஷ்டம்.

அவன் தொடர்ந்து நடந்தான். மரணத்துக்கு அஞ்சி ஓடுகிறவன் போல வேர்க்க விறுவிறுக்க நடந்தான். வெறி நாய் மறுபடியும் துரத்துகிறது. நிஜ நாய் அல்ல. கனவு நாய் தான். ஆனாலும் அது கடிக்க வருகிறது. அது போதாதா? பக்கத்து வீட்டுச் சேவல் ஐயோய்யோ என்று கத்துகிறது.

அவன் விழித்தபடி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். மணி ஒன்பது நாற்பது. ஒன்பது ஐம்பதுக்கு ஒரு ரயில் வருகிறது. ரைட்!

அவன் தண்டவாளத்தோடு நடந்து கொண்டே இருந்தான். இரண்டு பர்லாங்கு நடந்திருப்பானா? எதிரில் ரயில் வருவது தெரிந்தது. ‘அப்பாடா’ என்று ஓர் உற்சாகம் உண்டாயிற்று. ரயிலுக்கு எதிரில் ஓடினால், டிரைவர் ரயிலை நிறுத்திவிடுவான் என்று அப்போதும் அவனுக்கு ஜாக்கிரதை இருந்தது. ஆகையால் அவன் ஒதுங்கியே நின்றான்.

அரசலாற்றை நெருங்கியதும் ரயில் ‘வர்ர்ர்ர்ர்ர்றேன்!’ என்று ஊதியது. அவன் சிரித்தான். அது பாலத்தைத் தடதடவென்று கடப்பதற்குள், அவனுக்கு அவசரம். நூறுமுறை விழுந்துவிட்டான். மனதிற்குள்.

எஞ்சின் அவனைத் தாண்டியது. டிரைவர் அவனைப் பார்த்துச் சிரித்துக் கையை ஆட்டினார். நெருப்புச் சூடு அவனைக் கர்றென்று கிள்ளியது. நாய் குரைத்தது. சேவல் கூவியது. அம்மா கத்தினாள். ராஜம் ஓட்டப் பந்தயத்துக்கு நிற்பவன் போல வலது காலை முன்னெடுத்து வைத்தான்.

”தூ ரொஃடி!” (நீ அழுது அழுது சாகணும்!) என்று பலமாய்க் கத்திக் கொண்டே இரண்டு பெட்டிகளுக்கிடையில் பாய்ந்தான்.

ஆஸ்பத்திரியிலிருந்து சடலத்தை இரவு பத்து மணிக்குத்தான் கொடுத்தார்கள். பிரேதத்தை வீட்டுக்குள் கொண்டு போகக் கூடாது என்பதற்காகத் திண்ணையிலேயே ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். ரயில் டிரைவர் சந்தேகப்பட்டுப் பிரேக் போட்டதால் உயிர் போகும் அளவுக்குத் தலையின் பின்பக்கம் அடிபட்டதைத் தவிர ராஜத்துக்குப் பெரிய நஷ்டம் ஏதும் இல்லை. ஆஸ்பத்திரிக்காரர்களும் நறுவிசாக வேலை செய்திருந்தார்கள். ஆக, ராஜத்தின் உடம்பு பார்ப்பதற்குப் பயங்கரமாக இல்லை. கழுத்தில் ரோஜா மாலையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தது.

அம்மா அழாமல் இருக்க முடியுமா? கதறிக் கதறி அழுதாள். இந்த தெருவாசிகள் மட்டும் அல்ல, பல தெருக்களிலிருந்து மக்கள் கூட்டமாக வந்து பார்த்துக் கலங்கினார்கள்.

எதிர் வீட்டில்தான் பங்கஜம் இருந்தாள். அவளுடைய பெற்றோர் எதிர் வீட்டுக்குப் போய்விட்டதால் அவள் தன் சகோதரர்களோடு இருந்தாள்.

“ஹய்யா, தூஜீதோ?” (ஏண்டி, நீ போய்ப் பார்க்கவில்லையா?) என்று அண்ணன் கேட்டான்.

“பார்க்காமே என்ன? பைத்தியக்காரப் பிள்ளை! கலியாணம் ஆனப்பறம் இந்த வேலை செய்யாமல் இருந்தானே!” என்ற பங்கஜம் போர்வையால் தலையையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.

குளிர் மட்டும் அல்ல; கும்பகோணத்தில் கொசுத் தொல்லையும் அதிகம். 


தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை
கதையாசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்

கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 3,837



http://www.sirukathaigal.com/குடும்பம்/தெரியாத-அப்பாவின்-புரியா/


கலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும்.

என் மகனைப் பற்றி நானே புகழ்ந்து பேசினால், ‘கலியாணம் ஆகாத பையன்; குறைத்துப் பேசினால் மார்க்கெட் ஆகுமா, என்று பெண்ணைப் பெற்றவர்கள் நினைக்கலாம். ‘காக்காயின் பொன் குஞ்சு’ என்று பரிகாசம் செய்கிறவர்களும் இருப்பார்கள். என் மகனை நான் இகழ்ந்தால் ‘பிள்ளையைப் பெறத் தெரிந்ததே தவிர, வளர்க்க தெரியவில்லையே, ஐயா’ என்று என்னையே சாடுவார்கள். ஆகையால், பொதுவாக, அவனைப் பற்றி என் அபிப்பிராயத்தைச் சொல்லிவிடுகிறேன்.

அவன் பெயர் சந்திரன்; என்னுடைய மூத்த மகன். வயது இருபத்திரெண்டு முடிந்துவிட்டது. சட்டப் பரீட்சையில் தேறி, பிராக்டீஸ் செய்யாமல் வீட்டோடு இருக்கிறான். என்னோடு வியாபாரத்தையும் நில புலங்களையும் கவனிக்கிறான். சட்டக் கல்லூரியில் சேரும்வரை வக்கீல் ஆக வேண்டும் என்று ஒரே ஆத்திரமும் ஆவலுமாக இருந்தான். கல்லூரியில் சேர்ந்ததும் அவனுக்குக் கதை எழுதும் பைத்தியம் பிடித்தது. படித்தபடியே கதைகளும் கட்டுரைகளும் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினான். (சில பல என்று கூடச் சொல்லலாம்) பத்திரிகைகளில் அவை வெளியாயின. வக்கீல் பட்டம் பெற்று வெளியே வந்ததும் அவனுக்கும் வக்கீல் தொழில் பிடிக்க வில்லை. பத்திரிகை நடத்துகிறேன் என்று என்னிடம் அனுமதி கேட்டான். அனுமதி கேட்பதென்ன, ‘ஆரம்பிக்கட்டுமா?’ என்று கேட்டான், ஆரம்பித்து விட்டான். அதுவும் ஒரு தொழில்தானே என்று நானும் பேசாமல் இருந்தேன்.

அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் நான் குறுக்கிடுவதில்லை. அவன் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை. தவறு செய்யமாட்டான் என்று பத்திரிகை நடத்தப் பணம் கொடுத்தேன். ‘ராகம்’ என்ற அந்தப் பத்திரிகை அழகாகத்தான் இருந்தது. மற்ற பத்திரிகைகள் எல்லாம் அதை மரியாதையுடன் வரவேற்றன. அவை மலை உயரத்துக்கு என் மகனைப் போற்றிப் பாராட்டி வாழ்த்தியதைக் காண எனக்கு மிகவும் பெருமையாகத்தான் இருந்தது.

ஆறு மாதங்கள் கழித்துக் கணக்குப் பார்த்தேன், ஆறுமாத இலக்கியத்தின் விலை ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு காட்டியது. எனக்குப் ‘பக்’ கென்றது.

அவனைக் கூப்பிட்டு, ”சந்திரா, பத்திரிகை நன்றாக நடக்கிறதா?” என்று கேட்டேன்.

”இதோ பாருங்கள் அப்பா” என்று அன்று தபாலில் வந்த இருபது, முப்பது கடிதங்களை என்னிடம் நீட்டினான் அவன்.

”அது சரி, கணக்குப் பார்த்தாயா?”

”அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல” என்றான் அவன் உணர்ச்சியோடு.

”லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா? அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங் களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன்.

கூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்?”

”பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே? ‘ராகத்’துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே?”

”நீ கதை கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு எல்லாம் அனுப்பு. மார்க்கெட்டில் பெயர் உண்டாகிவிடும். பிறகு பத்திரிகை ஆரம்பம் செய், தொழில் எப்படி நடக்கிறது பார்,” என்றேன் ஆறுதலுக்கு.

”இலக்கியம் வேறே, தொழில் வேறே; இலக்கியம் தொழில் ஆக முடியாது; சரி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, ‘ராகம்’ முடிந்துவிட்டது.”

சொன்னபடியே செய்துவிட்டான் அவன். அவனுக்கு வருத்தமாக இருந்ததா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. என்னோடு வியாபாரத்தை கவனித்துக் கொண்டே பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்து, பத்து இருபது என்று சம்பாதிக்கத் தொடங்கினான்.

மொத்தத்தில், என் அபிப்பிராயத்தில், என் பையன் நல்லவன். என் சொல்லைத் தட்டமாட்டான் என்பதில் மட்டும் நான் இப்படிச் சொல்லவில்லை. பள்ளியிலும் கல்லூரிகளிலும் ஏராளமாக மார்க்குகள் வாங்கித் தேறியதோடு, வருஷம் தவறாமல் நன்னடத்தைப் பரிசும் அவனுக்குத்தான் கிடைக்கும். சிகரெட், பொடி, புகையிலை வகையறா தெரியாது. சீட்டாட்டத்தில் ஜாதிப் பிரிவினை கூடத் தெரியாது. பெண்களுடன் சங்கோசம் இல்லாமல் பழகுவான். நானும் பயப்படாமல் பழகவிட்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லையே? ஆனால் அவன் வேலியைத் தாண்டியது கிடையாது. அப்படிப் போனதாக அபவாதம் கூட இல்லை. படித்த பையனின் லட்சணம் ஒன்றும் அவனிடம் காணோமே என்று நான் கூட ஆச்சரியப்படுவது உண்டு. நான் கண்டிக்கும்படியாக அவன் ஒன்றும் செய்யவில்லையே என்று எனக்கு அவன்மேல் குறை; எனக்கு கண்டிக்கத் தெரியவில்லை என்று என்மேல் அவனுக்கு குறை! அவனும் நானும் பழகுவதைப் பார்த்தால், அப்பனும் பிள்ளையுமாகத் தோன்றாது. இரண்டு நண்பர் களாகத்தான் தோன்றும்.

இப்பேர்பட்ட பிள்ளை, கல்யாண விஷயத்தில் மட்டும் என்னிடம் மனம் விட்டுப் பேசாமல் மர்மமாக இருப்பதன் காரணம் எனக்கு பிடிபடவில்லை. அவன் பையன்; நாற்பது வயதில் கூட மணம் செய்து கொள்ளலாம். ஆனால் மகாலட்சுமி பெண்; அவனைக் கலியாணம் செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறவள். அவளை ஊறுகாய் போட முடியுமா?

மகனுக்கு என்னதான் சுதந்திரம் கொடுத்தாலும் தகப்பனின் உரிமையை மறந்துவிட முடிகிறதா? நாள் ஆக ஆக எனக்கும் பொறுமை போய்விட்டது. அவனைக் கண்டித்துக் கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அதற்கு ஒரு நாளும் குறித்துக் கேட்டேன்.

அன்று விடுமுறை நாள். காலையில் எனக்கு முன்னால் அவன் எங்கோ போய்விட்டான். மத்தியானம் சாப்பிட வரட்டும் என்று கோபமாக இருந்தேன்; ஆனால், இரவு ஏழு மணிக்கு, அதாவது நான் கோபித்துக் கொள்வதற்கு தயாராக இல்லாத ஒரு நேரத்தில் அவன் வந்து சேர்ந்தான்.

கோபம், என் இயற்கைக்குப் பொருந்தாத ஓர் உணர்ச்சி. கோபம் வந்தால் முகம் கடுமையாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். முகத்தை ‘உர்’ ரென்று வைத்துக் கொண்டிருந்த சமயத்தில் எல்லாம் அவன் வரவில்லை. அவன் வந்தபோது நான் குருமூர்த்தியோடு சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அவன் என் கடைசிப் பையன். வயது மூன்று இன்னும் பூர்த்தி ஆகவில்லை.

இருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம்? இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கொஞ்சம் உண்டு. நானும் அவளும் கட்டுப் பாடாகத்தான் இருந்தோம். நாங்கள் மனிதர்கள் தானே? கட்டுப்பாடு செய்துகொண்ட ஒரே காரணத்தால் அதை மீறிவிட்டோம். பிறகு டாக்டரைப் பார்த்து அவள் நாலைந்து இஞ்செக்ஷன்கள் செய்து கொண்டோள்; ஏதோ மாத்திரைகள் கூட அவள் சாப்பிட்டதாக ஞாபகம். கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி.

‘சுத்த பிண்டம்; கல்லைப் போட்டாலும் கலைக்க முடியாது, ஸார்’ என்று பிறகு சொன்னார் ஜோஷியர். சுத்த பிண்டம் என்பதாலோ என்னவோ வீட்டில் உள்ள எல்லோரையும் குழந்தைகள் ஆக்கிவிட்டு, குருமூர்த்தி பெரியவன் ஆகிவிட்டான்.

சந்திரன் இரவு வீடு திரும்பிய சமயம் குருமூர்த்தி பென்சிலும் நோட்டுமாக எழுதிக் கொண்டிருந்தான்; நான் செலவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

”என்னடா எழுதினே?”

”மஞ்சள் ஓரணா,” என்றான் குருமூர்த்தி.

”எழுது, சந்தனம் ஓரணா”

”ஆயிட்டுது,”

”பழம் ரெண்டனா”

”எழுதிட்டேன்”

”எல்லாம் என்ன ஆச்சு?”

”ரெண்டனா”

முட்டை முட்டையாகக் கிறுக்கி, அவன் கணக்கு எழுதுவதைப் பார்த்து சந்திரன் சிரித்தபோதுதான் அவன் வந்ததை நான் கவனித்தேன். உடனே, கோபம் வந்தது. குருமூர்த்தியை அப்படியே விட்டு விட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்தேன்.

”ஆசிரியர் வந்தாயிற்றா? காலையிலிருந்து எங்கே மறைந்துவிட்டீர்கள்?” என்றேன், என் குரலில் கொஞ்சம் கடுமை இருந்ததை நானே கண்டேன்.

அவன் அதை லட்சியம் செய்ததாகத் தெரிய வில்லை.

”ஏன் அப்பா, ஏதாவது அவசர ஜோலி இருந்ததா? மகாலட்சுமி வீட்டுக்குப் போனேன். ரகுராமன் வந்தார். மகாலட்சுமி அங்கேயே சாப்பிடச் சொல்லிவிட்டாள். பேசிக் கொண்டே இருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.”

மகாலட்சுமியின் பெயரைக் கேட்டதும் நான் வரவழைத்த கோபம் எங்கோ போய்விட்டது.

”உனக்கு என்ன வயது தெரியுமா?”

”இருபத்திரண்டு” என்றான் அவன் சிரித்தபடி.

”இவ்வளவு வயசாகியும் இந்த குருமூர்த்திக்கு இருக்கிற தெளிவு கூட உன்னிடம் காணோமே? வீட்டுக்கு வந்ததும் செலவுக் கணக்கு கேட்கிறான். நீ”

”நான்தான் பத்திரிகையை எப்போதோ நிறுத்தி விட்டேனே”

”அதை நான் சொல்லவில்லை. எந்த விஷயத்திலும் ஒரு தெளிவு வேண்டும் என்கிறேன். வயது வந்த ஒரு பையனும் ஒரு பெண்ணும் நாள் முழுவதும் கதை பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை யாராவது கண்டால் என்ன நினைப்பார்கள்?”

”பிறத்தியார் ஒன்று சொல்வார்கள் என்பதற்காக நமக்குப் பிடித்ததைச் செய்யாமல் இருக்க முடியுமா அப்பா?”

”அப்படியானால் மகாலட்சுமி உன் மனசுக்குப் பிடிக்கிறாள் என்று சொல்லு”

”பிடிக்காமல் என்ன அப்பா?”

”அப்படியானால் முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க லாமா?”

”யாருக்கு?”

”என்னடா அது? மகாலட்சுமிக்குத்தான்”

”மகாலட்சுமிக்கா? என்னிடம் கூட சொல்லாமல் வரன் பார்த்துவிட்டீர்களா?”

”என்ன அது, என்ன அது, வரன் பார்த்து விட்டீர்களாவா! என்னடா, புதுசாய் பேசுகிறாய்? உனக்காகவே பிறந்து வளருகிறாள், வேறு வரன் எதுக்காகத் தேடுவது?”

”வேண்டாம்”

”அதுதானே பார்த்தேன்; வருகிற பங்குனியில் நாள் பார்த்துவிடட்டுமா?”

”வேண்டாம் என்றேனே அப்பா?”

”எப்போது வேண்டாம் என்றாய்? நாள் பார்க்காமல் சீர்திருத்த மணம் செய்து கொள்ளப் போகிறாயா? இதற்காகத்தான் ஆகட்டும், ஆகட்டும் என்றாயா? எனக்கு என்னடா இதில்? மகாலட்சுமியும் சரி என்றால் எனக்கு சம்மதம். இதைச் சொல்லவா இவ்வளவு தயங்கினாய்?”

”அது இல்லை அப்பா, மகாலட்சுமியை வேண்டாம் என்றேன்.”

”ஆரம்பித்து விட்டாயே! என்ன விளையாட்டு இது? இரண்டு பேரும் சேர்ந்து கும்மாளம் அடிக்கிறீர்கள். கலியாணப் பேச்சில் மகாலட்சுமியைப் பற்றி விளையாடாதே, சொல்லிவிட்டேன்.”

”நிஜமாகத்தான் சொல்லுகிறேன்”

”ஏன், கறுப்பாயிருக்கிறாள் என்பதாலா?”

”அதுக்காக இல்லை”

”ஒண்ணரைக் கண் என்றா?”

”வந்து அப்பா”

”சதா நாட்டியம் ஆடுகிறாளே, அதனாலா?”

”நான் சொல்ல வந்தது” ”அவள் ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள் என்று தானே சொல்லப் போகிறாய்?”

”நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டே போனால் நான் எப்போது பேசுவது?”

”மனசுக்குப் பிடிக்கிறது என்று கலியாணம் வேண்டாம் என்றால் என்னடா அர்த்தம்? போடா, போடா, கலியாணம் என்றால் இவ்வளவு வெட்கமா? போ, போ நாள் வைத்து விட்டுச் சொல்லி விடுகிறேன்.”

”இரண்டு நாள் தவணை கொடுங்கள் அப்பா. முடிவாகச் சொல்லிவிடுகிறேன்”

”நல்ல பிள்ளை! உனக்கு இவ்வளவு தூரம் இடம் கொடுத்துப் பழகியது பிசகு என்று கூட தோன்றுகிறது.”

”அப்பா, பிறகு உங்களுக்குத் தெரியும்”

”எனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே? வக்கீலுக்குப் படித்து, பத்திரிகை நடத்திவிட்டால்”

”அப்பா, ஒரு நியூஸ். நாளைக்கு ரகுராமனும் மகாலட்சுமியும் இங்கே சாப்பிட வருகிறார்கள். நீங்களும் நானும் கடைக்குப் போக வேண்டாம்.”

”யார் இந்த ரகுராமன்?”

”அவர் ஒரு கவி; ரொம்ப நல்லவர்”

”கதாசிரியனாலேயே வீடு இவ்வளவு அமளிப் படுகிறது; கவி நல்லவராம். என்ன வயசு அவருக்கு? மகாலட்சுமியோடு அவருக்கு என்ன வேலை?”


”அவருக்கா? ஐம்பது, ஐம்பத்திரண்டு இருக்கும்”

”சரி, இரண்டு நாளில் உன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும்”

அவன் அங்கே இருந்தால்தானே நான் பேச முடியும்?

எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை மணப்பதற்கு, தவணை சொல்லும் பையனைப் பற்றி என்ன சொல்லுவது?

மகாலட்சுமியை நான் சாதாரணப் பெண் என்று சொல்ல மாட்டேன். நல்ல சிவப்பு; களையான முகம்; எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படிப்பு; சிறந்த சங்கீத ஞானம்; பாடுவதற்கு இனிமையான குரல்; நாட்டியமாடத் தெரியாது; தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் நல்ல பண்டித்தியம்; பெட்டி போல் அடக்கமான பெண், வீட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி; பெண்ணா அவள்? வரதட்சிணை நான் எதிர்பார்க்கவில்லை. மகாலட்சுமி என் வீட்டுக்கு வந்தாலே போதும் என்பது என் ஆசை.

இந்த ஆசைக்கு மற்றோர் அடிப்படையான காரணமும் உண்டு. நானும் அவள் தகப்பனாரும் அடி வயது முதல் சினேகிதர்கள். எங்கள் இருவருடைய குடும்பங்களும் மிகவும் நெருங்கிப் பழகி வந்தன. தெய்வத்தின் தயவில், இரண்டு குடும்பங்களுக்கும் ‘இல்லை’ என்று ஏங்கும்படியான நிலைமை இல்லை. இந்த அமைதியில் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் மகாலட்சுமியின் தந்தை திடீரென்று மாரடைப்பு என்று வியாஜம்-தலை¨யைக் கீழே போட்டுவிட்டார். உயிர் பிரியும் தறுவாயில்-தம் குடும்பத்தை சம்ரட்சிக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார். அவருடைய மனைவி உள்பட அந்தக் குடும்பம் பூராவுமே என்னைக் கலந்து கொள்ளாமல் ஒன்றும் செய்வதில்லை. மகாலட்சுமி நான் சொல்வதற்கு மாறாக ஒரு வார்த்தை பேச மாட்டாள்.

அவள் தகப்பனார் உயிரோடு இருந்தபோதே இரு குடும்பங்களுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் ஏற்பட வேண்டும் என்கிற ஆவல் அவருக்கும் எனக்கும் இருந்தது. அதற்கு ஏற்பச் சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டபோது நாங்கள் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டோம். ‘இவனுக்கு அவள்; இவளுக்கு அவன்’ என்று முடிச்சு போட்டிருந்தோம்.

இப்போது, இந்நிலையில் சந்திரன் அவளை மணப்பதற்கு சால்ஜாப்பு சொல்லி வந்ததோடு, தவணையும் கேட்பதன் மர்மம் எனக்கு புரியவில்லை.

‘சிறிது காலம் போனால் சரியாகிவிடுவான். இருவரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறார்கள்? எதற்காகவோ தயங்குகிறான், பின்னால் ஒப்புக் கொண்டுவிடுவான்’ என்று சமாதானம் செய்து கொண்டு படுத்தேன்.

காலையில் மகாலட்சுமியின் முகத்தில் கண் விழித்தேன்.

”வா அம்மா” என்று வெளியில் வந்தபோது சந்திரனோடு ஓர் இளையவன் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன்.

”அப்பா, நான் சொன்னேனே; இவர்தான் ரகுராமன்…”

”இவரா? ஐம்பது வயது என்றாயே, இருபது இருபத்திரண்டுதான் இருக்கும்போல்…”

”வேடிக்கையாகச் சொன்னேன்!”

ரகுராமன் கவியாகத் தோன்றவில்லை. மிகவும் அடக்கமாக இருந்தான்; அழகாய் பேசினான்.

அன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது.

மாலையில் முதலில் மகாலட்சுமி விடை பெற்றுக் கொண்டாள். பிறகு ரகுராமன் கிளம்பினான். இருவரும் போனபின் சந்திரன் என்னைச் சூழ்ந்து கொண்டான்.

”அப்பா, ரகுராமன் எப்படி?” என்றான்.

”எப்படி என்றால்?”

”அவனைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?”

”ஏதாவது சிபாரிசுக் கடிதம் வேண்டுமோ?”

”காலேஜ் லெக்சரர் வேலை போதும் அவனுக்கு. ரகு நல்ல பையனா, கெட்ட பையனா?”

”என்ன கேள்வி இது? உன்னைவிட நல்ல பையன் தான்” என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக.

”அப்படிச் சொல்லுங்க அப்பா!” என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.

”இது என்ன அற்ப சந்தோஷம்?”

”ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.”

”நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே” என்றேன் சிரித்துக்கொண்டே.

”இருக்கிறதே!”

”பத்மாவுக்குப் பத்து வயதுதானேடா? அழகுதான் போ! சின்னக்குழந்தையை…”


”பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்!”

”நான் அப்போதுதான் முதன் முறையாக அதிர்ச்சி எனப்படும் உணர்ச்சிக்கு வசப்பட்டேன். சில நிமிஷங்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

”என்னடா சொல்லுகிறாய்”

”அப்பா, ஆத்திரப்படக்கூடாது.”

”எனக்கு ஆத்திரப்படத் தெரியவில்லை என்று தானே நீ என்னை இப்படி ஹிம்சிக்கிறாய்? மகாலட்சுமியை நான் மருமகளாக அடைய.”

”கொஞ்சம் பொறுங்கள். உங்கள் வார்த்தையை நான் எப்போதாவது தட்டியது உண்டா? நான் சொல்வதில் தப்பு இருந்தால் சொல்லுங்கள், ஒப்புக் கொள்கிறேன்.”

”என்னடா சொல்லப் போகிறாய்? இப்படி எல்லாம் பழகிவிட்டு, இது என்ன முடிவடா திடீரென்று?

”அப்பா மகாலட்சுமி நீங்கள் சொல்வதுபோல், மகாலட்சுமி மட்டும் அல்ல, ஸரஸ்வதியும்கூட வயது வந்த பிறகும் நான் அவளுடன் இவ்வளவு அதிகமாய்ப் பழகினேன் என்றால்… அதற்குக் காரணத்தைச் சொல்லவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.”

அவன் முகம் சுண்டுவதைக் கவனித்தேன். அதை ஒருபோதும் என்னால் சகிக்க முடியாது. என்னுடைய வருத்தத்தை மறைத்துக்கொண்டு அவனுக்கு ஆறுதலாகப் பேசினேன்.

”சும்மாச் சொல்லு; என்னிடம் சொல்லுவதற்குமா வெட்கம்?”

மகாலட்சுமி படித்தவள் என்று மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். எனக்கு அவள் அப்படித் தோன்றவில்லை. எனக்கு அவள் ஒரு பிறவி மேதையாகத் தோன்றுகிறாள். இல்லாவிட்டால், இந்த வயதில் அவளுக்கு இவ்வளவு ஞானம் இருக்க நியாயம் இல்லை. நான் சட்டம் படித்தேன்; பத்திரிகை நடத்தினேன். ரொம்பத் தெரிந்தவன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவளுக்குத் தமிழிலும் ஸமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு… எனக்கு மலைப்புத் தட்டுகிறது. அப்பா, சொல்ல வெட்கமாக இருக்கிறது; சொல்லா விட்டால் உங்களுக்கு வருத்தமாயிருக்கும்; அதனால் சொல்லுகிறேன். நான் அவளை அடிக்கடி பார்க்கப்போவது அவளிடம் ஏதாவது கற்கலாம் என்றுதான். அவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி? அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது! அப்படிச் செய்யலாமா அப்பா? அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்… எனக்கு ஏன் நீங்கள் ஸமஸ்கிருதம் சொல்லித் தரவில்லை?”

”தமிழையாவது நீ ஒழுங்காய்ப் படித்திருக்கலாமே?”

”சரி, அப்பா; ரகுவைப்பற்றி யோசித்து முடிவு சொல்லுங்கள்.”

சொல்லிவிட்டு எங்கோ வெளியில் போனான் அவன். இந்தப் பிள்ளையைப்பற்றி நான் என்ன சொல்வது? அழகு இல்லை, படிப்பு இல்லை. ஆரோக்கியம் இல்லை, வரதட்சிணை இல்லை என்பதுபோன்ற காரணம் காட்டிப் பெண்ணை நிராகரிப்பது உலகு வழக்கு. தனக்குக் கல்வி குறைவு என்று சொல்லிப் பெண் வேண்டாம் என்று சொல்கிறான் என் பிள்ளை. ‘என்னைவிட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதுபோல், என்று அவன் சொன்ன பிறகு அவளையே மணம் புரியும்படி அவனை நான் எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்?

இரவு சுமார் பத்து மணிக்கு அவன் மறுபடியும் என்னிடம் வந்தான்.

”என்மேல் கோபமா அப்பா?”

”உன்மேல் எனக்கு எப்போது கோபம் வந்தது? நீ சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. நீ சொல்வது போலவே செய்யலாம். மகாலட்சுமியின் அபிப்பிராயம் தெரியாமல் என்ன செய்வது?”

”அவளையும் ஜாடையாகக் கேட்டேன். நீங்கள் பார்த்து முடிவு செய்தால் சரி என்கிறாள்.”

”அட பாவி! அவள் சம்மதமும் வாங்கிவிட்டாயா?”

சிறிது நேரம் அவன் மெளனமாக உட்கார்ந்திருந்தான்.

”உனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லப்போகிறாயா, அடுத்தபடி?” என்றேன் அவன் தயங்குவதைக் கண்டு.

”என்னைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டது இவ்வளவுதானா? அப்படியெல்லாம் நான் சொல் வேனா அப்பா? உங்கள் இஷ்டத்துக்கு நீங்கள் பார்த்து ஒரு பெண் முடிவு செய்யுங்கள்.”

”அப்புறம் ஆடுபோல் ஒரு பெண் வாங்கி மாடு போல் ஒரு பையனை விற்றார் எங்கள் அப்பா என்று கதை எழுதுவதற்கா?”

”கலியாண விஷயம் எனக்கு என்ன தெரியும்? உங்கள் திருப்திக்குச் செய்யும் முடிவு என் நன்மைக்குத் தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.”

குடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந் தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.

இருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.


அடுத்த வீடு

கதையாசிரியர்: எம்.வி.வெங்கட்ராம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 3,867
http://www.sirukathaigal.com/குடும்பம்/அடுத்த-வீடு/



சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் MVV இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, “என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?” என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நம் நினைவில் இருப்பதில்லையே!
பையனுக்கு வாங்கி வந்த ஸ்வீட்டை எவ்வளவோ முறை பங்கு போட்டு அந்தக் குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கிறோம். ஆனாலும், அந்தக் குழந்தையின் ஆசை இயல்பானதுதான் இல்லையா? அடுத்த வீட்டு மாமா தனக்கென ஏதாவது வாங்கி வர வேண்டும் என்று அந்தக் குழந்தை ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?

நம் வீட்டில் இருக்கும் அதே இட்லி & சட்னிதான் அடுத்த வீட்டிலும் கிடைக்கிறது என்றாலும், அந்த இட்லிக்கும் சட்னிக்கும் எப்படியோ தனி ருசி வந்துவிடுகிறது. சிறு வயதில் யார் வீட்டில் சாப்பிடச் சொன்னாலும் நான் சாப்பிட்டுவிடுவேன். ‘அடுத்த வீட்டில் சாப்பிடாதே!’ என்று அம்மா திட்டுவார்கள். அடுத்த வீட்டுக்கும் நமக்குமான உறவு வெறும் பேச்சு மட்டும்தானா? என் வகுப்புத் தோழர்களின் வீடுகளில் துவங்கி, யார் என்றே தெரியாத நபர்களின் வீடுகள் வரை நான் சாப்பிட்டிருக்கிறேன். அவர்களும் தயக்கமில்லாமல் சாப்பாடு போடுவார்கள். அல்லது தின்பண்டங்கள் தருவார்கள். நாம் சாப்பிடும் அழகை வேறு ரசிப்பார்கள். இந்தச் சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி, நானே அந்த வீடுகளின் சமையல் அறைக்குப் போய், ‘அத்தை, முறுக்கு கொடு’ என்று உரிமையோடு கேட்டுச் சாப்பிடும் நிலைமைக்கு வளர்ந்திருக்கிறது.

அடுத்த வீட்டில் சாப்பிட்டேனா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் கையை நீட்டச் சொல்லி முகர்ந்து பார்ப் பார்கள். அப்படிக் கையில் வாசனை யைக் கண்டுபிடித்து விடுகிறார்கள் என்பதற்காகவே, வரும் வழியில் மணலில் கைகளை நன்றாகத் தேய்த்து புழுதியாக்கிவிடும் தந்திரம் கற்றிருந்தேன். ஆச்சர்யமான உண்மை என்னவென் றால், நான் அடுத்த வீட்டில் சாப்பிட்டு வருவதைப் போலவே எங்கள் வீட்டிலும் எப்போதும் ஒன்றிரண்டு சிறுவர் சிறுமிகள் வந்து சாப்பிட்டுப் போவார்கள். சிறு வயதில் எங்களது தெருவில் குடியிருந்தவர்களில் எனக்கு ரொம்பவும் விருப்பமானவராக சர்வேயர் அக்கா இருந்தாள். அவர்கள் வீட்டில் சிறு குழந்தைகள் இல்லை. கல்யாண வயதில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். அந்த மாமா ஒரு சர்வேயர் என்பதால், அக்காவும் சர்வேயர் அக்கா. அவளுக்கு வேலையே இருக்காது என்பது போல எப்போதும் வீட்டில் தாயம் ஆடிக் கொண்டும், சிறுவர்களை அழைத்து வைத்து பேசிக்கொண்டும் இருப்பாள். அக்காவின் ஊர் பந்தல்குடி. வாரம் ஒரு முறை தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்விடுவாள். ஊரிலிருந்து திரும்பி வரும்போது கருப்பட்டி மிட்டாய், பொரி உருண்டை, பால்கோவா என்று ஏதாவது கொண்டு வந்து கூப்பிட்டுக் கொடுப்பாள்.

சர்வேயர் அக்காவுக்குப் பையன் இல்லை என்பதால் சிறுவர்கள் மீது மிக வாஞ்சையாக இருப்பாள். நான் சாப்பிடும்போது தலையைத் தடவியபடி, ‘மெதுவா சாப்பிடுடா’ என்று சொல்வாள். சாப்பிட்டு முடித்து நாக்கில் சுவையடங்காது இன்னொரு பண்டத்துக்காக அவள் முகத்தைப் பார்க்கும்போது கேலியாக, ‘போதும்டா… தீர்ந்து போச்சு!’ என்று சொல்வாள். ஆனால், அவள் மடியில் இன்னொரு பொரி உருண்டை இருக்கும் என்பது எனக்கு நிச்சயம் தெரியும். ஒரேயரு முறை அக்கா ஊருக்குப் புறப்படும் நாளில், அவளோடு நானும் ஊருக்கு வருவேன் என்று முரண்டு பிடித்து தெருவில் விழுந்து அழுதேன். என்னைச் சமாதானம் செய்யமுடியாமல் அக்கா என்னை கூட்டிக் கொண்டு போவதற்குச் சம்மதித்தாள். இருவருமாக பஸ் ஏறி அவளது ஊரான பந்தல்குடிக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவாகியிருந்தது. அவர்கள் வீட்டில் யாவரும் உறங்கியிருந்தார்கள்.
எனக்கு வழியில் வயிறு பசிக்கத் துவங்கி இருந்தது. வீட்டில் போய்ச் சாப்பிடலாம் என்று அக்கா சொன்னதால், வழியில் கிடைத்த அதிரசத்தைச் சாப்பிட்டுவிட்டு, அவள் ஊரைப் பார்க்கும் ஆவலில் இருந்தேன். எங்கள் ஊரைப் போலவே அதுவும் சிறிய ஊர்தான். ஊர் இருட்டியிருந்தது. தெருவில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள்கூட துவண்டு படுத்திருந்தன. தெரு விளக்கில்லாத கிராமம் என்பதால், சாக்கடைகளைத் தாண்டித் தாண்டி அவள் வீட்டுக்குச் சென்றோம். நான் நினைத்ததற்கு மாறாக, அந்த வீடு மிகச் சிறியதாக இருந்தது.


வீட்டில் வயதான நபர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தார். சர்வேயர் அக்கா வந்த சத்தத்தைக் கேட்டு, பாட்டி ஒருத்தி சிம்னி விளக்கைத் தூண்டிவிட்டாள். என்னை அவர்கள் யார் என்று கூடக் கேட்கவில்லை. ரகசியமான குரலில் சர்வேயர் அக்கா, ‘‘சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று கேட்டாள். ‘கொஞ்சம் புளிச்ச கஞ்சி கிடந்தது. அதையும் கோழிக்கு ஊற்றி விட்டேன்’’ என்றாள் பாட்டி.

சமையல் செய்து தருவதற்கு நேரமில்லை என்பதால் அக்கா எங்கிருந்தோ ஒரு கொய்யாப் பழத்தைத் தேடி எடுத்து வந்து, ‘‘இதைச் சாப்பிட்டுப் படுத்துக் கொள், காலையில் உனக்கு பருப்புக் குழம்பு வைத்துத் தருகிறேன்’’ என்று சமாதானம் செய்து தின்னக் கொடுத்தாள். வீட்டின் வாசலில் பாயை விரித்தாள். அக்கா எதையும் சாப்பிடவில்லை. அவள் மௌனமாக வானத்தைப் பார்த்த படியே படுத்துக் கிடந்தாள்.

கொய்யாப்பழம் வயிற்றில் பசியை அதிகப்படுத்திவிட்டது போலும். தூக்கம் வராமல் புரண்டுகொண்டு கிடந்தேன். அக்கா உறங்கியிருந்தாள். தெருவில் நான் படுத்திருந்த இடத்துக்கு எதிரே ஒரு கழுதை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்தது. அது நெடுநேரமாக இருளில் ஒரு சிலை போல நின்றிருந்தது.

நான் பசியில் இரவெல்லாம் புரண்டு கொண்டே இருந்தேன். காலையில் எழுந்தபோது அக்காவைக் காணவில்லை. அவள் காட்டு வேலைக்குப் போய்விட்டாள் என்று அங்கிருந்த பாட்டி சொன்னாள். நான் உதட்டைக் கடித்தபடி வாசலில் கிடந்த உரலில் உட்கார்ந்து கொண்டேன். சாப்பிடுவதற்கு சோளக்கஞ்சி கொண்டு வந்து தந்தாள் பாட்டி. அது எனக்குப் பிடிக்கவே இல்லை. ‘எனக்கு இட்லி வேண்டும்’ என்று சொல்லி அழுதேன். ‘இட்லிக்கு எங்க போறது?’ என்று சொல்லி, பாட்டி என் முன்னே கஞ்சியை வைத்துவிட்டுப் போய்விட்டாள். எனக்கு ஆத்திரமாக வந்தது. நேரமாக ஆக, பசியில் குடல் கவ்வத் துவங்கியது. வழியில்லாமல் கஞ்சியைக் குடித்தேன். பாட்டி வீட்டுக்கு வந்த ஒரு சிறுவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி நின்றான். கட்டிலில் படுத்துக் கிடந்தவர் இருமிக்கொண்டே இருந்தார். பகல் நீண்டு விரிந்திருந்தது.


மதியத்தின்போது அக்கா வீட்டுக்கு வந்து சமையலை ஆரம்பித்தாள். பாவற்காயும் வத்தல்களும் கொண்ட சாப்பாடு. எனக்கு வாய் குமட்டியது. அக்கா ஒரு மண்டைவெல்லத்தைத் தொட்டுக்கொள்ளத் தந்தாள். இரண்டு நாட்களில் நான் அக்காவுடன் பத்து வார்த்தை பேச நேரமில்லாமல் போனது. அவளுக்கு இடிப்பது. முள் வெட்டுவது, தண்ணீர் தூக்குவது, திரிப்பது என ஓயாமல் வேலை இருந்துகொண்டே இருந்தது. எப்போது வீட்டுக்குப் போவோம் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஊருக்குப் புறப்படும்போது, அக்கா ஊர் வந்த இரவில் தான் கழற்றி வைத்த சேலையைத் திரும்ப கட்டிக்கொண்டாள். பஸ்ஸில் வரும்போது என் கையைப் பிடித்துக்கொண்டு, நடந்த எதையும் என் வீட்டில் சொல்லக் கூடாது என்றாள். நானும் தலையாட்டினேன். வழியில் அவள் வாங்கிக் கொடுத்த வெள்ளரிக்காயைக்கூடத் தின்னாமல் பையில் வைத்துவிட்டேன்.
ஊர் வந்து சேர்ந்து தெருவில் வரும்போதே அவளை விட்டுவிட்டு ஓட்டமாக என் வீட்டுக்கு ஓடினேன். எதற்கு என்று காரணமில்லாமல் அழத் துவங்கினேன். அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள். நான் எதையும் சொல்லவில்லை. ஆனால், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா, அக்கா வீட்டுக்குப் போய், ‘என்ன நடந்தது?’ என்று கேட்டு வந்தாள். ‘ரெண்டு நாளாகவே வீட்டு ஞாபகம் வந்து அழுதுகொண்டே இருந்தான்’ என்று அக்கா பொய் சொல்லி அனுப்பியிருந்தாள்.
அதன் பிறகு ஏனோ சர்வேயர் அக்கா வீட்டின் பக்கம் போனாலே, நிற்காமல் ஓடிவிடுவேன். அவள் தன் வீட்டுப் படியில் உட்கார்ந்தபடி என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவாள். நான் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. ஒரு நாள் அவர்கள் வீட்டைக் காலி செய்து போகும்போதுகூட அக்காவைப் பார்க்கப் போகவே இல்லை.

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் தற்செயலாக ராமேஸ்வரத்தில் ஒரு சத்திரத்தில் அவளைப் பார்த்தேன். எனக்குப் வயது பதினாறு கடந்திருந்தது. மீசை அரும்ப வளர்ந்திருந்தேன். அவள் என் கைகளைப் பிடித்தபடி வாஞ்சையாக, ‘‘அக்கா மேல கோபமாடா… ஏன் பேசவே மாட்டேங்குறே?’’ என்று கேட்டாள். அவள் கையைப் பிடித்திருப்பது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. கையை உதற முயன்றேன். ‘‘பெரிய மனுசன் ஆகிட்டே இல்ல?’’ என்றபடி அவள் கண்கள் தானே கசிந்தன. ஆனால், அதை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்பது போல சிரித்தபடியே சொன்னாள்.
‘‘என் பொண்ணுகள்ல ஒருத்தியைக் கட்டிக்கோ! உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வெச்சு விதவிதமா சாப்பாடு போடுறேன்டா!’’ என்றாள். அவள் கைப்பிடியில் இருந்து தப்பி பல வருடங்களாகியும், அந்த பந்தல்குடி எளிய வீட்டின் காட்சிகள் ஒரு தைல வண்ண ஓவியம் போல, அப்படியே மனதில் தன் நிறம் மங்காமல் ஒளிர்ந்துகொண்டு இருக்கிறது. நகரில் இப்போதும் பகலிரவாக மூடிக்கிடக்கும் அண்டை வீடுகளைக் காணும்போது என்னை அறியாமல் அக்காவின் நினைவு வந்துவிடுகிறது.

பிரியமானவர்களை எதிர்பாராத இடத்தில் சந்திக்கும் தருணம் மிக அபூர்வமானது. அது பேச்சற்று மௌனத்தில் கரைந்துவிடக் கூடியது. கேட்பதற்கும் சொல்வதற்கும் எவ்வளவோ இருந்தபோதும், காலம் அந்தச் சந்தர்ப்பத்தைத் தராமல் நிசப்தமாக்கிவிடுகிறது. அக்காவிடம் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. ஆனால், பேச்சு மனதிலிருந்து கிளைவிடவே இல்லை.
அபூர்வமான தருணங்களில் ஒன்றாக இருந்த எதிர்பாராமையை எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது எம்.வி. வெங்கட்ராமின் ஏழை என்ற கதை.
எம்.வி. வெங்கட்ராம் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர். அவரது கதையுலகம் நம்மைச் சுற்றிய மனிதர்களால் நிரம்பியது. சௌராஷ்டிர மக்களின் வாழ்க்கைப்பாடுகளை முக்கியக் களமாகக் கொண்டது. வாழ்வின் போராட்டங்களும், துளி சந்தோஷமும் கலந்தது.

இக்கதை கூட! ஒரு மழை நாளில், பத்து வருடங்களுக்குப் பிறகு ராஜு என்ற மனிதனைத் தேடி, அவனது காதலி கல்யாணி தனது மகன் கண்ணன் என்ற சிறுவனைக் கூட்டிக்கொண்டு வருகிறாள். வந்தவள், மழையில் நனைந்து போனதால் மாற்று உடை கேட்கிறாள். பிறகு சிறுவன் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டும் என்கிறாள். வீட்டில் நீராகாரம் மட்டுமே இருக்கிறது. அதைச் சிறுவன் சாப்பிடுகிறான். அவள் இரண்டு நாட்களாகப் பட்டினிஎன்றும், தானே சமைத்துச் சாப்பிடாமல் வேறுஎங்கும் சாப்பிடுவதில்லை என்றும் சொல்கிறாள்.

அவளைப் பல வருடங்களுக்கு முன்பு ராஜு காதலித்தான். அவளும் விரும்பினாள். திருமணம்கூட ஏற்பாடாகியிருந்தது. ஆனால், திருமணத்தன்று கல்யாணி எங்கே என்று சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போய்விடுகிறாள். இத்தனை வருடமாக எங்கே போயிருந்தாள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறான் ராஜு. அவளோ மழை இரவில் அகல் விளக்கின் முன், பத்மாசனமிட்டு தியானம் செய்கிறாள். பிறகு, தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனிடம் பயணத்துக்குக்காசு வாங்கிக்கொண்டு வீட்டைவிட்டுப் போய்விடுகிறாள். வாழ்வின் எதிர்பாராத தருணம் கூடிவந்து நிசப்தமாகக் கலைந்து போய்விடுகிறது. ஒரு மின்னல் வெட்டைப் போல இந்தச் சம்பவம் நடந்தேறிவிடுகிறது.

எதற்காக வந்தாள்? ஏன் இப்படிச் சாமியார் போல் இருக்கிறாள்? ஏன் இன்னும் இத்தனை பிடிவாதம்? எங்கே போகிறாள்? இப்படிக் கேள்விகள் மழையைப் போல முடிவற்றுப் பெய்துகொண்டே இருக்கின்றன. வாழ்க்கையில் நிறையக் கேள்விகள் பதிலற்று இருப்பதுதான் அதன் சுவாரஸ்யம் போலும்!

வெங்கட்ராமின் கதை ஓர் அபூர்வமான கணத்தை அப்படியே பதிவு செய்துள்ளது. பேசிக் கொள்ள முடியாத துக்கத்தைப் போல வலி தரும் விஷயம் உலகில் இல்லை என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்பது மழைக்கு மட்டும் இல்லை. வாழ்வின் அரிய கணங்களுக்கும் பொருந்துகிறது. ஒருவேளை எதிர்பாராமையின் பெயர்தான் மழையோ என்றும் தோன்றுகிறது!