Sunday 5 July 2015





இன்றிரவு
அதே நிலவொளியில்
என் மனைவி ஜன்னலருகே தனித்திருக்கிறாள்

மழலைகளை குறித்த என் யோசனையை
சுமக்க எனக்கு கடினமாயிருக்க
புரிந்துணர்ந்திட குறை வயதினனாயிருக்க
நான் ஏன் அவர்களிடம் அணுகி வரக்கூடாது


அவளது கேசம் பனியில் ஈரம்கோர்த்திருக்கக் கூடும்
நிலவொளியில் கரங்கள் குளிர்ந்த ஜேட் மணிக்கல்லாய்

நாமிருவரும் எப்போது ஒன்றிழைய நிற்போம்
தளர்ந்த திரைகளின் அருகே
அச்சமயம்
நம் முகங்களில் கோடுறும் .
கண்ணீரிழைகளை நிலவொளி உலர்த்தும்.

-Tu Fu -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)





ஆறுகள் மலைகள்
வெட்டவெளி கதிரொளியில்

பூக்களில் மற்றும் நறுமண செடிகளில்
மிருதுவாயலையும் தென்றல்


தங்கள் கூட்டினுள் மணல் நிரப்பி விழுங்குகிறது
இள- வெம்மை மணல் மீதமர்ந்து வாத்துகள்
குளிர்காய்ந்து திளைக்கிறது

நீலம்தோய் நீரினில்
வெண் பறவைகளினுரு ஆடியாய் அலைவுறுகிறது

செந்நிற மலர்கள்
பசும்பச்சை சரிவுகளில் சுடரொளிர்கிறது

இந்த வளம்-செறி பவனியை நோக்கியபடியே
நான் வீடடையும் நேரமென எண்ணுகிறேன்.

-Tu Fu -
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)



மலையின்மீது துயர்
மூடுபனி மழை
உலர்- புற்களில் வீழ்கிறது

நள்ளிரவு தலைநகரில்
எத்துனை மனிதர்கள்
இக்காற்றில் வயதுபெருத்து முதிர்கிறார்கள்?


அந்தியில் .................
கணுக்கள்மிகு கறு- ஓக் மரங்களின்
திருகுறும் சிறு தடங்களில்
நான் தொலைந்திருக்கிறேன்

சிரசின் நேர்மேற்புறம் நிலா
நிழல்களை மரங்களுக்கே திருப்பித் துரத்துகிறது
பொய்மை விடியல்
மலைகளை வெண்மையுற செய்கிறது

தீப்பந்தங்கள்
புதிதாய் மரித்தோரை வரவேற்கின்றன

புதிய கல்லறைகள் மீது
மின்மினிகள்.

-Li Ho-
(தமிழாக்கம்:எஸ்.சண்முகம்)