Monday, 20 July 2015

Ennui - போகன் சங்கர்




Ennui

http://thamizhstudio.com/Koodu/mag_4_bogan_kavidhai.php




- போகன் சங்கர்



கிருஷ்ணன் தம்பி சலிப்பினால் இறந்தான்
ஒரு மழை நாளில் அவன் கேரளத்துக் கடற்கரை ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தான்
அன்றவன் தனது காதலியின் தொடர் அழைப்பை எடுக்கவில்லை
அவளது உடலின் ஒவ்வொரு சுழியையும் அவன் அறிந்திருந்தான்
பெரிய ஜயண்ட் வீலில் அவள் மாறி மாறி ஏறும் ஒவ்வொரு பெட்டியின் பெயரும்
அவனுக்குத் தெரிந்திருந்தது
உச்சத்தில் அவள் பெருக்கும் உடல்திரவங்களின் நாற்றத்தை
அவன் தன் வியர்வையில் உணர்ந்ததுண்டு
அவன் பஷீரின் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க முயன்றான்
அது காற்றில் கொல்லப்படும் ஒரு பறவை போல படபடத்தது
அவனுக்குத் தனக்கு பசிக்கிறதா இல்லையா என்று சரியாக உணர முடியவில்லை
காலியான மதுப் புட்டிகள் வாய்திறந்து கடற்கரையில் கிடந்தன
நண்டுகள் அவற்றினுள் புக முயன்றன
மழை அரிசி மணிகள் போல மணலில் விழுந்து பார்த்தது
பிறகு கரை முழுவதும் ஒரு சிறிய குழந்தை போல அவசரமாக ஓடித் திரும்பவந்தது
தம்பி மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தில் ஒரு குறிப்பிட்ட விண்மீனைத் தேடினான்
அதன் பெயர் மட்டும் அவன் அறிவான்
அது அன்று எங்கோ நாணி ஒளிந்துகொண்டிருந்தது
ஆளுயரப் புற்காட்டுக்குள் மறைந்துநிற்கும் கடம்பமான் போல
அல்லது பாம்பின் ஆடாத விழி போலவா
அவன் தனது கால்பெரு விரலை உணர முயன்றான்
அது எங்கோ துருவங்களில் கிடப்பது போல தோன்றியது
ஒளியின் வேகத்தில் ஒருவர் பிரயாணிக்கும்போது
அவரால்
ஒளியைக் காண முடியாது என்று நேற்றொரு பிரசங்கத்தில் கேட்டதை
அவன் நினைத்துக்கொண்டான்
அவருக்கு ஒளி மறைந்துவிடுகிறது
ஒருவகையில் அத்துணை வேகத்துக்கான தண்டனை போல

சாம்பல் நிறம் ஒரு பிசுபிசுப்பான திரவம் போல சுரந்து வானக் குவளையை
அவசரமாக நிரப்பியது
தொலைபேசி திரும்பவும் அழைத்தது
பிறகு ஒரு குறுஞ்செய்தியின் பப்படம் பொரியும் சத்தம்
அவள் இனி தியான வகுப்புக்குப் போய்விடுவாள்
பிறகு அவளது கணவர் வந்துவிடுவார்
இனி நாளைதான் பேச முடியும் ஆகவே ..

கிருஷ்ணன் தம்பி எழுந்து படகின் மறைப்பில் அமர்ந்துகொண்டு விடுதியில்
தங்கிப் படிக்கும் தனது மகளுக்கு ஒரு கடிதம் எழுத முயன்றான்
அன்புள்ள மகளுக்கு ...

அதன்பிறகு அவனுக்கு எதுவும் எழுதத் தோன்றவில்லை
அவளிடம் புதிதாய் சொல்ல எதுவும் தன்னிடம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு
அதைத் தூர எறிந்தான்

போனதடவை அவள் தானொரு பெண் டாக்டரைப் பார்க்கவேண்டும் என்று எழுதி இருந்தாள்
மாதப்பாடு பற்றிய எதோ ஒரு பிரச்சினை

முன்பெல்லாம் இது போன்ற சமயங்களில் அவன் தசைகளில் ஒரு ஆழமான வலியை உணர்வான்
கண்ணுக்கெட்டிய தூரம் வரை உழுது கிடக்கும் நிலங்களை அவன் காண்பான்
பின்பு அவையெல்லாம் களை பொங்கி நிரப்புவதாகவும்

நேற்று திருவனந்தபுரம் ஜெனெரல் ஆசுபத்திரியில் இங்கே முடிவெட்டுகிற கடை
எங்கிருக்கிறது
என்று கேட்ட முதியவரை விட்டு விரைந்து விலகி ஓடினான்
அப்பா கடைசியாய் மரணப்படுக்கையில் விழும் முந்திய நாள்
எழுந்து போய்
முடிவெட்டிக் கொண்டார்
ஒரு சினிமா பார்த்தார்
என்ன சினிமா என்று பெயர் கேட்டபோது மறந்துவிட்டது என்றார்
அது ஒரு தெலுங்கு சினிமா என்று பிறகு அவன் கண்டுபிடித்தான்

தூரத்தில் ஹரி ஓம் ஹரி ஓம் என்பது போல கோவில் மணி முழங்கியது
சற்று நேரத்தில் ஒரு சிறிய ஊர்வலம் ஒரு பிரதிமையைத் தூக்கிக் கொண்டு வந்தது
ஒருவர் அருகில் வந்து அவன் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு ஒரு இனிப்பைக்
கொடுத்தார்

ஒரு மீனவன் வெற்று வலையை இழுத்துக்கொண்டு கடந்துபோனான்
அவனைத் துரத்திக்கொண்டு ஒரு கடல்பறவை ஓடியது
அதற்கு அவன் அந்த இனிப்பை வீசினான்
அது திரும்பவே இல்லை

கடல் இப்போது கல்யாணத்துக்குக் கண் அலங்காரம் செய்துகொண்ட பெண் போலாகிவிட்டது
மெல்லத் துணிவு பெற்று ஏறிவந்து அவன் உடலைத் தொட்டது
தூரத்தில் மினுக்கி மினுக்கி போகும் ஒரு சிறிய கப்பலை காட்டியது
அது அவன் இளமையில் பார்த்த ஒரு பெண்ணின் பிருஷ்ட ஆட்டத்தை நினைவுபடுத்தியது
அவளை இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் பார்க்கிறான்
எதையும் ஆட்டாது ஏதோ அரசியல் பேசிக்கொண்டிருக்கிறாள்

அவன் எழுந்து அலைகளுக்குள் நடந்தான்

ஒரு ரயில் கூவும் சத்தத்தை மட்டும் கடைசியாக கேட்கவிரும்பினான்