Thursday 2 July 2015

ஒரு பிடி சோறு - (கயிறு -தகழி சிவ சங்கரன் பிள்ளையிடமிருந்து -ஒரு கதை )


இது தகழியின் கயிறு நாவலில் வரும் எண்ணற்ற சிறிய கதைகளில் ஒன்று.கேரளத்தின் மூன்று தலை முறை கால மாற்றத்தை மிக நுட்பமாகப் படம் பிடித்தவை தகழியின் இந்த நாவலும் ஏணிப் படிகளும்தான் கவித்துவமும் தரிசனமும் குடித்துக் கிடப்பவனின் ஆண்குறி போல ஊருக்குத் தெரிய கிடப்பதல்ல.அது வாசிப்பு முடிந்தும் கேட்டவன் மனதில் தொடரும் ,வாசித்தவன் குழலில் மிச்சம் இருக்கிறது என்று அவன் யூகிக்கிற இசை.நள்ளிரவில் அவன் வீடு திரும்பும்போது அவனோடு அவன் வீட்டுக்குள் நுழையும் லயம்.தகழியின் நாவல்களில் இந்த லயம் எப்போதுமே உண்டு


Bogan Sankar
Bogan Sankar

ஒரு பிடி சோறு

முதல் உலகப் போர் காலம்.கேரளத்தில் ஒரு கிராமம்.வாரமொரு முறை தபால் காரர் வருவார்.போருக்கு அந்த ஊரிலிருந்து போயிருக்கும் ஆண்களிடமிருந்து கடிதங்கள் வரும்.மணியார்டர்கள்.


எதற்குப் போகிறார்கள் போருக்கு ?அது அவர்கள் போரும் இல்லை.வெள்ளையர்களின் போர்.எதற்கெனில் ஒரு பிடி சோறு உண்ணத்தான் .

தபால்காரர் வியாழக்கிழமைகளில் தான் வருவார் .வெள்ளிக் கிழமை போய்விடுவார்.அன்று அவர் ஒரு வீட்டுக்கு தபாலும் மணியார்டரும் கொண்டுவந்தார்.கைநடுங்க போருக்குப் போயிருப்பவனின் தாய் அதைப் பெற்றுக் கொள்கிறாள்'என் மகன் எப்படி இருக்கிறான் ?''தபால்காரரே ?''

அவர் கடிதத்தைப் பிரித்து வாசிக்கிறார் ''அன்புள்ள அம்மாவுக்கு நமஸ்காரங்கள்.நான் இப்போது நலமாக இருக்கிறேன்''அடுத்த வரிக்கு அவர் உள்ளே பார்க்கிறார்.கதவோரம் ஒரு உடல் அசைகிறது.பாதி முகமொன்று பதற்றத்துடன் காத்திருக்கிறது ''மனைவிக்கு அன்பு ''அந்த முகம் இளகுகிறது.புன்னகைக்கிறது.ஒரே ஒரு கணம் அங்கே கண்ணீர் காணப்பட்டதா ?

அடுத்த வரியைப் படிப்பதற்குள் அங்கே ஒரே பெகளம் .அங்கே ஆணும் பெண்ணுமென இரு குழந்தைகள் இருக்கிறார்கள் .அப்பா என் பெயரைத்தான் அடுத்து எழுதி இருப்பார்.அவருக்கு என் மேல்தான் பிரியம் என்று இரண்டு குழந்தைகளும் அடித்துக் கொள்கின்றன.பந்தயம் வைக்கின்றன.அடுத்த வரியை வாசிக்கும் முன்பு தபால் காரர் அவர்கள் கண்களை உற்றுப் பார்த்து சிரிக்கிறார் .பந்தயத்தில் யார் ஜெயித்தது?பிறகு சொல்கிறார் கண் சிமிட்டிக் கொண்டே ''நீங்கள் இருவருமே ஜெயித்து விட்டீர்கள் .அல்லது தோற்று விட்டீர்கள் .அப்பா எழுதி இருக்கிறார்.குழந்தைகளுக்கு என் அன்பு''

வீடு சிரிப்பால் நிறைகிறது

தபால் காரர் கிளம்பி குஞ்சம்மாவின் வீட்டுக்குப் போகிறார்.அவர் இன்று அங்குதான் தங்குவார் .குஞ்சம்மாவின் இரண்டு மகன்களும் கூட போருக்குப் போயிருக்கிறார்கள்.சொன்னது போல ஒரு பிடி சோறு உண்ணத்தான்.குஞ்சம்மா பெரிய தரவாட்டைச் சேர்ந்த பெண்.ஆனால் அது பண்டு.இப்போதிருப்பது பொளிந்து இற்றுக் கிடக்கும் ஒரு பெரிய வீடும்.அதன் வெறுமையான தாழ்வாரங்களும்தான்.அவள் தபால்காரருக்கு இரவுணவு பொங்கிக் கொடுப்பாள்.சில நேரம் சோறு.சில நேரம் வெறும் கிழங்கும் பப்படமும்தான்.அவர் வெளியே தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வார்.

தபால் காரருக்கு உறவுகள் கிடையாது.சிரிப்பும் கேலியுமான மனிதர்.ஆனால் அவர் சிரிப்பும் கேலியும் குறைந்து கொண்டே வருகிறது.காரணம் உண்டு.

அப்பாவின் முதல் அன்பு யாருக்கு என்று சண்டையிட்டுக் கொண்ட வீட்டுக்கு மறுவாரமே அவர் மறுபடியும் போக வேண்டி இருக்கிறது .ஒரு தந்தியுடன்.இம்முறை அந்த வீட்டில் விட்டு வந்தது 'மோனே!''என்று சங்கு தெறித்து விழுந்த ஒரு அலறலை.

போர் உக்கிரமாக ஆக கடிதங்கள் குறைந்து தந்திகள் அதிகமாகின்றன.ஆனாலும் ஊரிலிருந்து பட்டாளத்துக்குச் சேர புறப்படும் எண்ணிக்கை குறையவில்லை.ஒரு பிடி சோறு.

தபால்காரரின் முகத்தில் இப்போதெல்லாம் ஒளியே இல்லை.எவ்விதம் இருக்க முடியும் ?அவர் நுழைகிற ஒவ்வொரு வீட்டிலும் இருளை அல்லவா விதைத்து விட்டு வருகிறார் ?அது அவரது வேலை.அவ்வளவுதான்..அவருக்குமே அது ஒருபிடி சோறுதான்.இருந்தாலும்...

ஒரு நாள் பனி சொட்டுகிறது.அன்று தபால் காரர் பேசவே இல்லை.உணவை ஏனோ என்று சாப்பிடுகிறார்.குஞ்சம்மா கேட்கிறாள் ''ஏன் சாப்பாடு நல்லால்லியா?சாப்பிடவே இல்லீங்களே?"'அவர் மறுக்கிறார் ''பசியில்லை''

குஞ்சம்மாள் போருக்குப் போன தன் மகன்களை நினைத்துக் கொள்கிறாள் அவள் பிரார்த்தனையில் அவர்கள் என்றும் உண்டு .அவர்கள் எங்கு இருக்கிறார்கள் ?எங்கோ நலமாக இருப்பதாகத் தெரிகிறது.மாதாமாதம் மணியார்டர் வருகிறதே.கடிதமும்.அவர்கள் அனுப்பும் பணத்திலிருந்து ஒரு தம்பிடி கூட அவள் எடுப்பதில்லை பட்டினி கிடந்தாலும் சரி.அது அவர்கள் வெயிலிலும் குளிரிலும் குண்டு மழையிலும் நின்று அனுப்பும் பணமல்லவா ?

ஆ!இன்று ஏன் இப்படிக் குளிர்கிறது ?குஞ்சம்மா வெளியே எட்டிப் பார்க்கிறாள் தாழ்வாரத்தில் தபால்காரருக்கும் உறக்கம் வரவில்லை போலிருக்கிறதே

அவள் ஒரு கணத் தயக்கத்துக்குப் பிறகு இறங்கிச் சென்று அவர் அருகில் படுத்துக் கொள்கிறாள் .அவரது மார்பில் கையை வைக்கிறாள் .அமைதி.அவர் மெதுவாக அவளது கையை எடுத்துத் தள்ளி வைக்கிறார் .ஆனால் தள்ளிவிடவில்லை.அவர் இருவரையும் கனத்த கம்பளிப் போர்வையால் மூடுகிறார்.இரவு முழுவதும் அவர்கள் அப்படியே கிடக்கிறார்கள் இருவருமே உறங்க வில்லை.அதே சமயம் அவர் கைகள் அவளைத் தழுவவும் இல்லை

காலையில் குஞ்சம்மா எழுந்து அவருக்கு காப்பி போடுகிறாள்.அவர் அதைக் குடித்து விட்டு கிளம்புகிறார் இனி அவர் வர சில நாட்களாகும்.போகும் முன்பு அவர் நின்று அந்த வீட்டை ஒருமுறை நன்றாகப் பார்த்தது போல தெரிகிறது.இதன் முன்பு அவர் இப்படிச் செய்ததே இல்லை

அடுத்த வியாழன் அவர் வரவில்லை.அதற்கடுத்த வாரம் புதிய தபால் காரன் ஒருவன்தான் வருகிறான்.பழையவர் வேலையை விட்டு எங்கோ போய்விட்டார்.

அதற்கடுத்த வாரம் குஞ்சம்மாவுக்கு வேறு செய்திகள் வந்தன.போருக்கு போனவர்களில் அவளது மூத்த மகன் இறந்து ஒன்றரை வருடமும் இளையவன் இறந்து சில மாதங்களும் ஆகிவிட்டன.

ஆனால் அவர்கள் போன மாதம் வரை மணியார்டர் அனுப்பிக் கொண்டிருந்ததும் உண்மைதான்

(கயிறு -தகழி சிவ சங்கரன் பிள்ளையிடமிருந்து -ஒரு கதை )