Sunday 3 May 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 19- லிடியா டேவிஸ் (Lydia Davis) The End of the Story , சாக்ரடீஸ் நகைப்பாரா? - எம் டி முத்துக்குமாரசாமி



Sunday, August 2, 2015

சாக்ரடீஸ் நகைப்பாரா?









தத்துவ ஞானிகள் என்றாலே நீண்டதாடியும் இறுகிய மோவாயும் பல்லைஇறுக்கிக் கடித்துக்கொண்டிருக்கும் பாவனையும் கொண்டவர்களாகத்தான்இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுப்புத்தியில் எப்போது நிலைபெற்றதுஎன்பது பற்றிய சரியான வரலாற்று ஆய்வுகள் இல்லை. ஆனால்தத்துவஞானிகளின் ஆதிஉருவான சாக்ரடீசிடமிருந்துதான் இந்த பொதுபிம்பம்மேற்கிலுலும் சரி நம்மூரிலும் சரி உருவாகியிருக்க வேண்டும். பழையதமிழ்ப்படங்களில் ஒரு தோளைச் சுற்றி போடப்பட்ட கிரேக்க மாராப்புசீலையுடன் சிவாஜி கணேசன் கண்கள் சிவக்க வீர வசனம் பேசிவிஷக்கோப்பையை வாங்கிக்குடித்துவிட்டு சாவதை பார்த்தவர்கள் தத்துவஞானிகள் யுகாந்திரத்திற்கும் சிரித்திருக்கவே மாட்டார்கள் என்று கற்பூரம்அணைத்து சத்தியம் செய்வார்கள். உண்மை அதற்கு நேர் எதிர்மாறானது;சாக்ரடீஸ் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் உரக்க வாய்விட்டுநகைக்ககூடியவராகவும்தான் வாழ்ந்திருக்க வேண்டும். தன்னுடைய‘குடியரசில்’ கவிஞர்களுக்கு இடமில்லை என்று அறிவித்த பிளேட்டோவின்ஆசிரியர் பிளேட்டோவை நினைத்தாவது சிரித்திருக்க வேண்டும்தானே?



சாக்ரடீஸ் சோகம் ததும்பும் விழிகளோடு ஏதென்ஸ் நகர தெருக்களில்சுற்றிக்கொண்டிருக்கவில்லை,அவர் தன்னுடன் உரையாடியவர்களையெல்லாம்அங்கதத்துடன் எதிர்கொண்டார். உள்ளபடிக்கு மேற்கத்திய இலக்கியத்தில்அங்கதம் என்பதே சாக்ரடீசிடமிருந்துதான் உருவானது என்று கருதஇடமிருக்கிறது. பண்டைய கிரேக்கத்தின் வரலாற்று ஆசிரியர்கள் சாக்ரடீஸ்தன்னைப்பற்றிய நகைச்சுவை நாடகமொன்றை வெகுவாக ரசித்துப் பார்த்தார்என்று பதிவு செய்துள்ளனர். சாக்ரடீசை விட இன்னும் அதிகமாகநகைக்ககூடியவராக டெமாக்ரிடஸ் என்ற தத்துவஞானி இருந்தாராம்.டெமாக்ரிடஸ் ஒரு வேளை பைத்தியமோ என்று பரிசோதித்துப் பார்க்கும்படிகிரேக்கத்தின் மருத்துவர் ஹிப்பாகிரடீஸ் நியமிக்கப்பட்டார். சிரிக்கும்தத்துவஞானி என்ற அரிய பெயரைப் பெற்றிருந்த டெமாக்ரிடஸ் போலஅதிகமான எதிரிகளைக் கொண்டிருந்த வேறொரு ஞானி இருந்திருக்கமுடியாது. பிளேட்டோ டெமாக்ரடசின் நூல்களையெல்லாம்கொளுத்தவேண்டும் என்று எழுதினார். மார்கஸ் ஆருலியஸ், டெமாக்ரடஸ்புழுத்து செத்தார் என்று எழுதி வஞ்சம் தீர்த்தார்(?). இத்தனைக்கும்டெமாக்ரடீஸ் அணுக்களால் ஆகிய உலகினை முதன்முதலில் கற்பிதம் செய்ததத்துவஞானியாவார். ஹிப்போகிரட்டீஸ் ஒரு போலி மருத்துவராய் இருந்துடெமாக்கிரட்டஸை பைத்தியம் என்று சான்றிதழ் வழன்கியிருப்பாரேயென்றால்பண்டைய கிரேக்கம் டெமாக்கிரட்டஸையும் மனித கீழ்மைகளைக் கண்டுநகைத்தமைக்காக பைத்தியம் என்று கொன்றிருக்கும் பண்டைய கிரேக்கம்.நகைச்சுவையும் நகைப்பும் இவ்வளவு கடுமையான கசப்புணர்வினை ஏன்ஏற்படுத்துகின்றன? ஏன் சீரிய தளங்களிலிருந்து வழுவியவர்களாகநகைப்பவர்களை பாவிக்கின்றோம்?


உண்மையான நகைச்சுவை எல்லா வகையான அதிகாரங்களுக்கும்எதிரானதாக இருக்கிறது. தத்துவவாதிகளின் நகைப்போ அடிப்படைநம்பிக்கைகளை கலைத்துபோட வைப்பதாகும். பிளேட்டோவின்‘உரையாடல்களில்’ சாக்ரடீசும் இதர தத்துவஞானிகளும் பல இடங்களில்வாய்விட்டு நகைக்கின்றனர். பிளேட்டோவை ஒரு நகைச்சுவையாளராககற்பனை செய்வது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும் அரசியல் நீதிஎன்பதை விவாதிக்கும்போதே சாக்ரடீசும் பிற ஞானிகளும் நகைக்கின்றனர்என்பதை பிளேட்டோ பதிவு செய்திருக்கிறார். அதை பதிவு செய்ய வேண்டும்என்ற உணர்கொம்புகள் அவருக்கு இருந்திருக்கின்றன என்பதே எனக்குபிளேட்டோவின் மேல் மரியாதையை அதிகப்படுத்துகின்றன. இறப்பிற்கு பின்புசெய்யப்படுகின்ற சடங்குகளைப் பற்றிய விவாதங்களில் பிளேட்டோவின்‘உரையாடல்களில்’ நாம் அதிகமும் சிரிக்கின்ற சாக்ரடீசைப் பார்க்கிறோம்.சாக்ரடீசைப் பார்த்தும் பிறர் நகைக்கின்றனர். விவாதங்களின் போக்கினைதிசைதிருப்பும் சாக்ரடீசின் உத்திகளைப் பார்த்து தார்சிமாக்கூஸ் நகைக்கிறார்.


தன் உரையாடல்களின் வழி நீதி என்பது அநீதியை விட இயல்பிலேயேஉயர்ந்தது என்பதை விளக்கும் நகரம் ஒன்றினை நிர்மாணிக்க சாக்ரடீஸ்முயற்சி செய்யும்போது அவருடைய வாதத்தினை இடைமறிக்கும் கிளௌகான்நீதியின் இயல்பென்பது வெறும் மரபுதான் என்று வாதிடுகிறார். மரபைக்கைப்பற்றும் பலகீனர்கள் அதிகாரம் மிக்க மனிதர்கள் தங்களுக்கு இழைக்கசாத்தியப்பாடுள்ள அநீதியினை தடுத்துவிடமுடியும் என்றும் சொல்கிறார்.பிறருக்கு அநீதியை இழைப்பது எல்லோருக்குமே மகிழ்ச்சிதரக்கூடியது தாம்அநீதியினால் துன்புறுவதே கொடுமையானது என்பதை அனைத்து தத்துவஞானிகளும் சபையில் ஒத்துக்கொள்கின்றனர். உரிய பாதுகாப்புஇருக்குமானால் அநீதியை பிறருக்கு இழைக்க நீதிமானும் குற்றவாளியும்ஒன்றுபோலவே தயங்கமாட்டார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகாரத்தைத் தரக்கூடிய மந்திரமோதிரம் ஒன்று இருக்குமானால் அதை அணியும் எவருமே எந்தஅநீதியையும் இழைக்கத் தயங்கமாட்டார்கள் என்று சொல்லி சிரிக்கிறார்கள்.தத்துவ ஞானிகள் அனைவரும் கூடி சிரித்த சம்பவங்களிலேயே மிகவும்ஆழமான சிரிப்பு அது. அநீதியை இஷ்டத்துக்கு இழைப்பதன் மூலமே மனிதன்கடவுளுக்கு நிகரானவன் ஆகிறான் என்றும் உரையாடல்கள் தொடர்கின்றன.


நகைச்சுவையாளராக இருந்தாலும் கூட நீதியை நிலைநாட்டும் தன்னுடையலட்சிய நகரில் பெரும் சப்தத்துடன் நகைத்தல் தடை செய்யப்படவேண்டும்என்றே சாக்ரடீஸ் சொல்கிறார். அத்தகைய நகைப்பு வன்முறையைத்தூண்டிவிட்டுவிடும், நகரத்தின் அமைதி சீர்குலைந்துபோகும் என்றும்சாக்ரடீஸ் வாதிடுகிறார். பிளேட்டோவின் ‘குடியரசில்’ தடைசெய்யப்படவர்கள் கவிஞர்கள் என்றால், சாக்ரடீஸிற்கு என்று ஒரு குடியரசுஅவருடைய லட்சியங்களின்படி அமையுமென்றால் அதில் தடைசெய்யப்பட்டவர்களாக அரிஸ்டோஃபேன்ஸ் போன்ற நகைச்சுவை நாடகஆசிரியர்களே இருப்பர்.


இன்றைக்கு அரிஸ்டோஃபேன்ஸின் நாடகங்களை வாசிக்கும்போது அவைதங்களுடைய வரலாற்று காலகட்டத்தினுள் சிக்கித் தவிக்கின்றன;சோஃபகிளிசின் துன்பியல் நாடங்களைப் போல காலத்தை விஞ்சி நிற்கின்றதன்மை அவற்றுக்கு இல்லை. ‘தவளைகள்’, ‘குளவிகள்’ போன்றஅரிஸ்டோஃபேன்ஸின் நாடகத் தலைப்புகள் கூட ஈசாப்பின்நாட்டுப்புறகதைகளுக்கு கடன்பட்டவை போல தோன்றுகின்றனவே தவிரதன்னளவில் வசீகரமானவையாக இல்லை. உண்மையில் நகைச்சுவையின்தன்மையும் இதுதான்; அது வரலாற்று காலகட்டத்துக்குள் மட்டுமே இயங்கும்.இத்தனைக்கும் அரிஸ்டோஃபேன்ஸின் நாடகங்களில் பல கவித்துவமானபடிமங்கள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக முப்பதாயிரம் நாரைகள் கற்களை தங்கள் கால்களில் கவ்விக்கொண்டு நகரம் ஒன்றினைஅமைப்பதற்காக பறந்து வரும் காட்சி அரிஸ்டோஃபேன்ஸின் காட்சிகளில்ஒன்று. பறவைகளையும் மிருகங்களையும் வைத்து எழுதப்படுகிறநகைச்சுவை கீழே விழுந்துவிட்டவனைப் பார்த்து நகைப்பது போன்றது ஆனால்அதனால் தப்பொன்றுமில்லை என்றே பண்டைய கிரேக்கத்திலும்கருதப்பட்டது.


நம்முடைய நாட்டிய சாஸ்திரமும், தொல்காப்பியமும் கூடநகைச்சுவையினை உயர்வாகக் கருதுவதில்லை. நாட்டிய சாஸ்திரம்ஹாஸ்யம் தாழ்ந்த குலத்தவருக்கான ரசம் என வரையறுக்கிறது.தொல்காப்பியமோ நகை, இளிவரல் போன்ற சுவைகள் கீழானவை எனமெய்ப்பாட்டியலில் சூத்திரமாக்குகிறது. ஆனால் பழம் இந்திய மரபுகள்நகைச்சுவையை அரசு அதிகாரத்திற்கு எதிரானதாக கணித்ததாகதெரியவில்லை. ஆதி நகைச்சுவை நாடகப் பிரதிகளில் ஒன்றான ‘மத்தவிலாச பிரகசன’த்தை எழுதியவனே அரசனாகிய மகேந்திர பல்லவன்.அரசனும் விதூஷகனும் எனவே அரசு அதிகாரமும் நகைச்சுவையும்இரட்டைகள் என்ற கருத்தே இந்திய மரபுகளில் காணப்படுகிறது. சமஸ்கிருதநாடகங்களில் வருகின்ற விதூஷகன் கதாபாத்திரமும் தெருக்கூத்து போன்றநாட்டுப்புற நாடகங்களில் வருகின்ற கட்டியங்காரனும் அரசனின் இரட்டைகோமாளி, அரசு அதிகாரத்தின் இரட்டை நகைச்சுவை, என்பதை அறுதிசெய்கின்றன. அக்பர்-பீர்பால், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் கதைகள்அரசு அதிகாரத்தையும் நகைச்சுவையையும் ஒன்றன் ஆடிபிம்பமாக மற்றதைக்கருதிய மரபின் தொடர்ச்சிகளே ஆகும். அரசனின் ஆடிபிம்பமாக கோமாளிஷேகஸ்பியரின் நாடகங்களில் தோன்றுவதற்கு பதினாறாம் நூற்றாண்டாகிறது.


துன்பியல், அரசு அதிகாரத்தை அறுதிசெய்வதற்கான உணர்ச்சி உத்திஎன்பதை ‘கவிதையியலா’க விவரித்து எழுதிய அரிஸ்டாட்டில்நகைச்சுவைக்கான அழகியல் ஒன்றையும் எழுதினார் ஆனால் அதுகிடைக்காமல் போய்விட்டது என்றொரு வழக்காறு உண்டு. இந்தசெவிவழிக்கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே உம்பர்டோஈகோவின் ‘ரோஜாவின் பெயர்’ என்ற நாவல். பதினான்காம் நூற்றாண்டுஇத்தாலியில் கதை நிகழும் இந்த நாவலில் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில்என்ற ஃபிரான்ஸிஸ்கன் பிரிவைச் சேர்ந்த பாதிரியார் இறையியல் விவாதம்ஒன்றிற்காக தன்னுடைய சீடன் அட்ஸோவுடன் மடாலயம் ஒன்றிற்கு பயணம்செய்கிறார். அந்த மடாலயத்தில் தொடர்கொலைகள் நடைபெறுவதால்அவற்றினை துப்பறியும் பணி வில்லியமுக்குக் கொடுக்கப்படுகிறது.வில்லியம் கொலைகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும் சிறு குறிப்புகளைக்கொண்டு துப்பறிந்து மடாலாயத்தின் நூலகரான குருட்டு ஜோர்ஜ் என்பவரேகொலையாளி என்று கண்டுபிடிக்கிறார். மடாலய நூலகத்தில் இருக்கும்அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியல் நூல் யாருடைய கையிலும்கிடைத்துவிடாமல் பாதுகாக்கும்பொருட்டே ஜோர்ஜ் அந்த புத்தகத்தை பற்றியாரெல்லாம் அறிய வருகிறார்களோ அவர்களையெல்லாம் கொல்கிறார் எனதெரியவருகிறது. அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியல்எல்லொருடைய கையிலும் கிடைத்துவிட்டால் எல்லா அதிகாரங்களும்அழிந்துவிடும் குறிப்பாக அதிகாரங்கள் எல்லாவற்றையும் விட பெரியஅதிகாரமான கடவுளின் அதிகாரம் அழிந்துவிடும் மத்வாதியான ஜோர்ஜ்நம்புகிறார். பிளேட்டோவின் ‘உரையாடல்களில்’ சாக்ரடீஸ் நகைச்சுவை அரசுஅதிகாரத்திற்கு எதிரானது என்று வாதிடுகிறார் என்றால் அதுவே கடவுளின்அதிகாரத்துக்கு எதிரானதாக எனவே அழிக்கப்படவேண்டியதாக ஈக்கோவின்கதாபாத்திரமாகிய ஜோர்ஜ் நம்புகிறார் எனவே தன் நம்பிக்கையின் பொருட்டுதொடர்கொலைகளையும் செய்கிறார். மதவாதிகள் எந்தக் காலத்திலும்நகைப்பதில்லை.


உண்மையைச் சொல்லப்போனால் முற்றுமுழு அதிகாரமான கடவுளுக்குஎதிரான நகைச்சுவை என்ன என்பது இன்றைக்கும் கூட மனிதனின்கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருகிறது. அரிஸ்டாட்டிலின்நகைச்சுவையின் அழகியல் தொலைந்து போனது தொலைந்து போனதாகவேஇருக்கிறது அதை மீட்டெடுக்கவோ புதிதாக எழுதவோகற்பனையற்றவர்களாகத்தான் மனித குல வரலாறு நகர்கிறது. ‘ரோஜாவின்பெயர்’ நாவலின் இறுதி வரி கவித்துவமானது; “ ஆதி ரோஜா அதன்பெயரிலேயே வாழ்கிறது நாம் வைத்திருப்பதோ பெயர்களற்றது” அதாவதுபண்டைய கீரேக்கத்தின் கண்டுபிடிப்பான அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கானஅழகியலை (பெயருடைய ரோஜா) நாம் திரும்பபெற முடியாதவாறுஇழந்துவிட்டோம். நாவலில் நூலகத்தின் அழிவும் கள்ளமற்றகுடியானப்பெண்ணின் மரணமும் கூட நகைச்சுவைக்கான உந்துதல்களைஇழந்துவிட்டதைத்தான் சொல்கின்றன.


உம்பர்டோ ஈக்கோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவலின் இறுதி வரியைசாக்ரடீஸ் படிக்க நேர்ந்திருந்தால் தனக்கு அளிக்கப்பட்ட விஷக்கோப்பையைதூக்கி எறிந்துவிட்டு ஏதென்ஸ் நகரை விட்டு சிரித்துக்கொண்டேவெளியேறியிருக்கக்க்கூடும். ஏன் உயிரை விட்டு ஏதென்ஸ் நகரின்அதிகாரத்தை சாக்ரடீஸ் நிலைபெறச் செய்திருக்கவேண்டும்? இல்லை எந்தஅதிகாரத்தையுமே யாரும் நிலைபெறச் செய்ய வேண்டும்? விஷக்கோப்பையைமனமொப்பி அருந்திய சாக்ரடீஸ் தன் கடைசி விநாடியில் வாய்விட்டுநகைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். Power is, after all, a joke.

Sunday, May 3, 2015

எனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 19- லிடியா டேவிஸ் (Lydia Davis) The End of the Story



    "I seem to be moving in the direction of less and less fiction and more and more philosophical investigation “

-Lydia Davis, Interview with Francine Prose

“Language is a labyrinth of paths. You approach from one side and know your way about; you approach the same place from another side and no longer know your way out”
- Ludwig Wiitgentein, Philosophical Investigations
   


    ஆலிஸ் மன்றோ போன்றே தீர்க்கமான சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவர் லிடியா டேவிஸ்; அவர் எழுதிய ஒரே நாவல் The End of the Story. அயன் மக் ஈவனின் நாவல் Atonement தன் கடைசி பாகத்திலாவது அந்த நாவல் ஒரு மெடாஃபிக்‌ஷன் என்பதை வெளிச்சொன்னது ஆனால் The End of the Story  தன்னை ஒரு மெடாஃபிக்‌ஷன் எங்கேயுமே அறிவித்துக்கொள்வதில்லை; அணுக்கமான வாசிப்பிலேயே லிடியா டேவிஸின் நாவல் எவ்வளவு நுட்பமான நாவல் என்று தெரியவருவதாக் இருக்கிறது. The End of the Storyஇல் பெயரற்ற கதைசொல்லி தன் வாழ்வில் தொலந்து போன காதலைப் பற்றி நினைவு கூர்ந்து எழுதுகிறாள். 32 வயதான கதைசொல்லி 22 வயதான இளஞைனோடு ஏற்பட்ட காதலையும் அதன் முறிவையும் யோசிப்பது தத்துவம் போல அழகுபெறமுடியுமா? நுட்பமும் கவித்துவமும் கூடிய, குறைந்த பட்ச, அலங்காரங்கள் இல்லாத லிடியா டேவிசின் நடையில் சாதாரணமான தினசரி நிகழ்வுகள் அவற்றின் பழகுதன்மை இழந்து அறியப்படாத உலகங்களாக மாறுகின்றன. உரைநடையினை பொற்கொல்லனின் கவனத்தோடு லிடியா டேவிஸ் செதுக்குவதால்தான் இது சாத்தியமாகிறது என்று பல அமெரிக்க விமர்சகர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். மிகைஉணர்ச்சிகளுக்கும் நாடகீய பாங்குகளுக்கும் பழகிப்போன நம் வாசக மனதிற்கு லிடியா டேவிஸின் எழுத்தின் அபூர்வ அழகு முதல் வாசிப்பிலேயே கிடைக்க சாத்தியங்கள் குறைவு. ஆனால் மொழிபெயர்ப்பில் கூட டேவிஸினுடைய உரைநடை வெகுவாக மிளிரும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    The End of the Story ஏமாற்றும் எளிமைகொண்டது.  கதைசொல்லி நாவலாசிரியைப்  போலவே மொழிபெயர்ப்பாளர். அவள் தன் வாழ்க்கையில் வந்து இப்போது தொலைந்து போய்விட்ட காதல் அனுபவத்தை மீண்டும் நினைவுகூர முயற்சிக்கிறாள். அந்த அனுபத்தை ஒரு நாவலாக எழுதினால் ஒருவேளை அந்த அனுபத்தைக் கைக்கொள்ளக்கூடும் என்று நினைக்கிறாள். அவளுடைய அனுபவம் பல வகையிலும் அவளுக்குக் கிடைக்கப்பெறுகிறது. முதலில் உண்மையில் நடந்த சம்பவங்கள். இரண்டாவதாக நடந்தவற்றைப் பற்றிய சிறிதே கோணலாகிய கதசொல்லியின் மனப்பதிவுகள். மூன்றாவதாக அவற்றை எழுதும்போது அவை அடைகின்ற மாற்றங்கள். டேவிஸின் Break it Down சிறுகதைத் தொகுதிலுள்ள பல கதைகளிலும்  இதே போன்ற உத்திகளால் கதை சொல்லப்படுவதை நாம் வாசிக்கிறோம்.  நான்  The End of the Story  நாவலை பலமுறை வாசித்திருந்த போதிலும் லிடியா டேவிஸினால் எப்படி ஒரு அனாதைத்தன்மையினை தன் கதைசொல்லலின் தொனியாக்கமுடிகிறது என்பதை திட்டவட்டமாக என்னால் சொல்ல இயலவில்லை.

    நாவலில் கதைக்களன் என்று ஏதுமில்லை, உரையாடல்களும் ஏதுமில்லை. நாவலின் போக்கில் ஒரு காதலுறவு மென்மையாகக் கீறலிட்டு, முகாந்திரங்கள் ஏதுமற்று, முழுமையாக உடைந்து போவதை நாம் அவதானிக்கிறோம். நான் அவனுக்கு கடிதம் எழுதினேனே, அவன் பதிலுக்கு தன் முகவரியோடு கூடிய உறையிலிட்ட ஃப்ரெஞ்சுக் கவிதை ஒன்றை அனுப்பினானே, நான் பதிலுக்கு எழுதிய கடிதம் அவனுக்கு கிடைத்ததா என்பது போன்ற கதை சொல்லியின் சிந்தனையோட்டங்களினூடே பிற சம்பவங்களும் கதையில் நடக்கின்றன. நினைவுக்குறிப்புகளை எழுதி வைத்திருப்பதற்கு தவறான வகைப்படுத்தும் பட்டிகள் கொடுக்கப்பட்டதால் சில குறிப்புகள் தாமதமாகக் கிடைக்கின்றன. சில ஒளிந்துகொண்டிருக்கின்றன என்று மட்டுமே அறிகிறோம். எண்ணங்களிலிருந்து செயல்களுக்கும், இடங்களிலிருந்து இறந்த காலத்திற்கும், நினைவுகளிலிருந்து விருப்பங்களுக்கும் ஊசலாடி நகர்கிறது லிடியா டேவிஸின் நாவல். ஆனால் இது நனவோடை அல்ல கச்சிதமான கூரிய வாளினைப் போன்ற துல்லியமான உரைநடை. நாவலுக்குள் ஒளிந்திருக்கும் மெடாஃபிக்‌ஷன் தீவிர சுயபரிசோதனைக்கான களம். இரக்கமற்ற, தயவுதாட்சண்யமற்ற சுயபரிசோதனைச் சிந்தனையாலேயே லிடியா டேவிஸின் நாவல் தத்துவத்தின் அபூர்வ அழகினைப் பெறுகிறது. பிற தத்துவார்த்த நாவல்கள் போல மேற்கோள்கள் இல்லை, அலுப்பூட்டும்  விவாதங்கள் இல்லை,   ஆனால் பொருளுலகு தத்துவார்த்த விசாரணைக்கான களமாக நாவலில் பரிணமிக்கிறது.

    பல அமெரிக்க விமர்சகர்கள் லிடியா டேவிஸின் தனித்துவ உரைநடையும் அதன் கச்சிதமும் அவர் ஃப்ரெஞ்சு நாவல்களையும் தத்துவார்த்த படைப்புகளையும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மொழிபெயர்த்த அனுபவத்தினால் உண்டானது என்று மதிப்பிடுகிறார்கள்.  ஆரம்பத்தில் மார்சல் ப்ரூஸ்டின் மொழிபெயர்ப்பாளருக்கு எப்படி கச்சிதமான உரைநடை அமையக்கூடும் என்று நான் வியந்தேன். பிறகு, பிறகு லிடியா டேவிஸ் மௌரிஸ் ப்லான்ஷேட்டையும் (Maurice Blanchot) மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிந்தபோதுதான் லிடியா டேவிஸின் உரைநடைக்கான சிந்தனை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் எஎன்பது துலக்கமானது.

    மௌரிஸ் ப்லான்ஷேட் பின் அமைப்பியல் சிந்தனைகளுக்கு அடிகோலியவர், தெரிதா போன்ற சிந்தனையாளர்களை வெகுவாக பாதித்தவர். ஸ்டீவன் மால்லார்மேயின் குறியீட்டுக்கவிதைகளைப் பற்றி ப்லான்ஷேட் எழுதியதை பின்னாளில் ரோலண்ட் பார்த்தும் நுட்பமாக்கினார். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் தமிழில் இலக்கியத்தை மையமாக வைத்து சிந்திப்பவர்கள் உண்டென்றால் அவர்களிடையே ஒரு சிந்தனைக்கீற்றினை இன்னொருவர் வாங்கி நுட்பமாக்கும் பழக்கம் நடைமுறையாகவில்லை என்பதை எடுத்துச் சொல்லத்தான்.

    ஸ்டீவன் மல்லார்மே ஆல்பம், புத்தகம் என இரண்டுவகை எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடுவதை ப்லான்ஷேட்டின் சிந்தனையின் தொடர்ச்சியாக எழுதுகிற ரோலண்ட் பார்த் புத்தகம் என்பது உலகை முழுமையாக தன்னகத்தே கொள்வதாகவும் ஆல்பம் துண்டு துண்டான காட்சிகளினால் உலகைக்காட்டுவதாகவும் எழுதினார். இந்த இரண்டையும் எதிர்நிலைகளாக நாம் ஒப்புக்காகவேண்டும் வைத்துக்கொண்டால் அந்த இரண்டின் கருத்தாக்கங்களின் எதிர்நிலைகளையும் கடக்கின்ற நாவல் லிடியா டேவிஸின் நாவல் The End of the Story.  துண்டு துண்டான சிந்தனைககளாக இருப்பது போல தோன்றினாலும் அவை அடைகின்ர முழுமை அதனை நாம் இடிபாடுகளாக உணர்வதும் இந்த நாவலை இணையற்றதாக மாற்றுகிறது. நல்ல வேளையாக, கதை முடிவினை உலக முடிவாக, apocalyptic vision கொண்ட நாவலாக The End of the Story எழுதப்படவில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

    ரோலாண்ட் பார்த் ஒருமுறை எழுதினார்: “ The future of the Book is the Album, just as the ruin  is the future of the monument.”  டேவிட் விண்டர்ஸ் என்ற விமர்சகர் ரோலாண்ட் பார்த்தின் பின் வரும் வரிகள் லிடியா டேவிஸின் நாவலை கச்சிதமாக சித்தரிக்கின்றன என்று எழுதினார்:

“The book is destined to become debris, an erratic ruin; it is like a sugar cube dissolving in water. Some parts sink; others remain upright, erect, crystalline, pure, and brilliant”

ஆம் உண்மைதான், லிடியா டேவிஸின் The End of the Story சர்க்கரைக் கட்டி நீரில் கரைவதைப் போன்றதொரு நாவல் பல துகள்கள் கரைந்துவிடுகின்றன, பல துகள்கள் ஒளிர்கின்றன.