Thursday 14 May 2015

குமிழிகள்-பிரமிள்




குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.
-பிரமிள்
--------------------------------------------------------------------
இதிலுள்ள "கைப்பிடியளவு கடல்" என்ற சொல்லே, சிறப்புக்கருதி கவிஞரின் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதை பரந்தாமன் ஒரு கட்டுரையில் "பிரமிள் முன்பு வாழ்வைக் கண்ணாடியில் மட்டும் பார்த்தார் ('கண்ணாடியுள்ளிருந்து' என்ற கவிதைத்தொகுப்பு), இப்போது கடலையே கைப்பிடியளவுக்குக் கொண்டுவந்து விட்டார்" என்று குறை கூறினார்.
அப்போது பிரமிள் ஒரு கட்டுரையில் அதை மறுத்தார்.
'கவிதை காட்டும் குறியீட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால், இக்குறை கூறப்படுகிறது. "கைப்பிடியளவு கடல்" என்பது வாழ்க்கையை அல்ல; ஒரு மலரை. கைப்பிடியளவுள்ள மலர் ஒரு கடலையே தன்னுள் அடக்கியுள்ளது என்ற நேர்பொருளைவிட்டு அதன் படிமத்தை மாற்றிப் புரிந்துகொண்டதால் குறைகூற நேர்கிறது.' ('சஞ்சாரம்'-கொல்லிப்பாவை) என்று விளக்கினார்.
ஆன்மநிலையின் வெளிப்பாடாகவே இக்கவிதை பிறந்துள்ளது.உயிர்க்குமிழி இன்னும் உடையாமல் வாழ்க்கை நதியில் நழுவிச் செல்கிறது; உடைந்ததும் முழுமையுடன் சங்கமித்துவிடும். உடையும் குமிழிக்கு எதிர்ப்பதமாய், குவிந்துள்ள மலர் மொக்கு வெடிக்கிறது. இறப்பென்பது முழுமையை எதிர்கொள்வதுபோல், பிறப்பு என்பதும் இன்னொரு புதிய முழுமையில் தன்னை விரித்துக்கொள்வதுதான்...
- கால சுப்ரமணியம்