புதுவகை எழுத்து என்கிற ஒரு எழுத்து முறையை 1990 கள் கால கட்டத்தில் மிக சுவாரஸ்யமாக உருவாக்கியிருந்தேன். நம் தொன்மம், பண்பாடு, வரலாறு, நிலவியல், அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் கிளையை விரித்து விரித்து புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியிருந்தேன்.
அப்போது நம் தமிழ் பின்னைனவீனத்துவ ஆசாமிகள்
//படம் போட்டு பாகங்களைக் குறிக்கும் fashion // ஐ அறிமுகப்படுத்தி ரொம்ப ஓவர் ஆக சீன் போட்டார்கள்.
உடனே நானும் களத்தில் இறங்கி அடித்தேன்.
அந்தச சரித்திரப் புகழ் பெற்ற கட்டுரை தான் இது.
ரொம்பப் போர் அடித்தால் விட்டுவிடுங்கள்...
------------------------------------------
தொன்மங்களின் குறியீடுகளில் கட்டமைக்கப்படும் புதுவகை எழுத்து
- கௌதம சித்தார்த்தன்
1.
வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதே கலை இலக்கியப் படைப்புகளின் சவால். வரலாறு முழுக்க அந்தச் சவால்களை எதிர்கொண்ட படைப்பாளிகளே வரலாற்றின் பக்கங்களில் கையெழுத்திடுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொள்றும் அமைப்பாக்கத்தில் ஓயாது தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது எழுத்து.
இன்றைய மனித வாழ்வு ஒற்றைப் பரிமாணத்தில் தட்டையாய் நெளிவதல்ல. அது பல்வேறு பரிமாணங்களில் கிளை வெட்டித் தாவும் எல்லைகளற்ற நீட்சியில் விரிந்து பரவுகிற பெருவெடிப்பு. அதன் எதிரெதிர் பிம்பங்களைக் கலாசிருஷ்டியின் நக இடுக்குகளில் சிறைப்பிடிக்க வேண்டுமெனில் இதுவரை ஊடகமாய் செயல்பட்ட வந்த மொழியிலிருந்து முற்றாக விலகி நவீன மொழியின் அத்தனை சாத்தியப்பாடுகளையும் முன் வைக்க வேண்டும்.
இதுவரையிலுமான எதார்த்தப் பிரதியினூடே விரையும் கதைமொழியின் நேர்கோட்டுப் பாதைக்கும். மனித வாழ்வின் தட்டையான உழுசால் தடத்துக்குமிடையில் இணைக்கிற இணைவுக்கோடாக படைப்பாளி செயல்பட்டுக் கொண்டிருந்ததை மூன்று கோடுகளாக இணைக்கலாம்.
// ப // வடிவத்தைப் பக்கவாட்டில் திருப்பி வைத்தாற்போல.
(படம் 1 ஐக் கவனியுங்கள்.)
முதல் நேர்கோட்டை கதாபிரக்ஞையில் உழலும் படைப்பு மனத்திற்கும், அதன் கீழுள்ள நேர்கோட்டை மனித வாழ்வியல் கூறுகளுக்கும் பொருத்தலாம். இரண்டு நேர் கோடுகளையும் இணைக்கும் விதமாகச் செயல்படும் குறுக்குக் கோட்டை எழுத்தின் ஆற்றல்மிக்க வீச்சாகக் கொள்ளலாம். முழுமையற்ற கலை ஆளுமையாய்த் திறந்து கிடக்கும் நான்காவது கோடு.
கோடுகளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கான பயணம்: வாழ்வின் விந்துத் துளிகளிலிருந்து கலாபூர்வத்தின் குழந்தைமைக்கு. பறந்து திரியும் ஆகாயத்திலிருந்து உஷ்ணம் பாய்ந்த காலடி மண்ணின் யதார்த்தத்திற்கு. மற்றும் அழுகையிலிருந்து மகிழ்ச்சிக்கு.
இந்த தரிசனத்தின் பாங்கை வெகுசீராக உள்ளடக்கத்தின் பிம்பத்திற்கேற்ப வலங்கை, இடங்கை வழக்காரமாக மாற்றி மாற்றி "தலித் கதையா.. இடங்கையா எழுது..." "சைவப் பிள்ளைமாரின் சிந்தாந்த நெடியா வலங்கையா எழுது.." என அடைக்கும் கதையமைப்பு.
காலங்கள் துருவேறுகையில் நிறம் மாறும் மனித வாழ்வு இந்த அடைப்புக் குறிக்குள் அடைபடாமல் நெளிகின்ற ஓட்டத்தில், எழுகிறது மேலும் ஒரு கோடு. அதுவே நவீன எழுத்து. யதார்த்த எழுத்தின் வீச்சு திகைத்துத் திணறும் கட்டத்தில். மேல் நோக்கி எழுகின்ற நவீன எழுத்தின் ஆற்றல். முழுமையடையாத கலை ஆளுமையின் சட்டகத்தை மற்றொரு கோடாக இணைத்து முழுமையாக்குகிறது. நான்கு பரிமாணங்களில் மிளிர்ந்து நிற்கிறது சட்டகம்.
2.
சொற்களும் மொழியும் சிதைந்து நீட்ட நீட்ட நெளி நெளியாய்ச் சுருளும் வாழ்நிலை வினோதத்திற்கும் - நேர்கோடு மற்றும் வளைகோட்டுப் பாதைகளாலான புதிர்வழியில் சுழலும் படைப்பின் செய் நேர்த்தித்திறனுக்கும் இடையில் தடுமாறுகிறது, நவீன கதைமொழியின் உயிர்த்துடிப்பு.
இந்த சமச்சீரற்ற நெருடலுக்கான காரணத்தைத் தீவிரமாய்ப் பரிசீலனைக்குட்படுத்தும் போது நம்மை முதலாவதாகத் தாக்கும் விஷயம்: தமிழ்ச் சூழலுக்குச் சற்றும் ஒவ்வாத கதைமொழியின் நவீனம். இரண்டாவதாக, எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்ற வார்த்தைகளின் தன்மையை. ஆங்கில மொழியிலிருந்து இடப்பெயர்வு செய்யும் பாணியில் வலிந்து புகுத்தும் போது, முற்றாகச் சிதைந்து போகிறது. அதாவது, ஒரே மாதிரியான எழுத்துச் சுழல்வுகளையே எல்லாப் படைப்புகளின் மையத்தின் மீது திணிக்கும் தன்மையையும், எழுத்தின் தீவிரம் முனை மழுங்கும் அவலத்தையும், தொடர்ந்த ஊடகங்களின் தொணதொணப்பில் நவீனம் என்று ஏற்றுக் கொண்டுவிட்ட சூழலாக உருமாறுகிறது.
மேலைநாட்டுக் கலாபூர்வமான பாணிகளை - உத்தி, நடை, வாக்கிய அமைப்பாக்கம் போன்ற ரீதியில் - காலங்காலமாய் பின்பற்றியே இயங்கிக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பின்பற்றுவது உயர்ந்தபட்ச எழுத்து என்று முத்திரை குத்தி விட்டார்கள் இலக்கிய பீடங்கள்.
இறக்குமதி செய்யப்படுகின்ற நவீன கதைமொழியில் துடிக்கின்ற நவீன வாழ்வுக்கும், தமிழ்மொழியின் நவீனத்தில் துடிக்கும் நவீன வாழ்வுக்கும் நிச்சயம் முரண்பாடுகள் இருக்கின்றன. இருந்துதான் தீரவேண்டும் என்பது தெள்ளத்தெளிவு. ஏனெனில், மேலைநாட்டு மண்ணில் வேர்பிடித்திருக்கும் நவீன வாழ்வின் ரத்தமும் சதையுமான நவீன கதைமொழியின் உயிர்ப்பு. தமிழின் நவீன வாழ்வில் இணையும் போது பல்வேறு பரிமாணங்களில் முரணடையவே செய்யும். உலக யுத்தங்களால் சிதிலப்பட்டுப்போன மனித வாழ்வின் சிதைவுகளை கலாசிருஷ்டியாக்கும் பல்வேறு பரிமாணங்களில் மேலைநாட்டின் நவீன கதைமொழி உருப்பெறுகிறது.
நாமும் அதை வாயைப் பிளந்து கொண்டு பின்பற்றும் போது நம்முடைய சுயத்தை இழந்து ஆகாசத்தில் தொங்கும் அவலங்களையே கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அப்படியெனில் இங்கு மனித வாழ்வு சிதையவில்லையா? வண்ணத்துப் பூச்சியின் குதூகலமான சிறகடிப்பிலும், பூக்களின் ஆனந்தமான மணத்தின் நுட்பமான அழகியலுடனும் தலை சுழித்துச் செல்கிறதோ என்று வண்ணதாசனின் பறவைப் பார்வையுடன் தட்டையாய்க் கேட்க வேண்டியதில்லை. கண்முன்னே விரிந்து கிடக்கிறது. மனித வாழ்வின் பரிமாணங்கள் நார்நாராய்க் கிழிந்து தொங்கும் அவலம். ஆனால், யாருடையதோ போல். இந்த "யாருடையதோ போல்" என்கிற Illusion ஒரு மிகப் பெரும் அற்புதம். கலையின் எல்லைகளைக் குறுக்கும் அவலமும் அதுதான், மற்றும் கலையின் பூரணத்துவம் தொடம் சிகரமும் அதுதான்.
உலகின் நவீன கதைமொழியில் கிளை விரித்தோடும் ரத்த ஓட்டத்தின் பிசுபிசுப்பு வேறு. தமிழின் ரத்த ஓட்டத்தின் பிசுபிசுப்பு வேறு. போர் நிகழ்வுகளின் கொடூர வன்மத்தினால் சிதிலமடைந்து போன மனிதனின் நவீன வாழ்வின் அம்சங்களையும், அணுப்புகை வீச்சம் பரவும் மண்ணின் நிற மாறுதல்களையும் எலெக்ட்ரான் யுகத்தின் யந்திர இயக்கங்களில் நெளியும் வினோத அசைவுகளையும் நவீன மொழியில் உணரலாம்.
காஃப்காவின் நாயகன் ஒருநாள் அதிகாலை பெரிய கரப்பான் பூச்சியாக மாறிப் போவதும், நீ கைது செய்யப்பட்டிருக்கிறா யென்று தகவல் தெரிவித்து விட்டு கைது செய்யாமலேயே வெட்ட வெளியைச் சிறைக்கூடமாக்குவதும், மார்க்வெஸ்ஸின் எரிந்திராவை. அவளது காதகிப்பாட்டி. இன்னும் பலநூறு வருடங்களுக்கு விபச்சாரம் செய்து சம்பாதித்தால் தான் உனது கடன் தீர்ந்து விடுதலையாவாய் என்று சொல்வதும். ஜாய்ஸின் நனவோடை உத்தியும். போர்ஹேஸின் புதிர்வழிச் சுழலும். கால்வினோவின் கதை முடிச்சுகளில் இணைந்து தாவும் கால விளையாட்டும்... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழின் வேர்கள் வேறு. மதம் மொழி இனம் என்று கூர்மையான சவரக் கத்தியைத் தொண்டையில் சொருகி பீய்ச்சியடிக்கும் குருதியில் காய்கள் நகர்த்தும் அரசியல் வன்மத்தில் சிதிலமடைந்துள்ளது மனிதவாழ்வு. தங்களது வேர்களைக் கடைசிவரை அடையாளம் காட்டாமல் சரித்திரத் திரிப்புகளில் மனித உடலின் மீது தொடுக்கும் தாக்குதல். நாகரிகம் பின்னிய வலையில் இரையாகி விழுந்த இனக்குழு மனிதனின் வெறுமை. செழுமையான கதை சொல்லும் மரபில் புதைந்து கிடக்கும் ஜாலத்தன்மையை அழித்ததனால் மேலும் சிக்கலாகிப்போன உறவுகள் என்று நீள்கின்ற வேர்களின் பிரிகளை மொழிப்பின்னல்களாக உருமாற்ற வேண்டும்.
நமது நவீன மொழியை நமது மண்ணின் உயிர்ப்பிலிருந்து தான் உருவாக்க வேண்டும். தமிழுக்குச் சற்றும் ஒவ்வாத உலகின் நவீன மொழி சார்ந்த உத்திகளைப் புறம் தள்ளி தமிழின் ஜீவத்துடிதுடிப்பை மீட்டெடுக்கும் புதுவகை எழுத்து இங்கிருந்தே புதுமலர்ச்சியுடன் தோன்றுகிறது.
சமூகப் பிரக்ஞையும் கலாப்பிரக்ஞையும் ஒருங்கே இணைந்த தீவிரமான கலைஞனின் ஓயாத தஹிப்புணர்வுகளிலும், நவீன வாழ்வின் சிக்கல்கள் குறித்த தார்மிகமான தேடுகைகளிலும், மொழிசார்ந்த பண்பாடும் கலாச்சாரத்தின் வேர்வை நெடியும் கமழ இரண்டாயிரமாண்டு மொழி மரபை உடைத்துக் கொண்டு பிறப்பதே புதுவதை எழுத்து. அதன் வேர்களில் நவீன கதை கட்டமைக்கப்படும் போது உலக அளவிலான புதுவகை எழுத்து இந்த மண்ணிலிருந்தே சுயமாகப் பிறக்கும். மட்டுமல்லாமல், நவீன வாழ்வுக்கும் நவீன கலைக்குமிடையே உள்ள இடைவெளியைக் காத்திரமாக நிரப்பும்.
தமிழில் நவீனத்துவ எழுத்து சரியான முறையில் வெளிப்படவேயில்லை. வாசகனை பயமுறுத்துதல், குழுசார்ந்த கும்பல்களில் பல்லக்குத் தூக்குதல். விமர்சனத் திலகங்களின் சுண்டுவிரல் நீட்சி இவைகளின் இடுக்குகளில் வீரியமான நவீனப் படைப்பு வெளிவர இயலாது. கருத்த படுதாவாய் விரிந்து பயமுறுத்துவதல்ல நவீனப் பிரதி.
மாறாக சாதாரணமான தொனியில் அசாதாரணமான எல்லைகளைத் தொடுவது. இவ்வசாதாரணங்களைக் கடந்து நவீனப் பிரதியில் நுழையும் வாசகன் சுற்றித்திரியும் எல்லைகளினூடே மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கும் எழுத்தாளனின் உயிர்ப்பைப் பிடிக்க வேண்டும். அந்த கண்ணிமைக் கணத்தில் எழுத்தாளனின் பிரபஞ்சப் பிரக்ஞை வாசகனின் ரத்த ஓட்டத்தில் மிதந்து கொண்டிருக்கும் குமிழிகளின் கண்ணாடிப் பரப்பில் பதிவாகிறது. இப்பொழுது ரத்த ஓட்டத்தின் வீச்சு வேறுவிதமாய்ச் சுழல்வதை உணரலாம். "பிரதியில் எழுத்தாளன் செத்துப்போய்விடுகிறான் " என்று கணிக்கும் ரோலான்ட் பார்த்தின் கருத்தியலுக்கு மாறாக, புதுவகை எழுத்தில் எழுத்தாளன் சாவதில்லை. அவன், வாசகன் என்னும் கண்ணாடிச் சட்டகத்தில் பட்டுப் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து நிற்கமுடியும்என்பதே அதன்வெற்றி.
நவீன எழுத்தின் சிக்கல்களில் உருப்பெறும் Labyrinth என்னும் புதிர்வழிச் சுழலை இப்படிக் கட்டமைக்கலாம்:
(படம் 2 ஐக் கவனியுங்கள்.)
இரண்டாயிரமாண்டு மொழி மரபில் சுழலும் முழுவட்டச் சுழல்வு. அரைவட்டமாய் அதைக் கிழித்துக் கொண்டு எதிர் விசையில் சுழலும் மண்சார்ந்த பண்பாடும் கலாச்சாரமும் இன்னொரு முழுவட்டச் சுழல்வு. எளிய சொல்லாடல்களின் இணைவுச் சிக்கல்களில் புதிர்மொழியாக மாறி நினைவிலி மனத்தில் கிடக்கும் அற்புதங்களைக் கிளைவெட்டி மேலெடுத்துச் செல்லும் சுழற்சி. எதிரும் புதிருமான இவ்விரு முழுவட்டச் சுழற்சிகளையும் குறுக்கு வெட்டாய்க் கிழித்துக் கொண்டு சுழலும் வாழ்வியல் வீச்சு. எழுத்தின் மைய அச்சில் சுழலும் மூன்று முழு வட்டங்களின் இணைவை அதீத சுழற்சியாக்குவதே நவீன எழுத்தின் ரகசியம். நேர்கோடாய் நீள நீள நெளியாய்ச் சுருண்டு சுருண்டு புதிர் வட்டக் கோடுகளில் வாசகனைக் கரைத்து முடிவற்ற சுழற்சியாக்கும் அற்புதம். இந்த சுருட் பிலத்தில் விரிகின்ற அபூர்வ தரிசனம் உலகளாவிய ஒரு பார்வையை (Universal Vision) உள்ளடக்கியதாக மாறுகிறது.
3.
வாய்க்காலில் மீன்பிடிக்கும் சின்ன வயது ஞாபகக் குமிழிகள் உடைகின்றன. குட்டைக்குள் நீரிறைத்த பிறகு மதகுக்குள் தேங்கியுள்ள மீன்களை வெளியே வரச்செய்ய வேண்டும். மதகுக் கண்மாய்க்குள் ஒருபுறம் நுழைந்து, மீன்கள் சேறும் சகதியுமான செத்தைக் கூளங்கள் மற்றும் பாம்பு ஆகியவைகளை வைக்கோலால் தள்ளிக் கொண்டே மறுபுறத்தில் வெளியேற வேண்டும். குறுகலான இருட்குகையின் பிலத்துவாரத்தில் தவழ்ந்து தவழ்ந்து நீண்ட தூரம் செல்லும்போது வைக்கோற் பிரிகளில் நெளியும் புதிர்வழிச் சுழல், கதைக்காரனான என் அய்யா எனக்குச் சொன்ன மயில் ராவணங் கோட்டையின் சுற்று வழிகளாய்ச் சுழல்கிறது. நீண்டு திரும்பும் பாதை மச்சகன்னியின் செதில் மினுமினுப்பையும், செத்தைக் கூளங்களில் மினுங்கும் மந்திரக் குளிகைகளான கூழாங்கற்களின் மாயாஜால சிலிர்ப்பையும் என் உடலெங்கும் நிகழ்த்தியது. காலம் சமைந்ததை உணர்ந்தேன். பல மணி நேர நகர்வு என்னுள் ஒரு சில கணங்களாகச் சுருண்டிருந்த அற்புதப் பயணமாக, மாய யதார்த்தமாக மாறியிருந்தது.
இன்னும்அந்தச்சுழலுக்குள்ளேயேசுற்றிக்கொண்டிருந்திருந்தால் காலம் நகராமல் சிறுவனாகவே இருந்திருப்போமோ என்று பல நாட்களாக யோசித்திருக்கிறேன். அந்த அபூர்வ தரிசனம்தான் எழுத்தாக மாறும்போது, என் படைப்புகளில் உயிர்ப்புடன் செயல்படும் போது, வாசகனின் தலைக்கு மேலே காலத்தை திரைந்து நிற்க வைக்கிறது. 1001 அரேபிய இரவுகளில் மரணத்தைத் தள்ளிப் போடுகின்ற ஷெகர்ஜாத்தின் சொல்கதைகள் நிகழ்த்திய காலமற்ற தன்மை. முற்றிலும் புதுமலர்ச்சியாக வேறொரு பரிமாணத்தில் காலத்தை உறைய வைக்கின்ற நித்ய கணம்...
இந்த கணங்களில் செயல்படும் நினைவிலி மனத்தின் ஆற்றல் கால விளையாட்டின் பல்வேறு சாத்தியங்களை முன் வைக்கிறது.
ஆனால் கனவு மனம், நினைவு மனம், நினைவிலி மனம் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளையே பேசிக்கொண்டிருக்கிற நவீன மொழி உடல் சார்ந்த பிரச்னைகளைக் காத்திரமாக முன் வைப்பதில்லை. உடல் சார்ந்த வாழ்வின் கவிச்சைகளை யதார்த்த தளத்தில் அடைக்கும் அவலமே தொடருகிறது.
கீழ்த்தட்டு மக்களின் வாழ்வில் பிரதான பங்கு வகிக்கும் உடல் சார்ந்த இயக்கம் இதுவரை எழுதப்படாத பக்கங்களில் இலக்கியப் போக்கை உடைக்கும் ஆற்றலுடன் வருகிறது. இந்த உடல் சார்ந்த பிரச்னைகளை எதிர்க் கலையாக மாற்ற நவீன மொழியின் பரிமாணங்கள் போதவில்லையென்றே சொல்லலாம். இந்த வீரியமான உடல் சார்ந்த மொழி நவீன மொழியின் அழகியலில் இல்லை, புதுவகை எழுத்தின் வன்மத்தில் இருக்கிறது.
எனில், நவீன மொழியில் சுழன்றோடும் புதிர் வழிச் சுழலை புதுவகை எழுத்தின் ஜீவாதாரமாக மாற்றும்போது, அதன் வட்டச் சுழல்வுகளை உடலின் வளை கோணங்களாக உருமாற்ற வேண்டும். உடல் சார்ந்த பிரச்னைகளில் உயிரோட்டமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொன்மங்களின் குறியீட்டுச் சட்டகங்களிலிருந்து புதுவகை எழுத்தின் கட்டமைவை எழுப்ப வேண்டும்.
(படம் 3 ஐக் கவனியுங்கள்.)
கனவு மனம், நினைவு மனம், நினைவிலி மனம் ஆகிய மூன்று கோடுகளின் முக்கோண வடிவில் நவீன வாழ்வு இயங்குவதாகக் கொள்ளலாம். ஒரு புள்ளியிலிருந்து விரியும் கனவு மனம் நினைவு மனம் என்கிற இருசாய்வுக் கோடுகளில் பதுங்கியுள்ள Tale என்னும் சொல் கதைகளும் எழுத்துக் கதைகளும் மிளிர்கின்றன. இரு கோடுகளையும் இணைக்கும் நேர்கோட்டின் நினைவிலி மனத்தில் மறைந்திருக்கும் மொழி மரபின் வீச்சில் திரிகோண வடிவமாக மாற்றம் பெறுகிறது.
இதே போல இதற்கு நேரெதிர் நிலையில் இன்னொரு முக்கோணப் பார்வையில் உடல் சார்ந்த மொழியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். ஒரு புள்ளியிலிருந்து விரிந்து கீழிறங்கும் இரு சாய்வுக் கோடுகளில் உடல் எதிர்கொள்ளும் நேரடியான பிரச்னையும், புலனாகாத பிரச்னையும் ஊடுருவுகின்றன. இந்த இரண்டு கோடுகளையும் இணைக்கும் நேர்கோட்டின் பரப்பில் உடல் எதிர் கொள்ளும் காலம் சார்ந்த பிரச்னை இருக்கிறது.. இப்பொழுது அந்தக் கோடுகளில் மறைந்துள்ள சொல் கதைகளும், எழுத்துக் கதைகளும்,மொழி மரபும், மற்றொரு திரிகோண வடிவமாக மாற்றம் பெறுகிறது.
இந்த இரண்டு முக்கோணங்களும் எதிரும் புதிருமாய் இணையும் அறுகோணத்தில், நமது தொன்மத்தின் குறியீடுகள் மலர்ச்சி பெறுகிற முற்றிலும் புதுவகையின் தனித்தன்மை.
ஒரு கட்டத்தில் உலக இலக்கியத்தின் போக்கை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது ரஷ்ய இலக்கியம். பிரெஞ்சு, ஜெர்மன் என்று நகர்ந்து இன்று அந்நிலை லத்தீன் அமெரிக்காவுக்கு. (இத்தாலியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாய் அறிவு ஜீவிகள் பகர்கிறார்கள்) லத்தீன் அமெரிக்காவின் தனித்தன்மையான மொழியும், ரத்தமும் சதையுமான அந்த மண்ணின் தொன்மங்களும் இணைந்து உருவான நவீன எழுத்து உலக இலக்கியத்தின் போக்கை நிர்ணயிக்கிறது.
நமது செழுமையான சொல்கதைகளினூடே சுருண்டிருக்கிற ஆழ்மனத்திரிபுகளில் காலூன்றி, உடல் சார்ந்த மொழியை இதுவரையான எழுத்தின் எதிரீடாக தொன்மத்தின் குறியீட்டு அமைவுகள் மாற்றுகின்றன. அதன் எழுதப்படாத தனித் தன்மையான புனைவாக புதுவகை எழுத்தை எழுதும்போது உலக இலக்கியத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழியாக தமிழின் புதுவகை எழுத்து மாறும்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=981107308566458&id=100000015930586
சாத்தாவு
- கௌதம சித்தார்த்தன்
மறுபடியும் நான் அதைப் பார்த்தேன். அறையில் ரீங்காரமிட்டுச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த நிழலின் சிறகடிப்பை. அது ஒரு சிறிய வண்டு. நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மேலே வாசிக்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்த அதன் ஓசை தலையில் கிர்ரென்று எகிறியது. சரேலென்று எனக்குள் பொங்கிய ஆவேசத்தில் அதன்மீது புத்தகத்தை வீசியடித்தேன். குறி தவறிப் பரண்மீது பட்டுஅதிலிருந்த பழம்பொருட்கள் சிதறி விழுந்ததில் செம்பழுப்பு நிறத்தில் கூழாங்கற்கள் உருண்டோடின.
இறந்த காலத்தின் புழுதி, நிகழ்காலத்தில் இணையும் காட்சியாக, அறை முழுவதும் எதிரொலித்தது. ஓரிரு நிமிஷங்கள் திகைத்துப் போய் நின்றவன், மெல்லச் சுதாரித்துக் கொண்டே அந்தக் காலத்தினூடே நடந்து போனேன். கால்களில் தட்டுப் பட்டன கூழாங்கற்கள். மெதுவாக அவைகளைப் பொறுக்கியெடுத்தேன். அந்தக் கற்களின் ஈரம் என் உள்ளங்கைக்குள் பாய்ந்தது. அந்தக் கணத்தில் ஒரு நூற்றாண்டு கால வமிசாவளியின் நாடித் துடிப்பு எனக்குள் ஓடிக் களித்தது.
ஆற்றாமை ததும்பும் கற்களின் அமானுஷ்யமான மௌனத்தைக் கைகளுக்குள் இறுக்கிக் கொண்டேன். அவை என் கைகளில் மேலும் கீழும் குலுங்க ஆரம்பித்தன. உள்ளங்கைக் குழிவிலிருந்து எம்பிக் குலுங்கும் மெல்லிய அசைவில் கற்கள் சுழன்று சுழன்று குறி சொல்லும் சங்கேத மொழியாக மாறி, கோடுகளில் சுழித்தோடுகிறது. என் மூதாதை முத்தேழ் நாய்க்கனின் மக்கிய வாசனை அறையெங்கும் புழுதி பரப்புகிறது.
கூழாங்கற்களின் நெகுநெகுப்பும் குளுமையும் உள்ளங்கையில் படுவதும் எழுவதுமான கணங்களில் காலம் பின்னோக்கி நகர ஆரம்பித்தது. கற்கள் கையில் படும்போது ஏற்படுகின்ற தொடு உணர்ச்சி கரத்தை முன்னோக்கி உந்த, வெற்று வெளியில் பட்டுத் திரும்பும் கற்கள் இப்போது வேறு விதமாய் இருக்கின்றன. கற்களின் சுழற்சி எனக்கு முன்னால் உயர்ந்து எழும்புகையில், நான் எதிரில் உட்கார்ந்திருந்தும் வெகு தொலைவிலிருக்கிறேன். எழும்புதலும் வீழ்தலுமான இடைவெளியின் தூரம் ஒரு அங்குலமேயிருந்தாலும் காலத்தினூடே தாவிய முடிவற்ற பாய்ச்சலின் நெடுந்தொலைவில் பயணம் போகின்றன. காலவெளியில் சுழல்கின்றன கற்கள்...
********************************************
ராசா, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஏன்று இந்த ஏழு கூழாங்கற்களைப் பரப்பிக் கல்குறி கட்டுகிறார் முத்தேழ். ஏழு முத்துக்களை வைத்து மனித வாழ்வின் தீர்க்க தரிசனங்களைக் கணிப்பதால், வம்சாவளி முழுக்க முத்தேழு என்ற பட்டம் தொடர்ந்து வருவதை அவரது கையில் குலுங்கிய கற்கள் சொல்லின. பல்வேறு வர்ண வடிவங்களில் உள்ள அக்கற்களைக் குலுக்கி ‘ப’ வடிவத்தைப் பக்கவாட்டில் திருப்பி வைத்தாற்போல மூன்று கோடுகளாய் வைக்கிறார்... கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று நிலைகளில் ஓடிக் கணிக்கும் அவை. மனிதனுக்கும் காலத்துக்குமான தாத்பரியத்தைக் கொண்டு சிருஷ்டித்த அந்தக் குறியீட்டு மொழியின் நம்பிக்கையில் மனித வாழ்நிலையின் தரிசனம் தெரிகிறது. குறியீடுகளின் நகர்வுகளில் தெரியும் தீர்வுகளில் மனிதன் ஆசுவாசப்படவும், எழுச்சி பெற்று எழுந்து நிற்கவுமான பிரசன்னம் அது.
முதல் கிடைமட்டக் கோட்டில் மூன்று கற்களும், அதிலிருந்து கீழிறங்கும் நேர்கோட்டில் இரண்டு கற்களும், மூன்றாவதான கிடைமட்டக் கோட்டில் இரண்டு கற்களுமாக வீடு கட்டும்போது சச்சதுரமாக அடைபடாமல் பொக்கை வாயாய்த் திறந்து கிடக்கிறது நாலாவது கோடு. இந்தக் கல்குறி அமைப்பை, குறி கேட்பவனின் சாதிக்கேற்ப வலங்கை வழக்காகவும் இடங்கை வழக்காகவும் பொக்கைவாய் வரும்படி வீடு கட்டிக் குறி சொல்லும்போது புலனாகாத அவ்வொற்றைக் கோட்டில் நான்கு வர்ணங்களின் நிறங்கள் பிரிகின்றன. சாதீயத்தின் அடைபட முடியாத பொக்கைவாய், காலங்களற்றுச் சிரிக்கிறது.
முத்தேழ் கற்களைக் குலுக்கும்போது குறி கேட்பவன் தனக்குப் பிடித்தமான ஒரு கல்லை மனசுக்குள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் குறிக் கற்களைக் கட்டியதும், தான் குறித்து வைத்திருந்த கல்லை வெற்றிலைக் காம்பினால் தொடுவான் குறிகேட்பவன். கையளவு நம்பிக்கையில் விரியும் விசுவரூபக் குறியீடுகளை உசாவிக் குறி சொல்லுகிறார் முத்தேழ்.
கோடுகளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கான பயணம். மனித மனத்தின் நாபிக் கொடியிலிருந்து நம்பிக்கையின் மூச்சுக் குழலுக்கு, அபத்தத்தின் ஆறுதலிலிருந்து நிசத்தின் தரிசனத்திற்கு மற்றும் கடவுளிலிருந்து மனிதனுக்கு. அந்த அகண்ட பரப்பு முழுமைக்கும் படர்ந்து விரிகிற முத்தேழ் நாய்க்கரின் வாக்கு வன்மை என்பது அவருடையதல்ல. அவருடைய குருதி நாளங்களில் உறைந்திருக்கிற வம்சாவளியின் வாக்குப் பலிதம். குறிசொல்லி என்கிற ஒரு கோட்டையும் குறி கேட்பவன் என்கிற மற்றொரு கோட்டையும் இணைக்கும் செங்குத்தான நேர்கோடாய் இருபத்திநாலு நாட்டு மக்களும் திரண்டு அவரது கையில் கட்டிய கங்கணப்பலிதம்.
முத்தேழ் நாய்க்கரின் சொல் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பெரும் நிலைகளில் பயத்தையும் துக்கத்தையும் துடைத்துக் போடுவதைச் சகிக்க முடியாமல் உறுமித் திரிகின்றன பில்லி சூனியங்கள். தங்களது பிராந்தியத்தை அடித்து நொறுக்குவதை இனியும் பொறுக்காமல் வெந்து சுழல்கிறது சூறைக்காத்து. தன் சிக்குப் பிடித்த தலையில் ஈறுகோளியில் ஈர்க்கிக் கொண்டே உதிர்ந்த முடியைச் சுழட்டி வீசுகிறது செந்தூலி.
சூன்யத்தின் இருட்குகையில் உயிர் பிடித்து வரும் குட்டிச் சாத்தானே அது ஏன அறிந்துகொண்ட முத்தேழின் கங்கணம் இறுகுகிறது. அவர் மீது வந்து மோதுகிற சூன்யவார்த்தைகளைத் திருகி இலந்தை முள்ளின் கூர்மையில் மாட்டினார். குருதி கிழிந்த வார்த்தைகள் இலந்தைப் பழத்தில் செந்நிறமாகப் பாய்ந்து சொலித்தன. துளிர்த்துப் பசும் நிறமாகின. உதிரும் இலைகளில் பழுப்பாகின. படிமைகளாகின. நிலப்பகுதி யெங்கும் கெக்கலி கொட்டிச் சிரித்தன. கங்கணக் காப்புக்கும் கத்தாளைப் பூக்களுக்குமிடையே தடுமாறுகிறது சொல். தலை சுற்றி விழுந்த சொற்களைக் கொத்திக் கொண்டு பறந்து போயின காக்கைகள்.
சூனியத்தால் கட்டப்பட்டுவிட்ட முத்தேழ் நாய்க்கரின் குறிக்கற்கள் ஜடமாய் வீழ்ந்து கிடக்கின்றன. அவரது உடலெங்கும் சூழந்து இரத்த ஓட்டத்தில் பாய்ந்து கொத்திக் கொத்திப் பிடுங்கும் ஒலிச் சுருள்வாள். கங்கணக் காப்பில் சுருளும் மூதாதைகளின் முன்டாசுச் சுங்கு அசைந்து அசைந்து எழும்பும் போது தசைகள்தோறும் விம்முகின்ற வலி மார்புக் கூட்டில் வலிக்கிறது. கபாலமெங்கும் சுழன்றடிக்கும் சூறாவளியின் குரல்கற்றை ஜாலம் கானகத்தின் பசுமையைக் கிழிப்பதில் மும்முரம் கொள்கிறது.
காட்டின் துடிதுடிப்பு. சூரிய ஒளியின் மஞ்சள் கதிர்களில் நுழைந்த பருந்துகளின் சிறகடிக்கும் நிழல். மண்ணைக் கீறியெடுத்துப் போடும் ஏர்மேழியில் வாகாய்த் திரும்பும் திரடு கட்டிய கரங்களெல்லாம் இப்போது எங்கே? உன் கல்லெல்லாம் எங்கே போச்சு? கத்தாழங்காட்டுக்கு. உன் சொல்லெல்லாம் எங்கே போச்சு? செந்தூளங்குழிக்கு. முஷ்டியை இறுக்கிக் கங்கணக் கரத்தை உயர்த்தி நேருக்கு நேராய் அறைகூவல் விடுத்தார் முத்தேழ்.
“சாத்தாவூ...”
அது ஒரு மாயாஜாலத்தின் சிலிர்ப்பு. அந்த அழைப்பானது செய்வினையின் அனைத்துக் கட்டுகளையும் சிதறடித்து இருட்சுவரில் பதுங்கியிருந்த குரலின் செவி நாளங்களில் அறைந்து தள்ளியது. மறுகணம், கண் முன்னே நீண்டு படுத்திருந்த செம்மண் பாதை மறைகிறது. கம்மந் தட்டுக்களால் வேயப்பட்ட குச்சுகளும், வெயிலின் வேனலும் மறைகின்றன. ஆற்றின் தெளிந்த ஸ்படிகம், நிலத்தின் உருவம் எல்லாமே மறைந்து பிரம்மாண்டமாய் எழுகின்றன குறிக்கற்களின் புதிர்க் கட்டங்கள்.
எதிரில் நின்றிருக்கிறதா அது? காற்றுச் சூறையில் தன் இயக்கத்தைச் சுருட்டிக் கொண்டு வெற்று வெளியில் பிணையப்பட்டிருந்த உடலமாக எதிரில் முன்னேறிய சாத்தாவின் குரல் இருளில் முடையப்பட்டிருந்தது. சட்டென்று முத்தேழின் கங்கணக் கையில் பாய்ந்து சதைக் கூழாக உருக்கியெடுக்க ஆரம்பித்தது. தன் பலங்கொண்ட மட்டும் திமிறியெடுத்தார் முத்தேழ். தூசுகளை வளையமிட்டுக் கொண்டே முன்னும் பின்னும் நகர்ந்த அதன் வாசனையை உறிஞ்சியவாறே கத்தினார் முத்தேழ்.
“சாத்தாவு... நீ ஏன் என்னிடம் வம்புக்கு வருகிறாய்...?”
ஒரு நீண்ட கனைப்பொலி எழும்புகிறது சாத்தாவிடமிருந்து. இருட்குரலின் ஓலி சீரற்ற அசைவில் சீரான ஒலிச்சேர்க்கையில் வெடித்தது.
“பயமும் துணிவும் சேர்ந்ததே உடல்.. மகிழ்ச்சி துக்கத்தின் இணைவில் இயங்குவதே வாழ்வு... இந்தச் சூத்திரத்தை உடைக்கும் சொல்லை என்னால் அனுமதிக்க முடியாது...”
“வாழ்வின் ரகசியம் இவைகளுக்கப்பால்தானே உள்ளது... புலனாகாத அந்தப் புதிரை உடைத்து உடைத்து கடைசிச் சில்லில் பதுங்கியிருக்கும் பெருவெளியைத் தரிசிக்க வைக்கும் காரியத்தை எதிர்க்காதே சாத்தாவு...”
கெண்டை சிலுப்பித் தாவும் கட்டுச் சேவல்களாய் மாறுகின்றனர் இருவரும். மனித மனத்தின் இருண்ட பகுதிகளில் வெளிச்சமிடுகிறது சாத்தாவின் காலடியில் பதுங்கியிருக்கும் கத்திமுனை. கணித சாஸ்திரத்தின் கோடுகளை அழித்தொழிக்கும் வேத மந்திரங்களின் ஓயாத தொணதொணப்பில் உருகத் தொடங்குகிறது முத்தேழின் காலடி வீச்சு.
உலக்கையின் கருத்த நெகுநெகுப்பு முத்தேழின் உடலெங்கும் நீவிவிட்டது. இரும்புப் பூண் அழுந்த தசை நார்களைச் சுண்டியிழுக்கும் அதிர்வு உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை எகிறுகிறது. அவரது உடலெங்கும் மரக்கிளைகள் பிளந்து ஒரு பெரிய விருட்சமாக மாறினார். அவரது அக்குளில் துளைத்திருந்த இலைக் கரங்களின்மீது படபடத்து ரெக்கைகளை விரித்துச் சுழன்றது கழுகு. அதன் ரெக்கைகளின் அனல் கக்கும் வெயிலின் வெம்மை சூடுபரத்தியது.
உதிரத் தொடங்கிய எதிரியின் செதில்களில் மினுமினுத்துச் சொன்னார் முத்தேழ், “எந்தப் புதிர் முடிச்சையும் அவிழ்க்கும் திராணி என் கையில் உண்டு.”
“அப்படியானால் என் புதிரை அவிழ்க்க முடியுமா முத்தேழ்?”
சவாலை ஏற்றுக் கொண்டார் முத்தேழ். தோற்றுப் போகிறவர் எட்டு வருடங்களுக்கு ஜெயிப்பவரிடம் மிகவும் உண்மையுடன் அடிமைச் சேவகம் செய்ய வேண்டும்.
குறுக்கும் நெடுக்கும் வெட்டப்பட்ட கோடுகளில் சுழலும் ஏழுகல் மண்டபங்களின் வழி கால் எட்டிப் போடுகிறார் முத்தேழ். அவரது கையில் குலுங்கும் கற்களில் வாழ்வுக்கும் மரணத்துக்குமான போராட்டம். சாத்தாவின் புதிர்க்கட்டங்கள் வளையங்களாய் இறுக, அதில் தாவி ஏறி, நெகுநெகுப்பும் குளுமையும் உடலில் மாறிப் பாசம் படிந்த வழுக்குப் பாறையின் தலையில் மோதி திருகு வழியாய்ச் சுழலுகின்றன. கானத்தின் மௌனம் பாதவெடிப்புகளில் புகுந்து வழுக்கிவிழும் ஒவ்வொரு கணமும் புதிர்வழிச் சுழலின் மைய விதானத்தில் கேட்கிறது வண்டின் ரீங்காரம். இசைச் சுருளைப் பிடித்துக் கொண்டே கால் மாற்றிப்போட, கற்களின் ரத்த ஓட்டத்தில் மிதந்து உடைகிறது கரகரப்பான சுருதி. முத்தேழ் உன் கங்கணக் கரத்தை வீசு. முதல் வீச்சில் சூன்யத்தின் இருள் விலகட்டும்.
தோற்றுத் தொங்கும் தனது சடைமுடியைக் கொய்து முத்தேழின் முன் நீட்டுகிறது சாத்தாவு. தலை தாழ்ந்து வணங்கிய அதன் பணிவில் முத்தேழ் அதை மெச்சிக் கொண்டார். அதன் முடியை வாங்கி தன் தொடையைக் கிழித்து பத்திரமாய் உட்சொருகி தைத்து வைத்துக் கொண்டவர், சாத்தாவை எந்த ரீதியில் சேவகம் செய்ய அமர்த்துவதென யோசித்தார். அதன் வல்லமையடைந்த ரூபத்தை நிலத்தடி மண்ணைப் புரட்டிப் போடும் ஏர்முனையாக மாற்றினார்.
அடுத்த கணமே, உழவடித்து, விதை விதைத்து, பாத்தி கட்டி, தண்ணி பாய்ச்சி, உழவுப்பரப்பு முழுமைக்கும் தலையசைத்துச் சிரிக்கின்றன தானியங்கள். மனித உடலோ வெறும் சதைப் பிண்டமாக மாறும் அவலத்தை அவதானித்தார் முத்தேழ்.
காற்றாய்ச் சுழன்றடித்து, மழையாய்ப் பொழிந்து, நெருப்பாய் பஸ்மீகரம் செய்யும் மனித சாத்தியமற்ற நிலைகளில் காலாடித் திரிந்தது சாத்தாவு. காலம் தப்புகிற பருவ மாறுதல்களின் அழிவையும், மனித வாழ்வின் சிதைவையும் கண்ணுற்ற முத்தேழ், ஞாலம் நிறைந்த சாத்தாவின் வல்லாண்மையை மானுடத்துக்காய் மாற்றிவிட முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தார்.
சட்டென அவருக்குள் மின்னல் வெட்டியது. இந்த ஞாலத்தில் புதைந்திருக்கும் மாந்திரீகப் பிரக்ஞையைக் குறிசொல்லில் இணைத்து மானுட வாழ்வியலின் தீர்க்கத்தை மீட்டெடுத்தால் என்ன?
சாத்தாவை எட்டாவது கல்லாக மாற்றி கல்குறியமைப்பில் வீடுகட்டி வைத்தார் முத்தேழ். அடுத்த கணமே பொக்கை வாயாய்த் திறந்து கிடந்த கல்குறி அமைப்பு சச்சதுரமாக மாறியது. இடங்கை வலங்கை வழக்காரங்கள் கல்குறி கட்டும்போது திகைத்துக் காணாமல் போயின. காலங்காலமாய் மனிதனால் அழிக்க முடியாத சாதியத்தின் வர்ணபேதங்களை சாத்தாவு அழித்தொழித்தது. அடைப்புக் குழிக்குள் அடைபடாத காரியங்களைக் கைகொள்ள எழும் நாலாவது கோட்டில் நிறபேதங்களை அழிக்கும் எட்டாவது கல்லாக மாறி உட்கார்ந்தது சாத்தாவு. முழுமையடையாத கல்குறிச் சட்டகத்தை மனிதனும் யட்சனும் இணைந்த எதிர் தரிசனத்தில் பூரண முழுமையாக்குகிறது. நான்கு பரிமாணங்களில் சொலிக்கிறது சட்டகம்.
இப்பொழுது அமைப்பின் சதுரப் படிவு குறி கேட்பவனின் மைய அச்சில் நிறபேதம் கொள்ளாமல் செம்புத் தகடுகளில் சுருள்கிறது. குறி கேட்பவனின் குறிக்கல் எட்டாவது கல்லான சாத்தாவாக அமைந்து விட்டால், அவனது வாழ்நிலையை மேம்படுத்தும் முடிகயிறாய்த் திரிகிறது சாத்தாவு. மனித அத்துக்குக் கட்டுப்படாத விசயங்களை சாத்தாவின் ஆற்றல் உள்ளங்கையில் குறுக்குகிறது.
கூழாங்கற்கள் உயர்வதும் எழுவதுமான காலங்களின் நகர்வில் முத்தேழும் சாத்தாவும் சுற்றித் திரிந்தனர். அந்த நிலப் பகுதி முழுவதும் சாத்தாவின் தரிசனத்தில் சூரியனும் சந்திரனும் மாறி மாறி வந்து போயின. ஒரு நீண்ட காற்றடிக் காலத்தின் சாயங்காலப் பொழுதில் வந்து சேர்ந்தான் ஒருவன். கருத்த திரேகமுடைய அவனது திரண்ட உடலில், நீண்ட பிரயாணத்தில் படர்ந்த புழுதி அப்பியிருந்தது.
வைக்கோற்புரி திரித்துக் கொண்டிருந்த முத்தேழ் அவனைப் பார்த்ததும் வெகுநாள் பழகிய சிநேகிதனின் பார்வை அவருக்குள் சரேலென அடித்தது. குறிகேட்க வந்திருப்பான் என்று அவனை உபசரித்துத் திண்ணையில் உட்காரச் சொல்லி விட்டு, குறிக் கற்களை எடுத்து வர வீட்டுக்குள் போனார். தலைவேட்டியில் தூசுகளை தட்டி விட்டுக் கொண்டே, வைக்கோல் சுருணையை வீட்டுக்குள் வைத்து விட்டு ஓலைப்பெட்டியை எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தன கற்கள். அவைகளை எடுத்துக் குலுக்கிக் கொண்டே திண்ணைக்கு வந்தார். அவன் மீது குறுக்கு வெட்டாய் சரிந்திருந்த வெயில்பட்டு உடல் செதில்களாய் மினுமினுத்தது.
கல்குறி கட்டுவதற்கு வாகாகத் திண்ணையில் உட்கார்ந்து, கற்களைக் குலுக்க ஆரம்பித்தார் முத்தேழ். அவரது உள்ளங்கைக்குள் குலுங்கிய குறிக்கற்களின் அளவு மாறுபட்டது. அவர் பதற்றத்துடன் கற்களை எண்ணிப் பார்த்தார். ஏழு கற்கள் மட்டுமேயிருந்தன.
எதிரே நிற்கிறது சாத்தாவு. திகைத்துப் போன முத்தேழ் சடுதியில் உணர்ந்து கொண்டார்.
“முத்தேழ் என் காலம் முடிந்தது. நான் போக வேண்டும். என் முடியைக் கொடு.” முடிந்த முடிவாக எதிரொலித்தது எதிரேயிருந்த குரல்.
மார்பு படபடக்கக் கூர்தீட்டிப் பார்க்கும் முத்தேழின் கண்களில் கல்குறி அமைப்பின் சிருஷ்டிகரம் உடைகிறது. காலத்தைத் தாண்டிய பொழுது அவரது முன் தலையில் வெப்பமாய்ச் சுடுகிறது. முழுமையான கல்குறி அமைப்பின் சட்டகம் உடைந்து பொக்கைவாயாய் இளிக்கிறது. சாதீயத்தின் கோரத் தாண்டவம் மூன்று கோடுகளிலும் மாறி மாறி நடக்கிறது. முத்தேழின் தலை முழுக்க வலி முடிச்சுகள் இறுகுகின்றன.
அவருக்குள் ஓடிய எண்ண ஓட்டங்களின் இடுக்குகளில் பட்டுப் பட்டுத் தெறித்து வீழ்ந்தவர், ஒரு கணத்தில் பிரகாசமாய் எழுந்து உட்கார்ந்தார். இப்பொழுது அவரது முகமெங்கும் வெற்றிக் களிப்பு சொலித்து நிற்க, சாத்தாவை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்தார். முடிந்த முடிவாய் தலையாட்டிக் கொண்டு எழுந்து கம்பீரத்துடன் வீட்டுக்குள் நடந்த அவரது கால்களில் இடறியது வைக்கோல் சுருணை.
மெல்ல அதை லாவகமாய் எடுத்துச் சுற்றி விட்டத்தில் வீசினார். கீழ் நோக்கித் தொங்கிய அதன் முனையில் சுருக்கு மாட்டிய நுட்பத்தில், கல்குறி அமைப்பு என்றென்றைக்கும் சிதையாக அற்புதமாய் மாறுகிற அற்புதத்தை நிகழ்த்தினார் முத்தேழ். அந்தரத்தில் அசைபடும் சுருணையின் சுருக்குக் கண்ணியில் தனது தலையை மாட்டிக்கொண்டு சரேலெனத் தொங்கினார் முத்தேழ்.
அந்த அகாலத்தில், காலங்களற்று மாட்டிக்கொண்டது சாத்தாவு.
********************************
என் உடம்பெங்கும் ஓடிக்களித்த கூழாங்கற்களின் குளுமை நிகழின் வெய்யிலில் மறையத் தொடங்கியது.
உள்ளங்கைக்குள் அடங்கியிருந்த கற்கள் காலங்களற்ற துள்ளலுடன் என்னை அழைத்தன. சாத்தாவை வேண்டிக் கொண்டே ஆசுவாசத்துடன் கற்களைக் குலுக்கி வீடு கட்டத் தொடங்கினேன் சச்சதுரமாய்.
(இந்தக்கதையை காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் ஸுக்கு சமர்ப்பணம் செய்வதா? இடாலோ கால்வினோவுக்கு சமர்ப்பணம் செய்வதா? இல்லை முத்தேழுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். )
************************************************************************
************************************************************************
எனது முதல் சிறுகதைத் தொகுப்பான மூன்றாவது சிருஷ்டி தொகுப்பில் சாபம் என்ற கதையில் இந்தக்குறி சொல்லல் முறையை கிண்டலடித்திருந்தேன், குறி சொல்லும் என் அப்பாவின் உலகத்தை செம்மையாகக் கலாய்த்திருந்தேன். அப்போது வரட்டுத்தனமான முற்போக்கு சிந்தனைகள் என் மண்டையை ஆக்கிரமித்திருந்தன. கதையை என் அப்பாவிடம் படித்துக் காட்டினேன். ரொம்ப வருத்தப் பட்டார். அதே சமயத்தில் சிரிசிரி என்று சிரித்தார்.
அதன்பிறகு, ஐந்து வருடங்களுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளனான கார்சியா மார்க்வெஸ்ஸின் உலகம் அறிமுகமாகிறது. அவனது மாந்திரீக உலகம், ஜிப்சிகளின் மரபார்ந்த பண்பாடுகளை அற்புதமாகக் கணித்த அவனது பார்வை என்னை பல்வேறு பரிமாணங்களுக்கு நகர்த்தியது. இடாலோ கால்வினோ வின் இந்த டேரட் களின் உலகம் என்னை என் மரபார்ந்த கூறுகளுக்குள் அழைத்துப் போனது.
அதன் பிறகு, அந்தக் குறி சொல்லல் முறையை முன்வைத்து // சாத்தாவு // கதையை எழுதினேன். தமிழின் நாட்டார் சொல்கதைகளில் கட்டமைந்திருக்கும் அற்புதமான தொன்மங்களை அதன் வீச்சோடு படித்தேன். ஒரே சமயத்தில் பெரியாரின் பாதையிலும், அகப்பேய்ச் சித்தர், சிவவாக்கியன் போன்ற சித்தர்களின் பாதையிலும் பயணம் போக வாய்த்தது. இப்படியான பல்வேறு பாதைகள் விலகி விலகி இணைந்து இணைந்து ஒன்று சேரும் ராஜபாட்டையாக தமிழ் மொழியின் செழுமை மிக்க தனித்துவமான மரபும், அற்புதங்கள் நிரம்பிய சொல்கதைகளின் தொன்மங்களும் இரு கரம் கூப்பி வரவேற்றன. வீரியமான அந்த மொழியைச் சுழட்டியடித்தேன். சாத்தாவு உருவாயிற்று.
இந்தக்கதையை என் அப்பாவுக்கு கடைசிவரை படித்துக்காட்ட முடியாமலேயே போயிற்று...
- கௌதம சித்தார்த்தன்
----------------------------------------
தம்பி
- கௌதம சித்தார்த்தன்
என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில் ததும்ப மெதுவாக ரசித்துக் கொண்டிருந்தேன். தம்பி ஸ்டூலில் அமர்ந்து வெட்கத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த என் மனைவி எங்கள் பேச்சை அலட்சியம் செய்தவளாய் அனாயசத்துடன் ஸ்டூலைத் தூக்கினாள். உடனே, “அய்யய்யோ... அம்மா அம்மா, அதில தம்பி உக்காந்திருக்காம்மா...” என்று அலறியடித்துக் கொண்டு வந்து அவள் கைகளைப் பிடித்தான் ஆத்மா. “வேற வேலையே கெடையாதா அப்பனும் மகனுக்கும்... போடா அந்தப்பக்கம்...” என்று ஆத்மாவை நெட்டித் தள்ளி விட்டு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
ஆத்மா கீழே விழுந்து கிடந்த தம்பியைப் பதட்டத்துடன் தூக்கி நிறுத்தி என் மடியில் உட்கார வைத்தான். நான் பதனத்துடன் வாங்கி வைத்துக் கொண்டேன். “தம்பி, அடிபட்டுச்சா... வலிக்குதா...?” என்று கனிவாகக் கேட்டபடி தோளை, உடம்பை எல்லாம் நீவி விட்டான். “அழுகாதே... இனிமே அம்மாவோட டூ... பேசவே கூடாது... அழுவாத ஸாமீ....” என்று ஆறுதல் கூறினான்.
நானும், “ராஜா அழுவாதே கண்ணா... இனிமே அம்மா இங்கே வரட்டும்... அடி பின்னி எடுத்தறலாம்... இங்கே வா உன்னைப் பேசிக்கறோம்...” என்று சுட்டுவிரலை ஆட்டிக் கொண்டு கறுவிய மாத்திரத்தில் என் மனைவி வந்து விட்டாள். “கதை பேசியது போதும், இந்தாங்க... இது மளிகைசாமான் லிஸ்ட்... மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்திருங்க போங்க... சீக்கிரமா போயிட்டு வந்திடுங்க...” என்று விரட்டியபடி என் கையில் பையை ஒப்படைத்து விட்டு உள்ளே போய் விட்டாள்.
நான் ஆத்மாவைப் பார்த்தேன். கன்னங்கள் சாரமிழந்து போய் மஹா பரிதாபமான சோகம் முகமெங்கும் அடர நிராதரவான நிலையை அடைந்தவன், “வா, நாம நம்ம எடத்துக்குப் போலாம்... நம்மளோட சேராதவங்களோட நாமும் சேரக்கூடாது...” என்று தம்பியை அழைத்துக் கொண்டு போனான்.
ஆரம்பகாலங்களில் என் மனைவியும் மிக்க ஆர்வத்துடன் தான் இந்த விளையாட்டில் கலந்து கொண்டிருந்தாள். தம்பிக்குப் பாலூட்டுவாள். தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவாள். தம்பியைத் தூக்கி எடுத்து அந்தரத்தில் போட்டுப் போட்டு பிடிப்பாள். தம்பியுடன் தொட்டு விளையாட்டில் கலந்து கொள்வாள். கிண்ணத்தில் சாதம் பிசைந்து ஊட்டும் போது தம்பிக்கு ஒரு வாய், ஆத்மாவுக்கு ஒரு வாய், என்று மிக உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தவள், நாளாக நாளாக இது சலித்துப் போய் அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். எனக்கும் ஆத்மாவுக்கும் சலிக்கவேயில்லை.
தம்பி பிறந்த கதை அற்புதமான கதை.
என் மனைவி தம்பியை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டிருந்த ஒரு நாள்.
இருள் மெல்ல கவிந்து கொண்டிருந்த வேளையில் என் மனைவி கட்டிலில் படுத்திருந்தாள். ஆத்மாவுக்குத் தூக்கம் பிடிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகளில் சூரல் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த என்னை அவர்களின் சம்பாஷணை ஈர்த்தது.
“வயித்துமேலே ஏறதடான்னா பாரு. மறுபடியும் மறுபடியும் வந்து ஏர்ரே... அடி வேணுமா?”
“ஏ... வயித்துமேல ஏறினா என்னவாம்? நான் அப்பிடித்தான் ஏறுவே...” என்றபடி வயிற்றில் கால் வைக்க, என் மனைவி சட்டென காலைப் பிடித்து தூக்க, அவன் பொத்தென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தான்.
அவனைத் தூக்கி எடுத்துப் பக்கத்தில் படுக்க வைத்து “என் கண்ணில்லே, என் தங்கமில்லே, செரிசெரி போச்சாது, அப்பாவை அடிச்சி போடலாம் அழுவாதே சாமி” என்றாள். ஆத்மா டக்கென்று, “அப்பாவா அடிச்சா..? நீதானே தள்ளி உட்டே.” என்று அழுகையினூடே தலையைச் சிலுப்பிக் கொண்டு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.
நான் எழுந்து போய் அவர்களருகில் உட்கார்ந்து கொண்டு, "ராஜா, அம்மா வவுத்துக்குள்ளே குட்டிப்பாப்பா இருக்கிறா... நீ மிதிச்சா அவளுக்கு வலிக்குமா இல்லியா...?” என்று அவன் முகத்தருகில் செல்லமாகச் சொல்லி கன்னத்தை நிமிண்டினேன். என் மனைவி சட்டென அவன் முகத்தை தன்பால் திருப்பி, “குட்டிப்பாப்பா இல்லடா... குட்டித்தம்பி...” என்றாள். இது குறித்து இருவருக்கும் தினமும் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
தம்பி மெல்ல அழுகையை நிறுத்தியவனாய் ஆர்வத்துடன் கேட்டான். “அம்மா தம்பி எப்பிடிம்மா இருப்பான், உம்மாதிரியா எம்மாதிரியா அப்பா மாதிரியா?”
“உம்மாதிரிதான் என் ராசா...”
“ஏம்மா தம்பி ஸ்கூலுக்கு வருவானா?”
“ம்... வருவான்”
“தம்பி சரவணம் மாதிரி கிரிக்கெட் வெளையாடுவானா?”
“ம் வெளையாடுவான்”
“கொய்யா மரம் ஏறுவானா?”
அவள் சுரத்தில்லாமல் யந்திரம் போல பதில் சொல்லிக் கொண்டிருந்தது என்னுள் ஏதோ ஒரு உணர்வை ஏற்படுத்தவே இடையில் புகுந்தேன்.
“எந்த மரம் வேணாலும் ஏறுவான்... ஒரே ஜம்ப்ல கொய்யா மரம் ஏறி கொய்யாப் பழம் உனக்கொண்ணு, அம்மாவுக்கொண்ணு, எனக்கொண்ணு பறிச்சிட்டு வந்து கொடுப்பான்...” ஆத்மாவுக்கு என் பதில் பிடித்துப் போகவே என் பக்கம் சாய்ந்தான்.
“ஏம்பா, தம்பி சைக்கிள் ஓட்டுவானா?”
“ஓ... உன்னைப் பின்னாடி வெச்சிட்டு சைக்கிளை அப்படியே வேகமா ஓட்டுவான்... பஸ் லாரியெல்லாம் சைடு வாங்கீட்டு பயங்கரமா ஓட்டுவான்...”
“பெரிய சைக்கிள்லயா?”
“பெரிய சைக்கிள், சின்ன சைக்கிள் எல்லாத்திலயும்...”
“அப்பா தம்பியை சாமிநாதன் அடிச்சிப் போடுவானா?” இதுவரை கம்பீரமாய் வந்து கொண்டிருந்த குரல் கம்மிப் போயிற்று.
“தம்பியை யாராலும் அடிக்க முடியாது... அவன்தான் எல்லாரையும் அடிப்பான். டிஷும் டிஷும்...” என்று அவன் வயிற்றில் குத்தினேன். நெளிந்து கொண்டே என் நம்பிக்கையில் சமாதானமாகாமல் கேட்டான்.
“ராஜாமணியை?”
“எல்லோரையுமே...”
“அடேங்கப்பா... எங்க மிஸ்ஸை கூடவா?”
நானும் என் மனைவியும் பக்கென்று சிரித்து விட்டோம். அதில் ஊடுருவியிருந்த பலஹீனத்தைப் புரிந்து கொண்டவன் போல, “அதானே பாத்தேன்... எங்க மிஸ்ஸை யாராலும் அடிக்க முடியாது... அதுதான் எல்லோரையும் அடிக்கும்...” என்று தீர்மானமாகச் சொன்னான்.
“ஆனா தம்பியை யாரும் அடிக்க முடியாது...” என்றேன்.
திடீரென ஞாபகம் வந்தவனாய், “தம்பிக்கு என்னென்ன வெளையாட்டு தெரியும்..?” என்று ஆர்வம் முகத்தில் கொப்புளிக்கக் கேட்டான்.
“எல்லா வெளையாட்டும் தெரியும்” அனாயசமாய் சொன்னேன்.
“அம்மா அம்மா... தம்பியை எறக்கி உடும்மா... நாங்க வெளையாடறோம்...” என்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.
என்னிடமிருந்து குபீரென்று வெடித்துச் சிதறிய சிரிப்பால் என் மனைவி சங்கடத்துக்குள்ளாகி நெளிந்து கொண்டு சிரித்தாள்.
“அம்மா அம்மா, எறக்கி உடும்மா...” என்று காலைப் பிடித்துக் கொண்டு சிணுங்கினான் ஆத்மா.
நான் அவனை அணைத்துக் கொண்டு “ராஜா... தம்பி எறங்கறதுக்கு இன்னும்...” மனசுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து, “...ஏழுமாசம் ஆகும்... அப்பறமா வெளையாடலாம்...” என்றேன்.
அவன் அழ ஆரம்பித்தான். என் மனைவி அவனைக் கட்டிலில் படுக்க வைத்து கதை சொல்லிப் பார்த்தாள். பயங்காட்டினாள். எழுந்து விளையாட்டுச் சாமான்களை எடுத்து விளையாட்டுக் காட்டினாள். தின்பண்டங்கள் எடுத்துக் கொடுத்தாள். அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. என்மனைவி அடிக்கக் கையை ஓங்கியதும் அழுகை பலமானதேயொழிய குறைந்த பாடில்லை. நான் வாங்கி சமாதானப்படுத்த ஏதேதோ வித்தைகள் காட்டியும் பயனில்லாமல் எரிச்சல் வந்தது.
“கண்ணா, தம்பி தூங்கீட்டிருக்கான்.. நாளைக்குத்தான் எந்திரிப்பான்... நாளைக்கு எந்திரிச்சதும் அப்பறமா தம்பியோட வெளையாடலாம்... என்ன செரி தானா...?” என்றேன்.
அவன் உடனே அழுகையை நிறுத்திக்கொண்டு அம்மாவின் அடிவயிற்றில் காதை வைத்து உற்றுக் கேட்டான். “ஆமாப்பா தம்பி தூங்கறாப்பா...” என்றான் கிசுகிசுப்புடன். அவன் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது.
நான், “பாத்தியா, தம்பியெல்லா தூங்கறான்... நீயும் படுத்துத்தூங்கு ராசா... எங்கே கண்ண மூடிட்டு தூங்கு பாக்கலாம்...” என்று ஒருவாறாய் சமாதானப்படுத்தினேன். அவனுள் ஏமாற்றம் நிறைந்திருந்தாலும் மகிழ்ச்சி அதை மறைத்துவிட அம்மாவோடு படுத்து கண்களை மூடிக் கொண்டான். கையால் தம்பியை அணைத்தவாறு தூங்கினான்.
அடுத்த நாள் செண்டிமெண்டாய் தம்பி இறங்கி விட்டான். என் மனைவிக்கு கருச்சிதைவு ஆகிவிட்டது. அவள் காலையில் விஷயத்தை வருத்தத்துடன் தெரிவித்த போது எனக்கு அதிர்ச்சியில் ஊடலெங்கும் அதிர்ந்தது. கனவுகள் கனவுகளாகவே போய் விட்ட துயரம் உள்ளமெங்கும் விரவி உஷ்ணத்தைப் பாய்ச்சியது மனசு வரண்டுபோய் சோகத்தின் துயர வலைக்குள் உழன்று கிடந்தநேரம் வந்து காலைக் கட்டிக் கொண்டான் ஆத்மா.
“அப்பா அப்பா... தம்பி எங்கப்பா?”
கண்களில் நீர் விசுக்கென தளும்பி நின்றது. முகத்தை வேறு பக்கம் திருப்பி மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தால் தூங்கி எழுந்து வந்தவன் போல முகம் சோபை இழந்து சோம்பல் முறித்துக்கொண்டு இல்லாமல், முகமெங்கும் ஆர்வத்தின் தேஜஸ் வழிந்து கிடக்க கைகால்களில் துரு துருவென்று உற்சாகம் கலந்த பதட்டத்துடன் நின்றிருந்தான். என் மௌனம் அவன் பரபரப்பை அதிகப்படுத்தவே அம்மாவிடம் தாவினான்.
“அம்மா அம்மா, தம்பியை ஏறக்கி உட்டியா? எங்கம்மா தம்பி?” அவள் காலைக் கட்டிக்கொண்டு குதித்தான். என் மனைவியின் அழுகை ஆத்திரமாக மாறிற்று.
“போடா சனியனே... நீ வாய் வெச்சதிலே தான் இப்படியாய்டிச்சி...” என்று அவனை இழுத்துத் தள்ளி விட்டாள்.
அவன் தடுமாறி விழுந்து திக் பிரமை பிடித்தவனாய் அழ ஆரம்பித்தான்.
“ஏய், அவனையேண்டி அடிக்கறே? ஏதோ நடந்துடுச்சின்னா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்... நீ வாடா ராஜா...” என்று அவனை மார்போடு தழுவிக் கொண்டேன். அவன் அழுகையினூடே விக்கி விக்கி “அப்பா... தம்பி எங்கப்பா... நான் அவனோடே வெளையாடணும்...” என்றான். எனக்கு அழுகை உடைத்துக் கொண்டு வந்து விடும் போலிருந்தது. ஏமாற்றத்தின் இடியை அந்தப் பிஞ்சு மனசு தாங்குமா? அவன் ஆசைகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்ய விரும்பவில்லை.
“தம்பி வெளையாடப் போயிருக்காம்பா... அவன் வந்ததும் நாம மூனு பேரும் வெளையாடுவோமா...ம்..?” என்றேன்.
அதுதான் நான் செய்த பெரிய தப்பு.
“தம்பி வெளையாடற எடத்துக்கு என்னையும் கூட்டிப் போ...” என்று அழுகையை உச்சஸ்தாயிக்கு உயர்த்தினான். நானும் பேச்சை மாற்ற என்னென்னவோ தகிடுதத்தங்கள் செய்து பார்த்தேன். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே போனாலொழிய அழுகை நிற்பதாகத் தெரியவில்லை. “உன்பாடு உங்கப்பாபாடு” என்று அவள் சமையலறைக்குப் போய் விட்டாள். நான் அவனைக் கூட்டிக் கொண்டு வெளியே கிளம்பும்போது என்னுள் ஒரு ஐடியா பளீரிட்டது.
“இதபாரு தம்பி வந்துட்டாம் பாரு....”என்றேன் கண்களில் அற்புதம் விரிய.
ஆத்மா ஆர்வமாக “எங்கே எங்கே” என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்த்தான்.
“இதபாரு. அட இங்கே பாரு...” என்று வெற்றுவெளியில் கைகளைத் துழாவி ஒரு பையனைத் தூக்குவது போல பாவனை செய்து அந்தரத்தில் தூக்கிப் பிடித்துக் கொஞ்சினான்.
“டேய் தம்பி... ஆதுக்குள்ளே வெளையாடிட்டி வந்துட்டியா? திருட்டுப்பயலே, கிரிக்கெட் வெளையாடினயா? இதென்னடா தலையெல்லா ஒரே மண்ணு புழுதி... ப்பூ..ப்பூ..” என்று காற்றுக் கூட்டி ஊதிவிட்டேன். “என்ன சாமிநாதனை அடிச்சிப் போட்டியா? ஹ்ஹ்ஹ்ஹா.. ஆமா ஆத்மாவை உட்டு நீ மட்டும் எப்பட்றா வெளையாடப் போனே...? பாரு...நீ உட்டுட்டு வெளையாடப் போயிட்டேன்னு ஆத்மா அழுதிட்டிருக்காம் பாரு... இனிமேல் அவனை உட்டு வெளையாடப் போகாதே...” என்றபடி முகத்தில் பல்வேறு விதமான பாவனைகளுடன் கொஞ்சி... “எங்கே அப்பாவுக்கு ஒரு முத்தம் குடு... ம்... ஆத்மாவுக்கு...” என்று அவன் பக்கம் திருப்ப, அவன் வினோதமான ஆர்வத்துடன் முகத்தை நீட்டி முத்தத்தைப் பெற்றுக் கொண்டான்.
“ம். செரிசெரி, ரண்டு பேரும் போயி வெளையாடுங்க... ஆத்மா, இந்தா தம்பியைக் கூட்டிப்போ” என்று ஆத்மாவிடம் கொடுத்தேன். அவன் அதி ஆர்வமாக கைகளை நீட்டி விசித்திரமாக வாங்கிக் கொண்டான்.
பின்வந்த நாட்களில் தம்பியை அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனான். தம்பி பறித்துக் கொடுத்ததாக கொய்யாப்பழங்கள் கொண்டு வந்து கொடுத்தான். தம்பியை சின்ன சைக்கிளிலே வைத்துக் கொண்டு தெரு முழுக்கச் சுற்றினான். ‘தம்பி வீணாக சண்டைக்குப் போகமாட்டான் என்றும், வந்த சண்டையை விடமாட்டான் என்றும், தன்னோடு மல்லுக்கு நின்ற சாமிநாதனையும் மற்ற எதிராளிகளையும் அடித்து விரட்டி விட்டதாகவும்’ பெருமை பிடிபடக் கூறினான். ‘ஸ்கூலில் யாரும் தம்பியோடு சேருவதில்லை என்றும், தன் சகாக்களிடம் தம்பியைப் பற்றிக் கூறினால் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கவே தம்பியை யாருக்கும் அறிமுகப்படுத்தாமல் தானும் தம்பியும் மட்டுமே விளையாடிக் கொள்வதாய் சொன்னான். தம்பியும் அவனும் வினோதமாய் பேசிக்கொள்வதைக் கண்டு என் மனைவி, “நீங்க கெட்டது போதாதா? பையனையும் பைத்தியக்காரனாக்கனுமா?” என்று சத்தம் போட்டாள். ஆத்மா அடம் பிடிக்காமல் சோறு தின்ன, பாடம் படிக்க தம்பி உபயோகப்பட்டதால் அவளும் சகித்துக் கொண்டாள்.
நாளாக நாளாக விசித்திரமான நிகழ்ச்சிகளையெல்லாம் கூற ஆரம்பித்தான்.
பள்ளியில் ஓவிய வகுப்பில், குருவி ஓவியம் எப்படி போடுவது என்று பாடம் நடந்திருக்கிறது. முதல் நிலையில் // ந // என்ற உயிர்மெய்யெழுத்தைப் போட வேண்டும்; இரண்டாவது நிலையில் அதன் மூக்கை கூராகக் செதுக்கி பின் பக்கம் வளைவு செய்து கழுத்து அமைக்க வேண்டும்.. இதைக் கொஞ்சம் கொஞ்சமாய் விரிவாக்கி கண், மூக்கு, இறக்கை, கால்கள் என்று பத்தாவது நிலையில் ஒரு அழகான குருவி காட்சியளிக்கும்.. என்று விரிவாக கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள் மிஸ். ஆனால், தம்பியோ, ‘முதல் நிலையில் போட்ட ‘ந’ வே போதும் என்றும், அதை பத்தாவது நிலைவரை நீட்டவேண்டிய அவசியமில்லை’ என்றும் வாதாடியிருக்கிறான். மிஸ் வியப்பும் ஒருவிதமான கலவரத்துடனும் பேயறைந்தது போல முழித்திருக்கிறாள்.
எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பயம் ஏற்பட ஆரம்பித்தது. என் அறைக்குள் நுழைந்து என்னுடைய புஸ்தகங்களையோ, மற்ற விஷயங்களையோ தொடக் கூடாது என்றும் ஒழுக்கமாக பாடப் புத்தகங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் எச்சரித்து விட்டேன். அவன் உடனே பழைய சமையலறையைச் சுத்தம் செய்து, 'தன் அறை' என்றான். அவனுடைய சமாச்சாரங்களை யெல்லாம் அதில் ரொப்பிக் கொண்டான். அவ்வப்போது வினோதமான சம்பவங்கள் விசித்திரமான சமாச்சாரங்கள் நிறைய அவனிடமிருந்து வெளிப்படும்போது இது எங்கு போய் முடியும் என்று பயம் மண்டையை உலுக்கும்.
நான் அவன் அறைக்குள் பிரவேசித்தபோது இன்னும் தம்பியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தான். “ஆத்மா, மார்க்கெட் போலாம், வர்ரியா?” என்றேன். அவன் ஒன்றும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். நான் பக்கத்தில் போய் அவன் முகத்தைத் திருப்பி கைவிரல்களால் கேசத்தைக் கோதி தாஜா செய்தேன்.
“அட அவகெடக்கறா... நாம மார்க்கெட் போலாம் வா... போ போயி ட்ரஸ்சேஞ்ச் பண்ணீட்டு ரண்டு பேரும் வாங்க போங்க...”
தம்பியையும் சேர்த்துக் கொண்டதில் ஆத்மாவுக்கு ஒரே குஷி. “இருப்பா வந்திடறோம்...” என்று வீட்டுக்குள் ஓடினான்.
அறையைப் பார்வை விட்டேன். சுவரில் ஆணியடித்து தோள் பை மாட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழே பாடப் புத்தகங்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதன் ஓரத்தில் விளையாட்டுச் சாமான்கள். மூலையோரத்தில் சின்ன சைக்கிள் கம்பீரமாக நிறுத்தப்பட்டிருந்தது. வலது பக்க ஓரத்தில் களிமண் கொட்டியிருக்க பக்கத்திலிருந்த சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த தண்ணீர் மரக்கலரிலிருந்தது. அதன் ஓரத்தில் சதுரவாக்கில் பலகையாக ஒரு கருங்கல்... அதில் களிமண் படிந்திருக்க அதனடியில் முடிந்தும் முடிக்காமலும் களிமண் பொம்மைகள் சிதறியிருந்தன. ஆத்மா வந்து சேர்ந்தான்.
“அப்பா போலாமா?”
“ஆத்மா, பொம்மையெல்லாம் செய்வியா? எனக்குக் காட்டவேயில்லே...”
“இல்லப்பா இதெல்லாம் தம்பி செஞ்சது...”
“ஓ... செரி எங்கே பாக்கலாமே...” பொம்மைகளை நோட்டம் விட்டுக் கொண்டே வந்தவன், ஒரு பொம்மை வித்தியாசமாய்த் தெரியவே எடுத்துப் பார்த்தேன்.
“இமா இதென்ன பொம்மை?”
“அது ஒத்தக் கண்ணுப் பிச்சைக்காரன்”
குச்சி குச்சியான இரண்டு கால்கள்; கால்களுக்கு மேல் ஒரு மனிதத்தலை; முகத்தில் தாடியும் மீசையும் கீறப்பட்டிருந்தது; ஒரு கண் இருந்த இடத்தில் வெறும் குழி. தலைப்பகுதியிலிருந்து இரண்டு கைகள் குச்சிகளைப் போல முன்னால் நீட்டிக் கொண்டிருக்க கைகளின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து... கமண்டலம்தானே அது...? முளைத்திருந்தது. ஹா... உடலெங்கும் புல்லரித்தது. பிரமித்துப் போனேன்.
ஓரிரு நிமிஷங்கள் வெறித்தபடி நின்றிருந்தவன்,
“இந்த பொம்மைக்கு மட்டும் வயிறு மட்டும் வெச்சிருந்தா அற்புதமா இருந்திருக்கும்...” என்றேன்.
“அதுவா... அவன் கையில கழட்டி வெச்சிருக்கானே... அதான் வயிறு”
என் மண்டைக்குள் சம்மட்டி அடி விழுந்தது. அவனைப் பற்றி ஏதேதோ விவரிக்க முடியாத ரூபங்கள் மனமெங்கும் வியாபித்துத் திரிந்தன. ஜீனியஸ் ஆஃப் தி ஏஜ்.
“தினமும் இந்தப் பிச்சைக்காரனை ஸ்கூலுக்கு போரப்ப வாரப்ப பாப்பம். ‘வயித்துக்கு ஏதாச்சும் போடுங்க தரும தொரே...’ ம்பான்; அவனோட பேச்சு வயித்தையே கழட்டி கைல புடிச்சிருக்கிற மாதிரி தெரியும்...”
எனக்கு உடனே அவனுடைய எல்லாப் பொம்மைகளையும் பார்க்கவேண்டும் போல ஆர்வம் பரபரத்தது, சம்மணமிட்டு நிலத்தில் உட்கார்ந்து கொண்டேன்.
அவனைத் தினம் ஸ்கூலுக்கு சுமந்துபோகும் சைக்கிள் ரிக்ஷாவும், ரிக்ஷாக்காரனும்; கிரிக்கெட் மட்டையுடன் ஒரு பையன்; மாடுகள் இல்லாமல் அவிழ்த்த விடப்பட்ட வண்டி; மிட்டாய் விற்கும் கூடைக்காரக் கிழவி; மனிதத் தலைகள், கைகள், வண்டிச் சக்கரங்கள்... ஒரு மனிதத் தலையை கையில் எடுத்து, “இதுதான் தம்பி...” என்றான் ஆத்மா.
முகம் மொழு மொழுவென்று உருண்டையாக கொஞ்சம் கூர்மையான மூக்குடன் அகலமான நெற்றியை சிகை மறைக்காமல் மேலே தூக்கி சீவியிருந்தது. இதழ்களில் குறுநகை இழையோட ஒரு கம்பீரத்துடனான அலட்சியம் பொதிய அந்தத் தலை காட்சியளித்தது, என்னுள் இன்னும் ஏதேதோ விரிந்தது “அப்பா, அம்மா சத்தம் போடறதுக்குள்ளே போயிட்டு வந்திடலாம் வாப்பா...”
இருப்பினும் எனக்கு அந்த அறையை விட்டு வருவதற்கு மனசில்லை. துருவித்துருவி ஆராய்ந்தேன். எத்தனையோ அற்புதங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது போல் பட்டது. “அப்பா போலாமா?” என்று கையைப் பிடித்து இழுத்தான் ஆத்மா.
போகும் வழியில் ஆத்மாவுடன் ஏதும் பேசவில்லை. அவனும் தம்பியும் உரையாடிக் கொண்டு வந்தார்கள். எனக்குள் அவனைப் பற்றிய சூட்சும ரூபங்கள் தனக்குள் பயங்கரத்தை புதைத்துக் கொண்டு பிரம்மாண்டமாய் விரிந்து படர்ந்தன. அவனை நினைத்துப் பெருமைப் படுவதா அல்லது கவலை கொள்வதா என்று விளங்காமல் உள்ளுக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆயாசத்துடன் நீண்டதொரு பெருமூச்சு கிளம்ப அதிலிருந்து மீண்டபோது வேறொரு பயம் சேர்ந்து கொண்டது. ‘இவன் ஸ்கூல் வாழ்க்கை எப்படி இருக்கிறது?’
“ஆத்மா, நேத்திக்கு உங்க மிஸ் என்ன பாடம் நடத்தினாங்க...”
“தெரியலேப்பா, நான் ஸ்கூல் போய் ஒரு வாரமாகுது”
சாட்டையின் நீண்டநாவுகள் உடம்பெங்கும் சொடுக்கி எடுத்தன. ரோட்டில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டேன்.
“என்ன... என்ன சொன்னே? ஸ்கூலுக்குப் போறதில்லையா அடப்பாவி... பின்னெங்கடா போறே?”
எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து உதைத்து நொறுக்கலாம் போல ஆத்திரம் பொங்கிப் பீறிட்டுக் கொண்டு வந்தாலும், இதற்கு அவன் என்ன வினோதமான பதில் சொல்லப் போகிறானோ என்று ஆர்வத்துடனான கவலையுடன் அவன் முகத்தை உற்று நோக்கினேன்.
ஸ்கூலில் ஒரே மாதிரி தினமும் போய் உட்கார்வதும், டங் டங்கென்று மிஸ் வந்து ஏ,பி,சி,டி சொல்லச் சொல்வதும், அவர்கள் ஒப்பிப்பதும், ரைம் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும், எழுதிக் காட்டச் சொன்னால் எழுதிக் காட்டுவதும் மறுபடியும் மறுபடியும் இதேதானா என்று தம்பிக்கு ஒரேயடியாய் சலித்துப் போய்விட்டது. ‘உனக்கு சலிப்பாக இல்லையா’ என்று ஆத்மாவைக் கேட்டான். அப்பொழுது தான் அவனுக்கும் உறைத்தது. தனக்கும் சலிப்பாகிக் கொண்டு வருகிறதென்று.
அடுத்த நாள் ஆத்மா அம்மாவிடம் சொன்னான். “தம்பி கிம்பியெல்லாம் பறந்துடுவீங்க... ஏண்டா அவ்வளவு திமிரா? ஸ்கூல் பிடிக்காம போய்டிச்சா? ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகாட்டி சூடு போட்ருவேன்... கழுதை...” என்று கோரத்தாண்டவமாடவே தம்பி ஆத்மாவை அடக்கி விட்டான்.
இருவரும் ஒழுங்காக நல்ல பிள்ளையாய் ஸ்கூல் போனார்கள். ஸ்கூல் வாசலில் ரிக்ஷா இறக்கி விட்டதும் எல்லாப் பிள்ளைகளும் ஹோவென்று சப்தம் போட்டுக்கொண்டு ஸ்கூலுக்குள் போக ஆத்மாவும் தம்பியும் மட்டும் வெளியே கால்போன போக்கில் நடந்தார்கள். சற்று தூரத்தில் பூங்கா எதிர்ப்பட்டது. அதன் அமானுஷ்ய தோற்றமும், பறவைகளின் சீச்சொலியும் பச்சைப் பசேலைப் போர்த்திக் கொண்டு ஆகாயத்தை நோக்கி சரேலித்திருந்த மரங்களின் கிளைகளும் அசைந்து அசைந்து வரவேற்றன. நிலமெங்கும் செடி கொடிகளும் புல் வெளியும் படர்ந்திருந்தது. சில்வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் பாஷையும் கவிந்திருந்த அமைதிக்கு மேலும் அழகூட்ட, உதிர்ந்திருந்த பூக்களும் சருகுகளும் சப்திக்க நடந்து உள்ளே போனார்கள். எங்கு பார்த்தாலும் அழுக்கு மூட்டைகளாய் சோம்பேறி ஜனங்கள். அந்த இடத்தின் அற்புதத்தை ரசிக்காமல் அழகியல் உணர்ச்சியே இல்லாத ஜடங்கள் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தம்பிக்கும் ஆத்மாவுக்கும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் அழுகையே வந்து விட்டது. அந்தக் கோரத்தை காணச் சகியாமல், சட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று, யாருமேயில்லாத ஒரு இடம் தேடி புல்வெளியில் அமர்ந்து, அந்த இடத்தின் அற்புதத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பறையின் தூங்குமூஞ்சி சுவர்களைப் பார்த்து அலுத்துப் போன கண்களுக்கு அந்த இடம் கிடைத்ததற்கரிய அற்புதமாய்த் தெரிந்தது.
“எவ்வளவு அற்புதங்களை இழக்க இருந்தோம்” என்றான் தம்பி.
“ஆமாம் இன்னும் எவ்வளவோ அற்புதங்கள் வெளியே இருக்கக் கூடும்” என்றான் ஆத்மா.
அப்பொழுது ஆத்மாவின் தோளில் ஒரு கரம் மெல்லிய பீலியாய் விழுந்தது. திரும்பிப் பார்த்தால், எதிரே தும்பைப் பூவைப்போல நரைத்த தலையுடன் ஒரு பெரியவர் பளீரிட்ட பற்களைக் காட்டி குறுநகை புரிந்தார். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவர் போலிருந்தது. கேசத்தில் நீர் ஸ்படிகத்துளிகளாய் மின்னியது. கேசத்தை மேலே தூக்கி வாரி நடு நெற்றியில் சுருக்கங்கள் ஓடியிருந்தன. முகம் மொழு மொழுவென்று உருண்டையாய் தேஜஸ் மின்னியது. கைவரை மூடிய ஜிப்பாவும் கால்வரை வேஷ்டியுமாய் தூயவெண்மையாடை தரித்து மின்னற் குமாரன் போல காட்சியளித்தார். அழுக்கு மனிதர்களைப் பார்த்து அருவருப்படைந்த கண்களுக்கு அவரை ஒற்றிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
“என்ன தம்பி, ஸ்கூலுக்கு போகலியா...?” என்றார் பெரியவர். “என்ன டீச்சர் அடிச்சிட்டாங்களா?”
ஆத்மா இல்லை என்று தலையாட்டினான்.
“ஏன் ஸ்கூலுக்குப் போகலே?”
“ஸ்கூல்ல எங்களுக்குப் பிடிக்கலே”
பெரியவர் ஆத்மாவைத் தூக்கி மார்போடு தழுவிக் கொண்டார். தம்பி சொன்னான்.
“ஸ்கூல்ல எங்களுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே...”
பெரியவர் அதிசயத்துடன் கண்களை அகல விரித்தார். அவர் இதழ்களின் கடைக் கோடியில் புன்முறுவலொன்று நழுவி ஓடியது.
“வாஸ்தவம்தான்... நீ ஸ்கூல்ல படிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லே... வெளியில படி, சூரியனுக்குக் கீழேயிருக்கிற இந்த உலகத்தில படிக்கறதுக்கு நிறைய இருக்கு... அந்த கிளாஸ் ரூம்ல நேரத்தை வீணாக்கிட்டு இருக்காதே...”
ஆத்மாவின் கேசத்தைக் கோதி உச்சி முகர்ந்து மெல்லிய ஒரு முத்தம் கொடுத்து விட்டு எழுந்து, தலையை ஆட்டி விட்டு, மெல்ல நடந்து கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போனார்.
அவர் போனபிறகு ஆத்மாவும் தம்பியும் அவருடைய கூற்றில் கவரப்பட்டு அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். தினமும் வெளியே எங்கெல்லாமோ அலைவது, மனசுக்கு பிடித்த சம்பவங்களில் கிறங்கிப்போய் நிறபது, புரிபடாதவைகளைக் குடைந்து குடைந்து யோசிப்பது, ஒவ்வொரு நாளையும் புதிய புதிய கோணத்தில் அனுபவிப்பது, சாயங்காலம் ஸ்கூல் விடும் நேரத்தில் வந்து ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு வந்து தங்கள் அறைக்குப் போய் ஓவியங்கள் வரைவது, களிமண் பொம்மைகள் செய்வது... என்றெல்லாம் தினமும் அவன் சந்தித்த நிகழ்வுகள், மனிதர்கள், நூலகத்தில் போய் படித்த - படம் பார்த்த - புத்தகங்கள் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டே போனான்.
எனக்கு பயம், கோபம், ஆத்திரம் அத்தனையும் ஒருசேர வெடித்தது. “வாயை மூட்றா கழுதை... தம்பியுமில்லே மண்ணாங்கட்டியுமில்லே... ஏண்டா ஸ்கூலுக்குப் போகச் சொன்னா ஊர் சுத்திட்டு வர்ரியாடா ராஸ்கல்”
நான் ஒருநாளும் அவ்வாறு கண்டித்ததில்லையாதலாலும், தம்பி இல்லை என்று அதிர்ச்சியடைய வைத்தாலும் ஆத்மா ஒரேயடியாய் பயந்து போய் கண்கள் சொருகிப் போய் கீழே விழுந்தான். நான் பதறிப் போனவனாய் அவனைத் தூக்கி “ஆத்மா, ஆத்மா,” என்று கூவினேன்.
பையன் மயங்கிக் கிடந்தான். என் சப்தநாடியும் பதறிப்போக, அவனைத் தூக்கி மார்போடணைத்துக் கொண்டு அருகிலிருந்த கடைக்குக் கொண்டு போய் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்தேன்.
அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கூட்டம் கூடி விசாரித்தார்கள்,
“ஒண்ணில்லீங்க... வெயில் பாருங்க கொளுத்தது... 108 டிகிரி நமக்கே ஒருமாதிரி இருக்குது... சின்னக் குழந்தைக்கு கேக்க வேணுமா... மயக்கம் போட்டான் போல...”
ஆத்மா கண் விழித்ததும் ‘தம்பி தம்பி’ என்று என்னென்னவோ உளறினான். “தம்பி இருக்காம்பா... இதபாரு நின்னிட்டிருக்காம் பாரு...” என்று அவனுக்குத் தண்ணீர் காட்டினேன். “நீ தம்பி இல்லேன்னு சொன்னேயில்லே... நீ என்னோட பேச வேண்டாம் போ...”
“இல்லைடா ராஜா... நான் சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன். இதபாரு தம்பி... நீ மயங்கி விழுந்துட்டேன்னு அழுவுறாம்பாரு... வா எந்திரி போலாம்...” சட்டென்று அவனைக் கூட்டிக் கொண்டு நடந்தேன்.
அவன் என்னென்னவோ பேசிக் கொண்டு வந்தான். அவனுடைய பேச்சு எதுவும் நான் வாங்கிக் கொள்ளவில்லை. என் உள்ளமெங்கும் கவலையின் ஊசிகள் சுருக் சுருக்கென்று குத்தி வதைத்தன.
இவனை ஞானி என்பதா, பைத்தியக்காரன் என்பதா... இந்தச் சின்ன வயசிலேயே நடைமுறை வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டு வெகுதூரம் போய்விட்டானே... இன்னும் வாழ வேண்டிய காலம் நீண்டு கிடக்கிறதே... எனக்குள் என்னென்னவோ குழப்பங்களும் வெளிச்சக் கசிவுகளும் புலனாகிய வண்ணமிருந்தன. தலை முழுவதும் கும்மென்று வலித்தது. நினைவுகளின் அதிர்வலைகள் உள்ளமெங்கும் பாய்ந்து ஸ்மரணை தப்பி எண்ணங்களின் இருட்குகையில் பாசம் படிந்த பாதைகளில் இழுத்துப்போயின. குழம்பிய இதயத்துடன் கட்டுக்கடங்கா எண்ண ஓட்டங்களோடு நடந்தேன். மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கும் போதும், பணம் செலுத்தும் போதும் நான் என் வசம் இல்லை. வீடு திரும்பும் போது ஓயாமல் உழலவைக்கும் குழப்பங்களைப் போக்க டக்கென்று ஒருயோசனை தோன்றியது. அந்த நிமிஷத்தில் உடலெங்கும் பதட்டமும் பரபரப்பும் ஊர்ந்து நெளிந்தது.
எதிரில் பஸ் வந்தது. சாலையின் ஓரத்தில் ஒதுங்கினோம்.
அடுத்த கணம், “ஆ... அய்யய்யோ தம்பி பஸ்ல உழுந்திட்டானே...” என்று கத்தினேன். ஆத்மா சற்று தாமதித்து அந்த பயங்கரத்தைப் புரிந்து கொண்டு “ஐயோ ஐயோ” என்று அலறினான். பஸ் தம்பியின் மேலே ஏறிப் போயேபோய்விட்டது. நான் ஓடிப் போய் நடுரோட்டில் மண்டியிட்டு அமர்ந்து, “ஆத்மா, தம்பி செத்துப்போயிட்டானே... ஐயோ, ஐயோ...” என்று அழுதேன்.
ஆத்மா ஓ வென்று அழ ஆரம்பித்தான்.
(மார்ச் 1987)
(முனியப்பன் சிறுகதையிலிருந்து ஒரு சொல் -
பொம்மக்கா சிறுகதை தொகுப்பு)பதினெட்டாங்கரம் விளையாடிக் கொண்டிருக்கிறான் முனியப்பன். எதிராளியின் கட்டத்தில் உள்ள சிறுத்தைப் புலிக்கு உயிர் வந்து அவன் மேல் பாய்கிறது. காய்கள் சிதறியோட சரக்சரக்கெனப் பல்வேறு முனியப்பன்களாக மாறிக் கட்டங்களில் துரத்தித் துரத்தி அருவாளை எடுத்து வீசுகிறார்கள். ரத்தம் கானகமெங்கும் வழிந்தோடுகிறது. அது ரத்தம் இல்லை. வெத்திலை எச்சில். ஆவேசத்தில் மருள் வந்து துடிக்கிறான் முனியப்பன். ஆடுகள் துலுக்குகின்றன. பீச்சியடிக்கும் ரத்தத்தில் வெத்திலை எச்சில் மறைகிறது. தாகம் அடங்காமல் நாக்கை நமுண்டிக்கொண்டு உருண்டு புரள்கிறான். காடுகரைகளில் அழிமாட்டம் செய்யும் எருமைக்கடா மீது அருவாளை வீச தலை துண்டாகிறது. எருமைத் தலை மனிதத் தலையாக மாற, கொம்புகளின் மீது காலை வைத்து மிதிக்கிறான். தாரை தப்பட்டை முழங்க, பல்லக்கில் ஏற்றிக்கொண்டு போகிறார்கள் முனியப்பனை. பல்லக்குகள் அதிகமாக அதிகமாக நாடுகளும் பெருகிக் கொண்டே போகின்றன. எல்லா நாட்டுக் பல்லக்குகளிலும் முனியப்பனே விதவிதமான ஆடைகளில் உட்கார்ந்திருக்கிறான்.
ஒரு முனியப்பன் வேட்டைக்குப் போக, இன்னொருவன் கோட்டைக்குக் காவலிருக்க, ஏரியிலும், களத்து மேட்டிலும், கண்ணி வாய்க்கால் கரையிலும் காவல் தடி கிலுங்குகிறது. அதன் சலங்கைச் சத்தம் பனைமரத்திலிருந்து புளிய மரத்திற்குத் தாவுகிறது. வேப்ப மரத்திலிருந்து இலந்தை மரத்திற்குத் தாவும்போது, நாட்டைச் சுற்றிலும் முட்கள் வேலியாய் அடைகின்றன. வேலிச் சந்துக்குள் நுழைந்து நுழைந்து சீறிக்கொண்டு வரும் பாம்புகளைப் பிடித்து உடலெங்கும் மாலையாகப் போட்டுக்கொள்ள அவனது கத்தாழை வாசனையில் ஒடுங்குகின்றன. சுங்கு விட்டுக் கட்டிய தலை உருமால் பளீர் பளீரென மின்னுகிறது. மீசையின் விறைப்பில் எலுமிச்சங்கனி நின்றிருக்க, நெட்டுக்குத்தாய்ப் பிடித்திருந்த அருவாளின் அள்ளைவாய், ரத்தத்தில் துவைந்திருக்கிறது.
மேய்ச்சல் வயலில் செந்நாய்களைத் துரத்திக் கொல்லும் சிறுவர்களை ‘முனியப்பன்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாட்டுக்குத் தீங்கு செய்யும் போக்கிரிகளை வெட்டி ரத்தங் குடிக்கும் இளவட்டங்களில் முகம் முனியப்பனாக மாறுகிறது. முனியப்பன்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள்.
முனியப்பனுக்கு உருவு செய்யும் கல்யாணமாகாத குயவன் கானகத்திலிருந்து செம்மண்ணும் ஏரியிலிருந்து களிமண்ணும் எடுத்து வந்து பிணைகிறான். திடம்பலான தசைகளையும், சீறியடிக்கும் மருளையும் திக்கெல்லாம் அதிரும் ஆவேசத்தையும் குழைத்துப் பூசுகிறான். பித்துப் பிடித்தவன் போலக் கைவிரல் நகங்களெல்லாம் பிய்ந்துபோக, உயிர்ச்சீவனை ரத்தத்தில் கரைத்து, உருவினுள் புகுத்தும் வித்தை செய்கிறான் குயவன். உருவுக்குள் பரவுகிறது இடுப்புச்சூடு. பொழுது, உருவுக்குள் மடங்கி உட்கார்ந்து பொழுதைப் பார்த்துச் சிரிக்கிறது.
வேலையெல்லாம் முடிந்தும் சுண்டுவிரலுக்கு மண் எங்கும் கிடைக்கவில்லை. கானகத்தில் மண் எடுக்க முடியாமல் மரங்கள் தலை துளும்பிக் கொண்டிருக்கின்றன. “முனியப்பா உன் உருவை நினைவில் தேக்கி உயிர்ச் சூட்டைக் கண்ணில் கட்டி நிறுத்தியிருக்கிறேன். சுண்டு விரலுக்கு மண் வேண்டும்... சீக்கிரமே உருவுக்குக் கண் திறக்க வேண்டும். கானகத்துக்குப் போ...போ...” என்ற சத்தம் காது சவ்வுகளில் பறையடிக்கிறது..
(முனியப்பன் சிறுகதையிலிருந்து ஒரு சொல் - பொம்மக்கா சிறுகதை தொகுப்பு)