Friday, 22 May 2015

Shams Langerudi- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

Nothing is
so perfectly amusing
as a total change of ideas.
-Laurence Sterne-
நெடும் தொலைவு கடந்து
உன்னை நான் காண வந்துள்ளேன்.
நான் உழுத நிலங்களைக் கண்டேன்.
நான் உடைந்து நொறுங்கிய செங்கற்களைக் கண்டேன்
பாதி ஒளிந்துள்ள நிலவை.
திகைப்புற்றிருக்கும் குழந்தைகளைக் கண்டேன்
மிதிக்கப்பட்ட புற்களை.
மண்ணால் வார்க்கப்பட்ட நிழல்களை கண்டேன்
பெருமூச்சில் எழும் தீப்பிழம்பை.
ஆனால் உன்னையல்லாது
நான் காற்றையும் கண்டேன்
-Shams Langerudi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
அதை
நான் இருக்க அனுமதிக்கிறேன்................................
அரவம் வீட்டுக்குரியதெனில்
நான் அதற்கு அடைக்கலம் தருவேன்.
அது கொடூரமான செயல்களைச் செய்தாலும்கூட
நான் பிரியமாய் இருப்பேன்.
அது கூரையிலிருந்து வழுக்கிக் கீழிறங்கியது
உடல்- தாபமுறும் கோப விழிகளுடன்
துரிதமான நஞ்சு நாவுடன்,
என்னருகில் வளைவாக தன்னைச் சுருட்டிக் கொள்கிறது,
மக்கள் சொல்கிறார்கள்,
அதற்கு உப்பிடு என்று:
உப்பைச் சுவைத்தால்
உப்பிட்டவரிடம் நன்றி பாராட்டும்.
என் கவிதைகளிலிருந்து தேவையானதை
எடுத்து வருகிறேன்.
எனது காதலனின் ஆன்மாவில் உருக்கொண்ட
மரகதமொத்த படிமங்களை
நான் அவைகளை அதன் முன் கிடத்துகிறேன்
ஒவ்வொன்றாக கணக்கிட்டு காண்பிக்கிறேன்,
வண்ணங்களாலும் ஒளியாலும் திகைப்புற்றிருக்க
என்னிடம் வர
தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது.
தன் தலையை நகர்த்த துவங்குகிறது,
தன் முதுகையும் கழுத்தையும் வருடிவிட எதிர்நோக்குகிறது.
அதன் விஷப்பல் பித்தளை போல் மிணுமிணுக்கிறது,
அரவம் கிளர்ச்சியுற்றிருக்கிறது-
அதை சிதைக்க என்ன வேண்டியிருக்கிறது?
ஓ, இது வீட்டில் வளர்க்கப்படும் அரவம் .
கோபத்தில் அதை நீங்கள் கொன்றுவிடலாம்
கொடூரமான காரியங்களை செய்தாலும்
அதை
நான் இருக்க அனுமதிக்கிறேன்.
-Simin Behbahani-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
கடலினும் ஈரம் தோய்ந்த அலை........
என் கரங்களுக்கு அப்பால்
சிவந்த வானம்
நொறுங்கிவீழும் தருவாயில் இருக்கிறது.
பாதங்களின் மெளன சப்தம் ,
ஓடாத கால்கள்
பைன்களை வெகுதூரம் ஏந்திச் செல்கிறது,
ஜன்னலுக்கு பின்னால் ஒரு காகம்
பச்சையாயிருத்தலில்
இனி அதற்கு பங்கேதுமில்லை.
ஓ, சூரியனே, நீயொரு ஆண்,
நீ உலகத்தை முக்காட்டினூடாக காண்பதில்லை,
என் கனவின் மண்ணிலிருந்து
என்னை எடுத்துச் சென்றுவிடு,
கடலினும் ஈரம் தோய்ந்த அலை,
வனத்தைக் காட்டிலும் நிர்வாணமானது,
காற்றிடம் இலையொன்றை கொணரச் சொல்.
-Granaz Mussavi-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)