பெரியார் ‘இடைநிலைச்’ சாதியினரின் பிரதிநிதியா?
ஜூன் 14, 2007 — Valarmathi
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில். 90 – களில், தமிழ்நாட்டில், சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்த தரப்பினர் ஏறக்குறைய அத்தனை பேரது கவனத்தையும் ஈர்த்து, சூடான விவாதங்களைக் கிளப்பிய பெருமை பெங்களூர் குணாவுக்கே போய்ச் சேரும். “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற தனது சிறிய நூலில் பெரியாரை கன்னட வெறியர் என்று வசைபாடியதன் விளைவாக அவருக்கு இந்தப் பெருமை கிட்டியது.
இப்போது, ரவிக்குமார், “பெரியார் தலித்துகளின் எதிரி என நான் சொல்ல வரவில்லை. தலித்துகள் தனது எதிரி என பெரியார்தான் சொல்லியிருக்கிறார்,” ‘மைனாரிட்டி பிரச்சினையில்’ அதாவது இஸ்லாமியர்கள் மீதான அணுகுமுறையில், “எனது நோக்கம் அம்பேத்கரும் பெரியாரும் எதிரெதிரானவர்கள் என்று நிரூபிப்பது அல்ல. மாறாக, அவர்கள் இரண்டு பேருடைய அணுகுமுறையும் ஒரே விதமானவையல்ல என்று சுட்டிக் காட்டுவது மட்டும்தான்” என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, (வல்லினம் மே – ஜுலை 2002, தாய்மண் சூன் 2002) மிகவும் நுட்பமான முறையில் பெரியாரை ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியினரின் – ஆதிக்க சாதியினரின் பிரதிநிதியாக, அவர்களுடைய நலன்கள் என்று வந்துவிட்டால், தலித்துகள், இஸ்லாமியர்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கத் தயங்காதவராகச் சித்தரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இதற்காக, பெரியாருடைய எழுத்துக்களை அவை பேசப்பட்ட, எழுதப்பட்ட சந்தர்ப்பங்கள், சூழல்கள் இவற்றில் இருந்து பிய்த்து எடுத்து மேற்கோள் காட்டுவதற்கும், தான் சொல்ல வரும் கருத்திற்காக பெரியாரின் எழுத்துக்களில் இருந்து, மேற்கொள்களை வெட்டி ஒட்டும் வேலையைச் செய்வதற்கும் கூட அவர் தயங்குவதில்லை.
இந்துத்துவ பாசிசம் தங்குதடையின்றி பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் பெரியார் மீதான இது போன்ற தாக்குதல்கள் மிகுந்த ஆபத்தானவை. பெரியாரின் அரசியலை தொடர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய இயக்கங்கள் இன்று எதுவும் இல்லை என்றபோதிலும்கூட இதுபோன்ற தாக்குதல்கள், இன்று மெல்ல வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கும் ஆதிக்க சாதி வெறி மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் களன் அமைத்துக் கொடுத்துவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஆபத்துக்களை கருத்தில் கொண்டே ரவிக்குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பாக, அவர் செய்திருக்கும் மேற்கோள் தகிடுதத்தங்களைக் காட்ட இதை எழுதுகிறேன். மற்றபடி, ரவிக்குமாருக்கும் அ.மார்க்சுக்கும் இடையில் நடக்கும் ‘தலித் இயக்கத்திற்கு தத்துவார்த்த தலைமை தாங்குவது யார்?’ என்ற போட்டியில் யார் சார்பாகவும் வக்காலத்து வாங்கும், கட்டப்பஞ்சாயத்தில் இறங்கும் நோக்கம் எனக்கில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். (யாராவது, “நாட்டாம! தீர்ப்ப மாத்திச் சொல்லு!” என்று குரல் எழுப்புவார்கள். எதற்கு வம்பு.)
வல்லினம் இதழுக்கு தந்துள்ள பேட்டியில், ரவிக்குமார் ‘உள்ளே சென்று பெரியாரின் புத்தகம் ஒன்றினை எடுத்து வந்து படித்துக் காட்டுகிறார்’. ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ. வே. ரா. சிந்தனைகள் 3 – வது தொகுப்பில், 1950 – ஆம் பக்கத்தில் “சதியை முறியடிப்போம்” என்ற கட்டுரையில் ரவிக்குமார் காட்டும் மேற்கோள் வருகிறது: “ஆதலால், நாம் இன்று 1.பார்ப்பனர், 2. நம்மில் கீழ்த்தர மக்கள். 3. முஸ்லீம்கள், 4. கிறிஸ்தவர்கள் ஆக இன்று நமக்குச் சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் (குழுக்கள்) இருக்கின்றன. இந் நால்வரும் ஏற்கனவே நம் சமுதாயத்தைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள். மற்றும், இந் நான்கில் மூவர், தம்தம் சமுதாய துறையில் நம்மைவிட மேலான நிலைமையில் அரசியல், பொருதாளார இயல், கல்வி இயல், மத இயல் முதலியவற்றில் சராசரித்தன்மைக்கு மிகமிக மேலான நிலைமையில் இருப்பவர்கள், வாழ்பவர்கள் என்று சொல்லத்தக்கவர்கள் ஆவார்கள். ஒரு கூட்டத்தினர் நம்முடைய இழிநிலை பற்றியும், ஏன் – தங்களுடைய இழிநிலை பற்றியுங்கூடக் கவலை இல்லாமல் ‘சோறு – சீலை – காசு’ ஆகிய மூன்றையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். ஆதலால், ஒரு சிறு நலத்திற்கும் தங்களுடைய எதையும் தியாகம் பண்ணவும் துணிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.”
“ஆகையால் நமது இலட்சியம் நிறைவேறுவதற்கு இவர்கள் – இந் நான்கு குழுவினர்களும் பெரும் கேடர்களாக இருக்கும் நிலைமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.”
இந்த மேற்கோளைக் காட்டிவிட்டு சட்டென்று தலித்துகளை இப்படியெல்லாம் சித்தரிப்பது “தலித் பிரச்சினையில் அக்கறை கொண்டவர்கள் செய்கிற காரியமா,” “தலித் பிரச்சினைகள் குறித்து பெரியாருக்கு எந்த ஆழமான சிந்தனையும் கிடையாது,” “கீழ்ததர மக்கள் என்ற சொல்லாட்சியை சாதிவெறி பிடித்தவன்கூட பயன்படுத்தியதில்லை” என்றெல்லாம் ‘உணர்ச்சி வசப்பட்டு’ விடுகிறார் ரவிக்குமார். “பெரியாரை ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்” என்று பிரகடனமும் செய்து விடுகிறார்.
பெரியார் தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே தலித்துகளின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டிருந்தவர்; காங்கிரசில் அவர் சேர்ந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்பு என்பதையெல்லாம் எஸ்.வி.ஆரின் பெரியார் குறித்த இரண்டு நூல்களிலிருந்தே விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். அதுபோக, பெரியார் தன்னை என்றுமே தலித்துகளின் வழிகாட்டியாகவோ தலைவராகவோ சொல்லிக் கொள்ளவில்லை என்பதையும், அப்படிச் சொல்வது ஒரு ஏமாற்று வித்தை என்று அவரே பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திச் சொன்னதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
‘சூத்திரப்’ பட்டம் போகவேண்டுமென்றால் ‘பறையன்’ பட்டம் போகவேண்டும் என்பதைக்கூட அவர் இரண்டு அர்த்தங்களில் சொல்கிறார். ஒன்று ‘பறையன்’ பட்டம் போக வேண்டும் என்று தான் சொல்வது ‘சூத்திரப்’ பட்டம் போகவேண்டும் என்பதற்காகத்தான்; காரணம் அது முந்தைய பட்டத்தைவிடக் கேவலமானது. (“வைப்பாட்டி மகன் என்ற அர்த்தம் சூத்திரன் என்ற சொல்லுக்கு மட்டுமே இருக்கிறது”) மற்றது, ‘சூத்திரர்’களிடத்தில் உள்ள சாதித் திமிரை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவும்தான். பார்ப்பனரல்லாதோரிடத்தில் இருந்த சாதித் திமிரை அவர் தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப காலந்தொட்டே கண்டித்து வந்திருக்கிறார். ஜஸ்டிஸ் கட்சியோடு அவருக்கு எழுந்த முரணே இந்தப் பிரச்சினையில்தான்.
பெரியாருடைய அரை நூற்றாண்டு காலப் பொதுவாழ்வில் இந்த விஷயங்களில் ஒரு விட்டுக்கொடுக்காத தொடர்ச்சி இருந்து வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, பிரச்சினைக்குரிய இந்த மேற்கோளை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்குள் போவதற்கு முன்பாக ஒரு விஷயத்தை சற்று ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம். பெரியார் தனக்கு விமர்சனமாகப் பட்டதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், எப்போதும் வெளிப்படையாக, உடனுக்குடன் சொல்லி வந்தவர். அம்பேத்கருடனும்கூட அவருக்கு முரண்பாடுகள் வந்ததுண்டு. அதையும் அவர் மறைத்ததில்லை. குறிப்பாக, அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பங்கேற்றதற்கு தனது அதிருப்தியை உடனேயே வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல, முஸ்லீம் சமூகத்தினரோ தலைவர்களோ, தலித் தலைவர்களோ, இடைநிலைச் சாதித் தலைவர்களோபார்ப்பனிய எதிர்ப்பைக் கைவிடுவதாகக் கருதிய சந்தர்ப்பங்களில், பார்ப்பனர்களோடு அவர்கள் சமரசம் செய்து கொள்வதாகக் கருதிய சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் கடுமையாகவும் கண்டித்துப் பேசியிருக்கிறார்.
ரவிக்குமார் மொட்டையாகக் காட்டும் மேற்கோளும் அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக கருதிய ஒன்றிலிருந்து பெரியார் எழுதியதுதான். 1963 – ஆம் ஆண்டு அவருடைய 85 -வது பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட அக்கட்டுரையில், அந்த ஆண்டுக்கான வேலைத்திட்டமாக ‘சூத்திரர்’ சமுதாயம் கல்வி, நல்வாழ்வு, ஆட்சி உரிமை முதலியவற்றில் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாசாரம் அடைவதற்கான பணிகளை அறிவிக்க யோசித்ததாகவும், ஆனால் அந்தப் பணி முன்னெப்போதையும்விட சிரமமாகி விட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம், பார்ப்பனர்கள் முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக் கொண்டு பலம் பெற்று விட்டனர் என்கிறார். இவர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்வதற்கு முன்பாக பார்ப்பான் ‘நம்மில் கீழ்த்தரமான மக்களையெல்லாம்’ தன்னோடு சேர்த்துக் கொண்டு தொல்லை கொடுத்து வந்தான் என்றும் குறிப்பிடுகிறார்.
(‘நம்மில் கீழ்த்தரமான மக்கள்’ என்று சொல்லும்போது அவர் ‘நாமும்’ கீழ்த்தர மக்கள் என்ற அர்த்தம் தொனிக்கவே எழுதுகிறார் என்று சொல்லமுடியும். அதோடு, ‘நம்மில் கீழ்த்தர மக்களும்’ ‘நாமும்’ அவருக்கு எப்போதும் பார்ப்பனரால் அந்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. இது ஏதோ வார்த்தை விளையாட்டோ அல்லது வலிந்து அர்த்தம் ஏற்றிச் சொல்வதோ அன்று; பெரியாருடைய ஒட்டுமொத்த அரசியல் வாழ்வில், பணியில் வைத்துப் பார்க்கும்போது நமக்கு இந்த அர்த்தமே புலனாகிறது.)
(‘நம்மில் கீழ்த்தரமான மக்கள்’ என்று சொல்லும்போது அவர் ‘நாமும்’ கீழ்த்தர மக்கள் என்ற அர்த்தம் தொனிக்கவே எழுதுகிறார் என்று சொல்லமுடியும். அதோடு, ‘நம்மில் கீழ்த்தர மக்களும்’ ‘நாமும்’ அவருக்கு எப்போதும் பார்ப்பனரால் அந்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. இது ஏதோ வார்த்தை விளையாட்டோ அல்லது வலிந்து அர்த்தம் ஏற்றிச் சொல்வதோ அன்று; பெரியாருடைய ஒட்டுமொத்த அரசியல் வாழ்வில், பணியில் வைத்துப் பார்க்கும்போது நமக்கு இந்த அர்த்தமே புலனாகிறது.)
தொடர்ந்து, இப்படியான நிலைமை உருவானதற்கு, காமராசர் ஆட்சியில் தமிழ் மக்கள் (சூத்திரர்கள்) பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்து வருவதைக் கண்டு பயந்துபோன பார்ப்பனர்கள், இராஜாஜியின் தலைமையில் இந்த மூன்று தரப்பினரையும் தமது வலையில் வீழ்த்திவிட்டனர் என்றும் ‘கண்ணீர்த் துளிகளோடு’ (தி.மு.க) கூட்டணியும் அமைத்து காமராசரை எதிர்க்கத் துணிந்துவிட்டனர் என்றும் கூறுகிறார். இந்தக் கூட்டணியை முறியடிப்பதுதான் அந்த ஆண்டுக்கான வேலைத்திட்டம் என்று அறிவிக்கிறார்.
கட்டுரையில் இவ்வளவு விஷயஙகள் இருக்கின்றன. இவையனைத்தையும் மறைத்துவிட்டு, மேற்கோளாக, ஒன்றைத் தனியாக பிய்த்து எடுத்துக் காட்டி, பெரியார் தலித்துகளைப் பற்றி மோசமான கருத்து வைத்திருக்கிறார், தலித்துகளைத் தனது எதிரிகளாகச் சொல்கிறார், அதனால் அவர் பிற்பட்ட சாதியினரின் பிரதிநிதி என்று ‘உணர்ச்சிவசப்படுவதை’ என்னவென்று சொல்வது?
அயோத்திதாசப் பண்டிதருடைய வாழ்நாள் பணி அத்தனையையும் மறந்துவிட்டு ஒரு இடத்தில் அவர் “இயல்பாகவே அறிவின்றி தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித் தலைவர்களின் விரோதத்தினால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளதுவரையில் தாழ்த்தி வருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.
அவர்கள் யாரென்பீரேல் – குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்,” (அயோத்திதாசர் சிந்தனைகள் (அரசியல், சமூகம்) பக்: 97.) என்று சொல்லியிருப்பதை எடுத்துப்போட்டு, ‘ஆகையால் அயோத்திதாசர் தலித் ஒற்றுமைக்கு எதிரானவர்’ என்று ஒருவர் வாதிட்டால், அது எவ்வளவு மோசமான காரியமாக இருக்கும்!
அடுத்து, ‘மைனாரிட்டி பிரச்சினை’.
தாய் மண் இதழில், ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுப்பு 1 – ல் பக்கம் 46 – ல் “மைனாரிட்டி சமுதாயம்” என்ற தலைப்பில் உள்ள கட்டுரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி மைனாரிட்டிகளுக்கான தனிச்சலுகைகளை பெரியார் எதிர்ப்பது போலக் காட்டுகிறார் ரவிக்குமார். அதற்கு மாறாக, அம்பேத்கர் மைனாரிட்டிகளின் பாதுகாப்பை வலியுறுத்துகிறவர் என்றும் கூறுகிறார்.
பெரியாரைப் பொருத்தவரையில் மைனாரிட்டி என்றாலே பார்ப்பனர்கள்தான். மூன்றே அரைக்கால் (3 1/8) சதமே உள்ள பார்ப்பனர் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டதுண்டு. உடல் உழைப்பில் இல்லாதவர்களும் அவருக்கு மைனாரிட்டி. ரவிக்குமார் சுட்டிக்காட்டும் கட்டுரையில் பெரியார் முஸ்லீம்களை இந்த வகையில் வைத்தே ‘திட்டுகிறார்’. தவிரவும், இக்கட்டுரையில், முஸ்லீம்கள் துரோகம் செய்து விட்டதாகவும் துரோகிகளோடு சேர்ந்துகொண்டு விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். கட்டுரை எழுதப்பட்ட காலத்தை வைத்துப் பார்த்தால் (1962) முஸ்லீம்கள் தி.மு.க. – வின் பக்கம் சாய்ந்துவிட்டதை மனதில் வைத்துப் பெரியார் இப்படிப் பேசுகிறார் என்று ஊகிக்க இடமுண்டு.
இக்கட்டுரையில் இருந்து மூன்று மேற்கோள்களை வரிசையாகக் காட்டும் ரவிக்குமார் சடாரென்று பெரியார் வேறொரு கட்டுரையில் (அது எந்தக் கட்டுரை என்பதை ரவிக்குமார் குறிப்பிடாமல் விட்டிருக்கிறார்) எழுதியுள்ள விஷயங்களை எடுத்துப்போட்டு, “இஸ்லாத்திற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. சாயிபுகள் விகிதாசாரம் பெற்று முன்னேறிவிட்டால், முஸ்லீம் அல்லாத, ஆதி திராவிடன் அல்லாத, திராவிடனே, சூத்திரனே உன் கதி என்ன என்று யோசி” என்று பெரியார் பதறுவதைப் போலவும், அதற்காகத்தான் ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல, “இஸ்லாத்துக்கு மாறுவோம்” என்று சத்தம் போட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கும் விகிதாசாரம் கிடைத்துவிடும் என்பதற்காக “இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று அறிவித்தார் என்ற அர்த்தங்களை பெரியார் வாயிலிருந்தே சாதுர்யமாக வரவழைத்து விடுகிறார் ரவிக்குமார்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பெரியார் இஸ்லாமியருக்கும் எதிரி, தலித்துகளுக்கும் எதிரி!
ரவிக்குமார் எடுத்திருக்கும் கடைசி இரண்டு மேற்கோள்கள், அதே தொகுப்பில், பக்கம் 27 – ல் தொடங்கும் “இழிவு நீங்க ஒரு மருந்து” என்ற கட்டுரையிலிருந்து உருவப்பட்டவை. இஸ்லாத்திற்கு ஏன் மாறவேண்டும் என்பதற்கான காரணத்தைப் பெரியார் இதில் எந்தவிதமான சுற்றி வளைப்பும் இல்லாமல் நேரடியாகவே சொல்கிறார்: “இஸ்லாத்திற்கு மாறுவது என்பது நான் இந்துவல்ல என்று அறிவிப்பதாகும்“. சூத்திரப் பட்டம், அதாவது சாதி ஒழிய வேண்டும் என்பதற்காகவும் தீண்டாமையிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு உடனடி வழியாகவும் தலித்துகளுக்கும்கூட பல சந்தர்ப்பங்களில் பெரியார் இதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்.
(இக்கட்டுரையில் இஸ்லாத்தைப் பற்றி பெரியார் சொல்லும் விஷயங்கள் சுவாரசியமானவை. வாசகர்கள் இக்கட்டுரையைத் தேடிப் பிடித்து படித்துவிடுவது நல்லது. உதாரணத்திற்கு சில துளிகள்: “இஸ்லாம் என்பது சாந்தி, பணிவு, பக்தி என்ற பொருள்படும் அரபுச்சொல்; இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை. இவ்வளவுதான்” …. “இஸ்லாம் என்றால் முகம்மது நபிகள் மதம் என்றோ, இங்கு லுங்கி கட்டிக்கொண்டு, அளந்து தாடி வைத்துக்கொண்டு இருக்கும் சாயுபு, ராவுத்தர், மரைக்காயர், மாப்பிள்ளை என்கின்றவர்கள் மதம் என்றோ கருதிவிடாதீர்கள்“).
இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, பெரியார் இஸ்லாமியர்களுக்கு எதிரி (தனது நோக்கம் அப்படிச் சொல்வதன்று என்று அதே மூச்சில் சொல்லிக் கொண்டே) என்று ‘நிரூபிக்க’ ரவிக்குமார் ஏன் இவ்வளவு பிரயத்தனங்கள் செய்கிறார் என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை. யாராவது எதையாவது முடிவு செய்து கொள்ளட்டும்.
என்றாலும், பெரியாரை இப்படித் திரித்துச் சித்தரிக்கும் முயற்சிகள் இந்துத்துவ சக்திகளுக்கே துணையாக முடிந்துவிடும் ஆபத்திருப்பதை மட்டும் நாம் உணர்ந்து கொள்வது அவசியம். பெரியாரை நாம் இன்றைய தலித் இயக்கத்திற்கான வழிகாட்டியாகவோ ‘தலைவராகவோ’ எடுத்துக்கொள்ள வேண்டியதில்லைதான். அதற்காக, அவரைப் பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதியாக, இஸ்லாமியர்களுக்கு எதிரானவராகக் காட்டும் வேலையைச் செய்வதும் அவசியமற்றது.
தலித்துகள், இஸ்லாமியர்களின் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து தன்னால் ஆனதைச் செய்தவர் பெரியார். அதற்கும் மேலாகத் தான் எதையும் பெரிதாகச் செய்துவிட்டதாகவும் அவர் எப்போதும் சொல்லிக் கொண்டதுமில்லை. அப்படிப் பல தலித் தலைவர்கள் பாராட்டிய சந்தர்ப்பங்களிலும்கூட பணிவோடு அதை மறுத்து தன்னைத் தாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்.அவரது உதாரணம், இந்துத்துவத்திற்கு எதிரான செயல்பாடுகளில் நமக்கு ஒரு முக்கியமான ஆயுதம் என்பதை மனதில் வைத்திருப்பதே போதுமானது என்று நினைக்கிறேன்.
புதிய கோடாங்கி ஜூலை 2002.