Saravanan
12 hrs · Edited ·
பிரதிபா நந்தகுமார் (கன்னடம்) கவிதைகள்
---------------------------------------------------------------
தமிழில்: கா.நந்தகுமார்
காப்பி அருந்துவதும் ஒரு கலை என்று சொன்னவன் யாரென சொல்லத் தேவையில்லை,
மாபெரும் தத்துவஞானியாக இருக்கிறானே, அவன்தான்
அவனைப் பொறுத்தவரையில், காப்பி அருந்துவது உடலுறவுபோன்றதாகும்
சூடாக இருக்கவேண்டும், ஆயினும் தொண்டையைச் சுட்டுவிடக்கூடாது
இனிப்பாய் இருக்கவேண்டும், ஆயினும் அளவு அதிகமாகிவிடக்கூடாது
அளவோடு இருக்கவேண்டும், ஆயினும் போதவில்லை என்றும் தோன்றிவிடக்கூடாது
காப்பிக் கோப்பையை உதட்டருகில் வைக்கும்போது அது நினைவிலெழுந்து மெய்சிலிர்த்தது
அவனைப் பொறுத்தவரையில் உடலுறவு என்பது ஒரு கலை
உடலுறவு என்பது காப்பி அருந்துவதைப் போல
சூடாக இருக்கவேண்டும், ஆயினும் தொண்டையைச் சுட்டுவிடக்கூடாது
இனிப்பாய் இருக்கவேண்டும், ஆயினும் அளவுக்கதிகமாக போய்விடக்கூடாது
அளவோடு இருக்கவேண்டும், ஆயினும் போதவில்லை என்றும் தோன்றிவிடக்கூடாது
அவன் உடலை என் உதடுகள் தீண்டும்போது அது நினைவிலெழுந்து மெய்சிலிர்த்தது
2-
மீண்டும் அதே பழைய காப்பி கெஃபே
இம்முறை இருபத்தி இரண்டு வயது நண்பன் விட்டுச் சென்ற துண்டுச்சீட்டைப் பற்றியபடி டபல் ஸ்ட்ராங் சொன்னேன்
இனி முடியாது
அதாவது, பொறுமையின் எல்லையைப்பற்றிச் சொல்லப்பட்டதா, அல்லது அவனுடைய கணினியின் டவுன்லோடின் திறமையைப்பற்றியதா
தெரியவில்லை.
நீலப்படங்கள்மீது ஏன் இந்தப் பைத்தியம் என்று கேட்டதற்கு வறண்ட குரலில் சொன்னான்
வேறு யார் இருக்கிறார்கள் துணைக்கு?
முதல்முறை அவன் அழுதுகொண்டே அணைத்த கணத்தில் ஆறுதலடையும் பொருட்டு உதட்டோடு உதடுசேர்க்க நெருங்கிய சமயத்தில் விலகியது நினைவிலெழுந்தது.
அன்று முத்தமிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்?