என் அன்மையிலிருப்போரில் யாராயிருக்கிறாய் நீ?
நான் துயிலுறவே விழிக்கிறேன்,
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.
எதனில் அஞ்சாதிருக்கிறனோ,
அதனில் என் விதியை உணர்கிறேன்
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்
உணர்தலில் நாம் சிந்திக்கிறோம் .
அறிவதற்கென்ன உள்ளது.
செவியிலிருந்து செவிக்கிடையே
என் இருத்தலின் நடமிடலை செவியுறுகிறேன்,
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.
அணுக்கமாய்
என் அன்மையிலிருப்போரில் யாராயிருக்கிறாய் நீ?
இறைவன் பூமியை ஆசீர்வதிக்கட்டும்!
அங்கு மெதுவாக நடக்கிறேன்,
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்.
ஓளி தருவை அகப்படுத்துகிறது,
எப்படியென யாரால் இயம்பவியலும் ?
ஒரு அற்ப புழு சுழல்படிக்கட்டில் ஏறிச்செல்கிறது,
நான் துயிலுறவே விழிக்கிறேன்
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.
உனக்கும் எனக்குமாய் செய்ய
பேரியற்கைக்கு மற்றொன்றிருக்கிறது, ஆகையால்
மேலும் அழகாய் உயிர்ப்புள்ள இளங்காற்றை ஏற்றிடு,
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்.
இந்த அசைவாட்டம் என்னை திடப்படுத்துகிறது,
நான் அறிந்துணர வேண்டும்.
எது அப்பால் வீழ்ந்திருக்கிறதோ அது அருகிருக்கிறது .
நான் துயிலுறவே விழிக்கிறேன்
நடையிடலை நான் மெதுவாக செய்கிறேன்.
நான் எங்கு சென்றடைய வேண்டுமோ
அவ்விடத்தை போதலில் கற்றறிகிறேன்.
-Theodore Roethke-
(தமிழாக்கம் : எஸ்.சண்முகம்)