Tuesday 9 June 2015

புதைபட்டு-2
மைக்கேல் ஓன்யாட்டே
என்ன நாம் இழந்தது
அகவயக் கவிதை
சுயத்தின் ஆழ் நிலைகள்
தினசரி வாழ்வின் நிலக்காட்சிகள்
குறிப்பிட்ட கொள்கைகள் கைவிடப்படல்
தொடங்கிய தேதிகள்
நயப்பண்பின் விதிகள்-ஒரு கோயிலில் அல்லது
கானகத்தில் நுழைவது எவ்வாறு,
ஒரு பாடம் தொடங்குமுன் அல்லது கலை நிகழ்த்தப்படுமுன்
குருவின் பாதம் பணிவது எவ்வாறு.
மத்தள வாசிப்பின் கலை. கண்ணுக்கு வர்ணம் தீட்டும் கலை
ஒரு அம்பை வெட்டி எடுப்பது எவ்வாறு.
காதலர்க்கிடையே அங்க அசைவுகள்.
அவன் சருமத்தின் மீது அவளது பற்குறி அமைவுகள்
ஒரு துறவியால்
ஞாபகத்திலிருந்து வரையப்பட்டது.
காட்டிக் கொடுத்தலின் எல்லைகள். பழைய காதலனை
தற்போதையவன் பழிப்பதற்கான ஐந்து வழிகள்.
பிரதான உணர்ச்சிகளை சமிக்ஞை தர
ஒன்பது விரல்கள் மற்றும் கண் அசைவுகள்.
தனிமையின் சிறு படகுகள்
காதலில் உயிர் பெற்று
மீண்டும் காற்றில் ஏறும் பாடல்கள்
வஞ்சகம் மற்றும் புகழ்ச்சியால்
அப்பட்டமாய்த் தெரியும்
நம் பாடுகள் மற்றும் நாட்கள்
எவ்வாறு பருவ மழைகள்
(தென் மேற்கு, வடகிழக்கு)
நடத்தையை நிர்வகிக்கும் என்றறிந்திருந்தோம்.
மேகங்களில் மறைந்து,
நதிகளில்,
உடைபடாப் பாறையில்
இறந்தோரின் அறிவை அறிதல்
எப்போதென்றும்.
எல்லாவற்றையும் எரித்தோம்
அல்லது விற்றோம்
அதிகாரம்
செல்வத்தின் பொருட்டு
பழிவாங்கலின் எண்திசைப் புள்ளிகளிலிருந்து
இருதளப் பொறாமையிலிருந்து.
(from Handwriting by Michael Ondaatje)