MONDAY, FEBRUARY 14, 2005
காதல் கவிதைகள்:8 மனுஷ்ய புத்திரன்
காதலர் தினத்தை ஒட்டி நான் திட்டமிட்டபடி விரிவான அளவில் கவிதைகளை உள்ளிடமுடியாதபடி பல்வேறு வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டன. ஆனாலும் சில கவிதைகளையேனும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பி.கே. சிவக்குமார் போன்ற நண்பர்கள் சில கவிதைகள் தொடர்பாக எழுதியுள்ள ஆழமான குறிப்புகள் மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. கவிதைகளையோ பிற இலக்கியப் பிரதிகளையோ முன்னிட்டு இத்தகைய பேச்சுக்களை உயிர்மை வலைப்பதிவில் உருவாக்க பேராவல் எழுகிறது. திரு நாராயணன் இப்பதிவை தொடர்ந்து தன்னுடைய வலைப்பதிவில் மேலும் சில கவிதைகளை இட்டிருந்தார்.
மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...
இழந்த காதல்
நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
அந்த இடம்
போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்
ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது
நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்
Posted by உயிர்மைat 9:36 AM4 comments:
காதல் கவிதைகள்:7 மாலதி மைத்ரி
காதல் கடிதம்
ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா
Posted by உயிர்மைat 12:56 AM3 comments:
SUNDAY, FEBRUARY 13, 2005
காதல் கவிதைகள்:6 ஞானக்கூத்தன்
பவழமல்லி
கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்
பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி
கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?
Posted by உயிர்மைat 11:11 PM5 comments:
காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
Posted by உயிர்மைat 6:19 PM4 comments:
காதல் கவிதைகள்:4 நகுலன்
நான்
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
நான்(2)
நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.
Posted by உயிர்மைat 5:33 PM1 comment:
காதல் கவிதைகள்-3 சுகுமாரன்
ஸ்தனதாயினி
இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.
உன் பெயர்
உன்பெயர்-
கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி
உன் பெயர்-
இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.
காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?
உன் பெயர்-
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
* தன் காதலிக்கு பரிசாக தன் காதை அறுத்துத் தந்த வான்கோ
** யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்
Posted by உயிர்மைat 9:29 AM3 comments:
காதல் கவிதைகள்-2 பூமா ஈஸ்வரமூர்த்தி
மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்
காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.
(நன்றி:காதலைக் காதல் என்றும் சொல்லலாம்)
Posted by உயிர்மைat 4:27 AM3 comments:
காதல் கவிதைகள்-1 ஆத்மாநாம்
காட்சி
முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.
உன் நினைவுகள்
எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை
அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள
முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்
உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்
மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை
எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்
என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்
பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்
நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)