ஆ. மாதவன்
By சாரு நிவேதிதா
First Published : 21 June 2015 10:00 AM IST
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/21/ஆ.-மாதவன்/article2877193.ece
1934-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வரும் ஆ. மாதவன் பள்ளி இறுதி வகுப்பு வரை மலையாளக் கல்வி கற்றவர். ஆதலால் தமிழோடு மலையாள இலக்கியமும் அறிந்தவர். 1974-ல் புனலும் மணலும் என்ற முதல் நாவல் வெளிவந்தது. அடுத்து வந்த கிருஷ்ணப் பருந்து என்ற நாவல் பலராலும் சிலாகிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். காரூர் நீலகண்ட பிள்ளையின் சன்மானம் (1974) என்ற நாவலையும், பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும் (2002) என்ற நாவலையும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.
1985-ம் ஆண்டு ஒருநாள், கலைஞன் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த மாதவன் கதைகள் என்ற தொகுப்பை வாங்கினேன். வாங்கியவுடன் துரதிர்ஷ்டவசமாக அதன் முன்னுரையைப் படித்து விட்டு புத்தகத்தை மூடி வைத்து விட்டேன். பதினாறு பக்கங்கள் நீண்டிருந்த அந்த முன்னுரையில் ஆ. மாதவனுக்கு ஒரு பத்தி மட்டுமே. அதிலும் ‘புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம்’ என்று ஆரம்பித்தது அந்தப் பத்தி. சுந்தர ராமசாமி எழுதியிருந்த முன்னுரை. அதோடு அந்தப் புத்தகத்தை முப்பது ஆண்டுகள் கழித்தே திறந்தேன். முழுத்தவறும் என்னுடையதே. முன்னுரையைப் படித்து விட்டு முடிவுக்கு வந்திருக்கக் கூடாது. எனக்கு புதுமைப்பித்தனும் பிடிக்காது; ஜி. நாகராஜனும் பிடிக்காது என்பதால் நேர்ந்த விபத்து அது. இப்போது படிக்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட மகத்தான கலைஞனை நாம் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோம் என்று நொந்து கொண்டேன். பிறகு ஆ. மாதவன் எழுதிய எல்லா நூல்களையும் வாங்கிப் படித்தேன். இன்னும் அவர் செய்த மொழிபெயர்ப்புகளை மட்டுமே படிக்கவில்லை.
மேலே குறிப்பிட்ட சுந்தர ராமசாமியின் முன்னுரை நீங்கலாக இதுவரை ஆ. மாதவன் பற்றி இரண்டே பேர்தான் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கின்றனர். ஜெயமோகன், சுகுமாரன். எழுதியதோடு மட்டும் அல்லாமல் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் மூலம் மாதவனுக்கு விருது வழங்கியும் கௌரவித்திருக்கிறார் ஜெயமோகன். தமிழ்ச் சமூகம் செய்யத் தவறிய ஒரு காரியத்தைத் தனி ஒருவராகச் செய்து வரும் ஜெயமோகனுக்கு என் பாராட்டுக்கள். அதோடு மாதவனைச் சந்தித்து அவருடனான நீண்ட ஒரு நேர்காணலையும் வெளியிட்டிருக்கிறார் ஜெயமோகன். மாதவனின் எழுத்து உலகினுள் நுழைவதற்கு இந்த நேர்காணல் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. (பின் இணைப்பில் காண்க.) அந்த வகையிலும் நான் ஜெயமோகனுக்குக் கடன் பட்டிருக்கிறேன்.
ஜெயமோகனையும் சுகுமாரனையும் தவிர வேறு யாரும் மாதவனை சரியான முறையில் தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகம் செய்யவில்லை. தேர்ந்த உலக இலக்கிய வாசிப்பு உள்ள சுந்தர ராமசாமி தன் முன்னுரையில் மாதவனுக்குரிய நியாயத்தைச் செய்திருக்க வேண்டும். தவறி விட்டார். ஆனால் சு.ரா.வின் பள்ளியிலிருந்து வந்த ஜெயமோகன் அதைப் பிரமாதமாகச் செய்திருக்கிறார். மாதவனின் சிறுகதைகளில் ஆகச் சிறந்தது எட்டாவது நாள். மட்டுமல்ல; தமிழ் நாவலில் புயலிலே ஒரு தோணி எப்படி ஒரு சிகர சாதனையோ அப்படி ஒரு சாதனை எட்டாவது நாள். இதை மிகச் சரியாகப் பிடித்திருக்கிறார் ஜெயமோகன். மாதவனுடனான நேர்காணலில் ஜெயமோகன் எட்டாவது நாள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘உங்களுடைய மிகச் சிறந்த குறுநாவல்களில் ஒன்று எட்டாவது நாள். சாளைப் பட்டாணியின் வாழ்க்கையும் மரணமும் தமிழிலக்கியத்தில் பதிவான உக்கிரமான இருத்தலியல் சித்தரிப்பு என்று நான் நினைக்கிறேன்.’
மாதவனின் கதைகளை அணுகுவதற்கு இது ஓர் ஆரம்பப் புள்ளி. ஜெயமோகன் எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார் என்பதற்கு மாதவன் பற்றிய அவரது இன்னொரு கட்டுரையில் விடை இருக்கிறது. அந்தப் பகுதி:
‘ஆ.மாதவனை இயல்புவாத அழகியல் கொண்டவர் என்றேன். இயல்புவாதம் வாழ்க்கையைச் சுருக்கிப் பார்க்கிறது. முடிந்தவரை இறுக்கி அழுத்தி என்ன மிச்சமென்று பார்க்கிறது. உலகமெங்கும் அதன் விடை என்பது மனிதர்கள் காமகுரோதமோகங்களால் மட்டுமே ஆனவர்கள் என்பதே. மனிதன் என்ற விலங்கு தன் சமூகபாவனைகளுக்கு அடியில் அடிபப்டை விலங்கிச்சைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதே. ஆ.மாதவனும் அதையே தன் ஆக்கங்கள் வழியாகச் சொல்கிறார். அவரது கதைகள் அனேகமாக அனைத்துமே காமத்தாலும் வன்முறையாலும் பசியாலும் ஏமாற்று வித்தைகளாலும் தீர்மானிக்கப்படும் வாழ்க்கைத் தருணங்களாக உள்ளன.
இந்த மக்களைக் கவனிக்கையில் இவர்கள் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள் என்ற எண்ணம் எழுகிறது. நேற்று இல்லாத, நாளை இல்லாத மக்கள். ஆகவே இன்று என்பது சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒரு கொண்டாட்டம்தான். ஜாளி மணியன் என்ற பெயரே அந்தச் சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. சாளைப் பட்டாணியின் வாழ்க்கை என்பதே எத்திச் சேர்க்கும் பணத்தைத் தின்றும் குடித்தும் போகித்தும் கொண்டாடித் தீர்ப்பதுதான்.’
கிட்டத்தட்ட இருத்தலியலின் சாரத்தை இந்த மேற்கோளிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளலாம். என்றாலும் ஜெயமோகனின் இந்த அவதானம் மாதவனின் கதாபாத்திரங்களுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இருத்தலியலின் அடிப்படை ‘இந்தக் கணத்தைத் தீவிரமாக வாழ்’ என்பதாக இருந்தாலும் இருத்தலியல் முழுக்க முழுக்க அறம் (moralistic and ethical) சார்ந்தது. கடவுள் இறந்து விட்டார் (நீட்ஷே) அல்லது Existence precedes Essence (ஜான் பால் சார்த்தர்) ஆகியவற்றைப் பார்த்து விட்டு பலரும் இருத்தியல் அறத்துக்கு எதிரானது என்று நினைக்கின்றனர். ஆனால் இருத்தலியல் மிகத் தீவிரமான அறம் சார்ந்த சிந்தனை. அது உங்கள் மீது கடமையையும் குற்ற உணர்ச்சியையும் சுமத்துகிறது. சார்த்தர் சொல்லும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஃப்ரெஞ்சுக்காரன் தன்னுடைய விதவைத் தாயைத் தனியாக விட்டு விட்டு விடுதலைப் படையில் சேர நினைக்கிறான். படையில் சேர்ந்தால் தாய் அனாதை. சேராவிட்டால் தேசத் துரோகி. நாடா? வீடா? இது போன்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே போகிறார் சார்த்தர்.
ஆனால் எட்டாவது நாளில் வரும் சாளப் பட்டாணிக்கு இது போன்ற எந்தக் கேள்விகளும் இல்லை. இன்று என்ற இருத்தலியல் தருணத்தில் வாழ்ந்து கொண்டாடும் மனிதன் தான் அவன் என்றாலும் அவனிடம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை; எந்தக் கேள்வியும் கடமையும் இல்லை. கிட்டத்தட்ட 300 பக்க புத்தகமாக வரக் கூடிய அளவுக்குத் தேவையான தத்துவச் சிக்கல்களைத் தன்னில் கொண்டிருக்கும் 50 பக்கக் குறுநாவல் எட்டாவது நாள். அதில் வரும் சாளப் பட்டாணியின் வாழ்க்கையைப் பற்றி மாதவன் விவரிக்கிறார்:
‘நாப்பத்தி அஞ்சோ – நாப்பத்தியாறிலேயோ மொகரம் – பெறைக்கு, மேட்டுக் கடை ஊச்சாளி மைதீன் வந்து, ‘பட்டாணீ! கடுவா புலி வேஷம் போடுதீரா?’ன்னு கேட்டான். போடுதீரான்னு கேட்டா, அதிலெ பின்னெ மறுப்பென்ன இருக்கு? பெறை பத்து நாளும் கடுவா புலி வேஷமும் தண்ணியடியும். ஒருத்தரும் கேக்க மாட்டா, இஷ்டம் போல ஆடலாம். ஒன்பது கிடாய் ஆட்டைப் பல்லு கொண்டு கடிச்சு எறிஞ்சது அப்போதான். அன்னைக்கு எட்டாம் பெறை. பாளையத்திலிருந்தும், மேட்டுக் கடையிலிருந்தும் ஒவ்வொருத்தனும் வேஷங்களெப் போட்டுக் கொண்டு வந்து கடையிலே, அங்கனே இங்கனே நின்னு கொட்டி முழக்கீட்டு ஆடுதான். செண்டையும், சேங்கலையும் ஒரு பெகளம்தான். (பெகளம் – ரகளை)
ஆகாசமும் பூமியும் தொடாமெ பாஞ்சு பாஞ்சு ஆடினேன். ஊச்சாளியும் விடல்லே. ஒற்றைக்கு நின்னு தகர்த்து ஆடினான்… பாத்திரக் கடை நாயர் முதலாளி கிடாய்க்கு ஆள் அனுப்பி சம்பக் கடையிலிருந்து ரெண்டு கிடா வந்தது. இடுப்பளவு வரும் ஒவ்வொரு கிடாயும். கண்டா நேர்ச்சைக் கிடா மாதிரி ஒவ்வொண்ணும் ஒரோரு எருமை மாடு தண்டி உண்டும் – களி முறுக்கேறி நிக்கக் கூடிய வேகம். கிடாயைக் கொண்டு விட்டதுதான் தாமதம். ஒரே பாய்ச்சல்… அடக்கி முதுகிலெ ஒரு கவ்வல். கிடா ம்மேன்னு ஒரு விளி… ஆடு தலைக்கு மேலே ஒயர்ந்து பின்னாலே ஆறடி தள்ளீப் போய் விழுந்து பிடைக்குது.
அமீன் ஹோட்டல்காரன் ஓட்டலிலே எறச்சிக்காக நிறுத்தியிருந்த நாலு கிடாயைக் கொண்டு வந்து நிறுத்தினான். கிடா முன்னெ வந்ததுதான் தாமசம்… கறண்டு அடிச்சது போல, நாலெண்ணத்தையும் கை தொடாமே கடிச்சு எறிஞ்சேன். கூட்டத்திலே சடபுடான்னு கையடியும் சீட்டியடியும் பெகளம். செண்டை மேளம் வெளுத்து வாங்குது. பெறவென்னடான்னா ஒரு மணிக் கூறிலெ எண்ணிக் கொண்டு ஒம்பது கிடா கடிச்சு எறிஞ்சிருக்கேன்.’
இதுதான் சாளப் பட்டாணி. ஆறடி உயரம் கொண்ட கருத்த உருவம். இவனுக்கு இவன் கடித்தெறியும் கடா ஆடுகளும் ஒன்றுதான், பெண்களும் ஒன்றுதான் என்பதற்கு இன்னொரு காட்சி. ஒரு இரவில் பட்டாணி பஸ்ஸை விட்டு இறங்கி நடக்கும் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். இவன் பேச அவளும் பேசுகிறாள். அவளை அழைத்துக் கொண்டு தன் சிநேகிதனின் அறைக்கு வந்து விட்டுவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு, இடையில் இன்னொருத்தனையும் சேர்த்துக் கொண்டு மூவரும் சாராயத்தையும் இறைச்சியையும் வாங்கிக் கொண்டு அறைக்கு வரும் போது மணி ஒன்று. இனி பட்டாணியே சொல்கிறான்:
‘நான், கொச்சப்பி, மேனவன் – மூணு பேரும் சேர்ந்தாச்சு. வெளுக்க வெளுக்க ஒரோருத்தராயிட்டு மாறி மாறிப் போனோம். ‘வெள்ளமும்’ சோறும் எறச்சியும் – கேக்கணுமா? பின்னெ நடந்ததெல்லாம் தீபாளிதான்… நேரம் விடிய ஆரம்பிச்சு நான் பார்த்தப்போ சரக்குக்குப் போதமில்லே. போதமில்லாட்டா என்ன? கடைசியா ஒருக்கக் கூட நான் போனேன்… சங்கதியெல்லாம் முடிஞ்சு பெண்ணெ எளுப்பினப்போ… அவ்வளவுதான்! ஆள் இல்லே. குளோஸ்! தீர்ந்தது!
இப்போ ஆலோசிக்கும்போ ஒண்ணும் தோணலெ. வருஷமெத்தரை ஆச்சுது. இருவதுக்கு மேலே இருக்குமே. கடைசீல செய்த காரியம்தான் பயங்கரமான ரெண்டு மத்த காரியம். இப்போ அந்த மாதிரியொண்ணும் செய்துக்கிட முடியாது. போலீஸ் நாயும், சிஐடிகளும் எவ்வளவோ இருக்கு. அனங்கிக்கிட முடியாது. ஆனா அப்போ செய்தா செய்ததுதான். படைச்சவன் கூட அறியாம சங்கதியெ மறச்சிரலாம். சரக்கு பிரேதம் ஆயிப் போச்சுன்னு அறிஞ்சதும் கொச்சப்பி பின்னே ஆலோசிக்க நிக்கலே. நாய்களெ அடச்சுக் கொண்டு போகக் கூடிய வண்டியெ கொண்டு வந்தான். கருமடத்துலெ உள்ள ஒரு ஈச்சைக்குக் கூடெ சங்கதி தெரியாது. பிரேதத்தைப் பெட்டிக்குள்ளே வெச்சு – கறண்டடிச்சுக் கொல்லும் நாய்களெ குழிச்சு மூடியிடக் கூடிய குடப்பனைக்குன்னு மணல் தேரிக்குக் கொண்டு வந்தான். சூரியன் உதிச்சு, நல்ல வெட்டம் வெச்சு வந்தப்போ சங்கதியெல்லாம் மங்களம்!’ (கொச்சப்பு என்பவன் தெருநாய்களைப் பிடித்து மின்சாரம் பாய்ச்சிக் கொன்று புதைக்கும் நகரசபை வேலை செய்யும் கூலியாள்.)
இந்தச் சம்பவத்தில் குற்ற உணர்ச்சியோ, செய்யலாமா வேண்டாமா என்பது போன்ற அறம் சார்ந்த உணர்வுகளோ எதுவுமே இல்லை. செய்து முடித்த பிறகும் இல்லை. வனத்தில் காம இச்சையுடன் திரியும் மிருகம் கூட இஷ்டமில்லாவிட்டால் இணையோடு சேராது. எனவே பட்டாணியை மிருகத்தோடும் ஒப்பிட முடியாது. அவன் செய்யும் வேடிக்கையான விளையாட்டு இன்னொன்றைப் பாருங்கள்:
‘சம்பக் கடையிலுள்ள எறச்சிக் கடையிலே வெட்டுக்காரனா இருக்கும்போ எத்தரையோ எச்சில் நாய்களெ, எறச்சி வெட்டும் கத்தியினாலே – முதுகிலெயும் வாலிலெயும் வெட்டியிட்டுண்டும். அப்போ அது ஒரு ஜாலி. வெட்டுக் கொண்டதும் நாயி குய்யோன்னு விளிச்சுக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிப் போறதைக் காணத் தமாஷாயிருக்கும். சம்பக் கடைக்கு மீன் வாங்க வரும் பொம்பிளைங்கள் எல்லாம், சாமதுரோகி… கை புழுத்துப் போகும்’பாங்க…’
மாதவனின் உலகத்தை ஜெயமோகனை விட சுகுமாரன் சரியாக அவதானித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. புனலும் மணலும் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார் சுகுமாரன்:
‘தீமையும் மனித இயல்புதான் என்ற அடிப்படையில் உருவாவதுதான் மாதவனின் படைப்புகள்… தனது சமகால எழுத்தாளர்களிடமிருந்து ஆ. மாதவனைத் தனித்து நிறுத்தியது மனித மனதின் இருள் வெளிகளை ஆராயும் முனைப்புத்தான். இந்த நோக்கில் மாதவனின் படைப்புலகம் அவர் ஆற்றலுடன் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அணுகப்படவில்லை. வெறும் நடப்பியல் எழுத்தாளராகவும் வட்டார வழக்கைப் படைப்பில் திறம்படக் கையாண்டவராகவும் மட்டுமே கருதப்பட்டிருக்கிறார். அவரது முழுக் கதைகளின் தொகுதிக்கு ஜெயமோகன் எழுதியுள்ள பின்னுரையே ஆ. மாதவனை மதிப்பிடும் முதலாவது விமரிசன முயற்சி. ஆனால் அறம் அறமின்மை அல்லது நன்மை தீமை என்ற கருத்து நிலைகள் பற்றிய தனது விளக்கங்களை உரைத்துப் பார்க்கத் தோதான கல்லாக மாதவனின் படைப்புலகை ஜெயமோகன் பயன்படுத்திக் கொள்ளுகிறார் என்ற சந்தேகத்தையும் குறிப்பிட்ட அணுகுமுறை ஏற்படுத்தாமல் இல்லை.
மாதவனின் படைப்புலகில் அறம் பற்றிய எந்த அலட்டலும் இல்லாமலேயே மனிதனின் சுபாவம் சித்தரிக்கப்படுகிறது. அது தீமை எனில் இயற்கை; நன்மை எனில் அதுவும் இயற்கை என்ற பாரபட்சமற்ற பின்னணியிலேயே உருவாகிறது அந்த உலகம்.’
ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் ஆ. மாதவனின் படைப்புலகை தீமையின் அழகியல் என்று சொல்லலாம். தீமையின் அழகியலை இதுவரை தமிழில் எழுதியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் ஜி. நாகராஜனும் ஜெயகாந்தனும். ஆனால் அவர்களிடம் உள்ள romanticism மாதவனிடம் இல்லை. மட்டுமல்லாமல் உலக இலக்கியத்தில் தீமையின் அழகியலை எழுதியவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, அரபியில் முகம்மது ஷுக்ரி, ஃப்ரெஞ்சில் ஜான் ஜெனே. இந்த மூவரை விடவும் ஆ. மாதவன் முக்கியமானவர் என்று கருதுகிறேன். எப்படி என அடுத்த வாரம் பார்ப்போம்.
இணைப்பு:
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை : ஆ. மாதவன் பேட்டி (1) http://www.jeyamohan.in/9383
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை : ஆ. மாதவன் பேட்டி (2) http://www.jeyamohan.in/9385#.VXw8wDSz2wc
பேட்டியின் பகுதி (3) : http://www.jeyamohan.in/9389
ஆ. மாதவன் -2
By சாரு நிவேதிதா
First Published : 28 June 2015 10:00 AM IST
‘புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம்’ என்று ஆ. மாதவனின் சிறுகதைகளுக்கு எழுதிய முன்னுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டது இன்று நேற்று அல்ல; முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். ஆ. மாதவன் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு அவரை வட்டார வழக்கு எழுத்தாளர் எனவும், யதார்த்தவாதி எனவும் குறுக்கி ஒரு மூலையில் உட்கார்த்தி வைத்து விட்டார்கள் என்பதே என் புகார். மற்றபடி அவருடைய எழுத்து பற்றி யார் யார் எத்தனை பக்கம் எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்து எனக்கு அக்கறை இல்லை. அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட அவரை சரியானபடி அடையாளம் காட்டியிருப்பவர்கள் என ஜெயமோகனையும் கவிஞர் சுகுமாரனையும் குறிப்பிட்டேன். இன்னும் சரியாகச் சொன்னால், சினிமாத் துறையைப் போல் இலக்கியத்திலும் பெயர் வாங்க திறமை மட்டும் இருந்தால் போதாது போல் இருக்கிறது; நல்லூழ் வேண்டும். வாழ்க்கையில் க்ஷீணப்பட்ட ஜி. நாகராஜனுக்கு இலக்கியத்தில் அந்த நல்லூழ் இருந்திருக்கிறது போலும். திருடர்கள், பொறுக்கிகள், வேசிகள், கொலைகாரர்கள், ரவுடிகள், பெண்களை பலாத்காரம் செய்பவர்கள் போன்ற கடைநிலை மக்களைப் பற்றி எழுதியவர் என்று சொன்னால் அங்கே ஜி. நாகராஜனின் பெயர் மட்டுமே இருந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த படிகள் என்ற பத்திரிகையில் கூட நாகார்ச்சுனன் ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலைப் பற்றித்தான் எழுதினாரே தவிர யாருமே ஆ. மாதவனின் பெயரைக் குறிப்பிடவில்லை. காரணம், மாதவன் இடதுசாரிப் பத்திரிகைகளில் எழுதி வந்ததாக இருக்கலாம். அல்லது, நாகராஜனுக்கு இருந்த நல்லூழ் மாதவனுக்கு இல்லை என்று கொள்ளலாம். இவ்வளவுக்கும் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியும், subaltern வரலாறு பற்றியும் தமிழில் முதலில் விவாதித்த பத்திரிகை படிகள். இடதுசாரிகள், சுந்தர ராமசாமி பள்ளியைச் சேர்ந்தவர்கள், அமைப்பியல்வாதிகள் என்று எந்தக் குழுவைச் சேர்ந்தாலும் விளிம்பு நிலை வாழ்க்கையை எழுதியவர் என்று எடுத்தால் அங்கே ஜி. நாகராஜனைத் தவிர வேறு எவர் ஒருவருமே பேசப்பட்டதில்லை. (வெகுஜன அளவில் ஜெயகாந்தன்.) ஆ. மாதவன் பற்றி யாரும் பேசவில்லை என்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் இதுதான். அங்கீகரித்தாலும் சரி, நிராகரித்தாலும் சரி, மையப் புள்ளி ஜி. நாகராஜனாகவே இருந்தார்.
***
உலக இலக்கியத்தில் Jean Genet (ஃப்ரெஞ்ச்), Charles Bukowski (ஆங்கிலம்), Muhammad Shukri (அரபி) ஆகிய மூவர்தான் தீமையின் அழகியலை எழுதியவர்களில் முக்கியமானவர்கள். ஆனால் அந்த மூவருமே தங்களுடைய சொந்த அனுபவங்களையே இலக்கியமாகப் படைத்தார்கள். அந்த வகையில் இவர்களின் இலக்கியம் சுயசரிதைத் தன்மை வாய்ந்தது. ஆனால் மாதவன் மற்றவர்களின் வாழ்க்கையை எழுதினார். அதன் காரணமாகவே அவர் மேற்குறிப்பிட்ட மூவரை விடவும் முக்கியமானவர் ஆகிறார். சில சமயங்களில் தமிழின் சிகர சாதனையாகக் கருதப்படும் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் அடைந்தால் ஆங்கிலத்தில் அந்தப் படைப்புகள் எந்தப் பேச்சையும் ஏற்படுத்துவதில்லை; எந்த அதிர்வலைகளையும் உண்டாக்குவதில்லை. அதற்கு ஒரு முக்கியக் காரணம், அப்படைப்புகள் ethnocentric ஆக அமைவதுதான். எந்த மொழியில் அந்தப் பிரதி உருவாக்கப்படுகிறதோ அந்த மொழியில் மட்டுமே அதன் ஜீவிதம் உருவாகி முடிந்து விடுகிறது. தாய் மொழியை விட்டு வெளியில் போகவே முடியாது. போனாலும் யாருக்கும் புரிவதில்லை. மாதவனின் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல. உலகில் எந்த மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டாலும் அவை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் மாதவனின் கதைகள் காலம் இடம் என்ற இரண்டையும் கடந்ததாகவும், மனிதனின் ஆதி உணர்வுகளைப் பற்றிப் பேசுபவையாகவும் இருக்கின்றன.
மாதவன் கதைகள் இருத்தலியல் கோட்பாட்டுக்குள் அடங்குபவை அல்ல என்பது பற்றிச் சென்ற வாரம் பார்த்தோம். சொல்லப் போனால் மாதவன் கதைகள் இருத்தலியல் கோட்பாட்டைத் தாண்டி வந்து விட்டவை எனலாம். உதாரணமாக, எட்டாவது நாள் என்ற கதையில் வரும் சாளப் பட்டாணி ஏன் அவ்வளவு குரூரமான மனிதனாக வாழ்ந்தான் என்று பார்ப்போம்.
சாளப் பட்டாணியின் தந்தை ஹமீம் பாய் திருவிழாக்களில் புலி வேஷம் போடுபவர்களின் பெயிண்டர். ஒரு வருடத்தில் எத்தனை நாட்களுக்குப் புலி வேஷம் போடுவார்கள்? அந்த வேலையில் எவ்வளவு சம்பாத்தியம் வரும்? இதோ அந்தச் சூழல்: வீட்டிலே தினமும் அரைப் பட்டினிதான். வீட்டுக்குள்ளேயே இருக்கக் கூடிய அக்காமாரு ரெண்டு பேருக்கும் ஆப்பம் சுட்டு விக்கக் கூடிய ஜோலி. அதிலெதான் வீட்டுச் சங்கதியெல்லாம் ஒரு மாதிரி நடக்கும். தினமும் மீனும் கிழங்கும்தான். எப்பவாவது ஒருக்கெ கஞ்சியோ சோறோ கெடைக்கும். அப்பனுக்கு பெயிண்டு ஜோலி என்னைக்குமிருக்காது. ஜோலி உள்ளப்போ கெடைக்கிறதெல்லாம் அவருக்கு வெள்ளமடிக்கத்தான் காணும். அப்போ, அப்பனுக்கு ஒரு எழுபது வயசும் எனக்கொரு பதினாலு, பதினஞ்சு வயசும் இருக்கும். எங்க வீட்டுக்குக் கீழப் பொறத்திலெ ஒரு தண்டாத்தி தாமசிச்சிருந்தா. காணக் கொஞ்சம் நல்லா இருப்பா. அந்தப் பங்கி கூட அப்பனுக்குச் சிநேகம். அவளுக்குச் செலவுக்குக் கொடுக்கிறதுண்டாம். ஒருநாள் நான் பார்த்துக்கிட்டு நிக்க அப்பன் பங்கி வீட்டிலெ ஏறிப் போறாரு.’
அன்று இரவு பனிரண்டு மணிக்கு வீட்டுக்குக் கடுமையான குடி போதையில் வந்தவரை அடித்துப் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான் பட்டாணி. அதற்குப் பிறகு அவனுக்குக் குடும்பம் என்று எதுவும் இல்லாத தெருப் பொறுக்கியாக மாறுகிறான். இப்படிப்பட்ட சமூகப் பின்னணி கொண்டவன் எப்படி இருப்பான் என்ற கேள்வி கதை முழுவதும் அடியோட்டமாக இருக்கிறது.
காமம், வன்முறை ஆகியவற்றைப் போலவே மாதவனின் பாத்திரங்கள் வெகு அனாயாசமாக ஈடுபடும் மற்றொரு விஷயம், துரோகம். வீட்டை விட்டு வெளியேறிய பட்டாணிக்கு நல்ல குணமுடைய, நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு செட்டியார் வேலை கொடுக்கிறார். அப்படிப்பட்டவரிடம் பணத்தைத் திருடி விட்டுத் தெருவுக்கு வருகிறான் பட்டாணி.
மாதவனின் படைப்புகளிலேயே அதிகம் பேசப்பட்ட நாவலான கிருஷ்ணப் பருந்துவிலும் துரோகம்தான் நாவலை இயக்கும் கண்ணியாக விளங்குகிறது. மனித வாழ்வில் காமம், வன்முறை போன்றவற்றைப் புரிந்து கொள்வது எளிதாக இருந்தாலும் துரோகம் தான் யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருந்து வருகிறது. ஜெனேயின் எழுத்துக்களில் அடியோட்டமாக இருக்கும் கருத்தாக்கம் துரோகம். ‘துரோகத்தின் பரவசத்தை உணராதவர்களுக்குப் பரவசம் என்றால் என்னவென்றே தெரியாது’ என்பது ஜெனேயின் புகழ்பெற்ற வாசகம். இலக்கியத்தின் அடிப்படை அன்பு. தி. ஜானகிராமனை நாம் அனைவரும் கொண்டாடுவதன் காரணம், அவரது எழுத்தின் அடிப்படையாக இருக்கும் காதல். அதுவும் அன்பின் இன்னொரு வடிவம். தெய்வத்தையே அன்பின் சொரூபமாகத்தான் காண்கிறோம். அப்பேர்ப்பட்ட அன்பை மறுதலிப்பதன் மூலம், நிராகரிப்பதன் மூலம் மாதவனின் பாத்திரங்கள் துரோகத்தின் இருள் சார்ந்த கடவுளற்ற பிரதேசங்களில் அனாதையாகத் திரிகிறார்கள். அந்த வகையில்தான் தி. ஜானகிராமனை விடவும் மற்ற எல்லோரையும் விடவும் ஆ.மாதவனை மிக முக்கியமான சாதனையாளராகக் கருதுகிறேன்.
ஜானகிராமனின் அம்மா வந்தாள் ஒரு கிளாஸிக் என்பதில் இரண்டு வித கருத்துக்கே இடம் இல்லை. உலகின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று என அதைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிருஷ்ணப் பருந்து அதை விடவும் வலுவானது என்பது என் கருத்து. எப்போதுமே பெண்ணின் பிறழ்வு தான் அதிகம் பேசப்படும் என்பது நியதி. அந்த நியதியின்படி குடும்பத்துக்கு வெளியே காமம் கண்ட பெண்ணை எழுதியதால் அம்மா வந்தாள் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆனால் கிருஷ்ணப் பருந்துவில் ஒரு ஆணின் காமப் பிறழ்வு பாடுபொருள் ஆகியிருக்கிறது. அம்மா வந்தாளை விட கிருஷ்ணப் பருந்து வலுவானது என்று நான் கூறும் காரணம், அம்மா வந்தாளைப் போல் பின்னதில் காமப் பிறழ்வு வெளிப்படையாக இல்லை. அதற்கான சமிக்ஞைகள் நாவலில் ஒன்றிரண்டு இடங்களில்தான் தென்படுகின்றன.
நாவலின் நாயகனாக வரும் குருஸ்வாமி ராஜ வம்சத்தோடு தொடர்பு கொண்டிருந்த பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவர். இருந்த சொத்தையெல்லாம் பாட்டனாரும் தகப்பனாரும் தாஸிகளுக்கும் வைப்பாட்டிகளுக்கும் கொடுத்து விட கடைசியில் குருஸ்வாமியின் தலைமுறையில் மிச்சமிருந்தது ஒரு பெரிய தோப்பு. மனைவி இறந்த பிறகு அந்தத் தோப்பில் தனி மனிதராக வாழ்ந்து வருகிறார். குழந்தையும் இல்லை. இப்படியாக ஐம்பது வயதுக்குள் வாழ்வின் நல்லது கெட்டதுகளைப் பார்த்து விடுகிறார் குருஸ்வாமி. புத்தகங்களே அவருக்குப் பெரும் துணை. கூடவே பெயிண்டர் ரவி. குருவின் தாயார் இளம் வயதிலேயே இறந்து விடுகிறாள். அம்மு தான் வளர்ப்புத் தாய். நாவலின் இரண்டு motifகளில் ஒன்றான காமம் என்பது குருவின் வாழ்வில் இந்த இடத்தில் துவங்குகிறது. சிறுவன் குருஸ்வாமிக்கு எப்போதும் அம்முவின் அரவணைப்பு தேவைப்படுகிறது. நல்ல முகராசியும், சொல் இனிமையும், லேசாக பூனைக் கண்களும் கொண்ட அம்மு அம்மை பாடுவதைக் கேட்காமல் குருவுக்கு உறக்கம் வராது. ‘அம்மு தினமும் காலையில் குளித்து, கூந்தலை முதுகு நிறையப் பரப்பிக் கொண்டு, கோயிலுக்குப் போய் நெற்றியில் சந்தனக்குறி இட்டுக் கொண்டு வந்து, குருவை அள்ளி அணைக்கும் போது, காய்ச்சிய உருக்கெண்ணெய் மணமும் பூமணமுமாக அம்மு, கதைகளில் வரும் வரதேவதையாக அவனுக்கு மனம் நிறைவாள். அந்த தேவதை ஒருநாள் கட்டிலில், பச்சை பச்சையாக, பிறந்த மேனியில், அப்பாவின் நரைத்துப் போன நெஞ்சு ரோமத்தை வருடியவாறு, அப்பாவின் வெற்றிலைச் சாயம் படிந்த தொங்கும் உதட்டைக் கடித்தவாறு… இன்னும்… இன்னும்… அய்யோ… சீ… அம்மு அம்மோவ்!’
இந்த வெறுப்புதான் குருவை சாமியாராக உரு மாற்றியதா? இருக்கலாம். ஆனால்- ‘ஸாமி ஸாமி என்றாலும் அவரது அந்தரங்கத்தில் ஒரு தாகப் பருந்து வட்டமிடுகிறது. உயர உயர வட்டமிடுகிறது. மாலை வேளைகளில் தன் மொட்டை மாடித் தவங்களின் போது தொலைவில் பெருமரக் கிளைகளிடையே சிறகு கோதிக் கழுத்து சிலுப்பி, வெறிச்சிட்டு அமர்ந்திருக்கிறது.’
இன்னொரு காட்சி: பெயிண்டர் ரவி குருஸ்வாமியிடம் சொல்கிறான்: ‘மஹா பத்திரகாளி தேவியெ – மஹிஷாசுர மர்த்தினி – துஷ்டநிக்ரக சிஷ்ட பரிபாலகியாகத்தானே ஒவ்வொருத்தரும் ரூபப்படுத்தினா? நீங்க சொன்னேளே, காமாக்னியை வென்ற அகிலாண்ட பரமேஸ்வரின்னு. அதுக்கொரு ரூப விளக்கமும் சொன்னியோ. திரண்ட முலையும், திரண்ட பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமவெறியையும் பஸ்மீகாரம் செய்து விட்டு காம சொரூபினியான, திறந்த நிர்வாண நிலையின் அந்த விஸ்வரூபத்தை உள் பிரகாரச் சுவரில் வரைஞ்சேன் என்றாலும், இன்னைக்கும் ஜ்வர வேகம் கொண்டது போல் நெஞ்சு பதறி சுடுது ஸ்வாமி. உங்க மனவெளியை நான் திருப்தியா வரஞ்சிட்டேனு அறிஞ்சப்போ…’
இன்னொரு படிமம்: ‘அழகிய அந்தப் பூனைக் கண்ணிலிருந்து செம்பருத்திப் பூவிலிருந்து பனித்துளி சொட்டுவது போல கண்ணீர் சொட்டுகிறது. அம்மு அம்மேய், கரையாதே… ஆனால், அம்மு அம்மையின் நிர்வாணம்… தேவி கோவில் சுவரில் அந்த ஓவியம் போல திரண்ட முலையும் திறந்த பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமாக்னியையும் ஊதி அகற்றி விட்டு, பின்னும் காம சொரூபினியான அகிலாண்டேஸ்வரி… அவளது வார்சடை சிலிர்ப்பில் சூரியன் நெருப்புக் கிரணங்களால் வளர்கிறான்… அம்மு அம்மேய்… சூரிய கிரணத்தின் பொன்னொளி நடுவே அம்மு அம்மா இறங்கி வருகிறாள். மெல்ல மெலிதாக. தொட்டில் ஆட்டும் மென்மை ஊஞ்சலில் அம்மு அம்மா தவழ்ந்து வருகிறாள்… அருகில், அருகில், தொட்டு அருகில்… என்ன இது மனைவி சுப்புலக்ஷ்மியா, இல்லை… ராணி குழந்தையுடன் நிற்கிறாள்!’
இந்த ராணி யார்? குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட வேலப்பன் என்ற பத்து வயது சிறுவனுக்குப் புகலிடம் கொடுத்து வளர்த்து வருகிறார் குருஸ்வாமி. பிராயமானதும் அவனுக்குத் தன்னுடைய பணக்கார நண்பர் ஒருவரின் பண்ணையில் வேலை வாங்கித் தருகிறார். அவனோ அந்த நண்பரின் தங்கையைக் காதலித்து அவளை இழுத்துக் கொண்டு வருகிறான். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தன் தோப்பிலேயே வைத்துக் கொள்கிறார். இதன் காரணமாக, நண்பனையும் பகைத்துக் கொள்ள வேண்டி வருகிறது. இதற்குப் பிறகுதான் நாவலின் அடுத்த motif துலக்கம் கொள்கிறது. வேலப்பன் தொழிற்சங்கத்தில் சேர்ந்து தலைவன் ஆகிறான். கூடவே குடியும் ரவுடித்தனமும் சேர்கிறது. தன்னுடைய செல்வத்தையும், ஆடம்பரத்தையும், கௌரவத்தையும், உற்றார் உறவினரையும், பெரிய படிப்பையும் துறந்து விட்டு கீழ்த்தட்டு மனிதனான வேலுவுடன் ஓடி வந்த ராணியை அடித்து உதைக்கவும் தொடங்குகிறான் வேலு. சமயம் கிடைக்கும் போதெல்லாம் குருஸ்வாமியை அவமானப்படுத்துகிறான். கள்ளச்சாமி என்கிறான். ஒரு தொழிற்சங்கப் போராட்டத்தின் போது குருஸ்வாமியின் மீது பெரிய செங்கல்லை எடுத்து வீசிக் காயப்படுத்துகிறான். துரோகம் என்பதன் ஒட்டு மொத்த உருவமாக மாறுகிறான் வேலப்பன். இங்கே திரும்பவும் நாம் ஜெனேயிடம் போக வேண்டும். அன்பினால் வாழ்பவன் ஞானி. ஆனால் அன்பைத் தேர்ந்தெடுப்பது சுலபம். துரோகத்தை ஒருவன் தன் மனமறிந்து தேர்ந்தெடுக்க முடியுமா? அந்த வகையிலே அவன் அன்பைத் தேர்ந்தெடுத்தவனை விட ஒருபடி மேலே போகிறான். அன்பினால் வரும் பெருமையையும், கௌரவத்தையும், அதிகாரத்தையும், மேன்மையையும் நிராகரிப்பதன் மூலமாக அது அவனுக்கு சாத்தியமாகிறது. வேலப்பனா? குருஸ்வாமியா? துரோகமா? அன்பா? எது மனித தர்மம்? இரண்டும்தான் என்கிறது கிருஷ்ணப் பருந்து.
மூன்றே மூன்று வரிகளில் கதையின் போக்கையே தடம் மாற்றி விடும் நாவலின் முடிவு பற்றியும் பேச நினைக்கிறேன். ஆனால் அதை நீங்களேதான் வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் மிக முக்கியமான அந்தப் பகுதியை இங்கே விவாதிக்காமல் விடுகிறேன்.
ஆ. மாதவனின் பாத்திரங்களில் விளிம்பு நிலை மக்கள் மட்டும் அல்லாமல் மனிதனின் நேசத்துக்குரிய பிராணிகளும் கூட முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. 1966-ம் ஆண்டு மாதவனின் 32-வது வயதில் திருவனந்தபுரத்தில் அவருக்குத் திருமணம் நடக்கிறது. அதற்குச் சென்றிருந்த எழுத்தாளர் கோஷ்டியில் இருந்த சுந்தர ராமசாமி அதுவரை திராவிடப் பத்திரிகைகளிலேயே எழுதி வந்த மாதவனைப் பார்த்து மலையாள இலக்கியப் பரிச்சயம் கொண்ட அவர் தாமரை, தீபம் போன்ற பத்திரிகைகளில் இன்னும் எதார்த்த வகைக் கதைகளை எழுதினால் என்ன என்று கேட்ட போது, அதையே சவாலாக எடுத்துக் கொண்டு தீபத்தில் எழுதிய கதை பாச்சி. பாச்சி செத்துப் போனாள் என்று துவங்கும் அந்தக் கதையில் பாச்சி ஒரு தெருநாய் என்று தெரியவே எனக்குப் பாதிக் கதை ஆகிப் போனது. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்றான இது ஆ. மாதவன் இலக்கியத்தரமாக எழுத முனைந்து எழுதிய முதல் கதை!
பறிமுதல் என்று ஒரு கதை. நாம் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது டிக்கட்டுக்குக் காசு குறைகிறது என்று சொல்லிப் பணம் கேட்பார்கள் அல்லவா? அந்தத் தொழில் செய்பவன் அப்புக் குட்டன். அவன் ஒரு ஆளை மடக்கி, ‘யாரது? பூஜப்புரை குஞ்சு பிள்ளையல்லியோ நீங்கள்?’ என்று ரொம்ப நாள் பழகியவன் போல புளித்த சிரிப்பு சிரித்துக் குசலம் விசாரிக்கிறான். ஆள் பூஜப்புரை குஞ்சு பிள்ளை அல்ல என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஏரியா பெயரைச் சொல்லி விசாரிக்கிறான். அதுவும் இல்லை என்று ஆகிறது. ‘பிள்ளைக்கு ஆள் மாறிப் போச்சு, எனக்கு பஸ்ஸுக்கு நேரமாச்சு’ என்று சொல்லிக் கிளம்பப் பார்க்கிறார் அந்த ஆள். அப்போதுதான் அப்புக் குட்டனின் முடிவுரை நடத்தப்படும். அது:
‘அது போகட்டும். நான் பூஜப்புரை குஞ்சு அண்ணன் ஆக்கும்னுதான் கூப்பிட்டது. காரியம் ஒண்ணும் வலுதாயிட்டு இல்லே. இங்கே, சாலைக்கு ஒரு காரியமாயிட்டு வந்தேன். பஸ்ஸுக்கு ஒரு அம்பது பைசா குறையுது. நீங்க ஆரோ ஆகட்டும். ஒரு செறிய உபகாரம் செய்தா கொள்ளாம். வேறே யாரிட்டையாவது கேக்க நாணம் தோணுது. நம்பளைப் போல, சொந்த நாட்டுக்காரங்களானா விஷயம் மனசிலாகும்…’
அந்த ஆள் பாக்கெட்டைத் தடவி, அசடு வழிய இருபதோ, முப்பதோ, பையில் மிஞ்சியிருக்கும் பைசாவைக் கொடுத்து விட்டு ’வரட்டுமா?’ என்று விடை கேட்டுக் கொண்டு போகிறார். அப்புக் குட்டனுக்கு ஒருநாள் அப்படி யாரும் மாட்டவில்லை. வழியில் சூதாடுபவர்களைப் பார்க்கிறான். ஆட்டத்தில் தயவு தாட்சண்யம் இல்லாமல் தோற்பவனிடமிருந்து அஞ்சு பத்து என்று பணத்தைப் பறித்துக் கொள்கிறான்கள்; ஆனால் நாலணா எட்டணா வயத்துப்பாட்டுக்குக் கெடச்சா போதும்னிருக்கிற நம்மெ கிட்ட மட்டும், கடவுளு ஆளெ அனுப்ப மாட்டாரு என்று யோசித்தபடி நடக்கிறான். ஒன்றுமே தோன்றாதவனாக ஸ்ரீ குமார் தியேட்டர் வழியாகத் தம்பானூர் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் பக்கமாகப் போகிறான். ‘சே, என்ன பொழைப்பு’ என்று வாழ்க்கையே வெறுத்தது. வயிற்றினுள் பசி காந்தலாகக் கவிந்திருந்தது. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. தெருக் குழாய்த் தண்ணீரை எத்தனை தடவைதான் குடிக்க முடியும்? பட்டினி புதிதல்ல என்றாலும், இன்று எதுவும் எங்கும் இல்லை என்ற நினைவின் வாதனையில் அம்போ என்று சங்கடமாக உதைத்தது.’
வயிற்றுக் காந்தலில், மனதின் விரக்தியில், அலைச்சலின் சோர்வில், கொஞ்ச நேரம் தூக்கம் வராத வாதனை குமைந்தது. எண்ணிக் கொண்டிருக்க எதுவுமில்லை. குடும்பம் இல்லை. வீடு இல்லை. வகை இல்லை. செய்து முடிக்கவும் எதுவுமில்லை. அதனால் மனதில் எண்ணங்கள் இல்லை. பசி முக்கியம்… அப்போது அந்தப் பக்கம் ஒரு பெண் வருகிறாள். அவளோடு வந்த நாலு கச்சடா ஆட்களுக்கு யார் அவளிடம் முதலில் செல்வது என்ற தர்க்கம். அவளை யார் என்று விசாரிக்கிறான் அப்புக் குட்டன்.
‘நானா, அட்றசில்லே. கேர் ஆப் மாடத் தெரு. இந்தா பாத்தேரா, இருட்டிலெ தெரியுதா? இருவத்தி ரெண்டு ரூபா. மூணு பேறா தந்திட்டானுக. இந்த எச்சில் இலைக்கு’ என்று சொல்லும் அவள் அவனிடம் ஒரு உபகாரம் கேட்கிறாள். அவளிடமிருக்கும் 22 ரூபாயை அப்புக் குட்டன் வைத்திருந்து மூவரையும் அனுப்பி விட்டு வந்து அவள் கேட்கும் போது கொடுக்க வேண்டும். ஏனென்றால், ‘தடிமாடப் பயக்கொ, செலப்போ, சங்கதி முடிஞ்சதும், என் கையிலெ உள்ளதெப் புடுங்கிக் கிட்டுப் போயிருவானுக. நீங்க அந்த இருட்டு வாக்கிலெ அனங்காமெ இருந்தா போதும். ஒடுக்கம், வாச்சரையும் ஒரு நடை கவனிச்சுக்கிடுதேன். இந்தாரும்…’
அப்படி அந்த வேசி கொடுத்த 22 ரூபாயை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டி விடுகிறான் அப்புக் குட்டன்.
ஆ. மாதவனின் விளிம்பு நிலை மனிதர்கள் வாழும் இடம் பற்றிய ஒரு வர்ணனை - பதினாலு முறி என்ற கதையில்: ‘ராத்திரியும் இல்லாத பகலும் இல்லாத எடம். நெடுக எருமைக் கொட்டில். நாப்பது அம்பது மாடுக இருக்கும். கறவக்காரனும், சுமட்டுக்காரன்களும், பேரீச்சம்பழக்காரனும், சாய அடிப்பு குட்டன் பிள்ளையும், பூ கட்டுகிற நாணியும், ரேஷன் கடை உன்னியும், எல்லாரும் அங்கேதான் தாமசம். ஆக ஒரு நெடுந்திண்ணை. ஒவ்வொரு குச்சு சாய்ப்பு, உள்ளார அவ்வளவுதான் வீடு. ராத்திரிக்கு எல்லா வீட்டு ஆம்பிளைக்கும் திண்ணையிலேதான் படுக்கை. ஒவ்வொருத்தனும் ராத்திரி ஒவ்வொரு நேரம் வருவான். கொசுவுக்கு நெருப்பு குண்டு புகையிருந்தாலும் கொசு ராகம் நொய்யென்று முழங்கும். வைக்கோலும் சாணியும் கலந்த மணம் வேற. கறண்டு விளக்கு கிடையாது. கிணறு கிடையாது. முக்குத் திருப்பதிலே தான் குழாய் இருக்கிறது. ராத்திரி குளிக்கிறது, துவைக்கிறது, கஞ்சிக்குத் தண்ணீர் எடுக்கிறது எல்லாம் அங்கேதான். ராத்திரி முன்சிபாலிட்டிக்காரன் வர மாட்டான். அதனாலே வெளிக்குப் போய் விட்டு, செய்ய வேண்டியதைச் செய்யிறதும் குழாயடியிலேதான். காம்பவுண்டுச் சுவருக்கு அந்தப் பக்கம், புல்லுக்கட்டு விக்கிற சந்தை, ஓலைப்புரை. புல்லுக்காரி செல்லம்மா ஒருக்க யாரோ ஒருத்தன் கூட ஒளிஞ்சிருந்தா. எப்பவும் அந்தக் கதைதான். செல்லம்மா இல்லாட்டி காளி. அவ இல்லியானா, கறவை. வரம்பு மொற இல்லே. இல்லையும் காட்டி எதுக்குத்தான் வரம்பு முறை இருக்கு?’
காமம், வன்முறை, துரோகம் என்ற motif-களில் காமத்தை முகத்தில் அறையச் சொல்லும் ஒரு கதை பண்பாடு. புதுமைப்பித்தனின் பொன்னகரம் பற்றிப் பலரும் சொல்வார்கள். அதை விட வலுவான கதை ‘ பண்பாடு.’ சாலைக் கடையின் ஒரு திண்ணையில் வந்து சேர்ந்து கொள்கிறாள் ஒரு தொழுநோய்க்காரி. முகம், காதுகள், மூக்கு, கன்னப் பகுதிகள் என்று முற்றிப் போன குஷ்டம். அவள் அருகே அலுமினியக் குவளை, நெளிந்து போன தட்டு, ஒரு காகித விசிறி, இனியும் என்னவெல்லாமோ கண்டான் கிண்டான் காரியங்கள். அவளை அங்கிருந்து அப்புறப்படுத்த யார் யாரோ என்னவெல்லாமோ செய்கிறார்கள். போலீஸ் கூட அவளை அகற்ற முயற்சிக்கிறது. ஒருநாள் அவளை அந்த இடத்தில் காணோம். கொஞ்ச காலம் கழித்து அவள் இன்னொரு இடத்தில் தென்படுகிறாள். ‘இப்போழுது அவள், இன்னுங் கொஞ்சம் விகாரமாக நோய் முற்றிய அவலத்தில்… அவள் பக்கத்தில் – பழைய துணி விரிப்பில் – கைகளையும் கால்களையும் அசைத்துக் கொண்டு புதிய பச்சைக் குழந்தை ஒன்று அழுதவாறு…’
ஆ. மாதவன் நம் தமிழின் ஆகப் பெரிய பொக்கிஷம். நான் ஆரம்பத்தில் சொன்னது போல் ஜான் ஜெனேயை விடவும் சிறந்த கலைஞன். அவரைக் கொண்டாடுவோம்.
அரு. ராமநாதன் (1924 – 1974)
By சாரு நிவேதிதா
First Published : 07 June 2015 10:00 AM IST
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal//2015/06/07/அரு.-ராமநாதன்-1924-–-1974/article2852623.eceஉ
உனக்காக என் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் கொடுப்பேன் என்று காதலர்கள் சல்லாபித்துக் கொள்வதை நாம் அறிந்திருக்கிறோம். வெறும் பேச்சாக இல்லாமல் அவர்கள் அதை நடைமுறையிலும் செய்து விடுவது உண்டு. அதேபோல் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக என் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். இதைக் கற்றுக் கொண்டதே நம் முன்னோடிகளிடமிருந்துதான். அவர்கள் இந்தச் சமூகத்துக்காகவும், மொழிக்காகவும் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தம் உடல், பொருள், ஆவியை தானம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறிய மரியாதையும் நன்றி கூறலும்தான் இந்தத் தொடர். ஐம்பது சதவிகிதம் மட்டுமே இயங்கக் கூடிய பழுது பட்ட இதயத்தோடு வாழும் எனக்கு தியானம், நடைப் பயிற்சி என ஒழுங்குபடுத்தியிருக்கிறார் மருத்துவர். ஆனாலும் கடந்த பத்து தினங்களாக அது எதையும் செய்யவில்லை. காரணம், நமது எல்லா முன்னோடிகளையும் போலவே அரு. ராமநாதனும் 17 வயதிலிருந்து 50 வயது வரை எழுதிக் குவித்திருக்கிறார். அதில் பெரும்பாலானவை ஜனரஞ்சக எழுத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அவரது முக்கியமான படைப்புகளில் மாதிரிக்கு ஒன்றை எடுத்துக் கொண்டாலும் 4000 பக்கங்கள் வந்தன. அவரது மிக முக்கியமான வரலாற்று நாவல் வீரபாண்டியன் மனைவி, குண்டு மல்லிகை, ராஜராஜ சோழன், நாயனம் சௌந்தரவடிவு, சில சிறுகதைத் தொகுப்புகள், வெற்றிவேல் வீரத்தேவன், மற்றும் ‘காதல்’ பத்திரிகையின் சில இதழ்கள் – இவை எல்லாம்தான் அந்த 4000 பக்கங்கள். (ஆனால் அவர் எழுதி இன்னும் தொகுக்கப்படாத நூல்களும் கட்டுரைகளும் ஏராளமாக இருக்கின்றன.) இவ்வளவு பக்கங்களையும் வாசித்து முடிக்க எனக்கு உரிய காலம் ஒரு வாரம் மட்டுமே. ஏற்கெனவே படித்ததை வைத்து இந்தப் பக்கங்களை நான் எழுத முடியாது. வீரபாண்டியன் மனைவியை முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்து தமிழின் முதல் Palimpsest நாவல் என்று ஒரு கட்டுரை எழுதினேன். இப்போது அந்தக் கட்டுரை எந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது என்று கூடத் தெரியாது. எனவே மூலநூல்களில் சிலவற்றையாவது மீண்டும்தான் வாசிக்க வேண்டும். எனவே ஒரு வாரம் என்ற குறுகிய காலத்தில் ஆயிரக் கணக்கான பக்கங்களையும் முடிப்பதற்காகத்தான் எனது அன்றாட வாழ்க்கைக் கடமைகளை உதறி எறிந்தேன். உயிரை உருக்கி நம் முன்னோடிகளுக்கு நிவேதனம் செய்யும் இந்த அற்புதமான பணியில் உங்களையும் இணைத்துக் கொள்கிறேன். சுமார் 40 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இந்தக் கட்டுரைத் தொடர் ஒரு பரவச உணர்வைத் தருகிறது. இறை சக்தியின் முன்னே நின்று கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நிற்க. இந்தத் தொடர், வாசகர்களுக்கு ஒரு திசைகாட்டி மட்டுமே. இந்தத் திசையில் சென்றால் மாபெரும் தங்கச் சுரங்கத்தைக் காணலாம். தங்கச் சுரங்கம்தான் இலக்கே தவிர திசைகாட்டி அல்ல. இந்தத் தொடரில் நான் சுட்டிக் காட்டும் நமது முன்னோடிகளின் நூல்களைப் பிடித்துக் கொள்ளுங்கள்; பெரும்பாலானவர்களின் நூல்கள் இன்னும் தொகுக்கப்படவே இல்லை என்பதையும் ஞாபகம் வைத்துக் கொண்டு. போதும் இந்த இடைச் செருகல்.
இனி கட்டுரை.
நம்மைப் பற்றி நாமே உயர்வாகப் பேசிக் கொள்வது மரணத்துக்கு ஒப்பானது என்று மகாபாரதத்தில் ஒரு இடம் வரும். கர்ண பர்வம். ‘பேசாமல் உன் காண்டீபத்தை கேசவனிடம் கொடுத்து விட்டு அவனுக்குப் பதிலாக நீ தேரோட்டியாக இருந்திருந்தால் கேசவன் இந்நேரம் கர்ணனைக் கொன்றிருப்பான். ’ அர்ஜுனனை நோக்கிச் சொல்கிறான் யுதிஷ்டிரன். அர்ஜுனன் உடனே வாளை எடுத்து விட்டான். ஏனென்றால், ‘காண்டீபத்தை இன்னொருவரிடம் கொடு’ என்று யார் சொன்னாலும் அவர் தலையைக் கொய்து விடுவதாக அர்ஜுனன் ஒரு சபதம் போட்டிருக்கிறான். இப்போது என்ன செய்வது? சபதம் நிறைவேறியாக வேண்டும். ஆனால் சகோதரர்களில் யாரும் சாகவும் கூடாது. கேசவன் ஒரு உபாயம் சொல்கிறான். ‘அர்ஜுனா, யுதிர்ஷ்டிரனை இகழ்ந்து பேசு. மூத்தோரை இகழ்தல் கொலைக்குச் சமம்.’ ‘சரி. நான் இகழ்ந்ததற்கான தண்டனை?’ ‘உன்னையே நீ புகழ்ந்து கொள். தற்புகழ்ச்சி மரணத்துக்குச் சமானம்.’ இவ்வாறாக அர்ஜுனன் யுதிர்ஷ்டிரனை இகழ்ந்தும் தன்னைப் புகழ்ந்தும் பேசினான். ஒன்று கொலை; இன்னொன்று தற்கொலை. தற்புகழ்ச்சி எவ்வளவு மோசமானது என்பதை இந்தக் கதையிலிருந்து அறிகிறோம். ஆனால் நான் அறிந்தவரை இலக்கிய உலகில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத மேதைகள் யாவருமே விலாசம் இல்லாமல் காணாமல் போய் விடுகின்றனர். தி.ஜ.ர. ஒரு உதாரணம். இன்னொரு உதாரணம், அரு. ராமநாதன். 27 ஆண்டுகள் ஒரு பத்திரிகையையும் பதிப்பகத்தையும் நடத்தியுள்ள அவர் தன்னைப் பற்றி எங்குமே பேசவில்லை. மற்றவர்களும் பேசவில்லை. இலக்கியவாதிகளோ அவர் பெயரை உச்சரித்தது கூட இல்லை. தமிழவன், சி. மோகன் ஆகிய இருவர் மட்டுமே அரு. ராமநாதன் பற்றிப் பேசியிருக்கின்றனர். ராமநாதனின் நூல்களிலும் அவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. இதுவரை நான் படித்த 4000 பக்கங்களிலும் அந்த விபரங்கள் இல்லை. அவர் எங்கே பிறந்தார், என்ன படித்தார், அவரது பின்னணி என்ன? இந்த வாக்கியத்தைத் தட்டச்சு செய்யும் வரை அவரது பிறந்த ஆண்டு கூடத் தெரியவில்லை. (பின்னர் இணையதளத்தில்தான் ஒரு கட்டுரையில் அதையெல்லாம் கண்டு பிடித்தேன்.) ராமநாதன் எழுதிய எல்லா நாவல்களும் அவர் நடத்திய காதல் பத்திரிகையில் வெளிவந்தது போலவே குண்டு மல்லிகை என்ற அவருடைய நீண்ட நாவலும் அதில் தான் வெளிவந்தது என்று எண்ணினேன். ஆனால் அது கல்கியில் தொடராக வெளிவந்திருக்கிறது. அந்த விபரம் கூட அந்த நாவலில் இல்லை.
அரு. ராமநாதன் எழுதிய முதல் புத்தகம் சம்சார சாகரம். பதினேழு வயதில் எழுதியிருக்கிறார். அதே வயதில் பதிப்பகமும் துவங்கி (பிரேமா பிரசுரம்) அதைத் தன் மரணம் வரை நடத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பிறகு அவரது புதல்வர் ரவி ராமநாதன் அதன் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். 1947-லிருந்து 1974 வரை – அதாவது அவரது மரணம் வரை 27 ஆண்டுகள் காதல் என்ற மாதப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார். படிக்கும் பழக்கமே இல்லாத என் குடும்பத்தில் அறுபதுகளின் இறுதியில் என் தாய் மாமா ஒருவரின் கையில்தான் காதல் பத்திரிகையை நான் பார்த்திருக்கிறேன். அதைக் கூட அவர் ஒளித்து வைத்துத்தான் படித்துக் கொண்டிருப்பார். அதன் காரணமாக ஏற்பட்ட ஆர்வத்தில் அவர் இல்லாத சமயத்தில் ஒருநாள் அதைத் திருடிப் படித்த போது நான் எதிர்பார்த்த எதுவுமே இல்லாமல் வழக்கமான ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக இருப்பதைக் கண்டு ஏமாந்து போனேன். வயது வந்தவர்களுக்கான பத்திரிகை என்று சொல்வதற்கென அதில் ஒரே ஒரு விஷயம்தான் இருந்தது. தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை வராமல் நடந்து கொள்வது எப்படி, பெண்களுக்கான ஆலோசனைகள், மனைவிகளுக்கான ரகசியங்கள், மணமக்களுக்கு மருத்துவரின் ஆலோசனைகள் என்பது போன்ற விஷயங்கள். அதுவும் மூன்று பக்கங்கள் மட்டுமே.
1945-ம் ஆண்டு டி.கே. சண்முகம் சகோதரர்களின் நாடகக் குழு வைத்த நாடகப் போட்டியில் அரு. ராமநாதன் எழுதி அனுப்பிய ராஜராஜ சோழன் என்ற நாடகம் பரிசு பெற்று அவருக்குப் பெயர் வாங்கித் தந்தது. அப்போது ராமநாதன் கல்லூரி மாணவனாக இருந்தார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், வரலாறு, தத்துவம், உளவியல் போன்ற துறைகளை அவர் முறையாகக் கல்லூரியில் படித்ததில்லை என்றாலும் சுயவாசிப்பின் மூலம் அவற்றில் வியக்கத்தக்க ஞானத்தைப் பெற்றிருந்தார். கல்லூரியில் படிக்கும் போது அவர் வரலாற்றுப் பாடத்தில் தோல்வி அடைந்து மறு தேர்விலேயே தேற முடிந்தது பற்றி ராஜராஜ சோழன் நாடக முன்னுரையில் கிண்டலாகக் குறிப்பிடுகிறார்.
மேலும், தமிழ் இலக்கியம் அவரது நாவல்களில் வரிக்கு வரி உபபிரதியாக ஊடாடியிருக்கிறது. உதாரணமாக, வீரபாண்டியன் மனைவி கிட்டத்தட்ட கம்பராமாயணத்தின் மறு உருவாக்கம் போலவே அமைந்துள்ளது. அந்த நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் கம்ப ராமாயணத்தை வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரு. ராமநாதன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் என்ற ஊரில் 1924-ல் பிறந்தார். உயர்நிலைப்பள்ளிப் படிப்பை திருச்சியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் முடித்தார். முழுதாக பட்டப் படிப்பை முடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய இண்டர்மீடியட் படிப்பின் முதல் ஆண்டோடு படிப்பை நிறுத்திக் கொண்டார். திருச்சியில் 1947-ல் காதல் பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் 1949-ல் பதிப்பகத்தைச் சென்னைக்கு மாற்றிக் கொண்ட இவர் கலைமணி என்ற சினிமாப் பத்திரிகையும் தொடங்கினார். ஆனால் அது நீண்ட காலம் வெளிவரவில்லை. 1952-ல் பிரேமா பிரசுரத்தைத் தொடங்கினார். அது இன்றளவும் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது. பூலோக ரம்பை (1958), அமுதவல்லி (1959), தங்கப் பதுமை (1959) போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு ராமநாதன் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.
எழுதிய காலத்தில் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளராகவே அறியப்பட்ட அரு. ராமநாதன் ஏன் கல்கி அளவுக்குப் புகழ் பெறவில்லை என்பது இன்னமும் எனக்குப் புதிராகவே இருக்கிறது. ஏனென்றால், ராமநாதனின் நாவல்களும் சிறுகதைகளும் கல்கி அளவுக்கு ஜனரஞ்சகத்தன்மையும், சுவாரசியமும் கொண்டதாக இருக்கின்றன. மனோரஞ்சிதம் என்ற குறுநாவல் இரவில் படிக்க முடியாத அளவுக்குப் பீதியைத் தந்த ஒரு பேய்க்கதை. இது பற்றிப் பலவாறாக யோசித்த போது ஒரு காரணம் தோன்றியது. கல்கியிடம் இல்லாத ஒன்று அரு. ராமநாதனிடம் இருக்கிறது. அது அவரது எழுத்தில் தெரியும் மெல்லிய transgressive தன்மை. உதாரணமாக, ஐம்பதுகளில் காதல் என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்? இது தவிர, காதல் பத்திரிகையில் 1953-லிருந்து ஆறு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்த வீரபாண்டியன் மனைவி (1700 பக்கங்கள்) எந்த வகையில் பார்த்தாலும் சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரு சரித்திர நாவல் என்பதில் சந்தேகம் இல்லை. வீரபாண்டியன் மனைவியை Palimpsest நாவல் என்று குறிப்பிட்டேன். Palimpsest என்றால் என்ன? Something reused or altered but still bearing visible traces of its earlier form. ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றின் மீது ஏற்கனவே எழுதப்பட்டது முற்றிலுமாக அழியாமல் இன்னொன்றை எழுதுவது. அதாவது, தமிழக சரித்திரம் என்று நமக்குக் கல்விக்கூடங்களிலும் சரித்திரக் கதைகளிலும் என்னென்னவெல்லாம் கற்பிக்கப்பட்டதோ அதற்கு மேல் இன்னொரு கதையை superimpose செய்கிறார் ராமநாதன். பொன்னியின் செல்வனிலும் மற்ற எல்லா சரித்திர நாவல்களிலும் சொல்லப்படும் வரலாறு நம் மனதுக்கு இதமூட்டுவதாகவும், நமது ரொமாண்டிஸிஸக் கற்பனைகள் சிறகடித்துப் பறப்பதற்கு ஏதுவாகவும், கிளுகிளுப்பாகவும் இருப்பதையே கண்டு வந்திருக்கிறோம். ஆனால் வீரபாண்டியன் மனைவியில்தான் முதல் முதலாக ராமநாதன் ஒரு தேசத்தின் உண்மையான வரலாற்றை எழுதுகிறார். அநேகமாக உலகின் முதல் ஏகாதிபத்தியவாதிகளான (imperialists) சோழர்களின் வரலாறு நமக்குத் தெரியும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு இடையேயும் குறுநில மன்னர்களுக்கு இடையேயும் நடந்த எண்ணிறந்த போர்களைப் பற்றியும் நமக்குத் தெரியும். ஆனால் அந்தப் போர்களில் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? இதைத்தான் மிக விளக்கமாகச் சொல்கிறது வீரபாண்டியன் மனைவி. அதுதான் நமது subaltern வரலாறு. அடிமைகளின் வரலாறு. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் இந்த நாவல் தமிழின் மகத்தான Subaltern மற்றும் Palimpsest நாவலாகக் கொண்டாடப்படும். நாவலில் வரும் ஜனநாதக் கச்சிராயன் நம்மால் மறக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம். பாரதத்தின் சகுனியைப் போன்றவன். துரியோதனனை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட சகுனியைப் போல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனை அழிப்பதற்காக அவனோடு சேர்ந்து அவனுடைய எதேச்சாதிகார வெறியாட்டங்கள் அனைத்தையும் தூபம் போட்டுக் கொண்டாடியவன். பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கீதா உபதேசம் செய்வது போல் ஜனநாதக் கச்சிராயன் தனது சீடனான வீரசேகரனுக்கு மொழி, தேசம், கலாசாரம் போன்ற விஷயங்களைக் குறித்து உபதேசம் செய்கிறான்:
‘தம்பி! தேசம் என்பது என்ன? மண் பரப்பா, மரமா, கல்லா, தேசக் கொடியா? அந்நாட்டிலுள்ள மக்களின் நல்வாழ்வின் மீதும், உரிமைகளின் மீதும், மொழிவழிக் கலாசாரத்தின் மீதும் கருத்துச் செலுத்துவதுதான் தேச பக்தியாகும். அந்த முறையில் பார்த்தால் சாம்ராஜ்ய சக்தியும், ஆட்சி பீடத்தின் அதிகாரப் பெருக்கும் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு ஜனங்களின் உரிமைகளும் மொழிவழிக் கலாச்சார முன்னேற்றமும் செழித்தோங்கும். தம்பி, உன்னைப் போன்ற மூடத்தனமான தேசபக்தியானது ஏகாதிபத்திய வெறியர்களையும் கொடுங்கோலையும்தான் உண்டாக்கும். யாராலும் அசைக்க முடியாத அரசாங்கம் ஒன்றை அமைக்க இடம் கொடுத்து விட்டால் மக்கள் அனைவரும் அடிமைச் செக்குமாடுகளாகி விடுவார்கள். ஏகாதிபத்திய சர்வாதிகாரி எந்தக் காலத்திலும் தன் சுயநலத்துக்காகப் பாடுபட்டது உண்டே தவிர ஜனங்களுக்காகப் பாடுபட்டதாக எந்த நாட்டுச் சரித்திரமும் கிடையாது!’
(இன்னும் வரும்)
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/06/14/அரு.-ராமநாதன்--பகுதி-2/article2864654.ece
அரு. ராமநாதன்- பகுதி 2
By சாரு நிவேதிதா
First Published : 14 June 2015 10:00 AM IST
சோழர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ஆட்சியதிகாரத்தில் சிறப்புற்று விளங்கியிருக்கிறார்கள். இலங்கைக்கும் சோழர்களுக்கும் கி.மு. முதல் நூற்றாண்டிலேய நடந்த போர்கள் பற்றி மஹாவம்சம் குறிப்பிடுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகளிலும் சோழர்கள் பற்றிய குறிப்பு உள்ளது. இவர்கள் முற்காலச் சோழர் என்று அழைக்கப்படுகிறார்கள். கரிகால் வளவன், கோப்பெருஞ்சோழன் போன்றவர்கள் இந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள். (ஆனால் பாண்டியர்கள் சோழர்களை விட மூத்தவர்கள். கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு குமரிக் கண்டத்தை ஆண்டவர்கள் பாண்டியரே.)
பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டின் துவக்கம் வரை – சுமார் 450 ஆண்டுகள் – சோழர்களின் ஆதிக்கம் நீண்டிருந்தது. முதலாம் ராஜராஜன், அவனது மகன் முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், வீரராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது காலத்தில் சோழர்கள் மிகப் பெரிய ஏகாதிபத்திய சக்தியாக விளங்கினார்கள். ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரை சென்று மஹிபாலாவை வென்ற கதையையெல்லாம் வரலாற்று நூல்களில் நாம் படித்திருக்கிறோம். இளம் வயதிலேயே இந்த வரலாறு தமிழ் இனம் பற்றிய ஒரு இறுமாப்பை நமக்குள் விதைத்து விடுகிறது. பின்னர் அந்த இறுமாப்பு நம் வாழ்நாள் வரை தொடர்கிறது. இந்த இன உணர்வும் இறுமாப்புமே நம்முடைய அரசியலையும் சமூக வாழ்வையும் தீர்மானிக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று ஒரு கவிஞன் 2000 ஆண்டுகளுக்கு முன்னே சொன்னதை இதயத்துக்கு வெளியே இருக்கும் சட்டைப் பாக்கெட்டில் பேட்ஜாகக் குத்திக் கொண்டு, இதயத்தின் உள்ளே மிக மோசமான இனவாதத்தைப் பொதிந்து வைத்திருக்கிறோம். இதுதான் அரு. ராமநாதன் எழுதிய வீரபாண்டியன் மனைவி என்ற நாவலின் கரு.
ஏகாதிபத்தியம் என்பது ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசம், ஒரே கொள்கை, ஒரே சாம்ராஜ்யம் என்ற அடிப்படையிலிருந்து கட்டமைக்கப்படுகிறது. ராவணன் ஒரு சர்வாதிகாரியாக இருந்ததால்தான் தேசம் முழுவதையும் போர் முனையில் இறக்கி விட்டான். அவனே ஒரு கிராமசபைத் தலைவனாக இருந்திருந்தால், அவனைக் கிராம ஜனங்களே தூக்கிக் கடலில் விட்டெறிந்திருப்பார்கள் என்கிறார் ராமநாதன்.
ஆனால் இடைக்காலப் பாண்டிய மன்னர்கள் இலங்கையின் தொடர்பு காரணமாக பௌத்தத்தின் சமதர்மக் கோட்பாட்டை ஓரளவு ஆதரித்தார்கள். இது பற்றி வீரபாண்டியன் மனைவியில் ராமநாதன் வைக்கும் கருத்துக்கள் மிகப் பெரும் ஆய்வுக்குரியவை. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் இருந்த சமண, பௌத்தத் துறவிகளின் குகை மடங்கள் இடிக்கப்பட்டன. இது குகையிடி கலகம் என்று கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமணம், பௌத்தத்துக்குப் பதிலாக அந்நியப் படையெடுப்புகளால் வடநாட்டிலிருந்து துரத்தப்பட்ட வைதீக ஜாதி வழி தர்மம் தமிழ்நாட்டில் தலையெடுத்தது. அந்த வைதீகர்கள்தான் சோழ மன்னர்களின் ராஜகுருக்களாகவும் விளங்கினார்கள்.
Palimpsest வரலாறு என்று சென்ற வாரம் குறிப்பிட்டேன். பின்வருவது ஒரு பாலிம்செஸ்ட் ஓலைச் சுவடி.
நம்முடைய புலவர்களும் கவிஞர் பெருமக்களும் தமிழ் வேந்தர்களின் வீரம் பற்றிக் கடந்த 2000 ஆண்டுகளாகப் பாடி வருகின்றனர். அத்தகைய வீர வரலாற்றை ஒரு பிரதி என்று கொண்டால் அந்தப் பிரதியின் மேல் எழுதப்பட்ட மாற்றுப் பிரதியே வீரபாண்டியன் மனைவி. அதில் ஜனநாதக் கச்சிராயன் பேச்சிலிருந்து ஒரு பத்தி:
‘தம்பி! நம்முடைய (சோழர்கள்) யானைப் படைகள் பிரும்மாண்டமானது என்று பிரசித்திப் பெற்றதல்லவா? அதன் பலத்தையெல்லாம் பாண்டிய மக்களுக்குக் காட்டிப் பயமுறுத்தி வைத்து விட்டுத்தானே நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்? நம்முடைய ராஜதந்திரிகள் இங்கிருந்து (மதுரை) புறப்படுமுன் குறிப்பிட்ட ஒரு தேதியில் அக்குற்றவாளிகளெல்லாம் வரிசைக்கிரமமாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு, பொழுது விடிந்தது முதல் பொழுது அஸ்தமிக்கும் வரை பாண்டிய மக்களின் கண்முன்னே குற்றவாளிகளின் தலைகள் யானைக்காலால் ஓயாமல் இடறப்பட்டுக் கொண்டேயிருக்கும். அத்தகைய பயங்கரக் காட்சியை பகிரங்கமாக நாம் நடத்திக் காட்டி விட்டுப் போனால், நமக்கெதிராக பாண்டிய மக்கள் பெருமூச்சு விடக் கூட பல தலைமுறை வரை பயப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது நம் ராஜதந்திரிகளின் நினைப்பு! ’
ஆனால் எந்த ஒரு சர்வாதிகார ஆட்சியும் மக்களைப் பயமுறுத்துவதன் மூலமாக நீடித்திருந்ததில்லை என்பது உலக சரித்திரம் சொல்லும் பாடம். அதன்படியே வீரபாண்டியன் மனைவி நாவலின் கதை நடக்கும் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில்தான் (1180) சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியின் பாதையில் செல்ல ஆரம்பித்தது. அவனது ஆட்சிக் காலம் 1178 – 1218. அதற்குப் பிறகு 63 ஆண்டுகளே சோழர்களின் ஆட்சி நீடித்தது.
வீரபாண்டியன் மனைவி சொல்லும் பாலிம்செஸ்ட் வரலாற்றுக்கு இன்னொரு உதாரணம்: ஒரு சமயம் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு மூலையில் வெள்ளப் பஞ்சம் ஏற்பட்டது. பெருமழையினால் தொண்டை நாடு பெரிதும் திண்டாடியது. பெரு வர்ஷம் பெய்து சோமங்கலத்தேரியினால் ஒரே நாளிலே பெருநாசம் ஏற்பட்டது. அப்போது காமன் கண்டவானவன் என்ற ஒரு தனிப்பட்ட மனிதன் தான் ஏரியின் உடைப்பட்ட ஏழு மடைகளையும் அடைத்தான். பிறகு மற்றொரு புறம் மழையின்மையினால் ஒரு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்ச காலத்தில் காசுக்கு மூணு நாழி நெல் விற்றதென்றும், வேளாளன் ஒருவன் தன் மக்கள் இருவருடன் நூற்றிப்பத்துக் காசுக்குக் கோயில் மடத்துக்கு விலைப்பட்டு அடிமை புகுந்தான் என்றும் திருப்பாம்புரச் சாஸனம் கூறுகிறது. அப்போது பஞ்சநிவாரண வேலைகளில் ஈடுபட்டுக் குடிமக்களைக் காப்பாற்றிய புண்ணியசீலர்கள் சாம்ராஜ்யவாதிகளல்ல! அருங்குகின்ற கிழார், மங்கையர்க்கரசியார் போன்ற தனிப்பட்டவர்கள்தான். அரசாங்கத்தார் செய்த உதவி இன்னதென்று இதுகாறும் தெரியவில்லை. பிறகு காவிரி பெருக்கெடுத்து மக்களின் நிலங்களை அழித்தது. அப்போது சோழ அரசாங்கம் ஆஸ்தானப் புலவரான கம்பரைக் கூப்பிட்டு காவிரியின் வெள்ளம் அடங்கக் கவிதை பாடச் சொன்னது.
கன்னி அழிந்தனள்; கங்கை திறம்பினள்,
பொன்னி கரை அழிந்து போனாள் என்றிந்நீ,
உரைக்கிடலாமோ உலகுடைய தாயே
கரை கடக்கல் ஆகாது காண்
என்று அரண்மனையிலே கம்பர் கவிதை பாட, அதைக் கேட்டு மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அகமகிழ்ந்து கொண்டிருந்தானே தவிர, ஆற்று வெள்ளத்தை அடக்கக் குடிமக்கள்தான் மண் அள்ளிப் போட வேண்டியிருந்தது. கொடிய வறுமைக் காலங்களில் பிழைக்க வழியற்றுப் போகும் பெண்களும் ஆண்களும் தம்மை விலைக்கு விற்றுக் கொண்டு அடிமைகளான செய்திகள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் அவனுடைய முன்னோர் காலங்களிலும் அதிகமாக இருந்தன.
சூலமங்கலத்தில் கணக்கர் இருவர் தம் அடிமைப் பெண்கள் இருவரை ஆள்விலை பிரமாண இசைவுச் சீட்டு எழுதிக் கொடுத்து கோவிலுக்கு விற்றார். சோழர்களின் ஆட்சியில் பெண்கள் தங்களையே விற்றுக் கொண்டு கோவிலுக்குத் தேவரடியார் ஆனார்கள். ராஜராஜன் காலத்தில் கூட இந்த வழக்கம் இருந்தது. நான்கு பெண்களுக்கு எழுநூறு காசு என்கிறது கல்வெட்டு. இத்தகைய அடிமை வியாபாரம் செய்வதற்கு வயிராதராயர் என்னும் அதிகாரி இருந்து வந்தார். அவருக்கும் அவர் மனைவிக்கும் பல அடிமைகள் இருந்தனர். அத்தகைய அடிமைகளில் பெண்கள் உட்பட முப்பத்தறுவர் கோவில்களுக்கு விற்கப்பட்டார்கள் என்றும் அந்த அடிமை விற்பனையை சிலாசாஸனம் பண்ணுவித்தனர் என்றும் கூறுகிறது கல்வெட்டு. இச்செய்திகளெல்லாம் மிக விபரமாக நாவலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
குலோத்துங்கச் சோழனின் படைகள் மதுரையில் கைது செய்தவர்களை அடைத்து வைத்திருக்கும் மரணக் கிடங்கை அரு. ராமநாதன் விவரிக்கும் போது நரகம் பற்றி இதுவரை வாசித்ததெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. அந்தக் காராகிருகத்தின் அதிகாரியாக இருப்பவரும் ஆயுட்கைதியாக அங்கேயேதான் இருக்க வேண்டும். வெளியிலேயே வர முடியாது. அதற்குப் பிரதியாக மன்னர் அவருடைய குடும்பத்துக்கு நிலமும் பணமும் கொடுப்பார். யாராவது கைதி தப்பி விட்டால் அதிகாரியின் தலை யானைக் காலால் இடறப்படும். மூன்றாம் குலோத்துங்கன் மதுரையை வென்று அங்கே ஆட்சியிலிருந்த வீரபாண்டியனின் மனைவியைச் சிறைப் பிடித்தான். (அப்போது குலோத்துங்கனின் அரசவைப் புலவராக இருந்த கம்பர், ராமனின் மனைவியைச் சிறைப் பிடித்துச் சென்ற ராவணனின் வீழ்ச்சியை எழுதிக் கொண்டிருந்தார் என்ற வரலாற்று நகைமுரணைச் சுட்டிக் காண்பிக்கிறார் ராமநாதன்.) மேலே குறிப்பிட்ட காராக்கிரகத்தில் வீரபாண்டியனின் ராணி சிறைப்பட்டிருந்த அறை எப்படி இருந்தது என்பதை ராமநாதன் வர்ணிக்கிறார்:
ஒருபுறம் குத்துவிளக்கும் ஓலைச்சுவடிகளும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் ஸ்நானத்திற்காக ஒரு மறைவுத் தட்டியும், அண்டாவும், தண்ணீர்த் தவலைகளும், வெந்நீர் தேவைப்பட்டால் அடுப்பு எரிப்பதற்குத் தேவையான சுள்ளிகளும் வைக்கப்பட்டிருந்தன. மூன்றாவது மூலையில் சில மண் பாத்திரங்களும், விளக்குமாறுகளும் வைக்கப்பட்டிருந்தன. நான்காவது மூலையில் தேவி படுத்துறங்குவதற்காக ஒரு கிழிந்த ஓலைப்பாய் விரிக்கப்பட்டிருந்தது.
***
இன்றைய அரசியலில் நம் பரிகாசத்துக்குரியதாகத் தென்படும் அத்தனை விஷயங்களும் தமிழரின் பண்டைக் கலாசாரத்தின் நீட்சியே என்று வீரபாண்டியன் மனைவியை வாசிக்கும் போது தெரிகிறது. மூன்றாம் குலோத்துங்கன் பற்றி ஜனநாதக் கச்சிராயன் கூறுகிறான்: ‘நம் மன்னர் ஆதிக்க வெறி கொண்டு அண்டை அயலிலுள்ள நாடுகள் மீதெல்லாம் வீரம் என்ற பெயரால் படையெடுப்பார். ராஜதந்திரம் என்ற பெயரால் அந்நாடுகளை முன்னறிவிப்பின்றித் தாக்குவார். அந்நாடுகளைச் சூறையாடுவார். அங்கு கொள்ளையிட்ட பொருள்களில் ஒரு சிறு பங்கை கோயில் திருப்பணிகளுக்குச் செலவிட்டுத் தெய்வீகப் புகழடைவார்!... தம்பி எதேச்சாதிகாரி எப்போதும் முகஸ்துதிப் பிரியனாகவே இருப்பான். அது தனக்கு ஆத்ம திருப்தியைத் தருவதோடு மக்களின் அதிருப்தியையும் மறைக்கும் என்றும் எண்ணுவான். வெளிநாடுகளில் நம் மன்னருக்கு எவ்வளவு பெரிய மதிப்பு, நம் ஆட்சியாளரை அரும்பெரும் புலவர் பெருமான்களெல்லாம் எவ்வளவு பிரமாதமாகப் புகழ்கிறார்கள் என்பன போன்ற பெருமை உணர்ச்சிகளினாலும், பிரமிப்பினாலும் மக்கள் தங்களுடைய அதிருப்தியையும் குறைகளையும் மறந்து விடுவார்கள். பல குறைபாடுகளுடைய நம் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழாமல் இருப்பதற்குக் காரணம், இத்தகைய பெருமையுணர்ச்சியும் குகோத்துங்கச் சோழரின் மாபெரும் புகழுமேயாகும். இந்தப் புகழ் அழிந்தால் சோழ சாம்ராஜ்யம் பொடிப் பொடியாய்ப் போய் விடும்.”
இதோடு இந்தக் கட்டுரையை முடித்தால் அது அரு. ராமநாதனின் மகத்தான பணிக்குச் செய்யும் நியாயமாகாது. அதனால் வீரபாண்டியன் மனைவிக்கு நிகரான, அதிகம் யாராலும் பேசப்படாத அவருடைய அசோகன் காதலி என்ற மிகச் சிறிய நாவலைப் பற்றி மட்டும் கொஞ்சம் பேசலாம். சந்திர குப்த மௌரியனைப் பற்றி நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம். எங்கோ மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவனை சாணக்கியன் என்ற மகாபுத்திசாலியான பிராமணன் உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யம் ஒன்றைக் கட்டியமைத்து அதன் அதிபதியாக ஆக்கினான். அதற்காக நந்த மன்னர்களின் பல்லாயிரக் கணக்கான வீரர்களைக் கொன்று கடைசி நந்த மன்னனின் கைக்குழந்தை வரை கருவறுத்தான் சாணக்கியன். அவனுடைய ராஜதந்திரத்தினால் தமிழ்நாட்டைத் தவிர்த்து இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்த முதல் அரசன் என்றும், இந்தியாவின் முதல் பேரரசன் என்றும் பேர் பெற்றான் சந்திரகுப்தன். அலெக்ஸாண்டரால் வெற்றி கொள்ளப்பட்ட இந்தியப் பகுதிகளை அவரது மரணத்துக்குப் பிறகு ஆண்டு கொண்டிருந்த செலுக்கஸ் நெக்டர் மீது போர் தொடுத்து, போர் உடன்படிக்கையாகத் தன்னிடமிருந்த 500 யானைகளைக் கொடுத்து, செலுக்கஸின் மகளை மணம் புரிந்து கொண்டான் சந்திரகுப்தன். அந்த உடன்படிக்கையில் ஆஃப்கனிஸ்தான், பலூச்சிஸ்தான் ஆகிய தேசங்களும் சந்திரகுப்தனின் சாம்ராஜ்யத்திற்குள் வந்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தது சாணக்கியனின் ராஜதந்திரமே தவிர சந்திரகுப்தனின் படைப்பலம் அல்ல. (அலெக்சாண்டர் உயிரோடு இருந்த போதே சாணக்கியனின் ராஜதந்திரத்தைக் கேள்விப்பட்டு அவனைச் சந்திக்க விரும்பியிருக்கிறார்.)
சந்திரகுப்தனுக்கு யாரும் விஷம் வைத்துக் கொன்று விடக் கூடாது என்று மிகக் குறைந்த அளவு விஷத்தை தினந்தோறும் அவனுடைய உணவோடு கலந்து கொடுத்து விஷத்தையே செரிக்கும் தன்மை கொண்டவனாக அவனை மாற்றினான் சாணக்கியன். இந்த விஷயத்தை அறியாத சந்திரகுப்தன் ஒருநாள் கர்ப்பவதியாக இருந்த தன் பத்தினிக்குத் தன் உணவை அளிக்க அவள் உடலில் விஷம் பரவியது. இதைக் கேள்விப்பட்டு ஓடி வந்த சாணக்கியன் இன்னும் சில தினங்களில் மகவைப் பெற்றெடுக்க வேண்டிய அவளுடைய வயிற்றைக் கிழித்துக் குழந்தையை வெளியே எடுத்தான். அவளுடைய தேகத்தில் பரவியிருந்த விஷக் குருதி குழந்தையின் நெற்றியில் தெறித்துச் சிவக்க அந்தக் குழந்தைக்கு பிந்துசாரன் என்ற பெயராயிற்று. (பிந்து – குங்குமப் பொட்டு) அப்பேர்ப்பட்ட மகா சக்ரவர்த்தியாக விளங்கிய சந்திரகுப்தன் ஒருநாள் தன் சாம்ராஜ்யத்தையும் தனது குருநாதரின் வைதீக மதத்தையும் துறந்து சமணத்தைத் தழுவி ஆடைகள் கூட இல்லாத திகம்பரனாக தமிழகத்தில் இருந்த சிரவணபெலகொலா (அப்போது தென்னகம் முழுவதும் தமிழகம்தான்) வந்து 21 தினங்கள் உண்ணாநோன்பு இருந்து மரணம் அடைந்தான்.
சந்திரகுப்தனின் மகன் பிந்துசாரனின் பல மனைவிகளில் ஒருத்திக்குப் பிறந்தவன் அசோகன். இளம் வயதிலேயே ரத்த வெறி பிடித்த மூர்க்கனாக இருந்த அசோகன் ஒருமுறை மரக் கொம்பினால் சிங்கம் ஒன்றைக் கொன்றதால் அரண்மனையில் பெரும் வீரன் எனக் கொண்டாடப்பட்டான். தந்தையின் பதினாறு பட்டமகிஷிகளுக்குப் பிறந்த தனது சகோதரர்கள் 99 பேரையும், பட்டத்து இளவரசனான சுஷீமனையும் கொன்று விட்டுப் பதவிக்கு வந்தான் அசோகன். அவன் நடத்திய கலிங்கத்துப் போரில் ஒரு லட்சம் வீரர்கள் மாண்டனர். 1,50,000 கலிங்க வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பௌத்த தர்மத்துக்கு மாறிய அசோகன் அஹிம்சை வழியில் ஆட்சி செலுத்தினான். முடியரசின் எதேச்சாதிகாரத் தன்மைகளைத் தவிர்த்து விட்டு மக்களுக்காக மக்களால் ஆளப்படும் குடியரசுத் தத்துவத்தை நடைமுறைப் படுத்திய முதல் இந்திய அரசன் அசோகன். அவனுடைய இந்த மாற்றம் எல்லோரும் நினைப்பது போல் கலிங்கத்துப் போரினால் அல்ல; அதற்குக் காரணமாக இருந்தது ஒரு பெண் என்கிறார் ராமநாதன். அந்தக் கதைதான் அசோகன் காதலி என்ற வரலாற்று நவீனம். இதற்குச் சான்றாக அசோகனின் கல்வெட்டையும் ஆதாரமாகக் காண்பிக்கிறார். இந்த நாவலின் அடிச்சரடாக அரு. ராமநாதன் முன்வைப்பது, அறிவை விட அன்பே மனித குலத்தை வாழ வைக்கும் முழுமுதல் தத்துவம் என்பதே. சந்திரகுப்தன் தனது அரசியல் குருவான இந்து மதத்தைச் சேர்ந்த சாணக்கியனைப் புறக்கணித்து விட்டு சமணத் துறவியானதும், அசோகன் பௌத்தத்தைத் தழுவி அஹிம்சாவாதியாக மாறியதுமான இரண்டு சம்பவங்களும் ராமநாதனின் கோட்பாட்டை வலுப்படுத்துகின்றன. அசோகன் காதலி என்ற இந்த நாவலில் வரும் காரூவகியைக் காதலி என்று குறிப்பிட்டாலும் புத்தனின் பெண் வடிவத்தைப் போன்ற ஒரு மாபெரும் ஞானியாகவே திகழ்கிறாள். அசோகன் காதலி என்ற பெயர் இருந்தாலும் அஹிம்சையையும் அன்பையும் போதிக்கும் இந்த அற்புதமான நாவலை நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அவசியம். மாணவர்கள் படித்தால் அவர்களின் வாழ்வு மேன்மையுறும்.
அ.கி. வேங்கட சுப்ரமணியன் எழுதிய ‘அரு. ராமநாதன் : எழுத்துக்களும் எண்ணங்களும்’ என்ற வானதி பதிப்பக நூலும் அரு. ராமநாதன் குறித்த ஒரு விபரமான அறிமுகத்தைத் தருகிறது.