Gouthama Siddarthan
June 16 at 7:15pm · Edited ·
ஆதிக்க சாதி - ஆதிக்க சமூகம் - ஆதிக்க பண்பாடு
-----------------------------------------------------------------------------
சமீபத்தில், ஊரில் என் அத்தை மகளைச் சந்தித்தேன்..
அவளைப் பற்றிய அறிமுகத்தை பாரதிராஜாவின் தமிழ் சினிமாவில் ஒரு காட்சியாகவே வைக்கலாம்..
இது எப்படி இருக்கு? என்ற பரட்டைத் தலையோடு என் உதடுகளுக்கு மேல் மெல்லிய பூனை ரோமம் அரும்பிக் கொண்டிருந்த 16 வயதினிலே. எங்களூரில் மாரியம்மன் திருவிழா போட்டிருந்தார்கள். திருவிழா முடிந்ததும் அடுத்த நாள் கம்பம் பிடுங்கிய பிறகு மஞ்ச நீர் ஆடும் விழாதான் என் போன்ற சின்னப் பையன்களுக்கு மிக மிக முக்கியமான விழா. வயசுப் பையன்கள் தங்களுக்குப் பிடித்த மாமன் பெண்களின் மீதும் அத்தை பெண்களின் மீதும் மஞ்ச நீர் ஊற்றுவார்கள். வயசுக் குமரிகள் மாமன்மகன் அத்தைமகன்களின் மீது மஞ்ச நீர் ஊற்றுவார்கள். இருசாராரும் முறையாள்களின் மீதுதான் ஊற்ற வேண்டும். வேறு உறவுமுறைக்காரர்கள் மீது ஊற்ற மாட்டார்கள். தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கும் காதலுக்கான சமிக்ஞையாகவும் இந்த ஐதீகம் அமையும். ஒரே ஓட்டமும் துரத்தலுமாக ஊரேகொண்டாட்டமாகஇருக்கும் இந்தவிழாவை, இருசாராரும் மிகவும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள். திருவிழாக் கொண்டாட்டங்களை விடவும் இந்த மஞ்ச நீர் கொண்டாட்டத்திற்காகவே வருடம் முழுக்கக் காத்திருப்பார்கள் இளவட்டங்கள்.
அப்படியான பிரசித்தி பெற்ற மஞ்ச நீர் விழாவும் வந்து சேர்ந்தது. நான் ஏராளமான கனவுகளைச் சுமந்துகொண்டு எனக்கான நீண்ட பட்டியலுடன் காத்திருந்தேன். சாமி கம்பம் பிடுங்கப்பட்டு அதன்பிறகு அருள் வந்து ஊர் முழுவதும் சுற்றி வர சாமி புறப்பட்டு விடும்.. கொட்டுமுழக்குடன் சாமி புறப்பட்டு ஒவ்வொரு வீட்டின் முன்பும் போய் நின்று அவர்களுக்கு அருள் பாலிக்கும். சாமி அருள் வந்து புறப்பட்டு விட்டால் போதும், அதன்பிறகு மஞ்ச நீர் ஆட்டம் தொடங்கிவிடும். சாமி ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு மீண்டும் சாமி கோவில் பிரகாரத்திற்குத் திரும்பும் வரை மஞ்ச நீர் ஆட்டம் அமர்க்களமாக நடக்கும். சாமி நிலையை அடைந்தவுடன் மஞ்ச நீர் ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டும். அதன் பிறகு யாரும் யார் மீதும் மஞ்ச நீர் அடிக்கக் கூடாது.
மஞ்ச நீர் என்பது, மஞ்சள் துண்டுகளை மாவுபோல் சாந்தாக அரைத்து அந்த மாவை வெள்ளைத் துணியில் முடிந்து வைத்துக்கொண்டு, சொம்பில் நல்ல தண்ணீரை மொண்டு அதில் வெள்ளைத்துணியில் முடிந்து வைத்துள்ள மஞ்சள் மாவுப் பொட்டலத்தைப் போட்டு முக்கினால் போதும்.. மஞ்சள் தண்ணீர் தயார். அவைகளை உடல்மீது அடிக்கும்போது குளுமையாகவும் உடலின் நிறம் மஞ்சள் தன்மையுடன் பளபளப்பாகவும் இருக்கும்.
நானும் என் சேக்காளிகளும் கையில் சொம்புகளையும் வெள்ளைத் துணியில் முடிந்து வைத்திருந்த மஞ்சச் சாந்தையும் வைத்துக் கொண்டு சாமி ஊர்வலம் புறப்படுவதற்காகக் காத்திருந்தோம். கொட்டுமுழக்குகள் கொட்டுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது பறையடிக்கும் ஒரு பெரியவர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அவர் குரலை செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. அவர்தான் பிரதான பறை கொட்டுபவர். அவர் போய்ப் பறையை எடுத்தால்தான் சாமி ஊர்வலம் புறப்படும். நான் அவசரமாக என் கையில் வைத்திருந்த சொம்பை டக்கென்று அவரது கையில் கொடுத்து விட்டேன். அவர் வெலவெலத்துப் போய்விட்டார். சொம்பை வாங்கியதும் கீழே நழுவ விட்டுவிட்டார். அது பலத்த ஓசையுடன் கீழே விழுந்ததும் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
அடுத்த கணம் எல்லாமே தலை கீழாக மாறியது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவரை நான் தொட்டு விட்டேனாம். உடனே போய் ஊர்ப் பூசாரியிடம் தீட்டுக் கழித்து வரவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். பூசாரி அருள் வந்து ஆடிக்கொண்டிருந்தார். என் ஒரு வருட மஞ்ச நீர்க் கனவுகள் கானல் நீராகப் போயின. சாமி ஊர்வலம் புறப்பட்டது. மஞ்சநீர் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பமானது. யாரும் என்மீது தண்ணீர் ஊற்றவில்லை. என்னை மஞ்ச நீர் விழாவில் அனுமதிக்கவில்லை. அந்தக்கணத்தில் முடிவு செய்தேன், இந்த சாதித் தீண்டாமையின் வேர்களை - ஆணி வேர், சல்லி வேர், என அனைத்து விழுதுகளையும் கெள்ளிக் கெள்ளி எடுக்க வேண்டுமென்று உடலெங்கும் பற்றிக் கொண்டது பெருந்தீ ..
நான் அப்போது ரொம்பச் சின்னப்பையன். யாரையும் எதிர்த்து எதுவும் பேச முடியாது.
ஒருவழியாய் சாமி நிலையை வந்தடைந்தது. மஞ்ச நீர் ஆட்டம் முடிவுற்றது. பூசாரி என்னை அழைத்து தீட்டு நிவர்த்திச் சடங்கு செய்து அனுப்பினார். காலிச் சொம்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.. துயரத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன். அம்மா, எங்கே காணாமப் போயிட்டே? என்று விசாரித்தாள். நான் எதுவும் பேசாமல் தாழ்வாரத்தில் வந்தமர்ந்தேன். சரேலென என்மேல் அடித்தது மஞ்சத் தண்ணி. திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் என் அத்தை மகள் நின்றிருந்தாள்!
அவள் அடித்த அந்த மஞ்ச நீர் தீண்டாமையின் மீது அடிக்கப்பட்ட கொதி நிலை வெந்நீர். சமூகக் கட்டுப்பாடுகளின் மீதும் சடங்குகளின் மீதும் காறி உமிழ்ந்த எச்சில். 2000 வருட ஆதிக்க சாதிகளின் மீது வீசப்பட்ட அக்னி திராவகம்...
நான் மருள் வந்தவன் போல ஆட ஆரம்பித்தேன்.
அக்னி குஞ்சொன்று கண்டேன்.. தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்...
Gouthama Siddarthan
22 hrs ·
கதாநாயகனும் கதாநாயகியும் முதன்முதலில் சந்திக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சி---
----------------------------------------------------------------
எப்படிச் சொல்வது முதல் காதலை?
வேட்டைக்காரன் கோயிலில் அதிகாலையிலேயே முழங்கிய கொம்புகளின் முழக்கம் சிலம்பனைக் குதியாட்டம் போடவைத்தது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் “வேட்டைவலம்’ நடக்கும். செலம்பனார் கோயில், மூங்கில்பட்டி, கருமந்துறை, மானூத்து, மயிலம்பாடியென சுற்று வட்டாரங் களிலிருந்து மக்கள் வேட்டைக்காரன்கோயிலை நோக்கித்திரளுவார்கள். தாரைதப்பட்டைகளின் ஓசை இளவட்டங்களின் உடலெங்கும் சூட்டைக்கிளப்பும்.
வேட்டைக்காரன் கோயிலிலிருந்து மேற்கால்பக்கமாக அடர்ந்து விரிந்து கிடக்கும் காட்டுப்பகுதியில் வேட்டை ஒருவாரம் நடக்கும். இந்த வேட்டையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். பெண்கள் வரக்கூடாது. அதுமட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அனுமதியில்லை. அவர்கள் தாரைதப்பட்டை முழக்கிக்கொண்டு வேட்டைக்கு முன்னால் செல்லலாமே தவிற வேட்டையில் பங்குபெறக்கூடாது. அந்த வரலாற்றைத்தான் மாற்றப்போகிறாள் மலாலா.
மலாலா. கூடைமுறம் பின்னும் செம்பானின் மகள். அவருக்கு ஒரே பெண்ணாதலால் அப்பாவோடு மூங்கில் காட்டுக்குப்போவதும், அவைகளை சூரிக்கத்தியில் செலார்செலாராக நார்பிரித்து, நுட்பமாய்க்கூடை, முறம், தக்கைகளாக மாற்றும்போது அவளது கைகளின் வீச்சு ஒரு நுட்பமான கலைத்திறம் கொண்டவளாய்க் காட்டும். அதேசமயம், மூங்கில் மரங்களில் மரம்மரமாய்த் தாவுவதும், அவைகளின் வளைச்சலில் கரணமடித்து நிலத்தில் குதித்து நிற்பதுமான கால் அடவுகளில் சீற்றம் மிக்க வனச்சிறுத்தையாக உருமாற்றும்.
அப்படியான ஒருநாளில் சோங்காய் அடர்ந்திருந்த புதரிலிருந்து ஓடிய ஒருமானை மரம்மரமாய்த் தாவித்துரத்தி வீழ்த்தியபோது ஏற்பட்ட வெற்றிக்களிப்பு தீருவதற்கு முன்பே அங்கு வந்து சேர்ந்தார் நாட்டாண்மையார். “தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த அவள் வேட்டையாடியது தவறு’ என்று திட்டியவாறே மானைத் தூக்கிக்கொண்டு போனார். அந்தக் கணத்தில் அவளுக்குள் பெருந்தீ சூழ்ந்து கொண்டது. எப்படியாவது அந்த வேட்டையில் தானும் பங்கு பெற்றால்தான் அந்தத் தீ அடங்கும்.
இந்த வேட்டைவலத்துக்காக இளவட்டங்கள் தங்களது வீரதீரப்பிரதாபங்களைக் காட்ட வருடம் முச்சூடும் காத்திருந்ததுபோல அவளும் காத்திருந்தாள். வளைபந்து மட்டையைப்போன்ற முனை திரண்டு வளைந்துள்ள தங்களது வேட்டைத்தடிக்கு வாரம் ஒருமுறை வெண்ணெய் போட்டுத்தடவி அதன்முனைக்கு இரும்புப்பூண் போட்டு அலங்கரித்து வைத்திருப்பது போல, அவளும் ஒரு வேட்டைத்தடியைப் பேணி வைத்திருந்தாள்.
வேட்டையில் அதிகமாக முயல்களும் நரிகளும்தான் கிடைக்கும். அவைகளை வேட்டையாடுவது பெரிய வீரனுக்கு அழகல்ல. மான்களையும் காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடி வருபவன்தான் பெரிய வீரனாக மதிக்கப்படுவான். எல்லா ஊர்மக்களும் அதைப்பற்றியே பெருமை பேசுவார்கள். அதுவும் கோரைப்பற்களோடு கூடிய காட்டுப்பன்றியை வேட்டையாடுபவனைப் பெண்கள் தங்களது நெஞ்சுக்கூட்டுக்குள் ரகசியமாகப் பொத்தி வைத்துக் கொள்வார்கள்.
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுத்தைப்புலியை அடித்துத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த மல்லய்யாவை அவரது மீசை நரைத்த பிறகும் பெண்கள் ஒருவித மயக்கத்தோடுதான் நினைவில் வைத்திருந்தார்கள்.
வலைகட்டியோ, கண்ணிவைத்தோ, மருந்து வைத்தோ வேட்டையாடக்கூடாது. வேட்டையைத் துரத்தித்தான் வீழ்த்த வேண்டும். அதேபோல, வேட்டைக்காரர்கள் எந்தத் தோட்டத்திலும் புகுந்து பழம் பச்சை என்று பறித்துச் சாப்பிடலாம். கேள்வி கேட்கக் கூடாது. அந்திசாயும்போது கொம்புகள் ஊதப்பட்டால் அப்போழுதே வேட்டையை நிறுத்திவிட்டு கோயில் மைதானத்துக்கு வந்துவிட வேண்டும். தாங்கள் கொண்டு வந்த வேட்டைகளை மைதானத்தில் விரித்து, ஒருபங்கு வேட்டைக்காரன் சாமிக்கும், இன்னொரு பங்கு ஊர் நாட்டாண்மைக்காரர்களுக்கும், மற்றொரு பங்கு தாரைதப்பட்டைக்காரர்களுக்கும் மீதியைத் தனக்குமாகப் பிரித்துக் கொள்வார்கள்.
அதிகாலைச்சூரியனின் இதமான வெப்பம் மாறி சுள்ளென்று இறங்க ஆரம்பித்திருந்தது. சுற்று வட்டார ஊர்மக்கள் சாரிசாரியாகத் திரண்டிருந்தனர். பெண்கள் பால்கரகமும், தீர்த்தக்கரகமும் எடுத்துக்கொண்டு வர, ஆண்கள் வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு வேட்டைத்தடியைத் தோளில் சார்த்தியபடி குழுமியிருந்தனர்.
மூங்கில்பட்டி மக்களுடன் மக்களாக தனது வேட்டைத்தடியைச் சுழற்றியவாறு தூரத்தே தெரிந்த கானகத்தை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்தான் சிலம்பன்.
திடீரென தாரைதப்பட்டைகள் முழங்க, திரண்டிருந்த கூட்டத்தை ஒதுக்கிக் கொண்டு கோயில் வாசலுக்குப் பல்லக்கில் வந்திறங்கினார் பூசாரி. அவரைக் கைலாகு கொடுத்து நாட்டாண்மைக்காரர் வரவேற்க, கோயிலுக்குள் நுழைந்தார். பூசைக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்க, பூசாரி நாட்டாண்மைக்காரரை அழைத்தார். அவர் பவ்வியமாய் முன்னால் வந்து நிற்க, தாரைகள் முழங்க, அவருக்குப் பரிவட்டம் கட்டினார் பூசாரி.
சுங்குவிட்டுக் கட்டியிருந்த பரிவட்டத்தின் முனையில் எட்டுப்பட்டிகளுக்கான நாட்டாண்மை என்னும் பட்டம் ரெக்கை விரித்தாடிக் கொண்டிருக்க, தனது நரைத்த மீசையை முறுக்கி விட்டுக்கொண்டே கூடியிருந்த மக்களை தோரணையாகப் பார்த்தார். கூடியிருந்த இளவட்டங்களுக்கு அவரது பரிவட்டமும், தோரணையும் சற்றும் பிடிக்காமல் முகம் சுழித்தபடி வேட்டைத்தடியால் முதுகைச் சொரிந்து விட்டுக் கொண்டனர். அவர்கள் அங்கு கூடியிருப்பது, நாட்டாண்மையைக் கௌரவப்படுத்த அல்ல, வேட்டைக்கார சாமியின் அருளைப் பெற. ஆனால், ஒரு சில நல்ல அம்சங்களை முன்வைத்து ஒரு சில மோசமான அம்சங்களும் அரங்கேறி விடுகின்ற அவலம் எப்போது மாறப்போகிறதோ என்று பெருமூச்சு விடும் சத்தம் அந்த மைதானமெங்கும் ஒலிக்கிறது.
வேட்டைக்குப் போவதற்கு முன்பு வேட்டைக்காரனிடம் உத்தரவு வாங்க வேண்டும்.
பூசாரி கோயில் கர்ப்பக்கிருகத்திலிருந்து கண்களைக் கட்டிக்கொண்டு வெளியே வந்து நின்று ஓங்காரமிட்டார். அவருக்கு முன்னால் ஒரு காட்டுப்பன்றியை நிறுத்த, அதன் நெற்றியில் திலகமிட்டு அதை அவிழ்த்து ஓடவிடுகிறார். கூடியிருந்த சனங்கள் அதைக் காட்டை நோக்கி முடுக்கிவிட பெண்கள் குலவை கொட்டுகிறார்கள். அந்தக் குலவைச்சத்தம் அதை ஓடஓட விரட்டுகிறது.
அந்தக்குலவையின் சுழற்சி பூசாரியின் காதில் அலையலையாய் அடித்து அவருக்கு மருள் ஏற்றுகிறது. ஒரேயடியாய் உடம்பு நிலத்தில் படாமல் குதிக்க, அவரது கையில் கொடுத்த வில்லைப் பெற்று அம்பு பூட்டி வானத்தை நோக்கி ஏவினார். கூடியிருந்த மக்களும் தங்களது வேட்டைத்தடிகளை வானை நோக்கி உயர்த்தி கோஷமிடுகிறார்கள்.
சற்றைக்கெல்லாம் வானிலிருந்து கீழேவந்து விழுந்த அம்பின் முனையில் ரத்தம் கண்டிருந்தது. வேட்டைக்காரன் உதத்தரவு கொடுத்துவிட்டான். கூட்டம் ஹோவ் என்று கூச்சலிட்டுக்கொண்டே காட்டைநோக்கி ஓடியது.
பூசாரிவிடும் அம்பு, அவர்கள் காட்டுக்குள் துரத்திவிட்ட பன்றியை அடித்து வீழ்த்திவிட்டது என்பதுதான் அந்த அம்பில் பட்டிருக்கும் ரத்தத்தின் ஐதீகம். ஒருவருடமும் ரத்தகாவு எடுக்காமல் மேலேபோன அம்பு கீழேவந்து விழுந்ததில்லை. பலபல வருடங்களுக்கு முன் ஒருமுறை அப்படியான போது, வேட்டைக்கு யாரும் போகவில்லை. ஊர்க்குத்தமாகிவிட்டது என மனச்சஞ்சலத்துடன் வீடு திரும்பினர்.
அந்தவருடம், காட்டுவிலங்குகள் ஊருக்குள் புகுந்து ஒரேயடியாய் துவம்சம் செய்த நினைவுகளை இன்னும் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறார் பொன்னுத்தாத்தா.
காட்டின் உட்பகுதியில் சனங்கள் இறைந்து கொண்டு ஓடஓட மான்களும், மயில்களும், முயல்களும் தாவித்தாவியோடின. பல்வேறு பறவைகள் ரெக்கைகளைப் பதற்றத்துடன் அடித்துக் கொண்டு பறந்தன.
முயல் ஒன்று செங்கம்புதரிலிருந்து ஓட, அதைத்துரத்தி வேட்டைத்தடிகளை வீசியடிக்கின்றனர் இளைஞர்கள். அவர்களிலிருந்து தனியாகப் பிரிந்து வந்தான் சிலம்பன். அவனது இலக்கு முயலோ நரியோ அல்ல. பன்றி; கோரைப்பற்கள் நீண்ட காட்டுப்பன்றி.
“டேய் தம்பி... தலையிலே உருமால் கட்டிட்டுப் போகாதே... நெழல் அழுங்கும், தலைவேட்டியைக் கழட்டிடு...’’ என்று தலைவேட்டி கட்டியபடி முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு இளைஞனை எச்சரிக்கை செய்தான் சிலம்பன். ஆனால் அந்தத் தலைப்பாக்கட்டுப் பையன் அந்தச் சொல்லைக் கேட்பதாக இல்லை. உருமால் தலையை ஆட்டிக்கொண்டு முன்னால் மிக வேகமாகப் பாய்ந்தோடினான் எதையோ துரத்திக்கொண்டு.
சிலம்பன் ஓரிடத்தில் உட்கார்ந்து மணலில் பதிந்திருந்த தாரைகளை உன்னிப்பாகக் கவனித்தான். அது நிச்சயமாகப் பன்றியின் காலடிதான். அது காலைச் சட்டென ஊன்றி நடந்தது போலத் தாரை அழிந்து போயிருப்பதை வைத்துப் பார்த்தால், இந்த வழியாகத்தான் ஓடியிருக்கிறது என்று மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டே அந்தத் தாரைகளைப் பின் தொடர்ந்தான்.
திரும்பியபுறமெங்கும் சங்கமுள்ளும் குடைவேலா முள்ளும் குழுமியிருக்கும் சங்கம்புதர்கள் நிறைந்த பகுதிக்கு வந்து சேர்ந்தான். காட்டுப்பன்றி மலத்தின் வாசனை அந்த இடமெங்கும் சுற்றிச்சுழன்றடிக்கிறது. தனது வேட்டைத்தடியை இறுகப்பற்றிக் கொண்டு எச்சரிக்கையாக காலின் ஒவ்வொரு எட்டையும் லாவகமாகவும் அலுங்காமல் எடுத்து வைத்து நடந்தான்.
ஒவ்வொரு புதரிலிருந்தும் கீரிப்பிள்ளையும் நரிகளும் ஓடுகின்றன. அவைகளைக் கண்டு கொள்ளாமல் மேலும் மேலும் நடக்க தூரத்திலிருந்த முட்செடிகள் சடசடவென்று நொறுங்கி விழும் சத்தம் கேட்க, பக்கத்திலிருந்த சங்கம் புதருக்குள் நுழைந்து கொண்டான்.
புழுதியைக் கிளப்பியவாறு முட்செடிகளின் கிளைகளை ஒடித்துக் கொண்டு ஒரு பெரிய காட்டுப்பன்றி வாயைத்திறந்து கொண்டு ஓட, அதனுடைய கடைவாய்ப்பல் கூமாச்சியாய் நின்று அசைய, வாயிலிருந்து நுரை தளும்பியவாறு போகும் அந்தக் காட்சியைக் கண்ட சிலம்பனுக்கு லேசாக உடல் நடுங்கியது. நா வறண்டு போயிற்று. அதேநேரத்தில் இன்னொரு பன்றி அதைத் துரத்திக் கொண்டு இணை சேரும் முயற்சியில் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு கணம் திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தவன், என்னதான் நடக்குமெனப் பார்க்கலாமே என்று அந்தக்காலடித் தடங்களைப் பின் பற்றினான்.
***
ஓடிஓடிக் களைத்துப்போன தலைவேட்டி இளைஞன், எதிரில் ஓடிக்கொண்டிருந்த நீரூற்றில் தாகத்தைத் தணித்து அப்படியே திரும்பி மல்லாந்து படுத்து இளைப்பாறினான். கண்களைக்கூசும் சூரிய ஒளியில் ஏதோ அழுங்கியதும் சடக்கென எழுந்து சுற்றிலும் பார்த்தான். அவனுக்கு எதிரிலிருந்த முட்புதர்களுக்குள் நுழைந்திருந்தது ஒரு பன்றி.
உடலெங்கும் பதட்டம் ஊடுருவ, நீருற்றின் பாறை மடுவுக்குள் மறைந்து கொண்டு அதை எப்படி வீழ்த்துவது என்று வாகு பார்த்தான். தனது வேட்டைத்தடியை வீசினால், ஒரே அடியில் அது இறந்து போய்விடவேண்டும். இல்லையெனில், அதை உசுப்பி விட்டது போலாகி விடும். கையில எந்த ஆயுதமும் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும் நம்மை அது திருப்பித்தாக்க ஆரம்பித்தால் நம்பாடு அதோகதியாகி விடும் என்றெல்லாம் யோசித்தான்.
அதனுடைய உடம்பில் எந்த இடத்தில் வேட்டைத்தடி பட்டாலும் அந்த அடி பன்றிக்குச் சோதிக்காது. அதனால் அதன் உயிர்க்காலை நோக்கிக்குறி வைத்தான் இளைஞன்.
பன்றி கொட்டைகளைக் காட்டிக்கொண்டு ஆயாசமாய்ப் படுத்திருக்க ஒரே வீச்சில் இளைஞனின் வேட்டைத்தடி அதை நோக்கிப் போகும் கண்ணிமைக்கணத்தில் அது புரண்டு படுக்க, வேட்டைத்தடி அதன் முதுகில் பட்டுத் தெறித்து வீழ, “வீச்’ என்று கத்திக் கொண்டு அவன் இருந்த திக்கில் ஓடிவர, இளைஞன் சரேலென்று குதித்து ஓடி எதிரில் வெட்டி வைத்திருந்த சங்கங்குழிக்குள் குதித்தான்.
அவனுக்கு மேலாக அந்தக்குழியைத் தாண்டிக் கொண்டு, அந்தப்புறம் குதித்தோடிய பன்றியின் கருத்த வயிறும் பெரிய கருங்கல்லைப் போன்ற கொட்டைகளும் அவனது முகத்திற்கு நேரே பறந்து மறைந்து போயின.
ஒருநிமிடம் ஆடிப்போய் விட்டான்.
கொஞ்சநேரம் கழித்து மெதுவாக எம்பிக் குழியை விட்டு மேலே எழுந்து வந்தவன், தனது கால்களில் அப்பியிருந்த சங்கமுட்களைப் பதட்டத்துடன் வழித்தெடுத்தான்.
கையில் இப்போது வேட்டைத்தடியும் இல்லை. தன்இடுப்பில் ஆடிக்கொண்டிருந்த சூரிக்கத்தியை எடுத்து கருவேலம்போத்தை வெட்டியெடுத்து அதைக் கூர்மையாகச் சீவினான். அது நன்றாகச் சேகுபாய்ந்து சொரசொரப்பாக உறுதியாக இருந்தது. அதைக் கையில் வைத்து அப்படியும் இப்படியுமாக வாகுபார்த்தான்.
இன்றைக்கு எப்படியும் அந்தப் பன்றியோடுதான் ஊர் திரும்ப வேண்டும்.
ஒரு முடிவோடு கருவேலம்பூட்டை உயர்த்தினான்.
***
சிலம்பன் தன்னிடமிருந்த வேட்டைத்தடியை மேலும் கீழும் பார்த்துவிட்டு இதன் மூலம் பன்றியை வீழ்த்துவதென்பது நடவாத காரியம் என்று எண்ணினான். சற்றுத்தொலைவில் இலந்தை மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் இடுப்பு அரணாக் கயிற்றில் சொருகியிருந்த அருவாள் கண்ணில் பட்டது. அவரிடம் சென்று அதை வாங்கி எதிரில் தாறுமாறாய்ப் பரந்துகிடந்த இலந்தைமரத்தின் உறுதியான ஒரு கிளையைத் தரித்து அதைக்கூர் படுத்தினான். நன்றாகச் சீவியபிறகு அருவாளை வாங்கியவரிடமே தந்து விட்டு மீண்டும் சங்கம்புதர்கள் இருந்த பக்கம் நடந்தான்.
***
கண்ணில்படும் தூரத்தில் இரு பன்றிகள் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த இளைஞன் தனது கருவேலம்பூட்டை வாகாகப் பிடித்துக் கொண்டு நடந்தான். அருகில் நெருங்க நெருங்க பீதி உடலெங்கும் கவ்விக் கொண்டது.
“இந்த முறை குறி தவறினால் நம் சாவு நிச்சயம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன், அவையிரண்டும் விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சமரத்திற்குச் சற்றுத் தள்ளி சடைசடையாய்த் தொங்கிய ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்துத் தொத்தி ஏறினான்.
அந்தக்கணத்தில் ஒரு திட்டம் அவனுக்குள் உதயமாயிற்று.
***
சிலம்பன் எதிர்பார்த்ததைப் போலவே அந்தப் பன்றி தனது இணையோடு விளையாடிக் கொண்டிருந்தது. இலந்தைப் பூட்டை இறுகப் பற்றினான்.
இந்த இரண்டில் எதைத்தாக்குவது...?
அவைகள் ஊஞ்சமரத்தின் நிழலில் களிப்பாறிக் கொண்டிருக்கும் நிகழ்வை மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தவன், அதற்கு எதிரிலிருக்கும் ஆலமரத்தையும் அதில் தொங்கும் விழுதுகளையும் பார்த்தான்.
சட்டென பின்பக்கமாக வந்து ஓசைப்படாமல் ஊஞ்சமரத்தின் மீது ஏறிப் பன்றிகளுக்குப் பக்கவாட்டில் வந்து உட்கார்ந்து கொண்டான்.
இங்கிருந்து வீசினால் ஒரே வீச்சு. காலியாகிவிடும். ஆனால் இரண்டு பன்றிகளும் இருக்கும் இடத்தில் எப்டியும் ஒரு சலனம் அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.
இவைகளைத் தனித்தனியாகப் பிரிக்கவேண்டும்.
எப்படி?
அவன் யோசிப்பதற்குள் எதிரிலிருந்த ஆலமரத்துத் திக்கிலிருந்து ஏதோ அரவம் கேட்டு ஒரு பன்றி அதை நோக்கிப்போக, இப்பொழுது சிலம்பனின் வீச்சுக்கு வாகாக இரண்டாவது பன்றி!
தனது கையிலிருந்த இலந்தைப் பூட்டை வீசுவதை விடவும் இங்கிருந்து நேராக அதன் மேலேயே குதித்துவிட்டால்... தப்பவே முடியாது...
இந்த நினைப்பு சிலம்பனுக்குள் வந்தவுடன் அவனுக்குள் உற்சாகம் பொங்கியது.
அடுத்த கணம், சரேலென்று அந்தப்பன்றியின் வயிற்றுப்பகுதியை குறிவைத்துக் குதித்தான் சிலம்பன்.
வேட்டைக்காரக் கடவுளே!
கண்ணிமைக்கும் நேரத்தில், அதேபோல மற்றொரு நிகழ்வும் நடந்தது.
ஆம்.
எதிரிலிருந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு நெட்டுக்குத்தலாக அந்தப் பன்றியின் மார்பில் குதித்துத் தனது கருவேலம் பூட்டைச் சொருகியிருந்தான் அந்த இளைஞன்.
“வீச் வீச்’ என்று கத்திக்கொண்டு ரத்தம் பீறிட்டடிக்க ஓய்ந்து போனது பன்றி.
அந்த மாயாஜால வேட்டையை நிகழ்த்திய இருவரும் பிரமித்துப் போனார்கள். சிலம்பனின் இலந்தைப்பூட்டு பன்றியின் இடது பின்னங்கால் சப்பையிலும், இளைஞனின் கருவேலம் பூட்டு அதன் வலது முன்னங்கால் சம்பையிலுமாகப் பதிந்து கிடந்தன.
அவர்களது உடம்புமுழுக்க ரத்தம் சீறிக்கிடந்தது.
கொஞ்சநேரம் ஒன்றும் புரியாமல் திக்பிரமையடித்தவர்களாய் நின்றிருந்தனர்.
கடைசியில் சிலம்பன் வாய் திறந்தான், “தம்பி, நாந்தா மொதல்லே கொன்னே... வேட்டை எனக்குத்தா...’’
“இல்லே தம்பி, என்னோடதுதா மொதல்லே அடிச்சது... அப்பறந்தா உன்னோடது...’’ என்றான் இளைஞன்.
சிலம்பனுக்குத் தன்னை தம்பி என்றழைத்ததும் கோபம் சிலீரென்று பொங்கியது.
“டேய், என்னடா ஒலர்ரே... நாந்தாண்டா கொன்னே... வேட்டை எனக்குத்தான் சொந்தம்... பேசாம போய்டு...’’ என்று சிம்பினான் சிலம்பன்.
“மரியாதையாப்பேசு... அப்பற நல்லாருக்காது...’’ என்று சுட்டுவிரலை ஆட்டி எச்சரித்தான் இளைஞன்.
சுட்டுவிரலை ஆட்டியதால் உடல் முழுக்கச் சூடேறியது சிலம்பனுக்கு.
“என்னடா செய்வே...’’ என்று கையை ஓங்கிக் கொண்டு அந்த இளைஞனின் மீது பாய்ந்து தள்ள, அவன் தடுமாறிக்கீழே விழ, தலையில் கட்டியிருந்த உருமால் அவிழ்ந்து போய் முடிந்திருந்த கூந்தல் அவிழ்ந்து தொங்கியது. அப்போதுதான் தெரிந்தது, இளைஞன் ஆண் வேடத்திலிருக்கும் மலாலா என்று.
“வேண்டாம்... எனக்கும் கை நீட்டத் தெரியும்...’’ என்று அலட்சியமாக கூந்தலை அள்ளிச் சொருகினாள்.
சிலம்பனுக்கு பொசுக்கென்றாகி விட்டது. “அட பொம்பளையா, பொம்பளைகல்லாம் வேட்டைக்கு வரக்கூடாது... செரிசெரி நீயே வெச்சுக்கோ...’’ என்று புறப்பட்டான்.
“ஏன் பொம்பளைன்னா அவ்வளவு எகத்தாளமா...? நான் தர்ரே நீயே வெச்சுக்கோ...’’ என்று இகழ்ச்சியாய்ச் சொன்னாள் மலாலா.
“ஓ, அப்பிடியா? செரி அப்ப நாம நம்ம பலத்தைப் பாத்துட வேண்டியதுதான்...’’ என்றவன், “யாரு ஜெயிக்கிறாங்களோ, அவுங்க இந்த வேட்டையை எடுத்துக்கலாம்...’’ என்று சிலம்பன் சொல்ல,
“நான் தயார்...’’ என்று தலையை அசைத்தாள் மலாலா.
இருவரும் பன்றியின் மீது குத்தி நின்றிருந்த தங்களது குச்சிகளைப்பிடுங்க, ரத்தம் அவர்கள் மீது சிலீரிட்டடித்தது.
அந்தக்கணத்தில் கொம்புகள் ஊதும் சத்தம் கானகமெங்கும் எதிரொலித்தது. வேட்டையைக் கைவிடுவதற்கான சங்க நாதம்!
ஒருகணம் தயங்கியவர்கள் சட்டென தங்களது குச்சிகளை உருவிக் கொண்டு திரும்பி நடந்தனர். ஏலெட்டு அடிகளுக்குப்பிறகு பின்னால் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே நடக்க, கொம்புச்சத்தம் கானகமெங்கும் அலையடித்தது.
(இந்த வருட புத்தகக் காட்சிக்கு வெளிவர இருக்கும் எனது அடுத்த சிறுகதைத் தொகுப்பான
// வேகம் அருக்காணி வேகம் // நூலிலிருந்து )
$$$$$$$$$$$$$$$$
Gouthama Siddarthan
June 16 at 9:06pm ·
புதிர்க் கதை போடுகிறாள் பொம்மக்கா...
ஒரு பொழுது கடவுளுக்குச் சாகாவரம் கொண்ட நெல்லிக்கனி ஒன்று கிடைத்தது. அதை ஒரு பூலோகவாசிக்குக் கொடுக்கலாமென முடிவு செய்து பூலோகம் வந்த கடவுள், மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார். நாட்டையும் மக்களையும் எவ்விதக் குறையுமில்லாமல் காப்பாற்றி பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் ராசா. மதிநுட்பம் சொல்லிக் கொடுக்கும் மந்திரி. நாட்டு மக்களில் ஒருவரான ஒரு குடிமகன். மூவரையும் அழைத்து, ‘உங்களில் யார் பரிபூரணமாக் குளிச்சிட்டு ஆன்ம சுத்தியோடு முதலில் வந்து சேருகிறார்களோ, அவனுக்குத்தான் கனி’ என்று சொல்லி விட்டார்.
ராசா உடனே பாராசாரிக் குதிரையில் ஏறிக் கடிவாளத்தைச் சொடுக்க, காற்றாய்க் கடுகியது சவாரி. குடிமகன் வேட்டியை உருட்டிக் கட்டிக் கொண்டு ஏரிக்கரையை நோக்கி ஓட்டம் பிடிக்க, மந்திரியானவன் ஏதோ சிந்தனையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
நுரை தள்ளிக் கொண்டு வந்த குதிரை அரண்மனையை அடைய, ஒரே பாய்ச்சலில் அந்தப்புரம் போய் தாமரைத் தடாகத்தில் குதிக்க, பணிப்பெண்கள் அதிசீக்கிரமே சாந்தும் சவ்வாதும் பூசிக் கொளுவ, ராணி அகிற்புகை பிடிக்க, சடுதியில் மறுபடியும் குதிரை மீதேறிக் கடிவாளத்தைச் சொடுக்கிக் கண்ணிமைக்கும் பொழுதில் கடவுளிடம் போய்ச் சேர்ந்தான் ராசா.
குடிமகன் ஓட்டமும் நடையுமாக ஏரிக்கரை போய்ச் சேர்ந்தபோது, தண்ணீர் எடுக்க வந்த பெண் ஒருத்தியை முதலை இழுத்துப் போவதைப் பார்த்தான். கத்தியை எடுத்து ஒரே வீச்சில் முதலையை இரண்டு துண்டமாக்கி அவளைக் காப்பாற்ற அதற்குள் வெயில் உச்சிக்கு வந்து விட்டது. ஏரி முழுக்க ரத்த வெள்ளம் மிதங்கியது. ரத்தச் சகதி தெளிந்த பிறகு குளிக்கலாமென மரநிழலில் களைப்பில் உட்கார்ந்தவன், அப்படியே தூங்கிப்போய் எழுந்து பார்த்தால், இருட்டுக் கட்டியிருந்தது. அவசரமாக ஏரியில் முங்கி விட்டு எழுந்தால் மேலெங்கும் ரத்தவாடை அடித்தது. ஈரத்துணியோடு நடந்தால் காத்துக் கறுப்பு அடித்து விடும் என்று பயந்து, வழியில் உள்ள கோயில் மண்டபத்தில் படுத்திருந்து விட்டு, விடிகாலையில் எழுந்து, பொழுது ஏறுவதற்குள் கடவுளிடம் போய்ச் சேர்ந்தான்.
மந்திரி ஆற்றுக்குப் போகும் வழியில் பயிர்ப் பச்சையெல்லாம் வதங்கிக் கிடந்ததைப் பார்த்தான். வானம் பார்த்த பூமியில் குதிரைவாலியும், சாமையும், தினையும் சொங்கிப் போயிருந்தன. மனசுக்குள் வாப்பாடு போட்டுக் கொண்டே ஆற்றங்கரைக்கு வந்து நின்று தலை துளும்பிக் கொண்டோடும் வெள்ளத்தை ஒரு பொழுது பார்த்தான். திரும்பி அரண்மனை போய் ஆள்களைக் கூட்டி வந்து, ஆற்றுத் தண்ணீரை வெள்ளாமை பூமிக்குத் திருப்பிவிட, கால்வாய் வெட்டச் சொல்லி வேலை நடத்த ஆரம்பித்தான். அவனது காக்காத் தலை நாரையாக மாறும் பொழுதுவரை வேலை நடந்தது. பல காலங்கள் நடந்து முடிந்த பிறகு, ஆசுவாசமாக ஆற்றில் இறங்கி முங்கினான். மேலெங்கும் அடிக்கும் மண்வாசம் தீராமல் உடல் தளர்ந்து போய்க் கடவுளிடம் சேர்ந்தான்.
ஆனால், அதென்ன மாயக் கூத்தோ... கடவுளிடம் மூவரும் ஒரே சமயத்தில்தான் போய்ச் சேர்ந்தார்கள்.
அப்படின்னா, கடவுள் இவர்களில் யாருக்கு அந்த நெல்லிக்கனியைக் கொடுக்கறது ஞாயம்?
விடுவியுங்க பாக்கலாம்.
(பொம்மக்கா சிறுகதைத் தொகுப்பிலிருந்து)